சிறுகதை - ஜிப்ஷா காத்திருக்கிறாள்!

ஓவியம் - அரஸ்
ஓவியம் - அரஸ்
Published on

-ஆர்னிகா நாசர்

டெர்மினலில் வியாஸ் காத்திருந்தான். அவன் கையில் நிகோட்டின் இல்லாத சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. தன்னுடைய Virtual Reality Playerஐ இயக்கி தனக்காகக் காத்திருக்கும் காதலி ஜிப்ஷா என்ன செய்து கொண்டிருப்பாள் என உன்னித்தான். சங்க காலத் தலைவிபோல உடலில் பசலை படிந்து நிலாவின் மெஹா டெர்மினலில் காத்திருந்தாள். மூன்று வருட இடைவெளியில் மார்புகள் அளவில் பெரிதாகக் கனத்திருந்தன. சிரித்தபடி VRPஐ ஆஃப் செய்தான் வியாஸ்.

வான டாக்ஸிகளுக்காகக் காத்திருந்தது கதம்ப ஜனத்திரள். வான டாக்ஸிகள் வருவதும் போவதுமாய் இருந்தன. நிலா காலனி வழி செல்லும் பச்சை நிற வானடாக்ஸி வந்து நின்றது.

வியாஸ் வாகனத்துக்குள் நுழைந்தான். ஏற்கெனவே ஏராளமான பயணிகள் தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்தனர். வியாஸின் இரட்டை இருக்கையின் காலி இடத்துக்கு ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். வயது 25 இருக்கக்கூடும். ஆறடி உயரமும் பம்பையான கேசமும் விசித்திரமான தாடியும் வைத்திருந்தான். பைபர்கிளாஸ் ஆடை உடுத்தியிருந்தான். பற்கள் சீராய் யானைத் தந்த வெண்மையில் அமைந்திருந்தன. ஆரோக்கிய மனிதன் மூன்றரை நொடிகளுக்கு ஒரு முறை கண் இமைப்பான். வியாஸ் பார்த்த மனிதனோ கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டான். கையில் எந்ததொரு பயணச் சுமையும் அவன் வைத்திருக்கவில்லை. ஆர்த்தரைட்டீஸ் வந்தவன்போல் அவதியாய் அமர்ந்தான்.

வியாஸ் திரும்பி ஸ்நேகபாவமாய் வந்தவனை பார்த்துப் புன்னகை செய்தான். வந்தவனோ இறுக்கமான முகபாவம் காட்டினான்.

வானடாக்ஸி 'பாம்' என்ற சப்தத்துடன் புறப்பட்டது.

வியாஸ் சுவராசியமாய் வந்தவனையே ஆராய்ந்தான்.
அவனுடைய வித்தியாசமான மேனரிஸங்கள் வியாஸைக் கவர்ந்தன.

''எங்கு போகிறீர்கள்?" நட்பு வளர்க்கும் தொனியில் வினவினான் வியாஸ்.

வந்தவன் திரும்பி உன்னித்தான். பின் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டான்.

'மன நோயாளியோ?'

"உங்களைத்தான் கேட்டேன். செவ்வாயின் தலைமை டெர்மினலுக்குப் போகிறீர்களா?"

"ஆ - ஆ - ஆமாம்!”

"வித்தியாசமான 'ஒலியன்' உங்களுக்கு!"

"இருக்கலாம்."

"என்னிடம் பேச உங்களுக்கு விருப்பமில்லையா? நான் நிலாவின் உல்லாசக் காலனிக்குச் செல்கிறேன். பயண நேரம் முழுவதும் நாம் ஊமையாய் இருந்தால் போரடித்துவிடும் நண்பனே!"

“சரி பேசுவோம்...”

"உங்கள் பெயர் சொல்லவே யில்லையே?"

"என் பெயரா? பாபன்... பாபன்..."

"என்ன வேலை பார்க்கிறீர்கள்?"

"நானா? மருத்துவக்குணம் கொண்ட பால் கறக்கும் கால்நடைகள் பண்ணையில் மருத்துவன்..."

''வித்தியாசமான பணிதான்..."

''நீங்கள்?"

“அப்பாடா! முதல்முறையாக உங்களைக் கேள்வி கேட்க வைத்துவிட்டேன். குட் காட்... நான் ஒரு தொழில் முறை ஓவியன்...”

"நல்ல வருமானமிருக்கிறதா?"

''ஐ லீட் எ லாவிஷ் லைப் மேன்..."

"டாபிக் மாற்றுகிறேன்....''

"பேசேன்...." ஒருமைக்குத் தாவினான் வியாஸ்.

''பூமி அதிபர் ஆட்சியைப் பற்றி உன் கருத்து...?"

"ஐ ஃபீல் டெலிகேட். அபிப்ராயம் இல்லை பாபன்..."

"கருத்தில்லாத மனிதன் - தலையில்லாத மனிதன் வியாஸ்!"

"அஃப்கோர்ஸ் பாபன்... ஐ டெலிபரேட்லி நெக்லக்ட் பாலிடிக்ஸ். உனக்காக கருத்துக் கூறுகிறேன். நாட் பேட் பாபன்..."

"உன் கருத்து தவறு. முட்டள்தனமான ஆட்சி நடக்கிறது தெரியுமா உனக்கு?"

"எப்படிச் சொல்கிறாய்?"

"பின்னென்ன? அடுத்த கிரகவாசிகளுக்கு கூடுதல் உரிமையும் இரட்டைக்குடி உரிமையும் வழங்கியிருக்கிறார் பூமி அதிபர். அவர்களுக்கு வேலை வாய்ப்பில் 15 சதவீதம் ஒதுக்கியுள்ளார். இன்னும் ஏராளமான பாலிஸி டீஸிஷன் கோளாறுகள். குறிப்பாக 'மார்ஷியா' கிரகத்து மனிதர்கள் மிக ஆபத்தானவர்கள். என்றாவது ஒரு நாள் மித்ர பேதம் செய்து பூமி முழுமையையும் அடிமைப் படுத்தப் போகிறார்கள்."

''ஆதாரமான சில உண்மைகளை வைத்துக்கொண்டு ஏராளமாக கற்பனை செய்கிறாய் பாபன்..."

சீரியஸானான் பாபன். "இது நிஜமான நிஜம் வியாஸ்!" ''அதற்கு நாம் என்ன செய்ய முடியும் பாபன்?"

'என்ன முடியுமாவா? அதிபரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்."

''உரையாடல் வம்பு திசை போகிறது. மாற்றுவோம்....''

பாபன் மௌனித்தான்.

"பாபன்! இதுவரை நீ யாரையும் காதலித்திருக்கிறாயா?"

"நெவர்... நீ?"

"அதன் நிமித்தம்தான் என் நிலாப் பயணமே. நான் ஒருத்தியை 'ஜில்லியன்' தரம் நேசிக்கிறேன் பாபன்..."

"யாரவள்?"

''மூன்று வருடங்களுக்கு முன் நிலாவில் 'அகில காலக்ஸி உல்லாசத் திருவிழா' நடந்தது தெரியுமா?"

இதையும் படியுங்கள்:
அறிவு முக்கியமா? அன்பு முக்கியமா..?
ஓவியம் - அரஸ்

"ஆமாம்..."

"அதில் மார்ஷியா கிரகத்தைச் சேர்ந்த ஜிப்ஷா என்ற பெண் நடனமாடினாள். கண்டதும் காதல் கொண்டோம்...''

"அப்படியென்ன அபூர்வ வசீகரம் அவளிடம்?"

"என்ன நண்பா இப்படி கேட்டுவிட்டாய்? ஜிப்ஷா ஒரு மின்சார மல்லிகை. மினியேச்சர் மின்னல். போன்ஸாய் நிலா. அவள் இஸ்தர் எனும் பாபிலோனிய பெண் காதல் கடவுளின் நேரடி வாரிசு. காதல் என்ற தலைப்பில் 5000 விஷயக் குறிப்புகள் தெரிந்து வைத்திருக்கும் நிபுணி.

"பழகிய இரு பூமி நாட்களில் பிரிந்தோம். மூன்று வருடங்களாக வெறும் கடிதத் தொடர்பு மட்டும். நீண்ட இடைவெளிக்கு பின் இன்றுதான் சந்திக்கப் போகிறோம். எவ்வளவு கிளுகிளுப்பான சந்திப்பாய் இருக்கும்? வாவ்!"

"இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றால்?"

வியாஸ் ஸ்தம்பித்தான்.

"என்ன பிதற்றுகிறாய் பாபன்?"

"இல்லை...ஏதேனும் காரணத்தால் உன் ஜிப்ஷா வராவிட்டால்? "

"இட்ஸ் ஹைலி இடியாடிக்."

"அவள் வந்துவிடுவாள் - சரி... நீ போகாவிட்டால்?"

"அபத்தம் அபத்தம். இதோ நான்தான் போய்க் கொண்டிருக்கிறேனே?"

''பயணம் முடியாத வரைக்கும் இலக்கு அடைதல் நிச்சயமல்ல வியாஸ்!"

''உன் பேச்சு பயமூட்டுகிறது பாபன்..."

''பயமூட்டவில்லை. ஒரு சாத்தியத்தைச் சொன்னேன்."

"என்ன சாத்தியம்?"

''நாம் போகும் வானடாக்ஸி ஏதேனும் விபத்தில் சிக்கிக்கொண்டால்?"

"உன் ஹேஸ்யம் தியரி ஆஃப் ப்ராபபலிட்டிக்கு முரணானது!"

''சரி - இந்த வானடாக்ஸியை யாரும் பாலிமர் பாம் வைத்துத் தகர்த்துவிட்டால்?"

திடுக்கிட்டான் வியாஸ்.

''அதெப்படி? ஸ்னிப்பர் ரோபோ மெட்டல் பாம் டிடக்டர் - லேசர் ஸ்கிரீனீங் இத்தியாதி இத்தியாதி மீறி எப்படி பாம் வானடாக்ஸிக்குள் விதைக்க முடியும்?"

''என்னால் முடியும் வியாஸ்!"

"-எ - என்ன சொல்கிறாய்?"

"ஸாரி வியாஸ்... நான் இந்த வான டாக்ஸியில் பாம் வைத்துள்ளேன். இன்னும் 16 நிமிஷம்தான். என்னுடன் சேர்ந்து கலத்தின் அனைத்துப் பயணிகளும் பிரபஞ்ச சமாதி - தெரியுமா உனக்கு?” ஒளித்திருந்த எலக்ட்ரோஸ்டாடிக் துப்பாக்கியை வெளி எடுத்தான் பாபன்.

''என்னைக் காட்டிக் கொடுக்க முயன்றால் இத்துப்பாக்கி உமிழும் 8000 வால்ட் மின்னேற்றத்துக்கள் உன்னைப் பொசுக்கி விடும் வியாஸ்!"

"டாமிட்! நீ ஒரு மனநோயாளி. பொய் பேசுகிறாய். நீ வரும்போது கை ஆட்டிக் கொண்டேதானே வந்தாய்?"

''பாமை நான் கார்கோவில் வைத்திருக்கலாமில்லையா?"

"பாபன்! ப்ளீஸ்... எதற்கிந்த பாம் விளையாட்டு?"

"முதலிலேயே நான் சொல்லவில்லை? பூமி அதிபரின் நடவடிக்கைகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று..."

"எங்களுக்கென்றால்?" காகப்பார்வை காட்டினான் வியாஸ்.

"எங்கள் இயக்கத்துக்கு!"

''ஓ! நீ தீவிரவாதியா?"

''பூமி அதிபரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. சரி... அதற்கு இந்த வான டாக்ஸியை தகர்த்துவிட்டால்? உங்களுக்கென்ன அரசியல் லாபம்?"

"ஒரு இரத்த எச்சரிக்கை அதிபருக்கு. அவ்வளவுதான்."

"பாபன்! ப்ளீஸ்... நான் சொல்வதைக் கேள். இங்கே அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார். அவர்களின் முகங்களைப் பார். முகத்தில் எவ்வளவு பயண சந்தோஷம்? இலக்கு சேரும் நம்பிக்கை? அத்தனையும் பாழ் பண்ணிவிடாதே. தீவிரவாதம் கடந்த 125 வருடங்களாக ஏற்படுத்தி வரும் பாதகங்கள் புரியாதா உனக்கு? பூமி அதிபரின் மீது அதிருப்தி காட்ட நியாயமான வழிகள் நூறு உள்ளன. நீ விதைத்த பாம் வெடித்தால் ஏற்படும் பின்விளைவுகளை எனக்காகச் சற்றுநேரம் Virtual Reality Playerல் பார்!"

சிகரெட் பாக்கெட் அளவில் இருக்கும் ப்ளேயரில் ஒரு வானடாக்ஸியும் நூறு பயணிகளும் ஒரு பாபனும் ஒரு வியாஸும் உவாக்கினான் வியாஸ். கூடுதல் இணைப்பை பாபன் மணிக்கட்டில் இணைத்தான். முப்பரிமாணக்காட்சிகளும் ஒலிகளும் கைகோத்து 'மாய உண்மை'க் காட்சியை யதார்த்தத்தைவிட விரைவாய் அமைத்தன.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
ஓவியம் - அரஸ்

வானடாக்ஸி வெடிப்பது பயணிகளின் மரண ஓலமும் - பயணிகளின் இரத்த சொந்தங்களின் அவலங்களும் - ஜிப்ஷாவின் உலக துக்கமும் - பூமி அதிபரின் அதிர்ச்சியூட்டும் அலட்சியமும் தீவிரவாதத் தலைவனின் சாடிஸ்டிகல் சந்தோஷமும் பிற கிரக சகோதரர்களின் இரங்கலும் பாபனுக்குள் ஓடின.

"வியாஸ்! உன் பேச்சின் தர்க்க நியாயம்,உணர்ச்சி நியாயம், வெர்ச்சுவல் ரியாலிட்டி பிளேயரின் அதிர்ச்சி நியாயம் என்னை லட்சம் வெட்டுக்கிளி படையெடுப்பாய்த் தாக்குகிறது. ஆனால் என்ன செய்ய? கிரவுண்ட் கண்ட்ரோலிடமிருந்து சமிக்ஞை வருகிறது - பாம் வெடிக்க இன்னும் 285 நொடிகளே அவகாசமென்று. பாமை செயலிழக்கச் செய்யும் திறன் என்னிடமில்லை...."

"என்னிடம் பாமைக்காட்டு முயற்சி செய்கிறேன்....'' நான்

"ஸாரி வியாஸ். பாம் வெளியில் இல்லை; என் வயிற்றுக்குள்..."

"வாட்?" அதிர்ந்தான் வியாஸ்.

 ''உண்மையைக் கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நான் நிஜமான மனிதனல்ல. சண்டைப் பயிற்சிகள் தரப்பட்ட ‘ஜுடாட்' வகை ஸைபோர்க் நான். அசைவுச் சுதந்திரங்கள் எனக்கு உண்டு. பிளாஸ்டிக் மண்டையோடு. அக்ரலிக் கண்கள். எலக்ட்ரானிக் தொண்டை. சுவாச வாசலில் ரத்தச் சுத்திக்காக பில்டரும் பேஸ் மேக்கரும்...." வயிற்றுப் பகுதியைத் திறந்து காட்டியது பாபன். பாம் இரட்டை சிவப்பு வெளிச்சப் புள்ளிகளுடன் மினுக்கியது.

"பாபன்! ப்ளீஸ் ஹெல்ப் அஸ்...." அழுதான் வியாஸ்.

"வெடிப்புக்கு இன்னும் நூறே நொடிகள். எப்படியிருந்தாலும் என் பெளதிக மரணம் தவிர்க்க முடியாதது. மரணபயம் எனக்கில்லை. கலத்தைக் காப்பாற்ற ஒரே ஒரு வழி இருக்கிறது. ஐ வில் டு தட்...." எழுந்தது பாபன். "நண்பா! ஜிப்ஷாவை விசாரித்ததாகக் கூறு!"

ஆபத்து வழி பொத்தான் அமுக்கி அதன் வழி கலத்தின் வெளியே பாய்ந்தது பாபன்.

ஆறுநொடிகள் தாமதத்தில் பாபன் வெடித்துச் சிதறியதை பைபர் கிளாஸ் ஜன்னலில் கண்டான் வியாஸ்.

"பாபன்! எங்களிடம் தொலைந்துபோன உன் 'மனிதாபிமானத்துக்கு' கோடி நன்றி!" முணுமுணுத்தான்.

 பின்குறிப்பு:-

கல்கி 04  ஜூலை  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com