சிறுகதை - நினைவெல்லாம் உன்னோடு!

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்
Published on

-திருவாரூர் பாபு

ர் மாறியிருந்தபோதும் கோயில் மாறவில்லை. கருணை பொங்கும் கண்களுடன் அதே முருகன். நான் படி ஓரமாக உட்கார்ந்துகொண்டேன்.

பத்து வருடங்கள்... எவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறது? நான் வடம் பிடிக்காமல் பத்து முறை தேர் ஓடியிருக்கிறது. ஒருமுறை முருகனுக்குக் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.

குருக்கள் படி ஏறி வந்தார். அவரை உற்றுப் பார்த்தேன். அவர்தான். அதே குருக்கள்தான்.

"பெயர் நட்சத்திரம் சொல்லுங்கோ..."

''சுகுணா, திருவாதிரை."

நினைவில் வைத்திருப்பாரா...?

என்னைப் பார்வையால் தடவியவர், முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் படி ஏறிக் கோயிலுக்குள் சென்றார்.

மறந்து விட்டார். நான்கு வருடங்கள் தினமும் மாலை கோயிலுக்கு வந்து விபூதி வாங்கிய என்னை மறந்து விட்டாரா...? அப்படியென்றால் சுகுணா...?

மறந்திருப்பாளா என்ன...?

நினைத்த எனக்குச் சிரிப்பு வந்தது. அவள் என்னை நினைத்தாளா என்றே தெரியாதபோது மறந்திருப்பாள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

நான் மறக்கவில்லை. மறக்க முடியுமா அவளை? மறக்கக்கூடிய முகமா அது? சுகுணா... எங்கிருப்பாள்? இப்போது எப்படியிருப்பாள்? கல்யாணமாகிக் குழந்தை பெற்று, உடல் குலைந்து, அழகு கரைந்து, முகம் முதுமை கட்டி... மாறியிருப்பாளா...?

'உன் ஆளை இப்போதெல்லாம் வெளியில் பார்க்க முடியவில்லை' என்று பாஸ்கரன் ஒரே ஒரு கடிதம் போட்டான். அதற்குப் பின் அவனிடமிருந்து கடிதம் ஏதுமில்லை.

சுகுணா!

"தம்பி ராஜா... எதிர்த்த வீட்டுக்குப் புதுசாக் குடி வந்திருக்கிறவங்க வீட்டுல டீ.வி. சரியாத் தெரியலையாண்டா... மெக்கானிக் தேடிக்கிட்டு இருக்காங்க... ஒனக்குத்தான் டீ.வி. ரிப்பேர் தெரியுமே... போயி என்னன்னு பாரு..."

நான் சுவாரஸ்யமின்றி அம்மாவைப் பார்த்தேன். இரண்டு தினங்களுக்கு முன்தான் குடி வந்திருக்கிறார்கள். முற்றிலும் அறிமுகம் இல்லாதவர்கள். அங்கு போய்...

"போடா.. ஒனக்கும் மாதிரி இருக்கும்ல..." கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்ல..."

அம்மா அதட்ட, போனேன்.

அந்த அம்மா "வாங்க தம்பி" என்று டீ.வியைக் காண்பித்தாள்.

பட்டனைத் தட்டினேன். டீ.வி.உயிர் பெற்று, "ஷ்..." என்றது. டீ.வி.யில் ரிப்பேர் ஏதுமில்லை என்று பட்டது.

மாடிக்கு வந்தேன். தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்றுகொண்டு ஆன்டெனாவின் எலிமெண்டுகளை சரியாகத் திருப்பி.. பூஸ்டரின் ஒயரை லேசாக இழுத்துப் பார்த்தேன். ஒயர் கையோடு வந்தது.

ஒயரை சரியாக வைத்து முறுக்க... கீழே வந்து டீ.வியை ஆன் செய்ய... பளிச்சென்று படம்...

 ''அம்மா படம் சூப்பராத் தெரியுது." அறையிலிருந்து வெளியே வந்த அவள் சந்தோஷமாய்க் கத்த... நான் அவளைப் பார்த்தேன். பார்த்த அந்த விநாடியில் நிலை குலைந்தேன்.

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
ஓவியம்; அரஸ்

ன்றிலிருந்து எனக்குக் காதல் ஜுரம் ஏற்பட்டது. அடிக்கடி ஜன்னல் முன் நின்று எதிர்வீட்டை பார்க்கத் தொடங்கினேன். அம்மா மூலம் அவள் பெயர் சுகுணா என்று தெரிந்துகொண்டேன்.

அவள் இந்தி படிக்க தினமும் காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, தெரு தாண்டிக் கண்களிலிருந்து மறையும் வரை இமைக்காமல் பார்த்தேன்.

குனிந்த தலை நிமிராமல் அவள் செல்லும் அழகு... அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் பேரழகு. பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அப்படிப் பார்க்கும்போதெல்லாம் மனத்தில் காதல் பொங்கிற்று. சந்தோஷத்தில் நெஞ்சு கனத்தது. பொங்கிய காதலை எப்படி அவளுக்கு உணர்த்துவது என்று தெரியவில்லை. பார்த்துச் சிரிக்கலாம் என்றால் என்னை அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. என்னை மட்டுமல்ல... யாரையுமே. எப்போதாவது அவள் வீட்டு ஜன்னலில் - தெரியும் முகம் அவளுடையதா... அவள் தங்கையுடையதா என்பதில் குழப்பமிருந்தது.

தவியாய்த் தவித்த எனக்கு, என்னை அவளுக்கு எப்படி உணர்த்துவது என்று புரியவில்லை. கடிதம் எழுதித் தெரு தாண்டி ஆள் சந்தடி இல்லாத அடுத்த தெரு வழியாகத் தையல் வகுப்புக்குச் செல்லும்போது கொடுக்கலாம் என்றால்... பயம். பயம்.... பயம்...

காதலிக்கும்போது ஏனோ தெரியவில்லை. கடவுள் நினைவு அதிகமாய் வருகிறது. நினைத்தது நடக்க வேண்டும் என்கிறபோது கடவுளின் துணையும் அதற்கு அவசியமாய்ப் படுகிறது. மனம் உருக பிரார்த்தித்தால் கடவுள் ஏதாவது வழி செய்வாரோ என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நான் தினமும் மனம் உருகப் பழனியாண்டவரை வணங்க ஆரம்பித்தேன்.

அப்படி வணங்கும்போதுதான் மாட்டிக்கொண்டேன்.

"தம்பி எதிர்த்த வீட்டுக்கு ஒரு ஜாதகக்காரரு வந்திருக்காரு... ஒன் ஜாதகத்தை எடுத்துட்டுப் போறேன்... என்ன சொல்றாருன்னு பார்ப்போம்... நான் வர்ற வரைக்கும் வீட்லயே இரு.''

அம்மா ஜாதகம் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து மேஜை மேல் வைத்திருந்த ஜாதக நோட்டைப் புரட்ட... உள்ளே சுகுணாவின் ஜாதகம்! எப்படி? தெரியாமல் வந்துவிட்டதோ... அவசரமாய்ப் பார்வையை அதில் போட்டேன். திருவாதிரை நட்சத்திரம்... மிதுன ராசி.

"லெட்சுமியம்மா... எங்க சுகுணா ஜாதகம் ஒங்க ஜாதக நோட்டோட வந்துட்டுதுபோல் இருக்கு... பாருங்க..." குரல் கேட்க அவசரமாய் நோட்டை மூடி வைத்து விட்டு நகர்ந்தேன்.

ன்று கார்த்திகை. பழனியாண்டவர் கோயிலில் கூட்டம் பிதுங்கியது.

வழக்கமாக அர்ச்சனை செய்யும் அப்பா ஊரில் இல்லாததால் அர்ச்சனைத் தட்டோடு நான்.

கூட்டம் கொஞ்சம் குறைந்து, "தம்பி... தட்டக் கொடுங்கோ..." கொடுத்தேன். வாங்கியவர், "பேர்... நட்சத்திரம் சொல்லுங்கோ..."

பளிச்சென்று எனக்குள் ஒரு மின்னல்.

வழக்கமாகச் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யும் நான் மெல்லிய குரலில் சொன்னேன் : "சுகுணா... திருவாதிரை."

அர்ச்சகர் மந்திரம் சொல்ல... நான் கண் மூடி நின்றேன். மனம் சுகுணா... சுகுணா... என்றது. முகத்திற்கு முன் அக்னி உணர்ந்து,  தீபத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, டோக்கன் நம்பர் சொல்லி அர்ச்சனைத் தட்டை வாங்கிக்கொண்டு திரும்பிய நான்... அதிர்ந்தேன்.

எதிரே என்னையே பார்த்தபடி சுகுணாவின் அண்ணன்!

நான் எதிர்பார்த்தது அன்று இரவு நடந்தது.

“ஒனக்கும் அவனுக்கும் என்னடி சம்பந்தம்... ஒன் நட்சத்திரம் எப்படி அவனுக்குத் தெரியும்... நம்ம ஜாதி என்ன... அவன் ஜாதி என்ன... ஆசைப்பட்டியேன்னு இந்தி படிக்க அனுப்புனதுக்கு நீ செஞ்சிருக்கிற வேலையாடி இது?"

சுகுணாவின் அழுகைச் சப்தம் தெரு தாண்டி என் செவிகளில் அமிலமாய்ப் பாய்ந்தது. மனம் பதைத்தது. 'அவளுக்கு ஏதும் தெரியாது. நான்தான்' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. எதிர்த்த வீடு, அடுத்த வீடு எல்லாம் வாசலில் நின்றுகொண்டு சுவாரஸ்யமாய்...

"என்னடா எதிர்த்த வீட்டுல அந்தத் தம்பியோட சப்தம் மாதிரி இருக்கு..." அம்மா ஆர்வமாய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். நான் தவித்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தயக்கமாய்த் திறந்தேன்.

பளிச்சென்று முகத்தில் அறை விழுந்தது. "என்னடா... என்னடா..." அம்மா பதறினாள்.

அவன் ஆவேசமாய்க் கத்தினான். "தப்பு லெட்சுமியம்மா... உங்கள எங்கள்ல ஒருத்தரா நினைச்சிருந்தோமே அது தப்பு.. எங்க பொண்ணை மயக்கிப் போடத்தான் இந்த மாதிரி பழகினீங்களா...?"

"என்னப்பா சொல்ற...?" என்றாள் அம்மா குழப்பமாய்.

''ஒங்க பையனையே கேளுங்க...''

"ஏய்... என்னடா... என்னடா இதெல்லாம்... எனக்கு ஒண்ணணுமே புரியலியேடா... சொல்லு..." அம்மா கத்தினாள்.

நான் அமைதியாக இருக்க... "அவன் சொல்லமாட்டான் லெட்சுமியம்மா. ஒங்க பையன் என் தங்கச்சி பேருக்குக் கோயில்ல அர்ச்சனை பண்றான்..."

அம்மா என்னை நெருங்கி வந்து பளாரென்று அறைந்தாள்.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த அப்பா, "குடும்ப கெளரவத்தையே கெடுத்திட்டியேடா" என்றார் பற்களைக் கடித்தபடி. "தெரியும்டி... ஒம் புள்ள இந்த மாதிரி ஏதாச்சும் பண்ணுவான்னு தெரியும்டி... பத்து வருஷமா தலை நிமிர்ந்து நடந்துக்கிட்டு இருந்தோம்.. எல்லாம் போயிட்டுதுடி.. இனிமே ஒரு நாள் இந்த வீட்டுல இருக்கக்கூடாது. நாளைக்கே டிரான்ஸ்ஃபர் கேட்கிறேன்.. வீட்டைக் காலி பண்ணிட்டு டிரான்ஸ்ஃபர் கிடைக்கிற ஊருக்குப் போயிடலாம்... இந்தத் தெரு பக்கம் இனிமே நடமாட முடியாதுடி... ஒருத்தன் மதிக்க மாட்டான்..."

அடுத்த வாரமே வீட்டைக் காலி செய்தோம்.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
ஓவியம்; அரஸ்

ஞ்சாவூருக்கு வந்த இரண்டாம் நாளே நான் டெல்லி கிளம்பினேன். அம்மா அழுதாள். அப்பா திட்டினார்.

"உள்ளூர்ல விலை போகாத மாடு... வெளியூர்ல எப்படிப் போகும்? தொரை டெல்லி போயி எவகிட்டயாவது வம்பு பண்ணப் போறாரு... சுட்டுக் கொன்னுடுவானுவோடி..."

நான் அப்பாவைப் பொருட்படுத்தாமல் புறப்பட்டேன். டெல்லி வந்தேன். காதலால் காயப்பட்ட மனம்... பணம் பணம் என்று அலைந்தது. பல டீ.வி. கம்பெனி ஏறி இறங்கினேன். நண்பனின் உதவியோடு ஒரு டீ.வி. கம்பெனியில் மெக்கானிக் உத்யோகம் கிடைத்தது. மனசை முழுக்க முழுக்க அதில் திருப்பினேன். வெறியோடு உழைத்தேன்.

மெக்கானிக்... சீனியர் மெக்கானிக்... ஃபோர்மேன் ... ஃபேக்டரி இன்சார்ஜ்... பணம் கொட்டியது. நான் வாழ்க்கையில் சம்பாதிக்கவே முடியாது என்று நினைத்திருந்த அளவைவிட அதிகமாகச் சம்பாதித்தேன்

அம்மாவையும், அப்பாவையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டேன். அம்மா வசதி பார்த்து மிரண்டாள். அப்பா அசந்தார். 'ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கல... எவளையாச்சும் பண்ணியிருப்பேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்... ஏண்டா... நம்ம வம்சத்துக்கே வாரிசு இல்லாம போயிடும் போலிருக்கே...''

''சுகுணா'' என்றேன்.

''இன்னும் அவளை மறக்கலியாடா...?" அம்மா திகைப்பாய்க் கேட்டாள்

"எனக்கு ஒரு தடவை அவளைப் பார்க்கணும்மா... என்னை அவ விரும்பினாளான்னு தெரியணும்மா... என் மனசு முழுக்க இன்னும் அவ இருக்காம்மா. என்னால் அவளை மறக்க முடியலம்மா... நான் பட்ட அவஸ்தையை அவ பட்டாளான்னு கேட்கணும்மா... ஊருக்குப் போறேன்."

"இன்னுமாடா அவ அங்க இருப்பா... கல்யாணம் ஆகிப் புருஷன் குழந்தைன்னு வேற ஊர்ல இருப்பாடா... விளையாட்டுத்தனமா எதையாச்சும் பண்ணிடாதே... பெண் பாவம் பொல்லாததுடா...'

ஆனாலும் நான் புறப்பட்டு வந்தேன்.  உடன் கோயிலுக்கு வந்தேன்.

ணி ஒலித்தது.

கன்னத்தில் போட்டுக்கொண்ட போதுதான் எனக்கு நினைவு வந்தது. ஆகஸ்டு 12. அட! இன்று என் பிறந்த நாள் அல்லவா...?  ஓர் அர்ச்சனை செய்தால் என்ன...?

எழுந்து படி இறங்க எத்தனித்தபோதுதான்... தொலைவில் சன்னிதித் தெருவிலிருந்து... அவள்... சுகுணா... சுகுணா..

என் இதயம் படபடவென துடிக்கத் தொடங்கியது. கண்கள் தூரத்தில் வரும் அவளையே வெறித்தது. அதே நடை. அதே குனிந்த தலை. சுகுணா... சுகுணா... சுகுணா... வா!

வந்தாள்.

நான் பட்டென்று தூணுக்குப் பின்னால் என்னை மறைத்துக்கொண்டு அவளை முழுமையாகப் பார்த்தேன்.

கண்கள் முதலில் அவள் கழுத்தைத்தான் பார்த்தன. கழுத்தில் தாலி இல்லை. காலில் மெட்டி இல்லை. முகத்தில் முதுமை இருந்தாலும் அதையும் மீறிச் சோகம் இருந்தது. உடம்பு கொஞ்சம் குண்டாகி.. ஆனந்தத்தில் என் கண்களில் கண்ணீர் திரண்டது. நெஞ்சு பொங்கியது. கை கால் நடுங்கியது. சப்தம் போட்டு ஓவென்று அழுதால் தேவலாம்போல் இருந்தது.

சுகுணா கண் மூடி நின்றாள்.

குருக்கள் அவள் முன் வந்து நின்றார்.

அர்ச்சனைத் தூக்கை நீட்டினாள். வாங்கிக் கொண்டவர், "பேர்... நட்சத்திரம் சொல்லுங்கோ..."

சுகுணா சொன்னாள்:

“ராஜா... மகம்...”

பின்குறிப்பு:-

கல்கி 05  செப்டெம்பர் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com