சிறுகதை – ஊனம்!

ஓவியம்; லலிதா
ஓவியம்; லலிதா

-உமாகல்யாணி

 "அதெப்படி முடியும்? முன்னே நாங்கதான் முதல்ல பேசினோம். நிச்சயதார்த்தம் பண்ணினோம். இல்லேன்னு சொல்லலே. அதுக்காக இப்ப என்ன பண்ணலாம்கிறீங்க? ஏதாச்சும் நடக்கிற காரியமாய்ப் பேசுங்க. போக வேண்டாத ஊருக்கு வழி சொல்லிட்டு நிற்காதீங்க" என்று அழுத்தம் திருத்தமாய்ப் பேசினாள் பாட்டி.

இன்னமும் இந்த வீட்டில் பாட்டியின் ஆட்சிதான். அதற்கு, எதையுமே சரியாகச் செய்யக்கூடியவள் பாட்டி என்பதே காரணம்.

இப்போது அவள் பேசுவது இங்கு எத்தனை பேரிடம் நிம்மதியை வரவழைத்துத் தந்திருக்கிறது தெரியுமா?

தான் சொன்னதற்கு மாற்று அபிப்ராயங்களோ, மறுத்தல்களோ இருந்து விடக்கூடாது என்பதுபோல் தெளிவோடும் திடமோடும் பேசிக்கொண்டிருந்தாள்.

அதற்கு, எங்கிருந்தும் மறுப்பு இல்லை.

சௌம்யாவிடமிருந்தும் கூட.

சௌம்யா ஏன் மறுக்கப் போகிறாள்?

இதை அவள் ஒரு வசதி என்று கூடத் திருப்தி அடையலாம்!

முன்பு அவள் கோபிநாத்தை மணப்பதற்கு மறுப்புக் கூறியவள்தானே!
'இப்ப எனக்கொண்ணும் கல்யாணம் எல்லாம் வேணாம். நான் படிக்கணும். மேலே படிக்கணும்...' என்று சௌம்யா மறுத்தபோது,  அந்த மறுப்பை முறித்து வீசியவள் பாட்டிதான்.

'போடி போடி உலகம் புரியாதவளே! இந்த கோபிநாத்தை நீ லேசா எண்ணிட்டே போலிருக்கு. அவனைப் பண்ணிக்க கியூவிலேயே நிக்கிறாளுங்க. ஆனா அவன் என்னன்னா உன் பின்னாடிதான் வந்து நிப்பேன்னு தபஸ் பண்றானேடி. ஆளும் அம்சமா இருக்கான். வசதியா வேற இருக்கான். பொண்ணாப் பொறந்தவளுக்கு வேற என்னடி வேணும்? இப்ப இதைத் தவற விட்டோம்ன்னா அப்புறம் நாம தரமான மாப்பிள்ளைக்குத் தேடித் தேடி அலையணும். பாட்டி சொல்றதைக் கேட்ட ஒருத்தருமே கெட்டுப் போனதில்லே. சொல்றமில்ல, கேளு...’

பேசாமலிருந்து தனது மறுப்பைக் காண்பித்தாள் சௌம்யா.

இதுவரையிலும் எதிர்ச் சொல்லுக்குப் பணிந்தறியாதவள் பாட்டி.

இப்போது பேத்தியின் திடம் பயமுறுத்தினாலும்கூட நம்பிக்கையோடுதான் இருந்தாள்.

அது வீண் போகவில்லை.

இதையும் படியுங்கள்:
காதல் கரை என்றழைக்கப்படும் சினேகதீரம் கடற்கரைக்கு ஓர் பயணம்!
ஓவியம்; லலிதா

சௌம்யாவின் கல்யாண நிச்சயதார்த்தம் பாட்டியின் முன்னிலையில் ஜாம் ஜாம் என்று நிறைவேறிவிட்டது.

வழக்கம் போலவே பாட்டிக்கு வெற்றி!

எல்லோருக்கும் பாட்டியைக் சந்தோஷம்தான்! கொண்டாடினார்கள், சௌம்யா நீங்கலாக மற்றவர்கள்.

சௌம்யா மட்டும் 'உர்'ரென்று இருந்தாள் .

எல்லாம் சரியாகி விடுவாள் என்று ஒருவர் மற்றவரிடம் ஆறுதலாகக் கூறிக்கொண்டார்கள்.

ஆனால், அவள் அப்படிச் சரியானாளா,  இல்லையா என்பதை அறிந்து ஒரு முடிவுக்கு வரும்முன்பாக, மற்றவர்களே மாற்று முடிவு எடுக்க நேர்ந்த மோசமான விளைவுகள்!

ப்போது எடுக்க வேண்டிய மாற்று முடிவிற்கான பொறுப்பும் வழக்கம்போலவே பாட்டியின் தலைமீதுதான் சுமத்தப்பட்டது.

அதனால்தான் இப்போது பாட்டியின் கத்தல்.

நாங்க நிச்சயதார்த்தம் பண்ணினதை இல்லேன்னு சொல்லலே. அதுக்கு இப்ப இன்ன பண்ணலாம்கிறீங்க? ஏதாச்சும் நடக்கிற காரியமாய்ப் பேசுங்க. போக வேண்டாத ஊருக்கெல்லாம் வழிகாட்டிக்கிட்டு நிற்காதீங்க!''

எதிரில் இருந்தவர்களால் பாட்டியை மறுத்துப் பேச முடியவில்லை.

அவர்கள் இப்போது அவளின் கருணையைத்தான் எதிர்நோக்கினார்கள்.

ஆனால், பாட்டி ஒன்றும் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்கிற மனப்பாங்கில் இல்லை.

முன்பு பாட்டியின் கட்சிக்கு வலுவூட்டியவர்களே இப்போதும் வலுவூட்டிக் கொண்டிருந்தார்கள். முன்பு நிச்சயதார்த்தம் நடத்தச் சொல்லி, இப்போது அதை ரத்து பண்ணச் சொல்லி.

சௌம்யா?

முன்பு எதிர்ப்பைக் காண்பித்த சௌம்யா?

இப்போதும் மௌனமாகவே இருக்கிறாள்.

"ஒருவேளை மௌனச் சந்தோஷத்தில் இருப்பாளோ?

நிச்சயதார்த்தம் ரத்தாகிவிடும், தான் தனது முந்தைய ஆசைப்படி மேலே படிக்க முடியும் என்கிற சந்தோஷமுடன் இருப்பாளோ?

வெளிப்படையாய் எதுவும் தெரியவில்லை.

"பாட்டி, நாங்க சொல்றதுல அர்த்தமோ,  நியாயமோ இல்லைதான். ஆனாலும் எங்க பையனுக்காக..."

பாட்டியின் முகத் தீவிரம் மேலே பேச வேண்டாம் என்று சமிக்ஞை பண்ணியது.

எனினும் வந்தவர்கள் விடுவதாக இல்லை.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா உளவு விமானம்!
ஓவியம்; லலிதா

"பாட்டி, எதுவுமே நம்ம கையிலே கிடையாது. எல்லாமே ஆண்டவனோட அமைப்புத்தான். நாம எவ்வளவோ ஜாக்கிரதையாய் இருந்தாலும்கூட நடக்கிறது நடந்தேதான் தீரும். இப்ப நீங்க மறுத்துட்டா ரவி ரொம்பவும் மனமுடைஞ்சு போயிருவான். வாழ்வதே அர்த்தமில்லாததாய்ப் போயிடும் அவனுக்கு..."

பயந்துகொண்டே கூறினார் திருமூர்த்தி.

"இங்கே சௌம்யா மட்டும் என்னவாம்? ஏற்கெனவே அவளுக்கு இதுல துளியும் விருப்பம் கிடையாது. நாங்க எல்லாரும் கூடிப் பேசித்தான், அவளை வற்புறுத்தி சம்மதிக்க வச்சோம். அப்பவே அவ மறுப்பைக் காண்பிச்சவ. என்னவோ பெரியவங்க கூடி நிச்சயம் பண்ணியிருக்காங்களேன்னு பேசாம இருந்தா. இப்ப நிச்சயமா அவ ஒத்துக்க மாட்டா. நீங்க வீணாய்ப் போட்டு அலட்டிக்க வேணாம். போய்ட்டு வாங்க."

அடித்துக் கூறி அனுப்பி வைக்க முயன்றாள் பாட்டி.

ஆனால் அவர்கள் போவதாய் இல்லை.

"பாட்டி, நீங்க மறுக்கிறதை நாங்க தப்புன்னு சொல்லலை. ஆனா, இந்த மறுப்பினாலே ஏற்கெனவே சிதைஞ்சு போயிருக்கிற ரவி இன்னமும் சிதைஞ்சு போயிருவான். அதனாலே நீங்க பெரிய மனசு பண்ணணும். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறாப்ல ஏற்பாடு பண்ணணும்... ஒரு பையனோட லைஃபை எண்ணியாச்சும் உங்க முடிவை மாத்திக்கணும் பாட்டி.''

"ஒரு பொண்ணோட லைஃபையும் எண்ணிப் பார்க்கணும் நீங்க."

திருமூர்த்தி பேசவில்லை.

அப்போது இவர்களின் உரையாடல்களையெல்லாம் கேட்டபடி ஓரமாய் நின்றிருந்த சௌம்யா, மெதுவாகத் திருமூர்த்தியின் அருகே வந்து நின்றாள்.

அப்புறம் மிருதுவான குரலில், "இப்ப அவரை எந்த ஆஸ்பத்திரில் அட்மிட் பண்ணியிருக்கிங்க?" என்று கேட்டாள்.

பாட்டி உட்பட அனைவரும் அவளைத் திடுக்கிடலுடன் ஏறிட்டனர்.

"ஜி. ஹெச்.லதான் அட்மிட் பண்ணியிருக்கு" என்றார் திருமூர்த்தி.

பாட்டியின் பக்கம் திரும்பிய சௌம்யா, "பாட்டி,  அப்ப நான் அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வந்துடறேன். பைக் ஆக்ஸிடெண்டிலே கால் போய்ட்டா என்ன, மனசாலே நடக்க முடியும்தானே! அழைச்சிட்டுப் போக நான் இருக்கேன்னு சொல்லிட்டு வந்துடறேன்" என்றவள், விருட்டென்று படி இறங்கி விரையலானாள்.

அத்தனை பேரும் முடமாகி முடங்கிக் கிடக்க, அவள் மட்டும் கால்களை வீசிப் போட்டு நடக்கலானாள்.

பின்குறிப்பு:-

கல்கி 16  மே  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com