சிறுகதை: நண்பர் திருமலை!

ஓவியர்: கோபன்...
ஓவியர்: கோபன்...

-ஆர். சூடாமணி

நெடிய தோற்றம். சிவந்த உடல். நெற்றியில் ஸ்ரீ சூர்ணக் கோடு. "எம்பெருமானார் மறு அவதாரம்" என்று நண்பர்கள் பாராட்டுவதைத் திருமலை மனசில் பெருமையோடும் வாயில் புன்னகையோடும் மறுப்பார். புன்னகை என்றாலும் எப்படிப்பட்ட புன்னகை! மிக நேர்த்தியான பல் வரிசைகள் வைத்துக் கட்டியது மாதிரி. வைத்துக் கட்டியதுதான்.

பாழாய்ப்போன பயோரியா வந்ததில் மொத்தப் பற்களுக்கும் சீட்டுக் கிழிந்துவிட்டது. செயற்கைப் பல் செட் இல்லாமல் தம்மை யாரும் பார்க்க அவர் விடுவதில்லை. கிழவன் மாதிரி பொக்கையாய்...சே!

எழுபது வயதில் ஒருவன் கிழவன் இல்லையா? ஆனால் அவரைப் பார்த்தால் எழுபது வயதென்று யார் சொல்வார்கள்? அவரே சொல்ல மாட்டாரே! புது மனிதர்கள் யாராவது ''உங்க வயசென்ன ஸார்?" என்று கேட்டால் தயங்காமல் பளிச்சென்று “அறுபத்தஞ்சு" என்பார். கடந்த ஐந்தாண்டுகளாய் அவர் வயது அந்தப் புள்ளியிலிருந்து நகரவில்லை.

பிள்ளை ரங்கநாதன் சொல்வதுண்டு. “எனக்கு நாப்பத்தஞ்சு வயசுப்பா. ஏதோ இப்ப நீங்க சொல்லிக்கற வயசுக்கு ஒரு மாதிரி சமாளிக்கலாம். இன்னும் ஒரு அஞ்சு வருஷத்தில் எனக்கு அம்பதாகற போதும் உங்க வயசு இப்படியே அசையாம நின்னா உங்களுக்குப் பதினஞ்சு வயசில் பிள்ளை பிறந்ததாய் வச்சுக்கறதா?"

"அந்த நாளில் அதுவும் ஒண்ணும் அதிசயமில்லேடா! உனக்குப் பிடிக்கலேன்னா நீயும் அம்பதுன்னு சொல்லிக்காதேயேன்?"

"சரிதான். அப்புறம் ஒருநாள் என் பெண் நம்ம ரெண்டு பேரையும் விடப் பெரியவளாயிடுவா."

இதையும் படியுங்கள்:
முருங்கைப் பொடியின் முத்தான பலன்கள்!
ஓவியர்: கோபன்...

ரங்கநாதனின் பெண் கவிதாவுக்குத் தாத்தாவிடம் ரொம்ப நெருக்கம். அவளிடம் அவர் "பி. யு. சின்னப்பா பாட்டு மாதிரி உண்டா?" "அந்த நாளில் சாரட் வண்டின்னு ஒண்ணு இருந்துது பாரு..." என்னும் ரீதியில் பேசி அறுக்க மாட்டார். ''பம்பாயில் வரதட்சிணைக் கொடுமையை எதிர்த்து ஒரு மாதர் மன்றம் போராடறதே, இன்னிக்கு பேப்பர்ல படிச்சயாம்மா?” என்று அதை அவளுடன் விவாதிப்பார். ''சாயந்திரம் டீவியில் கமல் படம். மறந்துடாதே" என்பார். பேரன் சுரேஷிடம் "டெண்டுல்கர் பர்ஃபார்மென்ஸ் பத்தி நீ என்னடா நினைக்கறே?" என்பார். வேர் பழங்காலத்தில் ஊன்றியிருந்தாலும் இலைகள் தற்காலத்தில்தான் அசைந்தன. “தாத்தா ஒண்ணும் தாத்தா மாதிரி இல்லை. எங்க ஃப்ரெண்ட் அவர்” என்று பேத்தியும் பேரனும் கூறும்போது பெருமையில் திளைப்பார். முதுமைக்கு இளமை இதை விடப் பெரிய பாராட்டு வேறென்ன தர முடியும்?

ஃப்ரெண்ட் நட்பியல் அவர் குணத்தின் அடியிழை. பலரகப்பட்ட நண்பர்கள் அவருக்கு உண்டு. "திருமேனி பாங்கா?" விலிருந்து ''ஏண்டா பழி, இன்னும் உயிரோடயா இருக்கே?" வரை விசாரிப்பு வகைகளில் வேறுபடும் அத்தனை ரக நண்பர்களும் உண்டு. நண்பர்களின் ரசனைக்கேற்ப ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம் முதல் ரஜினியின் 'தளபதி' வரை, பண்டைய எகிப்து நாகரிகம் முதல் இன்றைய எயிட்ஸ் நோய் வரை, பேசுவார்.

மனைவியை இழந்தவரைப் பிள்ளையும் மருமகளும் இத்தனை அன்பாய்க் கவனிக்கவில்லையென்றால் ஒருவேளை இது - போன்ற அமைதியான வாழ்வு கிடைக்காமல் போயிருக்கலாம்.

காலையில் குளித்துவிட்டுச் சுத்தமாய்ப் பூஜை அறைக்குள் துழையும்போதே மாட்டுப் பெண் ஸ்ரீபதி அங்கு கோலம் போட்டுத் தூப தீபங்களும் நைவேத்தியப் பாய்சமும் தயராய் வைத்திருப்பாள். பகல் உணவும் மாலைப் பலகாரமும் அவர் பசிக்கும் ருசிக்கும் ஏற்றபடி தயரித்துப் பரிமாறுவாள். இரவு அவள் எடுத்துவரும் குங்குமப்பூ, கல்கண்டு சேர்த்துச் கண்டக் காய்ச்சிய பாலைக் குடிப்பதற்கே இன்னும் ஏழு பிறவிகள் எடுக்கலாமே! பிள்ளையோ எத்தனை வேலைகள் இருந்தாலும் அப்பாவுடன் உட்கார்ந்து பேசவென்றே தினம் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறான். அவர் ஒரு தும்மல் தும்முவதற்குள் பதறிக்கொண்டு டாக்ரிடம் அழைத்துப் போகிறான். ஒரு நல்லநாள், கிழமை என்றால் மனைவி மக்கள் சகிதம் முதலில் அவர் காலில் விழுந்து வணங்குகிறான்.

'நான் ரொம்ப கொடுத்து வச்சவன்' என்று நினைத்து நினைத்து நெஞ்சு நிரம்பிப்போகும் அவருக்கு.

பேரக் குழந்தைகளுக்கு மட்டுமே அவர் ஃப்ரெண்ட் இல்லை. அவர்கள் நண்பர்களுக்கும்தான்.

ஹாலில் கவிதாவுடன் அன்று மாலை அவள் கல்லூரித் தோழி நளினி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது தோட்டத்திலிருந்து திருமலை அவர்களைக் கடந்து உள்ளே சென்றார்.

"இரு நளினி, என் தாத்தாவை உனக்கு இன்ட்ரடியூஸ் பண்றேன்" கவிதா ஆவலாக எழுந்தாள்.

பஞ்சகச்சமும் ஸ்ரீசூர்ணமுமாய் அந்தப் பெரிய உருவத்தைக் கண்டு சற்றே அலண்டிருந்தாள் நளினி. ''வேணாண்டி. ரொம்ப ஆசாரக் கிழவர்போல் தெரியறது. என் சுடிதார் ட்ரெஸ்ஸைப் பார்த்தா அவருக்குப் பிடிக்காது.''

“என் தாத்தா அப்படியில்லை. நான் இன்னிக்குத் தற்செயலா புடைவையில் இருக்கேனே தவிர சுடிதார் என்ன,  மிடி, ஜீன்ஸ் எல்லாம் போடுவேன். தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டார். ரொம்ப 'ப்ராட்மைண்டெட்'."

உள்ளே போய்க் கவிதா தாத்தாவை அழைத்து வந்து அறிமுகம் நிகழ்த்தினாள்.

"இது என் ஃப்ரெண்ட் நளினி.  இது என் ஃப்ரெண்ட் தாத்தா. நளினிக்கு ஒரே பயம் தாத்தா, எங்கே அவள் சுடிதாரைப் பார்த்து நீங்க கோச்சுப்பேளோன்னு!"

''இதில் கோச்சுக்க என்னம்மா இருக்கு நளினி?  நீ இந்தக் காலத்துப் பெண்தானே?"

என் தாத்தாவுக்கு அவ்வளவாப் பிடிக்காது, அதான்" என்று நளினி இறுக்கம் தளர்ந்து கூறினாள்.

"நளினிக்கு சங்கீதம்னா ரொம்ப இஷ்டம் தாத்தா!"

“கர்நாடக சங்கீதமில்லே, ஜாஸ் மியூஸிக்" என்று அவசரமாய் விவரித்தாள் நளினி.

"எல்லாம் சங்கீதம்தான். எல்லாம் அழகுதான்."

திருமலையின் இந்தப் பதில் அவளுக்கு நிம்மதியளித்தது. "உங்களுக்கும் மியூஸிக் பிடிக்குமா ஸார்?" என்றாள்.

''பிடிக்கும்."

"அமெரிக்கன் ஜாஸ் ரிதம்னா எனக்கு உயிர்!"

''அந்த ரிதம், இசை எல்லாத்துக்குமே ஆப்பிரிக்க அடிப்படைதான். கறுப்பர்களுடைய மதம், உழைப்பு சம்பந்தமான பாடல் வகைகளை வச்சு வளர்ந்ததுதானே ஜாஸ்.”

நளினிக்கு அவரிடம் மதிப்பு உச்சாணிக்குத் தாவியது. எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்! ஒரே அலைவரிசையில் மேலே பேசப் பேசத் தயக்கம் முற்றிலும் விலகி, தாத்தா அவளுக்கும் நண்பர் ஆனார்.

இதையும் படியுங்கள்:
பாலி தீவில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்!
ஓவியர்: கோபன்...

"உன்னைப் பார்த்தா எப்பவோ எனக்குத் தெரிஞ்ச ஒரு முகஜாடை ஞாபகம் வராப்பல இருக்கு. உன் அப்பா பேரென்ன?" திருமலை கேட்டார். "ராமப்ரசாத்."

திருமலையின் புருவங்கள் உயர்ந்தன. "ஏண்டா சௌரி, பிரசாத்னு கூப்பிட்டா வடக்கு தெற்கு எல்லாத்துக்கும் பொதுவா இருக்குமேன்னு இந்தப் பேர் வச்சிட்டியோ பிள்ளைக்கு?" என்று நாற்பத்தைந்து ஆண்டுகள் முன்பு நண்பனைத் தமாஷ் செய்த தம் குரல் நினைவில் ஒலித்தது.

"அவரோட அப்பா பேர்?"

''சௌரிராஜன். ஏன் கேக்கறேள் ஸார்?"

"ஆதி நாளில் பி.டபிள்யு.டி. என்ஜினியராயிருந்தாரே, அந்த டி.எஸ். சௌரிராஜனா?”

"ஆமாம். உங்களுக்கு..."

"நம்ம சௌரி பேத்தியா நீ? அந்த ஜாடைதானா? பலே பலே" திருமலை நிமிர்ந்து உட்கார்ந்தார். "உன் தாத்தாவும் நானும் பாலிய சிநேகிதாள்ம்மா! ரொம்ப அன்னியோன்யம். எங்களுக்கு ஒரே வருஷத்தில்தான் பையன் பிறந்தான். ரெண்டு பேருக்குமே ஒன்லி சைல்ட். இப்போ இத்தனை வருஷம் கழிச்சு எங்க ரெண்டு பேர் பேத்திகளும் நண்பிகள்!"

'நண்பிகள்' என்னும் சமீபத்திய பிரயோகத்தை அந்த முதிய வாயிலிருந்து கேட்டு நளினி புளகாங்கிதமடைந்தாள். "யு ஆர் க்ரேட் தாத்தா!" என்று தீர்மானமாய்ச் சான்றிதழ் வழங்கினாள்.

அவள் கிளம்பும்போது திருமலை "உன் தாத்தாவை நான் ரொம்ப விசாரிச்சதாய்ச் சொல்லும்மா!" என்றார்.

சௌரி! அவர் நண்பன் சௌரிராஜன்! பேத்தி சுடிதார் அணிந்தால் பிடிக்காத இப்போதைய தாத்தா! தொடர்பு விட்டுப்போய் எத்தனை காலமாகிவிட்டது! இப்போது இருவரும் ஒரே ஊரில். தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா? கவிதாவிடம் அவள் தோழியின் முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு உடனடியாய்ப் போய் சௌரிப் பயலைப் பார்க்க வேண்டும். “எப்படிடா இருக்கே?" என்று அவன் தலைமுடியை - அவனுக்கு இப்போதுதலை முடி இருந்தால் - பிடித்துச் செல்லமாய் உலுக்க வேண்டும்.

றுநாள் மாலை பலகாரம் உண்டதுமே ஆட்டோ ஏறிக் கிளம்பி விட்டார்.

நுங்கம்பாக்கத்தில் பெரிய வீடு. தற்கால மாடிக் கட்டடம். பச்சை வெளிச் சுவர்களும் க்ரில் ஜன்னல்களும் குளிப்பாட்டி விட்டதுபோல் பளபளத்தன. மொட்டை மாடியில் டிஷ் ஆன்டெனா, பிரித்து மல்லாத்திய பெருங்குடையாய்த் தெரிந்தது.

வாசல் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் கைப்புத்தகத்தின் மேல் குனிந்திருந்த நரைத் தலை...

சௌரிராஜனா?

திருமலையின் பொய்ப் பல் வரிசைகள் நேர்த்தியான புன்சிரிப்பில் அலர்ந்தன. இப்போது தலை நிமிர்ந்து தன்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு கண்கள் விரிந்து மின்ன ''ஏ திரு! நீயா! நீயா!" என்று சந்தோஷத்தில் நெகிழ்ந்து ஓடி வருவானோ?

திருமலை நெருங்கி வந்தார். நெற்றி சுருங்கியது. கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு உற்றுப்பார்த்தார். சௌரி இல்லை போல் இருக்கிறதே?

அந்த மனிதர் பக்கத்தைத் திருப்புகையில் தற்செயலாய்த் தலை நிமிர, இவரைப் பார்த்தார். இல்லை, செளரியின் முகம் இல்லை.

இதையும் படியுங்கள்:
படுத்தவுடன் தூக்கம் வர சில எளிய பயிற்சிகள்!
ஓவியர்: கோபன்...

“யாரு?”

குரலும் சௌரியுடையதில்லை.

"நான்... மிஸ்டர் ராமப்ரசாத்தைப் பார்க்க முடியுமா? குடும்பத்துக்குத் தெரிஞ்சவன்."

"உள்ள வாங்கோ."

அவர் எழுந்து உள்ளே போனார். ஊஹும், செளரி இவ்வளவு உயரமில்லை.

ஹாலில் திருமலை பத்து நிமிடம் காத்து உட்கார்ந்திருந்தபின் வேட்டி சட்டை உடையில் பூசினாப் பூசினாப் போன்ற உடல்வாகுடன் ஓர் ஆள் உள்ளேயிருந்து வந்தான். முன் முடியில் திட்டாய்ச் சில நரைகள். நாற்பத்தைந்து வயதுக்கு இது அதிகமில்லை.

திருமலை எழுந்து "நமஸ்காரம்" என்றார்.

"நமஸ்காரம்.'

"ராமப்ரசாத் தானே?"

''ஆமாம். ஸார் யார் தெரியலையே?"

"என் பேர் திருமலாச்சாரி. உங்கப்பாவின் பால்ய சிநேகிதன் ."

"அப்படியா? ரொம்ப சந்தோஷம். உக்காருங்கோ. என் மாமனார் சரியாச் சொல்லலை."

"வாசல்ல உக்காந்து படிச்சுண்டிருந்தாரே,  அவர்தான் உன்... உங்க மாமனாரா?"

''ஆமாம். என்னை ஒத்தைப்படையிலேயே பேசலாம்.''

“தாங்ஸ்”

"ஏதாவது சாப்பிடறேளா?" குரலை உயர்த்தினான். "அம்புஜம், கொஞ்சம் காப்பி கொண்டா. நீங்க எங்கே ஸார் என்னைப் பார்க்க... என்னைப் பத்தி எப்படித் தெரிஞ்சுண்டேள்?"

"அது ஒண்ணுமில்லே. உன் பெண் நளினி என் பேத்தியின் சிநேகிதி. நேத்து அவளைப் பார்க்க ஆத்துக்கு வந்திருந்தா. அப்போ பேச்சுவாக்கில் அவள் சௌரியோட பேத்தின்னு தெரிஞ்சுது. செளரி எனக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதனப்பா! இளவயசில் சாப்பாட்டு, தூக்க நேரம் போக எப்பவும் ஒண்ணாவே இருப்போம். அவனைப் பார்க்கணும்னுதான் ஓடி வந்திருக்கேன்.”

ராமப்ரசாத் திகைப்புற்றார்போல் வெறித்தான்.

"சௌரி எங்கே? கொஞ்சம் வரச்சொல்றயா? எங்கயானும் வாக்கிங் போயிருக்கானா? இல்லே மாடியில் இருக்கானா? நானே போய்ப் பார்க்கட்டுமா?" எழுந்திருக்க முனைந்தார்.

"வேணாம் வேணாம்... அது வந்து ஸார்... அப்பா... இப்போ இங்கே இல்லை."

"இங்கே இல்லைன்னா?"

"அதாவது... இல்லை."

"என்னப்பா சொல்றே? புரியலையே?"

"என் மாமனாரும் மாமியாரும் எங்களோடத்தான் இருக்கா. என் வொய்ஃப் அவாளுக்கு ஒரே பெண். அப்பாவோ மத்தவாளோட ஒத்துப் போறதில்லே. மகா பிடிவாதம்! அதுவும் அம்மா போனப்புறம் கேட்கவே வேணாம். சரிதான்னு அவருக்கு வேற ஏற்பாடு பண்ணிட்டேன்.''

"வேற ஏற்பாடுன்னா?" சரேலென்று அறிவில் ஒரு மின்வெட்டு. "முதியோர் இல்லமா?"

''நானும் அடிக்கடி போய்ப் பார்த்துட்டுத்தான் வரேன்."

திருமலை வாயடைத்துப் போனார். மகா பிடிவாதமாம். மற்றவர்களுடன் ஒத்துப்போவதில்லையாம். தம் நண்பனை அவருக்குத் தெரியாதா? சௌரி பரம சாது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவி. மென்மையான சுபாவம்... எல்லாம் புரிந்தபோது முதுகில் பெரும் பாரம் திடீரென்று வந்து அழுத்தியது. தலை கவிழ்ந்தது.

எதிரே மேஜை மேல் ஒரு தம்ளரும் டபராவும் முளைத்தன.

"காப்பி எடுத்துக்குங்கோ ஸார். இவள்தான் என் வொய்ஃப் அம்புஜம். அம்புஜம், ஸார் வந்து..."

"காப்பி வேணாம்ப்பா." தலை மெல்ல நிமிர்ந்தது. "உங்கப்பா அட்ரஸ் குடு, போறும்."

வீடு திரும்பிய மாமனார் வழக்கமான கலகலப்பின்றி தம்ளரில் பால் ஆற, வெகு நேரம் இடிந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட ஸ்ரீமதி மெல்ல அருகில் வந்து, "என்ன அப்பா? எப்படியோ இருக்கேளே? பால் கூடச் சாப்பிடலையே? உடம்பை ஏதானும் செய்யறதா?" என்றாள் கனிவாக.

நிமிர்ந்து அவளை ஒருகணம் உற்றுப் பார்த்த திருமலை "நான் ரொம்ப... கொடுத்து வச்சவன்மா" என்று உதடு துடிக்கச் சொன்னபோது மனசில் கொந்தளித்துக்கொண்டிருந்த வெள்ளம் கண்களுக்குப் பாய்ந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 10  ஜனவரி  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com