சிறுகதை - பொய்க் கண்ணாடி!

Lifestyle Short stories...
ஓவியம்: ம.செ.
Published on

ருவமும் அதன் கண்ணாடிப் பிரதி பிம்பமும்போல் இவளாகவே அவள்.

இனி அப்படி இல்லை.

அந்த ஒற்றுமை, ஒவ்வொரு சிறு விவரத்தின் ஒருமை, இன்று ஒரு மகத்தான வேற்றுமையின் கொடுமையை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறது.

ஏன்?... எனக்கு இது ஏன்? நெஞ்சை அடைத்தது. இது துக்கமா, விதியைச் சபிக்கும் ஆத்திரமா, அல்லது யதார்த்தத்தை மறுக்கும் புரட்சியா?

சோர்ந்து நாற்காலியில் சாய்ந்தாள்.

-ஆர். சூடாமணி
-ஆர். சூடாமணி

''என்ன சாரு? களைப்பாயிருக்கா? கை சோர்ந்து போகுதா? நான் தள்ளட்டுமா?"

"எங்கே, அதலபாதாளத்துக்கா?" எதிரே நின்ற சரளாவின் முகம் சட்டென்று வாடியது.

எதிரே நின்ற, சரளா நிற்கிறாள். நடக்கிறாள். ஓடக்கூட முடியும் அவளால்.

சாரதாவின் கைகள் பரபரவென்று சக்கரங்களை இயக்கின. அவள் அறையை நோக்கிச் செலுத்தின.

வீட்டின் நடு மற்றும் பிற்பகுதியில் பழைய கட்டடம்தான். முற்பகுதியை மட்டும் மொசைக்கும் கிரில்லுமாய் புதுப் பாணியில் மாற்றிக் கட்டிய வீடு. பழம்பகுதி யெங்கும் அறைக்கு அறை நடுவில் படி உண்டு. அதாவது, முன்பு. இப்போது அவளுடைய அறைக் கதவு நிலையின் படியை, வீட்டுச் சொந்தக்காரர் அனுமதியுடன் இடித்துப் பூசி சமப்படுத்தியிருந்தார்கள், நாற்காலிச் சக்கரங்கள் சீராய் உருண்டு செல்ல. அந்தச் சமப்பட்ட தரையிலிருந்து உலகமே அவளை நோக்கி இரக்கத்துடன் விரல் சுட்டுவதுபோல் உணர்ந்தாள்.

பின்னாலேயே வந்த சரளா "நீ இப்போ டிபன் சாப்பிடறயான்னு அம்மா கேட்டாங்க" என்றாள்.

"வேணாம்."             

"எப்ப வேணுமோ சொல்லு, கொண்டு வரேன்.'

''நீ கொண்டுவர வேணாம், அம்மா கொண்டு வரட்டும்." நாற்காலி அறைக்குள் நுழைந்ததுமே சாரதா இடது புறங்கையால் கதவை அறைந்து சாத்தினாள். சரளாவின் உருவம் பட்டென்று வெட்டப்பட்டு மறைந்தது.

நாற்காலி படுக்கையின் பக்கத்தில் வந்து நின்றது. இரண்டும் ஒரே மட்டத்தில் இருந்தன. அப்படியே சரிந்து படுக்கைக்கு வர முடியும். காலைப் பின்னோடு இழுத்து நீட்டிக்கொண்டு படுக்க முடியும்.

அவள் அது எதையும் செய்யவில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடி சுவரை வெறித்தாள். கண்ணீர் வரவில்லை. தன் நிலையை ஆஸ்பத்திரியில் உணர்ந்த கணத்திலிருந்து, வேண்டுமளவு அழுது அழுது, இப்போதுகூட கண்ணீர் வலுவிழந்தாற்போல் ஓய்ந்திருந்தது. மாநிற முகத்தின் மீது சுருட்டைக் கூந்தல் இழை நெளிந்து நீண்ட கண்ணில் விழுந்து உறுத்தியபோது, அதை நுனியால் ஒதுக்கிக்கொண்டாள்.

கதவைத் திறந்துகொண்டு அம்மா உள்ளே வந்தாள்.

இதையும் படியுங்கள்:
காலத்தைக் கடைப்பிடித்து ஞாலத்தில் சிறந்தவர் யார் தெரியுமா?
Lifestyle Short stories...

"சாரு, ஏதானும் வேணுமாம்மா? பாத்ரூமுக்குப் போகணுமா?"

"இல்லை."

"ஏதானும் சாப்பிடறயா கண்ணு?"

"எதுக்கு கண்ணு மூக்குன்னு இந்தப் புதுப் பழக்கமெல்லாம்? எனக்கு என்ன, நாளை எண்ணியா வச்சிருக்கு? அதான் ரொம்ப அழகாய்ப் பிழைச்சு வந்துட்டேனில்ல?"

பள்ளி ஆசிரியை. சக ஆசிரியைகளுடனும் மாணவர் குழந்தைகளுடனும் பள்ளி பஸ்ஸில் வேடந்தாங்கல் சுற்றுலா சென்று திரும்பும்போது எதிரே ஒரு போதை டிரைவரின் லாரியுடன் மோதி, யந்திர முழக்கத்துடன் விபத்து. பஸ் குடை சாய்ந்து அலறல்கள், ரத்தம். மருத்துவமனையில் நோவுடன் கண் விழித்தாள். நல்ல வேளை, குழந்தைகள் யாருக்கும் பெரிய சேதமில்லை. இன்னொரு ஆசிரியைக்கு வலது கையில் எலும்பு முறிவு. மாவுக் கட்டு படிப்படியாய் குணப்படுத்துவிடும். ஆனால், இவளுக்கு இனி இரண்டாவது கால் கிடையாது.

"நான் போறேன் சாரு. ஏதானும் வேணும்னா கூப்பிடு.''

தாய் கதவை அடைந்தபோது "அம்மா!" என்று மெல்லிய ஒலி. திரும்பினாள். சாரதாவின் முகம் துடித்துக்கொண்டிருந்தது. ஓடி வந்து மகளை அணைத்துக்கொண்டாள்.

"அம்மா.... இது ஏம்மா? ஏன்?... எனக்கு மட்டும்... ஏன்?"

எத்தனையாவது தடவையாய் இந்தக் கேள்வி!

ஏன்? ஏன்?

''சாரும்மா, இந்த 'ஏனு'க்குப் பதில் தெரிஞ்சிட்டா நாமெல்லாரும் கடவுள் ஆயிடுவோம்."

தாபத்துடன் மகளைத் தடவிக் கொடுக்கத்தான் முடிந்தது.

சாரதா தாயின் அணைப்பிலிருந்து விலகி உட்கார்ந்தாள்.

"எனக்கு ஒண்ணுமில்லேம்மா. நீ போ."

''சூடா டிபன் அனுப்பறேன். அதுவரை கொஞ்சநேரம் படுத்துக்க சாரு.''

"சரளாகிட்ட அனுப்பாதே."

மாநிற முகத்தின்மீது சுருட்டைக் கூந்தல் இழை நெளிந்து நீண்ட கண்ணில் பட்டு உரசியபோது, அதை விரல் நுனியால் ஒதுக்கிக்கொண்டாள் சரளா. கண்ணாடியில் முகம் பார்த்து ஸ்டிக்கர் பொட்டைச் சரிசெய்து கொண்டாள். சிவப்பு நைலக்ஸ் சேலைக் கொசுவங்களை இடது தோள் மீது அழகாய் அடுக்கிக் தொங்க விட்டபின், தோல் பையின் வாரை வலது தோள் மீதாக மாட்டிக்கொண்டாள். செதுக்கி வைத்தாற் போன்ற நேர்த்தியான பாதங்களைச் செருப்புகளில் நுழைத்துக்கொண்டாள்.

''போய்ட்டு வரேம்மா.''

திரும்பியவளின் நீண்ட கண்கள் அறைக்கு வெளியில் நாற்காலியிலிருந்து வெறித்துக்கொண்டிருந்த நீண்ட கண்களைச் சந்தித்தன. ஒரு கணம் தயங்கினாள். பிறகு - "வரேன் சாரு."

சாரதா பதில் சொல்லவில்லை. சரசரவென்று கடந்துபோகும் நூற்றறுபது சென்டி மீட்டர் உயர வடிவத்தையே மறையும் வரை பார்வையால் தொடர்ந்தாள். சரசரவென்று கடந்து போகும் கால்கள்.

கால்கள் என்பது பன்மை.

இந்த உருவமும் நூற்றறுபது சென்டி மீட்டர் உயரம்தான், எழுந்து நின்றால். நிற்க முடிந்தால், முடிந்த காலத்தில்.

இப்போதும் உறுப்புகளின் ஒற்றுமை கண்ணாடிப் பிரதிபிம்ப ஒற்றுமை. ஆனால், ஓர் உருவம் நிற்கிறது. இன்னொன்று உட்கார்ந்திருக்கிறது.

இந்தக் கண்ணாடி பொய்! இந்தக் கோணல் கண்ணாடி உண்மையைச் சிதைக்கிறது!

பரபரவென்று விரையும் சக்கரங்கள். நிலைக் கண்ணாடி பிரதிபலிக்கும் ஒற்றுமையுடன் ஆஸ்பத்திரி அறை. நினைவில் எழும் அறை.

"ரெட்டைப் பெண்ணணுங்களாம். ஒரே அச்சு! இந்தம்மா விபத்துக்கு முன்னால எப்படி இருந்திருப்பாங்கன்னு அந்தம்மாவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்."

ஒவ்வொரு நர்ஸின் நாவிலும் அதே சொற்கள். ஒவ்வொரு பார்வையாளர் கண்களிலும் அதே வியப்பு.

"ஒரே சமயத்தில் நீங்க கட்டிலிலும் படுத்துக்கிட்டு அதன் பக்கத்திலும் நிக்கற மாதிரி இருக்கு, மிஸ் சாரதா!'

இந்த சரளாவை ஆஸ்பத்திரிக்கு வராதே என்றால் கேட்டால்தானே?

"என்ன இது சாரு? அவளுக்கு மட்டும் உன்னைப் பத்தி வருத்தமும் கவலையும் இருக்காதா? வந்து பார்க்கணும்னு பதைக்காதா?" என்று அம்மாவின் வக்காலத்து வேறு .

அடுத்த முறை சரளா வந்து "ஹௌ ஆர் யு ஃபீலிங் டுடே சாரு?" என்றபோது, கட்டில் பக்கத்தில் மேஜை மீதிருந்த தண்ணீர் ஜாடியை எடுத்து, தற்செயலாய் விழுந்ததுபோல் அவள் கால்களை நோக்கி விட்டெறிந்தாள்.

ந்நேரம் சரளா தேனாம்பேட்டையில் தன் வேலைக் களத்தை அடைந்திருப்பாள்.

இவளும்தான். மணி காலை ஒன்பரை ஆகவில்லையா? புதன்கிழமை. அண்ணா நகர் பள்ளியில் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்குப் பொருளாதாரப் பாடம் நடத்திக்கொண்டிருப்பாள்.

அடிவயிற்றிலிருந்து என்னவோ சுருண்டெழுந்து மார்பை அடைத்தது.

அப்பா அடிக்கடி சொல்வாரே!" என் ரெண்டு பெண்களையும் ஒரேமாதிரி வளர்த்துப் படிக்க வச்சு ஆளாக்கிட்டேன். ஒருத்தி எம்.ஏ.க்குப் பிறகு செக்ரடேரியல் கோர்ஸ் பண்ணித் தனியார் கம்பெனியில் ஸ்டெனோ. இன்னொருத்தி எம்.ஏ.க்குப் பிறகு பி.எட். பண்ணி அரசுப் பள்ளியில் டீச்சர். இனி எங்களுக்கு அவங்களைப் பத்திக் கவலையில்லை. ரெண்டு பேரும் தன் கால்களில் நிக்கறவங்க.''

இதையும் படியுங்கள்:
முடியும் என்றால் எல்லாமும் முடியும்!
Lifestyle Short stories...

அவள் பல்லைக் கடித்துக்கொண்டு ஜன்னல் கதவை ஓங்கி அறைந்து மூடினாள். கண்ணாடி நொறுங்கித் தூள்கள் கீழே சிதறின. தரையெங்கும் சின்னச் சின்னக் கண்ணாடிப் பளபளப்புகள். மழைத் துளிகள் போல. சர்க்கரை சிந்தியதுபோல

"என்ன சத்தம் அது? அம்மா பதைப்புடன் வந்தாள். "என்ன சாரு?"

"ஜன்னல் கண்ணாடி உடைஞ்சுது. வேறொண்ணுமில்லே."

"காலில் கீலில் விழுந்து காயம் படலையே?"

"இன்னும் காலில் என்ன காயம் படணும்கறே?"

"முருகா... போகுது, சாப்பிட வரியா? இல்லாட்டி இங்கயே கொண்டு வரட்டுமா?"

"என்ன அவசரம்? இப்போ அள்ளிப் போட்டுக்கிட்டு எந்த வேலைக்கு நான் ஓடணும்?"

தாயின் கை அனுதாபத்துடன் அவள் தோள்மேல் படிந்தது. அவள் உதறித் தள்ளினாள் .

"இப்போ முழுச் சம்பளத்தில் லீவு.

இன்னும் ஒரு மாசம் போனா அரைச் சம்பளம். அப்புறம்..."

“நீ கட்டாயம் மறுபடியும் வேலைக்குப் போவே சாரு. கொஞ்சம் கொஞ்சமாய் க்ரட்சஸ், அப்புறம் செயற்கை உறுப்பு..."

"அம்மா ஒண்ணு தெரியுமா? அந்தச் சுற்றுலா கல்வி ரீதியாய் மாணவர்களுக்காகப் போனதால் அப்போ நேர்ந்த விபத்துக்கு நஷ்டஈடாய் ஸ்கூல் எனக்கு ஐம்பதாயிரம் தரப்போகுதாம். நேத்து வந்திருந்த பிரின்ஸிபல் சொன்னாங்க. என் காலின் விலை ஐம்பதாயிரம் ரூபாய்ன்னு உனக்குத் தெரியுமா?"

இரவும் பகலும் பெற்றோர் ரகசியமாய் அழுகிறார்கள். ஆனால் இவள் இப்படி ஏதாவது பேசும்போது துக்கம் அழுகையைத் தாண்டிப் போய் விடுகிறது.

சாரதா குனிந்து தன் சேலைக் கொசுவங்களுக்குக் கீழே பார்த்தாள். இடது பாதம் ஒரு தேர்ந்த கலைஞன் மாநிறத்தில் செதுக்கி வைத்த நேர்த்தியான சிற்பம் போல் காட்சியளித்தது.

மென்மையாய்க் கேட்டாள்.

''சரளாவின் காலுக்கு என்ன விலை இருக்கும்மா?"

அம்மாவின் இயலாமை ஆத்திரமாய் வெடித்தது.

"சரளாவை மறக்க முடியாதா உன்னால?"

ரளாவாலும் இவளை மறக்க முடியவில்லை என்பது அடுத்த மாதம் புலனாயிற்று. வெளி வராந்தாவில் வானத்தை நிமிர்ந்து பார்த்து, மரக்கிளைகளில் சிறைப்பட்ட பிறை நிலாவில் மனத்தை இழக்க முயன்று கொண்டிருந்தபோது,

"சாரு!"

அந்தக் குரலைக் கேட்டதுமே உடம்பு விறைத்துக்கொண்டது. கண் மட்டத்தில் சரளாவின் நீலப் புடைவையின் கொசுவங்களும் அவற்றுக்குக் கீழே இரண்டு நேர்த்தியான மாநிறப் பாதங்களும் தெரிந்தன.
நிமிர்ந்து பாராமல் நாற்காலியைத் திருப்பிக்கொண்டு உள்ளே விரைய ஆரம்பித்தாள்.

''நில்லு சாரு!"

நிற்கவில்லை. மேலே சொல்ல முனைந்தபோது சரளாவின் கைகள் நாற்காலியின் முதுகைப் பற்றி நிறுத்தின.

"நில்லுன்னு சொன்னேனில்ல?"

"போகவிடு சரளா."

"உன்னோடு கொஞ்சம் பேசணும்."

"எனக்கெதுவும் பேசவேணாம். நாற்காலியை விடு."

சரளா விட்டாள். அவள் சொற்கள் மட்டும் நாற்காலியைத் தொடர்ந்து வந்தன.

"நான் மெட்ராஸை விட்டுப்போறேன். என்னைப் பார்த்து சகிச்சுக்கிற அவஸ்தை இனி உனக்கு இருக்காது."

நாற்காலி நின்றது. பிறகு மெல்லத் திரும்பியது. சரளா ஒரு மோடாவை எடுத்து அவளெதிரே போட்டுக்கொண்டு அமர்ந்தாள். சகோதரிகளின் கண்கள் நேருக்குநேர் சந்தித்தன. எதிரெதிரே முகங்கள். சீரான கண்ணாடிப் பிரதிபிம்பம்.

அவளை இப்படிக் கண்ணோடு கண் சேர்த்து நோக்கி எத்தனை காலமாயிற்று என்ற எண்ணம் சாரதாவின் மனத்தில் ஓடியது. விபத்து நடந்து மூன்றரை மாதங்கள்தானா ஆகியிருந்தன? மூன்றரை யுகங்களாய் இவளைப் பார்க்கப் பிடிக்காமலாகிவிட்டது. இவள் வீட்டிலிருக்கும் நேரங்களில் சாரதா தன் அறையை விட்டு வருவதில்லை. இவள் சாப்பிட்டு அலுவலகம் போன பிறகே சாரதா சாப்பிட வருகிறாள். இரவு உணவு இவள் பெற்றோருடன் சேர்ந்து உண்ணு முன்பே சாரதாவுக்குச் சாப்பாடு அவள் அறைக்கு வந்து விட வேண்டும்.

"எவ்வளவு நாளுக்கு நாம் இப்படியே கண்ணாமூச்சி ஆடிக்கிட்டிருக்க முடியும் சாரு?"

சாரதா திடுக்கிட்டாள், அவள் மனச் சொற்களுக்கு சரளா குரல் கொடுத்தபோது.

"அதனால்தான் நான் தீர்மானம் பண்ணிட்டேன். இந்த நிலைமை இனியும் தொடர வேணாம்னு. தொடராமலிருக்கறது உனக்கு மட்டுமில்லே, எனக்கும் நிம்மதிதான். உன்னைப் பார்க்கறபோதெல்லாம் என் உடம்பு பதைக்குது. அது உனக்குப் புரியலே."

"புரியாம என்ன! ஒரு ஊனக்காரியைப் பார்த்துக்கிட்டே இருக்கறதுன்னா வெறுப்பாய்த்தான் இருக்கும்."

சரளா அவளை ஆழமாய் நோக்கினாள். "ஊனம் உன் மனசை உன் உடம்புக்குள் சிறைப்படுத்திவிடக் கூடாது சாரு."

"அட்வைஸ் குடுக்கறயாக்கும்! அக்கா இல்லையா? ரெண்டு நிமிஷம் பெரிய அக்கா!" சரளா எட்டி அவள் கையைத் தொட வந்தாள். சாரதா கையை விலக்கிக்கொண்டாள்.

"என்னமோ மெட்ராஸை விட்டுப் போகப் போறதாய்ச் சொன்னியே?"

''ஆமாம்" எங்க கம்பெனியின் திருச்சிக் கிளையிலேர்ந்து ஒரு ஸ்டெனோ மெட்ராஸுக்கு மாற்றல் கேட்டிருந்தார். அவர் இடத்தில் திருச்சிக்கு நான் போறதாய் வாலன்ட்டியர் பண்ணினேன். எங்க ரெண்டு பேருக்கும் இந்தப் பரிமாற்றத்துக்கு அனுமதி கிடைச்சிடிச்சு."

சாரதா பேசவில்லை.

''ரெண்டு வருஷம் நான் திருச்சியில் இருப்பேன். நடுவில் வரமாட்டேன். அப்பா அம்மாகிட்டயும், அவங்களுக்கு என்னைப் பார்க்கணும்னா அங்கே வரணணும்னு சொல்லிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு உன் கண்களுக்கு என்கிட்டேருந்து விடுதலை.”

சரளா நிறுத்தினாள். மறுபடி பேசியபோது குரல் தாழ்வாக, ஒரு மெல்லிய நடுக்கத்துடன் வந்தது.

ரெண்டு வருஷம் கழிச்சு நான் உன்னைப் பார்க்க வரபோது நீ ஜெய்ப்பூர் காலோடு வாசலில் நின்னு சிரிச்ச முகமாய் என்னை 'வா'ன்னு கூப்பிடுவேன்னு நம்பறேன்."

சரளா எழுந்துகொண்டாள். "நாளை ராத்திரி ஊருக்குக் கிளம்பறேன். குட் நைட் சாரு."

சாரதா அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சுய வெறுப்பின் திடீர்த் தாக்கலில் கணநேரம் ஆடிப் போய், உடனே சமாளித்துக் கொண்டாள். கண்களில் உறுத்திய கசிவை இமைகள் கொட்டி அடக்கினாள்.

"சரள்!"

நின்று திரும்பிய சரளாவின் முகத்தில் வியப்பு ."என்ன சாரு?"

"தாங்ஸ்." 

சாரதா சக்கர நாற்காலியைத் தன் அறையை நோக்கிச் செலுத்தினாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com