சிறுகதை; வெளிநாட்டு சம்பந்தி!

Short Story in Tamil
ஓவியம்: கோபன்
Published on

-சோம. வள்ளியப்பன்

புறங்கையைக் கட்டியபடி பட்டாளைக்கும் ரெண்டாங்கட்டுக்குமாக கதிரேசன் செட்டியார் நடை பழகினார். கண்கள் நொடிக்கொரு தரம் வாசலைப் பார்த்தன. அடர்ந்திருந்த பவளமல்லிக் கொடிகளையும் தாண்டி, வெயில் கண்ணைக் கூசியது.

தபால்காரன் வரும் நேரம்தான்.

'லச்சுமி... ஏ லச்சுமி..." ஆச்சியை உள்பக்கம் பார்த்து இரைந்தார். ஆச்சி மூணாங்கட்டிலோ, கொல்லைப் பக்கமோ இருப்பார். எப்படிக் கேட்கும்? வீடுதான் நானூற்றம்பது அடி நீளமாயிற்றே! பட்டாள அறைக்குள் சென்று 'பெல்'லை அமுக்கினார். உள்ளே அடுப்படியில் இருந்த ஆச்சி, சத்தம் கேட்டு, பதறிக்கொண்டு ஓடி வந்தார்.

"நாம எழுதி எத்தனை நா இருக்கும்?"

"எதைக் கேக்குறீக?"

"உன்னையப் போய்க் கேட்டேன் பாரு!... அதேன்... உன் மகன் கல்யாணங்கேட்டு எழுதினானே... இங்கிலீசுக்காரன்... அவனுக்கு பதில்..."

"நீங்கதானே எழுதினீக... போன வெள்ளிக்கு மொத வெள்ளி. பதிமூணு நாளாச்சு... ஏங்கேக்குறீக?"

"அவன் பதிலெழுதுறானோ, இல்லை... பேசாம கல்யாணத்தை சர்ச்சுல முடிச்சுப்பிடுறானோ...? ராமா! ராமா!! நம்ம கண்ணால இந்த கண்றாவியெல்லாம் பாக்க வேணுமின்னிருக்கு. எப்படிப்பட்ட குடும்பம்...! எங்கப் பச்சி... எப்படிப்பட்டவுக! எல்லோரும் ராமனா வாழ்ந்தவுக. நம்ம குடும்பத்துலயா இப்படி...? வேலைக்கு போனவங்கயெல்லாமா இப்படி வெள்ளைக்காரியைக் கூட்டியாராங்க...? உம் மகனைப் போலய...! எல்லாம் எந்தலையெழுத்து..?"

"அவன் கல்யாணங் கட்டுறான்... இல்ல நாசமாய்ப் போறான்... நீங்க கத்தி, கவலைப்பட்டு 'பிரசர்' ஏறிடப் போவுது... விடுங்க காப்பி வேணாப் போட்டாரவா?"

"அதெப்படி... அளகுபெத்த ஆம்பிளைப் பிள்ளை... நாட்டரசங்கோட்டை பழனியப்ப செட்டியார் நேர் வாரிசு... ஊருக்கு முத டாக்டரேட்... பி.எல்.எம்.எஸ்டேட்டுக்கு முதலாளி, விட்டிருவனா...? வரட்டும் பதில். பார்த்தர்றேன். எழுதிக் கேட்டான் பாரு... என்னையக் கேனைப்பயன்னு நெனைச்சுக்கிட்டு...! 'உன்மகன் எம்மகளை விரும்புறான்... கட்டிக்கக் கேக்குறான்... உனக்குச் சம்மதமா'ன்னு... நடிக்கிறானா...?" அவருடைய முகம் சிவந்து போனது. மூச்சு வாங்கியது.

''அடி ஆத்தி! இப்படி மூச்சு வாங்குதே..! நீங்க ஏன்தா... இப்படி கவலைப்படுறீக...? நல்லாத்தேன் பெத்தோம், வளத்தோம்... அரியக்குடி பெருமாள் நம்மள கை விட்டுற மாட்டார்..! நம்ம ஐயாக்க செஞ்ச புண்ணியந்தான். ஒவ்வொருத்தர் மாதிரி இல்லாம, பெத்தவுக நம்ம, சம்மதம் கேட்டு வெள்ளைக்காரன் எழுதினான்... நீங்களும் என்னமா ஒரு கேள்வி கேட்டு பதில் எழுதினீக...? அதப் படிச்சவன் மான, ரோசம் இருந்தா நமக்கு சம்மதமில்லாத இந்த கல்யாணத்தைப் பண்ணுவானா...?"

சாய்மானக் குறிச்சியை விரித்துப் போட்டார் லட்சுமி ஆச்சி... ஃபேனையும் சுழலவிட்டு வெள்ளித் தம்ளரில் தண்ணீர் கொடுக்க, கதிரேசனுக்குத் தேவலாம் இருந்தது.

'வாஸ்தவம்தான் அவுக தபால் வந்த உடனே தாமதிக்காம நறுக்குனு ஒரு தபால் போட்டது, அவுக மனதை மாற்றியிருக்கணும்...' இன்னைக்குத் தபால்காரன் வந்தா விஷயம் தெரிஞ்சிடும்...'

இதையும் படியுங்கள்:
சிறுகதை; காற்றில் வரைந்த கோலங்கள்!
Short Story in Tamil

"லட்சுமி... உள்ள கண்ணாடிப் பீரோல்ல... மேல் தட்டுல நான் எழுதின தபால் காப்பி வச்சிருக்கேன். அதையும் மூக்குக் கண்ணாடியையும் சித்த கொண்டா... இந்த தபால்காரனை இன்னுங் காணமே?"

ராமய்யா மகன் பேங்க் மானேஜரை விட்டு எழுதலாம் என்று காத்திருந்து, அவன் வராது போக, இருப்புக் கொள்ளாமல் அவரே ஆங்கிலத்தில் உடன் பதில் எழுதிப் போட்டுவிட்டார். லட்சுமி கொண்டு வந்த அந்த தபாலின் நகலினை மீண்டும் படித்தார். அந்தத் தபாலின் நடுப்பாகம்தான்... அம்பு போல் குத்தியிருக்க வேண்டும். மீண்டும் அதை ஒருமுறை படித்தார்.

'நாங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாய் குடும்பமாய் வாழ்பவர்கள். சாமி நம்பிக்கை உள்ளவர்கள். எங்களுக்கு இல்லறம்தான் வாழ்க்கை முறை. வாழ்வில் ஒருமுறைதான் திருமணம். அது ஒரு விளையாட்டல்ல. மணந்தவரை விலக்கிவிட்டு, வேறொருவரை செய்துகொள்வது கிடையாது. பந்தம், பாசம், குடும்பம்... திருமணம்.. என்று பழம் பஞ்சாங்கமாய்...

'....டாக்டர் கே. பழனியப்பன் உங்கள் நாட்டு கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடியில் ஆஸ்டிரோ பிசிக்ஸ் டிபார்ட்மெண்டின் எச்.ஓ.டி. பாவம் ஒரு அப்பாவி. எங்கள் தொன்மையான பாரம்பரியமிக்க நல்ல குடும்பத்தின் ஒரே வாரிசு. ஒரு இனக்கவர்ச்சியில் உங்கள் மகளிடம் மயங்கியிருக்கலாம். நாங்கள் நல்ல குடும்பத்தில்தான் பெண்ணெடுப்போம். நாங்கள் வணங்கும், அரியக்குடி பெருமாள்தான்... திருமணத்திற்கு முன் உங்களை எங்கள் சம்மதம் கேட்கத் தூண்டியிருக்கிறார். உங்கள் சம்பிரதாயமான கடிதத்திற்கு சந்தோஷமான பதில் என்னால் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்...' கடிதத்தை மூடி வைத்தார்.

அத்துணை கவலையிலும்... கதிரேசனுக்கு... அவரே எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்ததும் தென்பு வந்தது.

நிமிர்ந்தபொழுது கையில் பெரிய தபால் கவருடன் மனைவி லட்சுமி நின்றுகொண்டிருந்தாள். ஓ... எதிர்பார்த்த பதில் தபால் வந்து விட்டதோ!

உடன் எழுந்து பட்டாள அறைக்குள் சென்று, பெருமாள் படத்தின் முன்.. அந்த கடிதத்தை வைத்து வணங்கி விட்டுப் பிரித்தார்.

சம்பிரதாயமான துவக்கத்திற்குபின் கடிதம் விஷயத்திற்கு வந்தது:

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உள்ளீடுகள்..!
Short Story in Tamil

தாங்கள் எங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம், சமூக கலாசாரம் பற்றியும் நன்கு விசாரித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

உங்கள் கடிதத்திலிருந்து தாங்கள் எங்கள் குடும்பத்தினைப் பற்றி நல்ல அபிப்ராயம் வைத்து இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதை விளக்கும் பொருட்டு... கீழ்வருவனவற்றை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.

1. எங்களுக்கு விவரம் தெரிந்த கடந்த ஏழு தலைமுறையில் ஒருமுறை கூட திருமண முறிவு என்பதே கிடையாது. அனைவரும் ஒருமுறை மணம் செய்தவர்கள்தான்.

2. நாங்களும் கூட்டுக் குடும்பம்தான் 73 வயதாகும் என் தந்தை பிரவுன் மாக்மிலனுடனும் 72 வயதாகும் என் தாயார் ஸ்டாபினியுடனும்தான் நானும் என் குடும்பமும் வாழ்ந்து வருகிறோம்.

3. என் விதவை அத்தை ஸ்டெபானி தன் கணவனை தன் நாற்பதாவது வயதில் இழந்தும், மறுமணம் செய்யாது எங்களுடன்தான் இருந்து வருகிறார்.

4. என் ஒரே மகன் எட்பெர்க்கும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஏழு வருடங்களாக வேலை செய்தாலும் அவன் குழந்தைகள் நலன் கருதி அவன் மனைவி பிரிஜிட்டாவும், குழந்தைகளும் எங்களோடுதான் வாழ்கிறார்கள்.

பாரம்பரியமிக்க நல்ல குடும்பத்தில் பிறந்த எங்கள் மகள் கார்லெட்டா உங்கள் மகன் டாக்டர். கே. பழனியப்பனை விரும்புவது குறித்து நானும் என் மனைவியும் நன்கு யோசித்து ஒரு முடிவெடுத்துத்தான் உங்களுக்கு எழுதினோம்.

இனங்கள் வேறுதான், நாடும், மொழியும், பாரம்பரியமும் நிச்சயம் வேறுதான். ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கு முரண் தெரியாததால் தான் வாழ்விலும் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கும் என நினைக்கிறோம். ஆயினும்... இந்தத் திருமணம் நிச்சயம் உங்கள் முழு சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றோம்.

அன்புடன்,

...........................

கணவனும், மனைவியும் இரவு முழுவதும் உறங்கவில்லை. மறுநாள் மஞ்சள் தடவி அமெரிக்காவிற்கு ஒரு தபால் எழுதினார் கதிரேசன்.

பின்குறிப்பு:-

கல்கி 06.10.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com