-சத்யா
என் மனைவி ஹேமலதாவிடம் ஒரு விசேஷமான குணம். யார் எந்தக் கேள்வி கேட்டாலும் நேரடியாக பதில் சொல்லமாட்டாள். மற்றொரு கேள்வியின் மூலமாகத்தான் பதிலைச் சொல்வாள்.
வீட்டுக்கு வருகிறவர்களை 'வாங்க' என்று கூறி வரவேற்பதைவிட 'இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?' என்று கூறி வரவேற்பதுதான் அவள் ஸ்டைல். வந்தவர்கள் 'சௌக்கியமா'' என்று கேட்டால், 'எனக்கென்ன கேடு?' என்றுதான் பதில் அளிப்பாள்.
நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். அவளுடைய இந்த எதிர்க் கேள்வி கேட்கும் குணத்தை மட்டும் என்னால் மாற்ற முடியவில்லை.
முதலில் நயமாகச் சொன்னேன்.
"நான் ஒண்ணு சொன்னா, கோவிச்சுக்க மாட்டியே?"
"நான் எதுக்கு உங்ககிட்டே கோவிச்சுக்கப் போறேன்?"
"உன்கிட்டே எல்லா குணமும் எனக்குப் பிடிச்சிருக்கு. ஒரே ஒரு குணம்தான் பிடிக்கலை."
"சொன்னாத்தானே தெரியும்?"
"எந்தக் கேள்வி கேட்டாலும், அதுக்கு பதிலா இன்னொரு கேள்வியைக் கேக்கறியே. அதான் எனக்குப் பிடிக்கலை."
"நான் என்ன, வேணும்னா அப்படிக் கேக்கறேன்?"
"அந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் மாத்திக்கோயேன்."
"அதெப்படி மாத்திக்க முடியும்?"
கோபமாகவும் திருத்தப் பார்த்தேன்.
"கேட்கிற கேள்விக்கு நேராகப் பதில் சொல்லாமல் ஏன் இப்படி எதிர்க் கேள்வி கேட்டு கழுத்தறுக்கிறே?"
"ஏன், கேட்டா என்ன?"
"உன்னை மாதிரி மத்தவங்க எல்லாத்துக்கும் எதிர்க் கேள்வி கேக்கறாங்களா?""
"மத்தவங்களைப் பத்தி என்ன பேச்சு? ஒருத்தர் மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா?"
“நீ இப்படி எதிர்க் கேள்வி கேக்கறது எனக்குப் பிடிக்கலை..."
''உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்?”
"அந்த மாதிரி பேசறதை நிறுத்தலாமே."
"நிறுத்த முடிஞ்சா நிறுத்தியிருக்க மாட்டேனா?”
'''சரி'ன்னு சொல்லித் தொலையேன்" என்று கத்தினேன்.
"சரி.... போறுமா?" என்று பதிலுக்குக் கத்தினான்.
எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனோதத்துவ டாக்டர் பக்கிரிசாமியை அணுகினேன்.
"இது ஒரு விதமான மனோ வியாதிதான். குணப்படுத்தி விடலாம்" என்றார் டாக்டர்.
"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். அவ வாயிலே இனிமே கேள்வியே வரக்கூடாது."
"கவலைப்படாதீங்க. ஒரே வாரத்திலே சரி பண்ணிடறேன். அடுத்த வாரம் பாருங்களேன். நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீங்க."
"அவ வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறேன் டாக்டர். பி.ஏ. படிச்சிருக்கா. இந்த குணத்தாலேதான் அவளுக்கு எங்கேயும் வேலை கிடைக்கலை. இன்டர்வியூவிலே இவ கேக்கற கேள்விக்கு அவங்க பதில் சொல்ல வேண்டியிருக்கு. எப்படி வேலை கிடைக்கும்?"''நீங்க உங்க மனைவியை அழைச்சுட்டு வாங்க. தினமும் அரை மணி நேரம் எப்படிப் பேசணும்னு அவங்களுக்குப் பேச்சுப் பயிற்சி கொடுக்கிறேன். அப்புறம் பாருங்க" என்றார்.
டாக்டரின் பேச்சு நம்பிக்கையைத் தந்தது. ஹேமலதாவை மறுநாளே அவரிடம் அழைத்துச் சென்றேன்.
"எதுக்கு என்னை மனோதத்துவ டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போறீங்க? எனக்கென்ன பைத்தியமா?"
''சேச்சே! உனக்கு ஒண்ணும் இல்லை."
''ஒண்ணும் இல்லாதப்போ எதுக்கு டாக்டரைப் பார்க்கணும்? உங்களுக்குப் பைத்தியமா?"
''ஐயோ! கொஞ்சம் பேசாம வாயேன்."
''ஏன் இப்படிக் கத்தறீங்க?''
ஒருவழியாக டிஸ்பென்ஸரியை அடைந்தோம்.
"இவதான் டாக்டர், நான் சொன்னேனே, என் மனைவி."
''ஓ... அந்தக் கேள்வி ஸ்பெஷலிஸ்ட்?"
''ஆமா... ''
"இதோ பாரும்மா! உன் பேர் என்ன?"
"எதுக்காக என் பேரைக் கேக்கறீங்க?"
"உஸ்.... கேக்கற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லணும். உன் பேர் என்ன?"
"என் பேரைத் தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?”
"சரி, அது வேண்டாம். நான் சொல்றதுக்கெல்லாம் 'உம்'னு பதில் சொல்லணும். வேறே எதுவும் சொல்லக் கூடாது.''
"உம்?"
டாக்டர் தலையைச் சொறிந்துகொண்டார்
"இதோ பாரும்மா. நான் கேக்கற கேள்விக்குப் பதில்தான் சொல்லணும். கேள்விக்குறி வரக் கூடாது. என்ன?"
"ஏன், டாக்டர்?"
"ஏன்னு நான் அப்புறம் சொல்றேன். நாலும் நாலும் எவ்வளவு? ஒரே வார்த்தையிலே பதில் சொல்லணும்.''
'எதுக்கு கேக்கறீங்க டாக்டர்?"
"உஸ்.... ஒரே வார்த்தையிலே பதில் சொல்லணும்."
"எதுக்கு?"
'''எட்டு'ன்னு பதில் சொல்லத் தெரியாதா?"- கோபத்துடன் கத்தினார் டாக்டர்.
"பதிலைத் தெரிஞ்சு வெச்சுகிட்டே என்னைக் கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?" என்று அமைதியாகச் சொன்னாள் ஹேமா.
டாக்டரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால், டாக்டர் மனம் தளரவில்லை. தினமும் இப்படி அரை மணி நேரம் பயிற்சி கொடுத்தால், சரியாகிவிடும் என்று உறுதியாகக் கூறினார்.
நானும் ஹேமாவை சமாதானப்படுத்தி தினமும் டிஸ்பென்ஸரிக்குப் பேச்சுப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தேன். ஆனால், ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை.
ஒன்றும் புரியாமல் மீண்டும் டாக்டரிடம் சென்றேன். டாக்டர் தலையைக் கூட வாராமல் பித்துப் பிடித்தவர் போல் நின்றிருந்தார்.
என்ன டாக்டர்? ஏன் இப்படி இருக்கீங்க?"
''ஏன்? இப்படி இருந்தா என்ன?'
''வந்து... அந்த எதிர்க் கேள்வி கேட்கிற குணம்..."
"எதிர்க் கேள்வி கேட்டா என்ன?"
போச்சுடா! ஹேமலதாவைக் குணப்படுத்தப் போய், டாக்டருக்கும் அந்தக் கேள்வி வியாதி தொற்றிக்கொண்டு விட்டதே.
மிகுந்த கவலையுடனும் மன வருத்தத்துடனும் வீடு திரும்பினேன்.
'ஹேமலதாவிடம்தான் முன்னேற்றம் இல்லையென்றால் டாக்டருக்கும் இப்படி ஆக வேண்டுமா?' என்று நினைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தேன்.
'"என்னங்க, எனக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருக்கே பார்க்கலையா...?" என்றாள் ஹேமலதா.
தூக்கி வாரிப்போட்டது எனக்கு. இவள் 'கேள்வி ஞானத்துக்கு' எந்த ஆபீஸில் இடம் கொடுத்திருப்பார்கள் என்று என்னுள் கேள்வி குடைய,
''உன் கேள்வி ஞானத்தை மதிச்சு யார் வேலை கொடுத்தாங்க...?" என்றேன்.
"இன்கம்டாக்ஸ் ஆபீஸ்னு கவர்மேல முத்திரை குத்தியிருக்கே அதைக்கூட நீங்க பார்க்கலையா?" என்று மடக்கினாள் கேள்வித் திலகம்.
பின்குறிப்பு:-
கல்கி 08 மே 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்