சிறுகதை - பதில் நாடகம்!

சிறுகதை - பதில் நாடகம்!
சிறுகதை - பதில் நாடகம்!

-பூவை ஆறுமுகம்

ங்காளம்மன் தேநீர்க்கடை'யில் எள் போட இடம் இல்லை.

அதன் சொந்தக்காரனான செல்லையா பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான்.

எடுபிடிப் பையனுக்கும் மூச்சுவிட நேரமில்லை.

டீ அடித்துக் கொடுத்துக்கொண்டும், சில்லறைகளை வாங்கிப் போட்டுக்கொண்டும் இருந்தான் செல்லையா.

காலை வெய்யில் அப்போதுதான் சூடு காட்டத் தொடங்கியிருந்தது.

அப்போது தலை முண்டாசை அவிழ்த்து உதறித் தோளில் போட்டுக்கொண்டு வந்து நின்ற மாணிக்கம் தன்னுடைய புதிய கருக்கரிகாள் மீசையை லாகவமாக முறுக்கிவிட்டவனாக,  அந்தத் தேநீர்க் கடையை ஒருமுறை நோட்டமிட்டான். உட்கார இடம் கிடைக்காததால், அமர்த்தலாக நிற்க வேண்டியவன் ஆனான். வந்தவனை 'வா' என்றுகூடச் சொல்லாமல் நின்ற செல்லையாவை ஒருமுறை முறைத்துப் பார்த்து விட்டு, "என்னாப்பா செல்லையா, எனக்குப் பட்டுக்கோட்டை வரை அலுவல் இருக்கு. நீ எழுதிக் கொடுத்த புரோ நோட்டைக் கொண்டாந்திருக்கேன். உன் சொல்லுப்படி பணம் தோது பண்ணிட்டியா, என்ன?" என்று ஓங்கிய குரலில் விசாரித்தான்.

கல்லாப் பெட்டிக்குள் சில்லறைகளை எண்ணிப் போட்டுக்கொண்டிருந்த செல்லையா, மெதுவாக மாணிக்கத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்.

"பட்டுக்கோட்டையில் சோலி இருக்கிறதாய்ச் சொன்னீங்களே, என் மீது பிராது போடவா?'' என்று எகத்தாளத்துடன் வினவினான் செல்லையா.

“நோட்டுக்குள்ள பணத்தை வட்டி சேர்த்துக் கணக்குப் பண்ணிக் கொடுத்திட்டா, உன்மீது நான் ஏதுக்குப் பிராது பண்ணப் போறேன்?... ஆபத்து சம்பத்தின்னு வந்து கெஞ்சினே. கொடுத்தேன். வருஷம் மூணு ஆகப் போகுது. நாளைக் கழிச்சு ஞாயிற்றுக்கிழமை காலாவதி. நேத்து நீயும் நானும் சண்டை போட்டுக்கிட்டது போதும். சீக்கிரம் பணத்தை எடு!” என்று துருசுப் படுத்தலானான் மாணிக்கம்.

மாணிக்கத்தை நேர்கொண்ட விழிகளால் அளந்தான் செல்லையா. சுருட்டை முடிகளைக் கோதி விட்டுக்கொண்டான். பீடிப் புகை சூழத் தொடங்கியது. "அப்பாலே எம்புட்டு பணம் வேணுமுங்க? நேத்து நான் சொன்ன மாதிரி, நான் வாங்கின ரூபாய் ஐந்நூறுக்கு அரை வட்டி மேனிதான் போட்டுத் தர ஏலுமுங்க. நிலக்கடலை சாடாவையும் ஆலங்குடிச் சந்தையிலே வித்துப் பணம் பண்ணிப்பிட்டேன். இன்னும் அஞ்சாறு மாசம் ஆறப்போட்டிருந்தால், இன்னும் நானூறு ரூபாயாச்சும் கூடுதலாய்க் கிடைச்சிருக்கும். எங் கணக்குப்படி வட்டியும் முதலும் சேர்த்து ஐந்நூத்தித் தொண்ணூறு ஆகுது. அதிலே மூணு வருசத்திலே செல்லு வைச்சது ரூபாய் மூணு கழிச்சிட்டா, பாக்கி ஐந்நூத்தி எம்பத்தேழுரூபாய் நிக்குது! தரட்டா? ஓங்க கணக்குப்படி ரெண்டு வட்டி போட்டா,  எண்ணூத்தி அறுபது ஆகுமே! அடாவடி அடிக்காமல் பணத்தை வாங்கிக்கிடுங்க. இல்லாட்டி, ஒட்டிக்கு ரெட்டியாய் நோட்டு எழுதி வாங்கி வச்சிருக்கீங்க எங்கிட்டேயிருந்து. அதைக்  கோர்ட்டிலே போட்டுக்கிடுங்க...! என்று கன கச்சிதமாகச் சொன்னான்.

வட்டியை ஒரு ரூபாய் வீதமாவது போட்டுத் தரும்படி நேற்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் மாணிக்கம். செல்லையா கேட்கவில்லை. இருவருக்கும் இடையே வாய்ப்பேச்சுத் தடித்து, கைகலப்பு மூளும் நிலைகூட வந்தது. நல்லவேளை, இடையிலிருந்த நல்லவர்கள் தடுத்து விட்டார்கள். இருவருக்குள்ளும் பேச்சு அரை வட்டிதான். செல்லையா பேரில் தவறில்லை.

இனி தன் வீம்பு சாயாது என்பதைப் புரிந்துகொண்டான் மாணிக்கம். “ம்.... சரி, எடுப்பா பணத்தை!'' என்றான்.

செல்லையா உள்ளே போய்ப் பணமும் கையுமாக வெளியே வந்தான். பணத்தை எண்ணி மேஜையின் மீது வைத்தான்.  "புரோநோட்டைத் தாங்க, பார்க்க வேணும்!” என்றான் அவன்.

மாணிக்கத்துக்குச் செல்லையாவின் பேச்சு என்னமோ ஒரு சந்தேகத்தை ஊட்டியது போலும். "நீ முதலில் பணத்தைத் தா, செல்லையா!” என்றான். அவசரத்துக்குக் கெஞ்சிக் கூத்தாடிப் பணத்தைக் கடன் வாங்கிப் போனவன் நேற்று எப்படித் திமிராகப் பேசினான்! - வட்டியையும் கூடுதலாகப் போட்டுத் தரவும் மறுத்துவிட்டானே! ஒருகால்; பிராமிஸரி நோட்டை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் ஏய்த்துவிட்டால்...? மறுகணம், ஏதோ ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவனாக மறுபேச்சாடாமல், கையிலிருந்த அந்தப் புரோ நோட்டை மாணிக்கத்துக்குச் செல்லையா எழுதிக் கொடுத்த அந்தப் பிராமிஸரி நோட்டைச் செல்லையாவிடம் நீட்டினான்.

செல்லையா அந்தப் புரோநோட்டை வாங்கிப் பார்த்தான். மறுகணம், அதை அப்படியே சுக்கல் நூறாகக் கிழித்துப்போட்டான்.

 "மாணிக்கம்! இனிமே நீங்க எம்பேரிலே எப்பிடித் தாவா போடுவீங்களாம்?... நேத்து ஒரேயடியாய்ப் பயம் காட்டினீகளே?” என்று அட்டகாசமாகச் சிரித்தபடி, மேஜையிலிருந்த பணம் முழுவதையும் அள்ள மடியில் கட்டிக்கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நின்றான் செல்லையா.

வாடிக்கைக்காரர்கள் ஸ்தம்பித்து போயினர்.

மாணிக்கம் எள்ளும்கொள்ளும் வெடிக்கத் காட்சியளித்தான். 'என்னை ஏய்ச்சுப்பிட்டே நீ. ஆனா, உன்னோட மனச்சாட்சியை ஏய்ச்சுப்புட ஏலாது. நினைப்பு வச்சுக்க!.. இந்தப் பணம் எனக்குக் கால் தூசுக் சமானம்!.... சீ! நன்னி மறந்த சென்மம் நீ!'' என்று சோளம் பொரியக் கத்திவிட்டு கோபாவேசம் மூள அங்கிருந்து கிளம்பத் தொடங்கினான்.

உடனே, செல்லையா கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான். “அண்ணாச்சி, இந்தா, சாயா!'' என்று சொல்லி, தேநீர் போட்டு வைத்தான்.

மாணிக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

அண்ணாச்சி, !" என்று அழைத்துக்கொண்டே தொடர்ந்த செல்லையா, உணர்ச்சிப் பெருக்குடன் மாணிக்கத்தின் கைகளைப் பற்றி அழைத்து வந்தான்; மடியிலிருந்த பணம் முழுதும் அள்ளிக் கொடுத்தான். பணத்தை எண்ணிக்கிட்டு, நான் உங்ககிட்டே எழுதிக் கொடுத்த அசல் புரோநோட்டைக் கொடுங்க அண்ணாச்சி. நெஞ்சிலே வஞ்சகம் இல்லாத புள்ளிங்க நாம ரெண்டு பேரும். நீங்க எங்கிட்டே ஒரு நாடகம் போட்டுக் காட்டினீங்க. நானும் பதிலுக்கு ஒரு நாடகம் நடிச்சுக் காட்டினேன். பணத்தாசைக்கு நாம ரெண்டு பேருமே நல்லவேளை பலியாகிடல்லே !...." என்று நிதானமான அன்புடன் சிரித்தான் செல்லையா.

மாணிக்கம் பணத்தைப் பெற்றுக்கொண்டான். "நீ எழுதிக் கொடுத்த அசல் புரோநோட்டு இது! என்று சொல்லி, மடியிலிருந்த பழைய புரோநோட்டைக் கையிலெடுத்து வைத்த மாணிக்கம், மறுகணம் அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டுவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினான், பணத்தைப் பத்திரப்படுத்தியபடி!

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் முகத்திற்கு ஆவி பிடிப்பதன் அவசியம் என்ன?
சிறுகதை - பதில் நாடகம்!

'அண்ணாச்சி!'' என்று கதிகலங்கக் கூவினான் செல்லையா. மறுகணம், தன்னைச் சமாளித்து நிதானப்படுத்திக்கொண்டான். ''ஒண்ணுமில்லேங்க, அண்ணாச்சி! வேறொரு நோட்டைக் கிழிச்சுட்டு, என்னோட அசல் நோட்டை நீங்க வச்சிருந்து எம்பேரிலே தாவா போட்டாலும், நான் கட்டுப்படத்தான் செய்வேனுங்க! என்னா, தெய்வத்தை மதிக்கிறவனுங்க இந்த ஏழைச் செல்லையா!' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் செல்லையா.

மாணிக்கம் அழகாகச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அவனுக்காகப் போடப்பட்ட தேநீரை அருந்தாம போவானா அவன்?

'கடவுளே!' செல்லையாவின் உள் மனம் தெய்வத்தை அழைத்துக்கொண்டிருந்தது. கிழித்துப் போடப்பட்டிருந்த அந்தப் புரோநோட்டின் கிழிசல்களிலே ஒன்று அவன் காலடியில் தஞ்சமடைந்து கிடந்தது. அந்தக் கிழிசலிலே, அவன் போட்ட - ரெவின்யூ ஸ்டாம்பில் போட்ட - கையொப்பம் அவன் கண்களிலே தென்படாமலா போய்விடப் போகிறது?

பின்குறிப்பு:-

கல்கி 10  மே  1970 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com