
-பா. ராகவன்
இது ஓர் எழுத்தாளரைப் பற்றிய கதை. இந்த எழுத்தாளரை உங்களுக்கு ரொம்ப வருஷமாகத் தெரியும். குறைந்தது முப்பது, முப்பத்தைந்து வருஷங்களாகவாவது. இயற்கை எய்திவிட்ட அந்தக்காலத்து மணிக்கொடி, பிரசண்ட விகடன், சிவாஜி, சுதேசமித்திரன் தொடங்கி இந்தக் கல்கி, குமுதம், விகடன் வரை அவரை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள்.
ஒரு காலத்தில் அவர் எழுத்துலக சூப்பர் ஸ்டார். (அந்தக்காலத்து பாஷையில் ஜாம்பவான்.)
தமிழின் துரதிர்ஷ்டம், கொஞ்ச வருஷமாக அவருக்குப் பத்திரிகைகள் கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டன. சநாதனமான இலக்கிய இதழ்கள் அவர் எழுத்து 'ஸ்டேல்' ஆகிவிட்டதாக விமர்சித்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள, வாரப் பத்திரிகைகள் நடுக்கம் மிக்க அவர் கையெழுத்தைப் பொறுத்துக்கொண்டு படிக்கச் சமயமில்லாமல், அவர் ஸ்டாம்பு வைக்காவிட்டாலும் கர்மசிரத்தையாக அவர் கதைகளைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தன.
ஆனால், பாவம் செய்கிறோம் என்ற உறுத்தல் இருந்துகொண்டே இருப்பதால் தீபாவளி சமயத்தில் மட்டும் அவரிடம் கதை கேட்டுக் கடுதாசி போடுவார்கள்.