சிறுகதை - ‘கோல்!’

ஓவியம்: தமிழ்
ஓவியம்: தமிழ்

-எம்.எஸ். ரவி சங்கர்

ந்த கமிட்டி மீட்டிங் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது.

“எப்படி நீங்க ஃபைனல் மேட்ச்சை தள்ளி வைப்பீங்க. தேதியை முடிவு பண்ணி ரெண்டு டீமுக்கும் லெட்டர் அனுப்பிச்சாச்சி. இது சம்பந்தமா போஸ்ட்டர் அடிச்சி கோயமுத்தூர் பூரா ஒட்டியாச்சி. இதுக்கப்புறம் எப்படி...?”

“ஸ்பான்சர் செய்யற கனகராஜ் பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். அவர் ஒருத்தரே பெரிய தொகை டொனேட் பண்ணியிருக்காரு. அவர் கையாலதான் ஜெயிச்சவங்களுக்கு ட்ராஃபி கொடுக்கணும்னு ஏற்கனவே முடிவு செஞ்சதுதானே”   கமிட்டி தலைவர் வலியுறுத்தினார்.

“அவரே கொடுக்கட்டுமே…  அதை யாரும் வேண்டாம்னு சொல்லலையே…”

“அன்னிக்கு அவராலே கண்டிப்பா வரமுடியாது. அதே நாள்லே டெல்லியிலே மினிஸ்ட்டரோட மீட்டிங்க். அதை மாத்தவே முடியாது.”

 “நாம்ப அவரை கௌரவபடுத்தியே ஆகணும்”   கமிட்டி பொருளாளரும் ஒத்து ஊதினார்.

“என்னய்யா இது! மேட்சுக்காக ஃபங்ஷனா,  இல்லை ஃபங்ஷனுக்காக் மேட்சா? காலுக்கேத்த செருப்புதான்யா இருக்கணும்; செருப்புக்கேத்த மாதிரி காலை வெட்டி ஒட்றாங்க”  எதிர்ப்பு குரல் கொடுத்தவர் தொடர்ந்து பேசினார்.

“கனகராஜ் அளவு வேற யாராவது, அதுகூட இல்லைய்யா, மத்த எல்லார்கிட்டேயும் மொத்தமா சேர்ந்து கலெக்ட் பண்ணினாகூட அவர் கொடுத்த அளவு வராது.” பொருளாளர் மீண்டும் ஒத்து ஊதினார்.

'டிப்பார்ட்மென்ட்ல பர்மிஷன் வாங்கியாச்சி;  க்ரவுண்ட் ரெடி ஆயிட்டிருக்கு; ரெண்டு நாள்லே ரெடியாயிடும். ஊர் பூரா விளம்பரம் பண்ணியாச்சு. வர்ர டீம்ஸ் தங்கறதுக்கு, வெளி ஊர்லேயிருந்து வர டீமுக்கு போக வர ஏற்பாடும் பண்ணியாச்சு. இதுக்குமேலேயும் ஃபைனல்ஸ தள்ளி வச்சா கமிட்டி மெம்பர் ஒரு ஆள் வெளில தலைகாட்ட முடியாது.” வேறு ஒருவரும் எதிர்ப்பு குரல் எழுப்பினார்.

“இப்போ என்ன பண்றது?” தலைவர் பொருளாளரைப் பார்த்து கேட்டார்.

கனகராஜ் சார்தான் ஜெயிக்கர டீமுக்கு ப்ரைஸ் கொடுக்கணும்”  பொருளாளர் உறுதியாக நின்றார்.

“இந்த பிரசிடெண்ட் கனகராஜுக்கு பெரிய ஜால்ரா.  இந்த டிரஷரர் ஜால்ராக்கு ஜால்ரா”  வேறு ஒரு உறுப்பினர் முணுமுணுத்தது பலர் காதுகளில் விழுந்தது.

“யோசிச்சுதான் முடிவு செய்யணும்” தலைவரின் கைத்தடி சொல்லியது.

“நாளைக்கு இது பத்தி முடிவு செய்யலாம்.”  பிரசிடெண்ட் மீட்டிங்கை முடித்துக்கொண்டார்.

“சும்மா சும்மா போஸ்ட்போன் பண்ணிட்டிருக்காதீங்க. பல வேலைகளை விட்டுட்டுத்தான் இங்க வரவேண்டியிருக்கு.”

லைவர் வீட்டில் பொருளாளர் இருந்தார்.

“இப்ப என்னைய்யா பண்றது?”

“சார்,  கவலைப்படாதீங்க. ரெண்டு தடவை ஃபைனல் வைச்சுடலாம். எப்படியும் கனகராஜ் சார்தான் ப்ரைஸ் கொடுக்கறாரு.”

“என்னைய்யா சொல்றே?”

“முதல் தடவை ஃபைனல் டிரா ஆயிடிச்சுன்னா அதை மறுபடியும் நடத்தறதுக்கு டொர்னமென்ட் கமிட்டியிலே ரூல் இருக்கு. அதனலே முதல்லே நடக்கற மேட்ச் கண்டிப்பா டிராதான்.”

“ அதெப்படியா முடியும்?”

“சார் ஃபைனல் நம்ப கோவை டீமுக்கும் சேலம் டீமுக்குந்தான். மேட்ச் ரெஃப்ரியா திருச்சியிலேயிருந்து அய்யாகண்ணுவை போட்டுடலாம். அந்த ஆள் எந்த மேட்ச்சையும் ஜெயிக்க விடமாட்டான்.  எல்லா மேட்ச்சையும் ட்ரா பண்ணினாதான் அவனுக்கு ஒரு திருப்தி.  அந்த ஆள் பேரே ஆஃப்சைட் அய்யாக்கண்ணுதான்.”

“சரிய்யா, எல்லாம் ரகசியமா இருக்கட்டும்.”

டுத்த கமிட்டி மீட்டிங்கில் முதலில் குறிப்பிட்ட தேதியிலேயே ஃபைனல்ஸை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

“என்னங்க இது, ஒரே மர்மமா இருக்கு, ஒரு ஆர்க்யூமென்ட் ஒண்ணுமே இல்லே. ஏதாவது உள்குத்தா இருக்குமா??”

“சார் இது ஃபுட்பால் மேட்ச். உள் உதைன்னு சொல்லுங்க...”  ஜோக்கிற்கு சொன்னவரே சிரித்தார்.

 “எப்படி இருந்தாலும் விஷயம் என்னனு கண்டு பிடிச்சுடணும்?”  மீட்டிங்கிலேயே சில உறுப்பினர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஃபைனல் மேட்ச் நடக்கும் நாள்.

மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

“சுனில், இந்த மேட்ச்சில் ஏதோ வில்லங்கம் இருக்கும்போல இருக்கு. கவனமா விளையாடு. இந்த கமிட்டியிலே ரெண்டு குருப் இருக்கு. இதே ஃபைனல் மேட்ச்சை இன்னொரு தடவை நடத்தபோறதா எனக்கு விஷயம் வந்திருக்கப்பா. போதும் போதாதற்கு இந்த அய்யாகண்ணு வேற திருச்சியிலிருந்து வந்திருக்கான்.”  அவனுடைய கோச் அவனை எச்சரித்திருந்தார்.

“சுனில் சார், அந்த ஆஃப்சைட் அய்யாகண்ணு ஒரு மேட்ச் ரெஃப்ரியாமே! மேட்ச் ஃபிக்சிங் மாதிரி எதோ புகையுது”  மற்றொருவரின் விமர்சனம் வேறு.

இப்படிபட்ட ஹேஷ்யங்கள், சந்தேகங்களுடன், டீம்களின் பரஸ்பர அறிமுகத்திற்குபின் மேட்ச் ஆரம்பமாயிற்று.

முதல் பத்து நிமிடங்கள் தொய்வான ஆட்டம்தான். சேலம் அணியின் காப்டன் தனது டீமில் உள்ளவர்களை ஏற்கனவே எச்சரித்திருந்தான்.

“கோயமுத்தூர் டீம் காப்ட்ன் சுனில்கிட்ட கேர்ஃபுல்; யாரும் அந்த டீமுக்கு ரைட்சைட் கார்னர் கொடுத்துடக் கூடாது.”

“ரைட்சைட் கார்னரிலிருந்து கார்னர் ஷாட்டை அடித்தால், அதை லெஃப்ட் அவுட்டில் இருந்து தரைக்குமேல் ஒருஅடி எழும்பி, தனது உடல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்த்து சிசர்ஸ் ஷாட் அடித்து, அந்த கார்னர் ஷாட்டை கோலாக மாற்றுவதில் சுனில் மிகச்சிறந்து விளங்கினான்.  சொல்லப்போனால் அதில் அவன் நிபுணன். அதனால் அவனை லெஃப்ட் அவுட் சுனில் என்று ஃபுட்பால் வட்டத்தில் செல்லமாக அழைப்பதுண்டு.

பதினைந்தாவது நிமிடத்தில் ஒரு ஃபீல்ட் கோலை கோவை டீம் போட்டு 1-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்தனர். உடனே அய்யாகண்ணுவின் வில்லங்கம் ஆரம்பமாகிவிட்டது.  சேலம் அணி ஒரு கோல் போடுவதற்கு வசதியாக மேட்சை கொண்டு செல்ல ஆரம்பித்தார்.

ஆஃப் டைமுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன், பெனல்டி கார்னரா இல்லையா என்ற சந்தேகத்திற்குரிய விஷயத்தை,  சேலம் அணிக்கு சார்பாக அய்யாகண்ணு முடிவு எடுக்கவே சேலம் அணிக்கு பெனல்டி கார்னர் கிடைத்தது.  அதை சேலம் அணியினர் கோலாக மாற்றி, மேட்ச் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.

ஆஃப் டைம் வரை இதே நிலை நீடித்தது. ஆஃப் டைம் முடிந்து 12வது நிமிடத்தில் கோவை அணிக்கு ரைட் சைட் கார்னர் ஷாட் கிடைத்தது. சேலம் அணி கேப்டன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ஆயிரக்கணக்கான கண்கள் சுனிலை மொய்த்தன.

சேலம் அணி அதை எதிர்கொள்ள வியூகம் வகுத்தது. ரைட் கார்னர் ஷாட் அடிக்கும் வினாடியும் வந்தது.  மைதானத்தில் இருந்த அத்தனை கண்களும் சுனிலையும் பந்தையும் மாறி மாறி பார்த்தன.  அவனது காலுக்கருகில் பந்து!.  சுனில் தனது முழு உடலையும் சாய்த்து மிதந்தபடி தன்னுடைய சிறப்பான சிசர்ஸ் அடிக்க, பந்து மிதந்து சென்று சேலம் அணியின் கோல்கீப்பர் கையை மீறி கோல் போஸ்ட் வலையை நோக்கி தவழ்ந்து வலையை வருடி விழுந்தது.

' கோ..............................ல்" முழு மைதனாமும் ஆரவாரத்தில் குலுங்கியது.  2-1 என்று கோவை முன்னிலை.

இனி, தற்காப்பு ஆட்டம் மட்டும் ஆடினால் போதும் என்று சுனில் முடிவெடுத்து, தனது டீமின் 4+4+2 அமைப்பை 3+5+2 ஆக மாற்றி, கோவை அணியினர் தற்காப்பு ஆட்டம் ஆட துவங்கினர்.

ஆனால், அய்யாகண்ணுவின் அட்டகாசம் அளவுமீறி சென்றது. ஆட்டத்தை டிராவில் முடிக்க சேலம் அணிக்கு ஒருதலைபட்சமாக் நடந்துகொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது.

“டேய் அய்யாகண்ணு ஒழுங்கா ஊர் போய் சேரமாட்டடா.”

“ஆஃப்சைட் ஆப்ப தலையா... உன் மூஞ்சை பேக்கறேன் வாடா வெளிலே...''

கூட்டத்தில் இந்த மாதிரி கூச்சல்கள் எழ ஆரம்பித்தன.

ஆட்டம் முடிவடைய 7 நிமிடங்களுக்கு முன் அய்யாகண்ணு சேலம் அணிக்கு ஆதரவாக ஒரு பெனால்டி கார்னர் கொடுத்தான்.

“என்ன சார் எங்க டீம்ல யார் மேலேயும் பால் படவேயில்லையே” பொறுக்க முடியாமல் சுனிலே அய்யாகண்ணுவிடம் சொன்னான்.

கூட்டத்தில் சலசலப்பு

“நான் ரெஃப்ரி. நான் சொல்றதுதான் முடிவு.”

“உங்க முடிவே தப்பு சார்.”

“நோ ஆர்க்யூமெண்ட்ஸ்…”

“சார்,  இது.....”  சுனில் விடவில்லை.

“இதுக்கு மேல பேசினா, ஐ வில் ஷோ யூ தி ரெட் கார்ட்! எங்க வேணா, என்ன வேணா கம்ப்ளைண்ட் பண்ணிக்கோங்க. பட் இந்த க்ரௌண்ட்குள்ள நான் சொல்றதுதான் ஃபைனல்.”

சுனில் மேற்கொண்டு எதுவும் பேசாமல், தனது டீமின் தற்காப்பை பலப்படுத்தி கோலியையும் எச்சரித்தான்.

“இந்த ஷாட் கோலாகாமல் தடுத்தே தீர வேண்டும்.”

இதையும் படியுங்கள்:
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடங்கிய சைவ உணவுகள் தெரியுமா?
ஓவியம்: தமிழ்

ரண்டு அணிகளும் தயாராக இருந்தன. விசிலும் ஊதப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் பந்து கோல்கீப்பருக்கு இடப்புறமாக சென்று கோல் வலையை அடைந்தது.  சேலம் அணி கோல் போட்டுவிட்டது.  சுனில் மற்றும் கோவை அணியினர் கோபத்துடன் அய்யாகண்ணுவை பார்த்தனர்.

ஆட்டம் தொடர்ந்து நடைபெறலாயிற்று. மேட்ச் டிராவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. கமிட்டி தலைவர், பொருளாளர், மற்ற ஜால்ராக்கள் முகத்தில் நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சி.

ஆனால், கூட்டத்தில் பலருக்கு எரிச்சல், கோபம்..  சுனிலின் கோச்கூட அய்யாகண்ணு மேல் கடுப்பில் இருந்தார்.

“சார் இப்ப ஒ.கேதானே. டெல்லியிலிருந்து கனகராஜ் சார்கூட விசாரிச்சார்.  வர மாசம் அஞ்சாம் தேதி அவர் ஃப்ரீதானாம்.  அவர்கிட்ட அந்த தேதியே சொல்லிடலாம் சார்.   இந்த ஃபைனல் மேட்ச் ப்ரைஸ அவர்தான் கொடுக்கறாரு” விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த வெற்றி கோப்பையை பார்த்தபடியே பொருளாளர், தலைவர் காதில் கிசுகிசுத்தான்.

மேட்ச் முடிய இன்னும் ஒரு நிமிடமே பாக்கி...

பந்து கோவை அணியின் பகுதியில்.

சுனிலிடம் பந்து பாஸ் செய்யபட்டது.

சுனிலின் கால்களில் பந்து.  தனது கோச், ரெஃப்ரி அய்யாகண்ணு, கமிட்டி தலைவர், குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரையும் அவன் பார்வை ஒரு முறை வலம் வந்தது. அதன்பின் அவன் முகத்தில் ஒரு கடினமான இறுக்கம்.

மேலே டிஜிட்டல் க்ளாக் அவன் பார்வையில் பட்டது  அது இன்னும் 8 செகண்ட் பாக்கி இருப்பதாக காண்பித்தது.

பந்தை தனது கோல் பக்கம் திருப்பினான். திடீரென்று சுனில் உதைத்ததில் பந்து கோவை அணியின் கோலை அடைந்தது. கோவை கோல் கீப்பர் முகத்தில் திகைப்பு.

"சேம் சைட் கோல்' கூட்டத்தில் கூச்சல் குழப்பம்.

கூட்டத்தின் திகைப்பு அடங்குமுன் மேட்ச் முடிந்ததுற்கான லா........ங்க் விசில்.

சேலம் அணி 3-2 கணக்கில் வெற்றி பெற்றது.

அய்யாகண்ணு முகத்தில் அட்டைக்கரி; கமிட்டி தலைவர், பொருளாளர், அனைவரது முகத்திலும் திகைப்பு, அதிர்ச்சி.

அய்யாக்கண்ணு உட்பட அனைவரும் மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் அப்பொழுது கூட்டத்தில் இருந்து ஒரு பத்து வயது சிறுமி அங்கு வந்து அய்யாகண்ணுவிடம், ‘”சார் நீங்கதானே ரெஃப்ரி?”

அய்யாகண்ணு எதுவும் பதில் பேசவில்லை.

அவள் அருகில் வந்து  ‘த்தூ…’ என்று காரி உமிழ்ந்தது அய்யாகண்ணுவின் முகத்தில் மட்டுமல்லாமல் அருகில் இருந்த பொருளாளர் முகத்திலும் பட்டு தெறித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com