
தமிழ்நாடு அரசுப்பேருந்து மாயவரத்தை நோக்கி 40 கிலோமீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது.
பஸ்ஸில் பயணிகள் சீட்டிற்கு ஒருவராய் சிதறி இருக்க, “ அம்மா.. எனக்கு வயசு 26 தானே ஆகுது. இப்பவே எதுக்கு கல்யாணம்? இன்னும் இரண்டு, மூணு வருஷம் ப்ராக்டிஸ் பண்ணி நல்ல பெயர் எடுத்ததுக்கு அப்புறம் யோசிக்கலாமே? “
“ டேய்.. ராமா, செய்ய வேண்டியது எல்லாத்தையும் உரிய நேரத்தில செஞ்சாதான்... அதுக்கு மதிப்பு. என் பிள்ளை நல்லவன் தான். நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதே. தினம்தினம் உன்னோட கிளினிக்ல, பல பெண்களோட உடல்நிலையைச் செக் பண்றவன் நீ. அதில..”
“அம்மா.. நிறுத்து. டாக்டரான நான் இந்த சமூகத்தில பொறுப்பு உள்ள பிரஜை. எந்தச் சந்தர்பத்திலும் என் தொழில் தர்மத்தைக் காப்பாத்துவேன்,“ என்றவன் முன் சீட்டில் இருந்த இரு பெரியவர்களின் பேச்சால் கவரப்பட்டான்.
“ சார்..பார்த்தீங்களா பேப்பரை? முன்னாடியெல்லாம் டாக்டர்ங்க ஆபரேஷன் அவசரத்தில கத்திரிகோல வைச்சு தைச்சிட்டதா ஜோக் போடுவாங்க. இப்ப வர, வர நிறைய நிசமா நடக்குது.”
“ இது இங்கே மட்டுமில்ல... அமெரிக்காவிலேயே நடக்குது. ஜீன்ஸ் படக்கதைக் கூட இப்படித்தான்னு கேள்விப்பட்டேன்.”
“ ஹா..ஹா..ஆமா. வர,வர எந்த வேலையிலும் ஈடுபாடு குறைவா இருக்கு.”
“டேய்... ராமா. கேட்டியா அவங்க பேச்சை ? சமூகத்தில உன் தொழிலுக்கு உள்ள மதிப்பை! “ ராமனின் தாய் சொல்லி முடிக்குமுன்,
“அம்மா.. நெஞ்சை அடைக்குதே. மூச்சு..முட்டுதே..” நடுத்தர வயதுப்பெண் ஒருத்தி அலறிச் சாய, பஸ் 'சட்' டென நின்றது.
“பஸ்ல.. யாராவது டாக்டர் இருக்கீங்களா?” நடத்துநர் பதற்றமாய் கத்த, உடனே 108 க்குப் போன் பறந்தது... முன் சீட்டுப் பெரியவரிடமிருந்து.
டாக்டர் ராமன் உடனே அம்மாவைப் பார்த்துப் பார்வையாலே அனுமதி வாங்கி வேகவேகமாய்..
அவள் ஆடைகளைத் தளர்த்தியவன், அவளின் அபாய நிலை அறிந்து...மார்பில் மசாஜ் செய்து, வாய் மூலம் செயற்கை சுவாசம் கொடுத்தான்.
ஏறத்தாழ பத்து நிமிடங்கள் பறந்த நிலையில் அவள் லேசாய்க் கண் திறந்து எழ முயற்சிக்க, பஸ்ஸே பாராட்டியது.
“ஆஹா.. என்ன வேகம்! இவ்வளவு நேரம் நாங்க ரெண்டுபேரும் டாக்டர்ஸ பத்தித் தரைக்குறைவா விமர்சனம் பண்ணினோம். உங்களை மாதிரி டாக்டர்கள் தெய்வமா நடமாடறது புரியாம... கடுமையாப் பேசிட்டோம். மனசில வைச்சுகாதீங்க தம்பி. மன்னிச்சிடுங்க. அம்மா... நீங்க ரொம்ப பாக்கியசாலி.”
சுற்றிலும் கிடைத்த பாராட்டுகளின் நடுவில், களைப்பாய்த் தலை நிமிர்ந்த டாக்டர் ராமன், தன் அம்மா முகத்தில் ஜொலித்த பெருமிதம் கண்டு பரவசமானான்.