சிறுகதை – வஞ்சம்!

சிறுகதை – வஞ்சம்
ஓவியம்; தமிழ்
Published on

-மனோந்திரா

த்து வருடகாலம் நெஞ்சில் எரிமலையாய்க் குமுறிக் கொண்டிருந்த வஞ்சம் இப்பொழுது தானாகத் தீரப்போகிறது! நான் கொல்ல நினைத்த அந்த மனிதனை நான் என் கையால் கொலை செய்யத் தேவையில்லை. எதிரி தானாகவே செத்துப்போவான். நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் ஓசைப்படாமல் இருந்த இடத்தை விட்டு நகரவேண்டியதுதான். பத்து வருடப் பகை இன்றோடு முடிந்துவிடும். இது தெய்வ சங்கல்பம்.

செத்துத் தொலைவதற்கு எல்லாத்தகுதியும் உடையவன்தான் இந்தப் பரமன். வட்டிக்குப் பணம் கொடுக்கின்ற போர்வையில் ஊரிலுள்ள பலபேரது சொத்துக்களை அடித்துப் பிடுங்குபவன். எங்களுக்கிருந்த ஒரே சொத்து அந்த இரண்டு ஏக்கர் நிலமும் அதிலுள்ள பம்புசெட்டும்தான். என் தந்தையைக் கடன் வலையில் சிக்க வைத்து அந்தச் சொத்தை அபகரித்துக்கொண்ட படுபாவி இந்தப் பரமன்.

என் தந்தை குடிப்பழக்கம் உள்ளவர். இவனிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுவிட்டு குடிப்பதற்கும் குடும்பச் செலவிற்கும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் வாங்கினார். அது ஒரு கணிசமான தொகையாக மாறிவிட்டது உண்மைதான். அதற்கும் மேல் பரமன் தானாக எழுதிக்கொண்ட பொய்க் கணக்கும் அநியாய வட்டியும் சேர்த்து மொத்தக் கடன் பத்து லட்சம் ஆகிவிட்டது. கொஞ்சம் கால அவகாசம் கொடுத்திருந்தால் நாங்கள் ஏதாவது செய்து அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருப்போம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அநியாய வட்டி போடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான் பரமன். உடனடியாக அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்யமுடியவில்லை. எதையாவது விற்கவேண்டிய கட்டாயம். வீட்டை விற்க முடியாது. அதை விற்றுவிட்டு குடியிருக்க எங்கு செல்வது! நிலத்தை விற்பதற்கு மனமில்லை. அதை நம்பித்தான் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருந்தது. அப்பா மனம் வெதும்பி குடியைக் கூட விட்டுவிட்டார். ஆனால் மிகவும் தாமதமான முடிவு என்பது அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்ததிலிருந்து வெளிப்படையாகத் தெரிந்தது.

கடனைத் திருப்பித்தரச் சொல்லி பரமன் தொல்லை தர ஆரம்பித்துவிட்டான். எங்களது குடும்பம் விழி பிதுங்கி நின்றது. நிலத்தை விற்பதைத் தவிர வேறு மார்க்கம் தெரியவில்லை. எங்களது நிலம் ஊரை ஒட்டி அமைந்திருந்தது. வீட்டடி நிலமாகப் பயன்படும் வகையில் அமைந்திருந்தபடியால் ஐம்பது லட்சம்வரை விலை போகக்கூடியதாக இருந்தது.

 பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஐம்பது லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கிக்கொள்ள முன் வந்திருந்தார். அதை பரமன் புகுந்து தட்டிவிட்டு விட்டான். அதுமட்டும் அல்ல, யாரையுமே அவன் வாங்க விடவில்லை. அவனைப் பகைத்துக்கொண்டு நிலத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. ஒருபுறம் நிலத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. மறுபுறம் வட்டி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருந்தது. எங்களது பலவீனமான அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி எங்களது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம்.

அப்போது அக்காவுக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. தம்பி பனிரெண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். எனக்கு இருபது வயது; நிலத்தைக் கவனித்துக்கொண்டு கூலி வேலைக்கும் போய்க்கொண்டிருந்தேன். அம்மாவுக்கு வீட்டையும் அந்த ஊரையும் விட்டால் வேறெதுவும் தெரியாது.

அப்பா நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். இந்நிலையில்தான் கடன் தொல்லை கழுத்தை நெருக்கியது. அப்பா என்னிடம் ஒருநாள்,

“தங்கம்! பேசாம நெலத்த பரமனுக்கே கெரயம் பண்ணிக் குடுத்துருவோம்பா! கடன் போக மேக்கொண்டு ஒரு நல்ல தொக கொடுத்தான்னா, அக்காவுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிட்டு மிச்சக்காசுல ஒனக்கு ஒரு கடைய வச்சுக்கிருவோம்” என்றார்.

அது நல்ல யோசனையாகத்தான் தெரிந்தது. பரமனிடம் ஊர்ப் பெரிய மனிதர்கள் மூலம் பேசினோம். பரமன் கொடுக்க வேண்டிய கடன் தொகைக்கே நிலத்தை எழுதிக் கொடுக்கச் சொன்னான். அடிமாட்டு விலைக்குக் கேட்கிறானே என்ற ஆத்திரம் எங்களுக்கு!

ஆனாலும் பரமனை மீறி நாங்கள் எதுவும் செய்யமுடியாத நிலை. ஒரு முப்பது லட்சத்திற்காவது நிலத்தை எடுத்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சிப் பார்த்தோம். பரமன் ஏற்கனவே நாங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகைக்கு மேல் ஒரு ரூபாய் கூட தரக்கூடாது  என்பதில் உறுதியாக இருந்தான். ஊர்ப் பெரியவர் ஒருவர் எங்களிடம் சொன்னார், 

“இங்க பாருங்கப்பா வட்டிக் கடன் வாங்குறது புத்து நோய் மாதிரி. கொஞ்சம் விட்டாலும் அரிச்சு தின்டுவிடும். வட்டிக்கு வட்டி போடுற அரக்கன் இந்த பரமன். இன்னுங் கொஞ்ச நாள் விட்டம்னா கடனுக்கு ஒங்க நிலமே பத்தாதுன்னுவான். மேக்கொண்டு எதாச்சும் வாங்கித்தாறேன். சோலிய முடிச்சுவிட்டுருங்க!”

 எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

“அய்யா, ஒரு பத்து லட்சமாச்சும் வாங்கிக் குடுத்துறுங்கையா“ என்று அவரிடம் முறையிட்டோம். அவரும் முயற்சி செய்து பார்த்தார். ஐந்து லட்சம் மட்டுமே அவரால் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதை வைத்து அக்கா கல்யாணத்தை ஒருவழியாக முடித்து வைத்துவிட்டோம்.

எங்களுக்குத்தான் வாழ்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போய்விட்டது. கொஞ்ச நாளில் அப்பா ஏங்கியே செத்துப்போனார். நான் ஒருத்தனாகக் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. தம்பியை மேற்படிப்பிற்கு அனுப்ப முடியவில்லை. அந்தக் கோபத்தில் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான். நானும் அம்மாவும் மட்டும் ஊரில் இருக்கிறோம். முப்பது வயதைத் தாண்டிவிட்டேன். இன்னும் திருமணமாகவில்லை. யாரும் எனக்குப் பெண் கொடுக்க முன்வரவில்லை.

எங்களது நிலைமை இப்படி இருக்க, கை விட்டுப்போன எங்களது நிலத்தில் வீடுகள் முளைத்து எழும்பிக் கொண்டிருந்தன. நிலத்தை பிளாட்டுகளாப் பிரித்து விற்பனை செய்துவிட்டான் பரமன். அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த தொகை சுமார் ஒன்றரைக் கோடி என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும்!
சிறுகதை – வஞ்சம்

பரமன் எங்களது நிலத்தை என்று அடித்துப் பிடுங்கினானோ அன்று விழுந்தது என் மனதில் வஞ்சம். பரமனைக் கொல்ல வேண்டுமென்ற கோபாக்னி இத்தனை ஆண்டுளாகியும் அணையாமல் கனன்றுகொண்டே இருந்தது. அவனை நெருங்கும் துணிச்சல் மட்டும் எனக்கு வரவே இல்லை. 

எங்களது கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி இருக்கிறது. இரண்டு பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வந்துபோகும். அதுவும் ஏழு மணிக்குமேல் கிடையாது. வெளியூரிலிருந்து ஊருக்கு ஏழு மணிக்குமேல் வருவதானால் பிரதான சாலையில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டும்.

அப்படித்தான் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு இரவு சுமார் பத்து மணியளவில் பிரதான சாலையில் இறங்கி கிராமச் சாலையில் ஊரைநோக்கி நடந்து வந்துகொண்டிருந்தேன். பாதி வழியில் ஒரு திருப்பத்தில் புல்லட் பைக் ஒன்று விழுந்து கிடந்தது. எஞ்சின் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு ஆள் விழுந்து கிடப்பதையும் பார்த்தேன். கும்மிருட்டு என்பதால் ஆள் அடையாளம் தெரியவில்லை.

அருகில் சென்று பார்த்தேன். தலையில் ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்க பரமன் தரையில் விழுந்து கிடந்தான். என் மனம் ஆனந்தத்தில்  துள்ளியது. இன்னும் சற்று உற்றுப்பார்த்தேன். உயிர் இருப்பது தெரிந்தது. ஒன்றுமில்லை, இப்படியே அவனை விட்டுவிட்டுச் சென்றால் போதும், ரத்தம் பூராவும் வழிந்து தானாகவே செத்துப்போவான். நெடுநாளைய வஞ்சம் இன்றோடு தீர்ந்துவிடும். என்மீது எந்தப் பழிபாவமும் வராது. ஆஹா.. ஆஹா.. என்று மனம் குதித்து ஆடியது.

எல்லாம் ஒரு கணம்தான். சட்டென்று மனம் நிலை தடுமாறியது. கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்த இடத்தைவிட்டு என்னால் நகர முடியவில்லை. எனது அலைபேசியை எடுத்து பதற்றத்துடன் எண் 108க்கு போன்செய்தேன். கால்மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து சேர்வதை உறுதி செய்து விட்டுக் காத்திருந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com