பொதுவாக, குளிர்காலத்தில் மனிதர்களுக்கு அவ்வளவாக வியர்ப்பதில்லை. அதனால் முகத்தில் உள்ள துளைகள் மூடப்பட்டு, அதில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கி விடுகின்றன. அவை கரும்புள்ளிகளாக உருவெடுக்கின்றன. மேலும் இவை முகப் பருவிற்கும் வழிவகை செய்கின்றன. ஆனால், முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகளை சரி செய்யலாம்.
முகத்திற்கு ஆவி பிடிப்பதன் நன்மைகள்:
பளபளப்பான முகம்: முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் நிறைய நன்மைகள் விளைகின்றன. சூடான நீராவி முகத்தில் பட்டு, வியர்வையை அதிகரிக்கிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. மேலும், சருமத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதன் விளைவாக முகம் இயற்கையான, ஆரோக்கியமான பளபளப்புடன் திகழ்கிறது.
கரும்புள்ளிகள், அழுக்குகள் அகற்றம்: நீராவி முகத்தில் பட்டதும், அதில் உள்ள துளைகள் திறந்து கொள்கின்றன. இதன் மூலம் இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்களை வெளியேற்றுகின்றன. கரும்புள்ளிகளை மென்மையாக்கி அவற்றை அகற்றுவதை எளிதாக்குகின்றன. மேலும், முக சருமத்தை ஆழமான சுத்திகரித்து அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
முகப்பருக்கள் மறைதல்: இயற்கையாக இருக்கும் செபாசியஸ் சுரப்பிகளால், முகம் எண்ணெய் பசையோடு இருக்கும். இவை முகப்பருக்களை உருவாக்குகின்றன. ஆவி பிடிப்பதனால், இவை குறையும்.
முகத்தை ஈரப்பதமாக்குகிறது: குளிர்காற்றில் சருமம் வறண்டு இருக்கும். ஆவி பிடித்தால், நீராவி சருமத்தில் ஊடுருவி அதை ஈரப்பதமாக்குகிறது. எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் உதவுகிறது. முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இதன் விளைவாக முகம் உறுதியாக, இளமையாக இருக்கும்.
சளி, தலைவலியை போக்குகிறது: நீராவி ஃபேஷியல் சளி, மூக்கடைப்பு மற்றும் விண் விண் என்று தெறிக்கும் தலைவலியைப் போக்க உதவுகிறது. ஆவி பிடிக்க நீரைக் கொதிக்க வைக்கும்போது அதில் இரண்டு கைப்பிடி நொச்சித் தழைகளைப் போட்டு ஆவி பிடிப்பது இன்னும் சிறப்பான பலன் தரும்.