சிறுகதை - டுபாய் அழைக்கிறது!

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்
Published on

-சாந்தி ஜொ

"சந்தோஷங்க ரொம்ப சந்தோஷம்."

"ஆமா மங்களா. துபாய்க்கு வேலைக்குப் போறதுக்கு விசா இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்னு நான் நினைக்கல. வேலைக்குச் சேர்ந்ததும் நான் அனுப்புற சம்பளத்துள கடனெல்லாம் முடிச்சிரு. இனி நான் உன்ன கஷ்டபடுத்த மாட்டேன். ஐஞ்சு வருஷத்துக்குப் பிறகு திரும்ப நான் வரும்போது நம்ம நல்ல நிலைமல இருப்போம்" என்றான் அரவிந்தன்.

அரவிந்தன் கொழும்பில் காய்கறி மார்க்கெட்டில் தினக்கூலி வேலைக்குச் செல்பவன். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் 3500 சம்பள பணத்தில் வீட்டு செலவுக்கு 2500 கொடுப்பான். மீதி 1000 பணத்தைக் குடிப்பதற்கு செலவு செய்வான். குடித்துவிட்டு தவறாது மனைவி மங்களாவிடம் இனி குடிக்கமாட்டேன் என சத்தியமும் செய்வான்.

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மக்களுக்கு மாரடைப்பை வரவழைக்கும் அளவிற்கு உயர்ந்ததை எண்ணி வருத்தப்படாதவன் மதுபானங்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் 2500க்கு குடித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.  

வைன் ஸ்டோர் வாசலில் நின்று குடித்தற்காக போலீஸ் அவனைப் பிடித்து 1 நாள் சிறையில் வைத்து அனுப்பியது. பிறகு சம்பளக் குறைவு போன்ற காரணங்களால் குடியைக் கொஞ்சமாக குறைத்துக்கொண்டான். இப்படியே சென்றால் பிழைப்பது கஷ்டம் என்பதை புரிந்துகொண்ட மங்களா, அவன் குடியை முழுவதுமாக விடவும் வேலை செய்யவும் வேண்டி அவனை டுபாய்க்கு அனுப்ப தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஏற்பாடு செய்தாள்.

வெளிநாட்டு முகவரிடம் தனது பாஸ்போர்ட், பயண டிக்கெட் ஆகியவற்றை வாங்குவதற்காக சென்று வீடு திரும்பினான் அரவிந்தன்.

மங்களாவின் முகத்தில் நிலவிய பதற்றத்தைக் கண்டு எதுவும் கேட்காமல் அவளே சொல்லும்வரை காத்திருந்தான்.

"என்னங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாலா கால் பண்ணிருந்தா"

"மாலாவா, அவ ஏன் கால் பண்ணா?"

"அது வந்து...ம்... உங்க அம்மம்மா சுகமில்லாம ஆஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்காங்களாம். ரொம்ப சீரியஸான நிலைமல இருக்காங்களாம். உங்கள வந்து பார்த்துட்டு போக சொன்னா மாலா."

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சஃப்ரான்-ஹனி டீ!
ஓவியம்: தமிழ்

"அதுதான் பேரன் வேணானு பேத்திக்கே எல்லா சொத்தையும் வைச்சிக்க கொடுத்தாங்களே... இப்ப மட்டும் நான் போய் ஏன் பார்க்கணும்."

"இப்படி பேசாதீங்க. நம்மளுக்குக் கல்யாணமாகி பிள்ள பிறந்து ஐஞ்சு வருஷமாச்சி. நம்ம பிள்ளைய அவங்க பார்த்ததுகூட இல்ல. என்னாதான் இருந்தாலும் அவங்க வயசுல பெரியவங்க. இந்த நேரத்துல நீங்க வீம்பு பிடிக்காம பிள்ளையையும் கூட்டிட்டுப் போய்ட்டு பார்த்துட்டு வாங்க" என்றாள் மங்களா.

அரவிந்தன், "நான் எதுக்கு போய் அவங்கள பார்க்கணும். நான் தப்பு செஞ்சேன்தான். அதுக்குனு.... வேணா மங்களா பழச ஞாபகப்படுத்தாத. நான் வேலைக்கு டுபாய் போறத நினைச்சி நீ சந்தோஷப்படுற. நான் குடிய முழுசா விடுறதுக்கும் ஒரு புது சூழ்நிலைக்கு மாறப் போறதையும் நினைச்சி சந்தோஷப்படுறேன்" என்றான்.

ரவிந்தனனின் அப்பாவும் அம்மாவும் விபத்து ஒன்றில் இறந்துப்போனபோது அவனுக்கு வயது பத்து. அவனது தங்கை மாலா கைக்குழந்தை. அந்நேரத்தில் இவர்களை அன்போடு அரவணைத்து பாதுகாத்தது இவர்களுடைய அம்மம்மா பாலம்மா மட்டும்தான்.

சமையல்காரியாக வேலை செய்து, சம்பாதித்த பணத்தில் மாலாவை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தும், அரவிந்தனை கல்லூரி படிப்பு வரையும் படிக்க வைத்தார்.

போக வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் குடிப்போதையில் இருந்த மாப்பிள்ளை தனது மகளை பைக்கில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரையும் பலிக்கொடுத்த பாலம்மாவுக்கு குடி என்ற வார்த்தையைக் கேட்டாலே உடம்பலாம் நடுங்கும். தந்தை போலவே குடியை அரவிந்தனும் பழகக்கூடாது என்பதற்காக அவனை மிகவும் கவனத்துடனும் அவனது தந்தையால் தனது மகளும் விபத்தில் இறந்ததை சொல்லிச் சொல்லியும் வளர்த்தாள்.

அப்படி வளர்க்கப்பட்ட அரவிந்தன் பழகக் கூடாதவர் களோடு பழக்கம் ஏற்படத் தொடங்கி குடிக்கத் தொடங்கினான். மனம் நொந்த பாலம்மா திருத்து வதற்கான முயற்சிகள் அனைத்தும் அவனிடத்தில் பலிக்காத பிறகு அவனை வீட்டை விட்டு விரட்டியடித்தாள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே அவனை காதலித்த மங்களா, "அரவிந்தனை நான் திருத்துவேன். அவரு குடிய முழுச விடுவாறு" என்று சவால் விட்டு கல்யாணம் செய்துகொண்டாள். ஐந்து வருடங்கள் ஆகியும் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. இதில் அவள் தற்போது எய்தியுள்ள அம்புதான் அரவிந்தனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் முயற்சி. புதிய சிந்தனையும் கடின உழைப்பும் அவன் மனதை முற்றிலும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அவனை அனுப்புகிறாள்.

இதையும் படியுங்கள்:
மைசூர் சில்க்கும் மோட்டிவேஷனும்..!
ஓவியம்: தமிழ்

ரு நாட்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த அரவிந்தனுக்கு அப்பொழுது மாலா அழுதுவாறே சொன்ன செய்தி உருக்குலையச் செய்தது.

"அண்ணா அம்மம்மா இறந்துட்டாங்க". தலையில் கை வைத்து அம்மம்மா என்று கதறி அழ தொடங்கிய அரவிந்தனை சமாதானப்படுத்தினாள் மங்களா.

"குடிய முழுச விடுறதுதான் உங்க அம்மம்மாக்கு நீங்க கொடுக்குற மரியாத. அப்போதான் அவுங்க ஆத்மா சாந்தியடையும்" என்று ஆறுதல் சொல்லி அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள்.

ரவிந்தன் டுபாய்க்கு சென்ற ஒரு வாரத்திற்கு பிறகு அம்மம்மாவினுடைய கருமக்காரியங்களை முடித்த மாலா மங்களாவை பார்க்க வீட்டிற்கு வந்தாள்.

"அண்ணி அம்மம்மா கடைசி வரைக்கும் அண்ணா வந்து பார்க்கலனு கவலப்படல. அவரு குடிய முழுசா விடணும் திருந்தணும்னுதான் ஆசப்பட்டாங்க. அண்ணா டுபாய் போறத நினச்சி சந்தோஷப்பட்டாங்க. இந்தக் கவர அம்மம்மா உங்ககிட்டக் கொடுக்கச் சொன்னாங்க."
மங்களா அந்தக் கவரை பிரித்துப் பார்த்தாள். அதில் ஒரு கடிதமும், வீட்டு பத்திரமும் இருந்தது. கடிதத்தில்

“என் அன்பு பேரன் அரவிந்தனின் மனைவி மங்களாவுக்கு,
கொஞ்ச நேர கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்காக அவன் குடிக்கிற குடி அவன மட்டும் இல்ல... அவன சுத்தியுள்ளவங்களையும் பாதிக்குதுனுங்குறத ஏன் அவன் உணரல. குடியினாலதான் அவங்க அப்பா விபத்துல இறந்தாரு. அவரோட என் மகளும் இறந்தா. உங்களோட பிள்ளைகளுக்கும் அந்த நிலம வரக்கூடாது. அவன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக போறானு கேள்விப்பட்டேன். நல்லது. இந்தப் பயணம் அவன நிச்சயம் திருத்தும். என்னோட வீட்ட அவன் பெயர்ல எழுதி இருக்கேன். அவன் திருந்தி ஒழுங்கா வந்தால் அவனுக்கு இதச் சொல்லுங்க. சந்தோஷமா வாழுங்க.  குடிய அவன் முழுசா விடணும். எனக்கு அதுபோதும். அவனோட அம்மம்மா, பாலம்மா.”

அரவிந்தனுக்கு வீடு தன் பெயரில் எழுதப்பட்டிருப்பதைப் பற்றி சொன்னால் வேலைக்குப் போன இடத்தில் ஏதாவது பொய் சொல்லி திரும்பி விடுவான் என்பதை உணர்ந்த மங்களா, அவன் திருந்தி வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அதை தற்போது அவனிடம் சொல்லாது மறைத்தாள். அம்மம்மாவின் வீடும் அவன் வரும் வரை காத்திருக்கிறது.

குடியால் தான் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் துன்பத்தைக் கொடுக்கும் பல அரவிந்தர்களும், அவர்களை திருத்தப் பாடுபடும் பாலம்மாக்களும், மங்களாக்களும் இன்னும் இங்கு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com