சிறுகதை - ‘ஹாய்’?

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்

-ஆர். வெங்கடேஷ்

ரசல் புரசலாய் விஷயம் தெரிந்தபோது கல்யாணிக்கு ஒரு நிமிஷம் பிரமிப்பாய் இருந்தது. ஆர்த்தி, பாலாஜியை விரும்புகிறாள். ஜூன் வந்தால்தான் பதினாறு வயது நிரம்பும் ஆர்த்தி. கோவையில் +2 படிக்கும் பாலாஜி. எப்படி நடந்திருக்கும்?

அத்தை பிள்ளை என்ற உறவு, நெருக்கம் தந்ததுண்டு. மனசுவரை பதியுமா? பதிந்திருக்கிறது.

ஆர்த்திக்கு பாலாஜி கடிதம் எழுதுகிறான். அதில் ஒன்று கண்ணில் பட்டபோதுதான் ஆச்சரியம், பயம் எல்லாம்.

போனமுறை லீவுக்கு பாலாஜி, தன் அம்மாவுடன் வந்தபோது, ரொம்ப ஜாலியாகப் பொழுதுபோயிற்று. அவர்கள் ஊர் திரும்பின பின் இரண்டு நாட்கள் பிரமை பிடித்தவள்போல் இருந்தாள் ஆர்த்தி. இப்போது விஷயம் புரிகிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால் வயசு?

னால் ஆர்த்தியின் அப்பா மேலும் கீழும் குதித்தார்.  விஷயம் தெரிந்ததும் இயல்பான முரட்டுத்தனம். வேகம். பொறுமை காத்தாள் கல்யாணி. தப்பான விஷயமாய்த் தோன்றவில்லை. ஆனால் வாழ்க்கையில் பார்க்க, படவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. குறைந்த பட்சம், இருபத்தொன்றில் கல்யாணம் என்றாலும், இன்னும் ஐந்து வருஷம் இருக்கிறதே? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதற்குள். இன்னும் உறுதிப்படாத சின்ன மனசு ஏதாவது ரணம் ஏற்பட்டாலும், வலி தாங்குமா? முக்கியமானது, படிப்பு. அது பாதிக்கப்பட்டால், அப்புறம் ஒன்றுமேயில்லை. பயமாயிருந்தது கல்யாணிக்கு, கலவரமாகவும்.

"என்ன ஆன்ட்டி, கூப்டிங்களாமே அம்மா சொன்னாங்க?"- பாலாஜி.

கல்யாணச் சந்தடி தள்ளி மேலே அழைத்துப்போனாள் கல்யாணி. உறவு கல்யாணம். ஒரே கொண்டாட்டம். சப்தம்.

"என்ன விஷயம் ஆன்ட்டி?''

"நீதான் சொல்லணும். ஆர்த்தி படிக்க வேண்டாமா? லெட்டர் எல்லாம் போட்டுண்டே இருக்கிறே?"

திகைத்தான். பின் மெள்ள புன்னகைத்தான்.

"சாரி ஆன்ட்டி. ஆனா நான் இப்ப லெட்டர் போடறதேயில்லையே ஆன்ட்டி? ஆர்த்தி கூடாதுன்னுட்டா!"

"அப்படியா?"

"இதோ பாருங்க" அவன் பர்ஸிலிருந்து நான்காய் மடித்திருந்த கடிதத்தைக் கொடுத்தான். மணிமணியாய் ஆர்த்தியின் ஆங்கிலம்.

டியர் பாலாஜி,

உன் எல்லா லெட்டர்ஸும் கிடைத்தது. இனி எழுதாதே. இது போதும். உன் மனசு புரிந்துவிட்டது. முதல் வரியில் என் மனதும் உனக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை வேறு. நான் படிக்க வேண்டும். பெரிய ஆளாக வர வேண்டும். எம்.சி.ஏ. என் கனவு. அப்புறம் சிஸ்டமஸ் அனாலிஸ்ட் ஆக எப்படியும் இருபத்தி ஐந்து வயதாகும். பொறுமையிருந்தால், காத்திரு. அதுவரை ப்ளீஸ், டோண்ட் டிஸ்டர்ப் மீ.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!
ஓவியம்; அரஸ்

எங்கேயாவது பார்த்தால் மட்டும் ஒரு ஹாய் சொல்லு, போதும்.

எவர் லவ்விங்,

ஆர்த்தி.

நான்கு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட கடிதம்.

''நானும் முன்னுக்கு வர வேண்டாமா ஆன்ட்டி? வித்தவுட் எனி டிஸ்டர்பென்ஸஸ்,  இப்போ நானும் ஐ.ஐ.டி. என்ட்ரன்ஸுக்கு டிரை பண்றேன். வரேன் ஆன்ட்டி...''

அவன் படியிறங்கினான். 'ஹாய்' சப்தம் கேட்டது.

ஆர்த்தியின் குரல்தான். ஆனால் கல்யாணிக்கு இம்முறை கலவரம் ஏதும் இல்லை.

பின்குறிப்பு:-

கல்கி 11 டிசம்பர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com