-கிருஷ்ணா
கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தான் அவன்.
க்ரூடு ஆயில் ஏற்றி வந்த லாரி, அந்த வீட்டின் மேல் மோதியபடி நின்றுகொண்டிருந்தது.
லாரியின் மோதலால், வீட்டின் முன் பகுதி இடிந்து போயிருந்தது.
லாரியோ எக்குத்தப்பாய் சாய்ந்தபடி பாதி சயனத்தில் இருந்தது.
எண்ணெய் அதிலிருந்து ஒழுகிக்கொண்டிருப்பதைக் கண்டான்.
'ஹைலி இன்ஃப்ளேமபிள் என்று சிவப்பு நிறத்தில் லாரியின் பின்புறமுள்ள டாங்கரில் எழுதப்பட்டிருப்பதை நோக்கினான்.
''பாத்ரூமிலே பல் தேய்ச்சுக் கிட்டிருந்தேன். மடேல்னு சத்தம். போட்டது போட்டபடி ஓடி வந்து பார்த்தா இது நிக்குது வீட்டுக்குள்ளே. எமனோட வாகனமாச்சே இப்ப இது!''
லாரியை சுட்டிக் காண்பித்தபடி பேசிக்கொண்டிருந்த பெரியவரை கவனித்தான் அவன்.
வேட்டி, பனியன், மேல் துண்டு, வழுக்கைத் தலை. ஒல்லியான தேகம். அறுபது வயதிருக்கும். அவர்தான் வீட்டுச் சொந்தக்காரராய் இருக்க வேண்டும்.
"எல்லாம் விதி! காலையிலே எழுந்ததுமே நஷ்டம்னு தலையெழுத்து!"
பெரியவரின் குரலில் கோபமும், விரக்தியும் வெளிப்பட்டது.
முப்பது, நாற்பது பேர் சுற்றி நின்று பெரியவர் பேச்சை சுவாரஸ்யமாய் கவனித்துக் கொண்டிருந்தனர்.
"டிரைவர் ஓடிட்டான் போலிருக்கு. நல்லவேளை, கொஞ்சம் தள்ளி மோதியிருந்தா, என் பேத்தியும், பேரனும்... நினைக்கவே பயமாயிருக்கு. அந்த ரூமில்தான் தூங்கிக்கிட்டிருந்தாங்க!"
பெரியவர் குரல் நடுங்கியது. லாரியிலிருந்து ஒழுகும் எண்ணெயைக் கவலையுடன் பார்த்தான் அவன்.
"ஜி.எஸ்.டி. ரோடு ஓரம் வீடு கட்டினாலே பிரச்னைதான். எப்ப, எது வந்து மோதும்னு சொல்ல முடியாது!"
"எல்லா டிரைவருமே இப்ப குடிச்சுட்டுதான் ஓட்டுறாங்க, கலிகாலம்!"
கைலி, சட்டையில் இருந்த ஒருவன் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தபடி 'காலத்தைப் பற்றிச் சொன்னதும், பதறிப் போனான் அவன்.
''சார், பத்த வைச்சிடாதீங்க!'
ஓடிப்போய் அவர் கையிலிருந்த தீப்பெட்டியைப் பிடுங்கினான் அவன்.
"என்னங்க, படிச்சவர் மாதிரி தெரியறீங்க. ஆயில் எப்படி கொட்டிக் கிடக்குது பார்த்தீங்களா? வீடும் லாரியும் குப்புனு பத்திக்கும், சின்ன தீப்பொறி பட்டாலும்."
இரைந்த குரலில் அவன் அதட்டியதும் எல்லோர் பார்வையும் அவன் மேல் பதிந்தது.
"இப்படி வேடிக்கை மட்டும் பார்த்தால் சரியாயிடுமா?"
பொதுப்படையாய் அவன் கேட்டான்.
"வேற என்ன பண்றதாம்?"
அந்த குண்டு ஆள் குத்தலாய்ப் பேசினான்.
அவன், வீட்டின் சொந்தக்காரரான பெரியவரை அணுகினான்.
''சார், வீட்டுல யார் இருந்தாலும் உடனே வேற இடத்துக்குக் கூட்டிட்டுப் போயிடச் சொல்லுங்க. எண்ணெய் எவ்வளவு சிந்திக்கிடக்குது பாருங்க? முன் ஜாக்கிரதை வேணாமா?"
பெரியவருக்கு ஆபத்து புரிந்து போய்ப் பதறினார்.
"என் பையன் வேற ஊரிலில்லே. மருமகளும், குழந்தைகளும் மட்டும்தான் இப்ப இருக்காங்க.''
"அதனாலென்ன? பதறாம இருங்க. நான் இருக்கேன்கூட.''
அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்தவர் மூலம் வீட்டு நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் வேறிடத்துக்கு.
''பெரியவரே, பூட்டு, சாவி எங்கேயிருக்கு?''
"எதுக்கு தம்பி?"
''கூட்டம் வரவர அதிகமாயிட்டே போகுது. வீட்டு அறைகளைப் பூட்டிடலாம். முன்பக்கமா யாரும் உள்ளே புக முடியாதபடி லாரி நிக்குது. பின் பக்கம் கொல்லைக்கதவு இருக்கா? இருக்காற பொருளை காபந்து பண்ணிடறது நல்லது." பெரியவர் சுறுசுறுப்பானார்.
"தம்பி, ரொம்ப நன்றிப்பா. எல்லாத்தையும் பூட்டிட்டேன். சமயசஞ்சீவியாய் வந்திருக்க!" அவன் கையைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்தார்.
"போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கணும், போன் பண்ணிடலாம். பக்கத்துல போன் இருக்கா?''
"பெரியவரே, யாரையாவது அனுப்புங்க. போன் பண்ண ரூபாய் இருக்கா?"
"அது... உள்ளேயிருக்கு.''
"நோ ப்ராப்ளம்."
தன் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினான்.
பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்பிட்டு பெரியவர் போன் பண்ணச் சொன்னார்.
அதற்குள் அவனின் செயல்பாடு கண்டு கூட்டம் அவனை மதிப்பாய்ப் பார்த்தது. அவன் சுற்றுமுற்றும் பார்ப்பதைக் கண்டு பெரியவர் கேட்டார்:
"என்னப்பா?"
"பக்கத்துல மண்... அதோ... ஏதோ கட்டட வேலை நடக்குது போலிருக்கே. ஆபத்துக்குப் பாவமில்லே."
அவன் நடக்க ஆரம்பிக்க, கூட்டம் வழி விட்டது. பின்னே ஏழெட்டு பேர் அவனைத் தொடர்ந்தனர்.
"தம்பி மட்டும் இல்லேன்னா கஷ்டமாயிருக்கும் பெரியவர் நிலைமை..."
"ப்ளீஸ், என் பெருமை இப்ப எதுக்கு? அதோ, வாட்ச்மேன் வராரே?"
குடிசையிலிருந்து வெளிப்பட்ட ஆளை நிறுத்தினான்.
"இவரிடம் பத்து, பன்னிரண்டு சட்டி இருக்கு. ஆளுக்கொரு சட்டியிலே மணலை எடுத்துட்டுப் போய் தேங்கிக் கிடக்கற எண்ணெய் மேலே கொட்டுவோம். நெருப்புப் பிடிக்கற வாய்ப்பு குறையுமே!"
மளமளவென்று வேலை நடந்தது.
"தம்பி. இனி நீயும் எனக்கொரு மகன்தான். வேடிக்கை பார்க்க ஆயிரம் பேர் கூடுவாங்க. ஆனால் சமயத்துல இப்படி கை கொடுத்து உதவறது..."
போலீசும் தீயணைப்பும் பெரியவர் பேச்சை நிறுத்தியது.
"நல்லா செயல்பட்டிருக்காங்க சார். எங்களுக்கு அதிகமா வேலையே இல்லை."
தீயணைப்பு ஆபீசர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பாராட்டினார்.
போலீஸ் தன் வழக்கமான பணியைத் தொடர்ந்தது.
பெரியவரிடம் விசாரணை, லாரி நம்பர், பெயர் குறித்தல், லாரி மோதியதால் ஏற்பட்ட சேதம் பற்றிய குறிப்பு என்று எல்லாம் வழக்கப்படி நடந்தது.
"இன்ஸ்பெக்டர் சார், இந்த தம்பி இல்லைன்னா ரொம்ப திண்டாட்டமாயிருக்கும்." பெரியவரும் மற்றவர்களும் சொல்ல,கூச்சமாய் நெளிந்தான் அவன்.
"வெல்டன் மிஸ்டர்! யாரு நீங்க?''
இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு, பதில் சொல்லத் தயங்கி, சுற்று முற்றும் பார்த்தான்.
"நான்தான் இந்த லாரியோட டிரைவர்" என்றான் மெதுவாய்.
பின்குறிப்பு:-
கல்கி 04 ஆகஸ்ட் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்