
நம் உடலில் சேர்கின்றன அதிகப்படியான கொழுப்பு இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்கின்ற வழித்தடங்களில் படிகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து புதுவை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று, தற்போது பரமத்தி வேலூரில் சொந்த கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்துவரும் பொது நல மருத்துவர் பிரகதீஷ் விரிவாக கூறுகையில்...
"மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எல்.டி.எல் எனப்படுகிற கொழுப்பு தான். இதனைக் கெட்ட கொழுப்பு என்பர்.
இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. பிற கொலஸ்டிரால் துகள்களை விட எல்.டி.எல் கொலஸ்டிராலின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் இவை எளிதில் ரத்த நாளங்களில் படிந்திடும்.
நாம் சாப்பிடுகிற உணவு கெட்ட கொழுப்பை உண்டாக்குவதில் பெரிய பங்கு வகிக்கிறது. ஜங்க் ஃபுட், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், போன்றவை மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. அதனால் கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்கும் உணவுகளை தவிர்த்திட இதயம் பலப்படும்.
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பு தன்னாலே கரையும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது அவசியம். மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் மக்னீசியம் முக்கியமானது.
நம் உடலின் ரசாயன செயல்பாடுகளுக்கும், இதயம் சீராக துடிக்கவும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரவும் மக்னீசியம் பெரிதும் உதவுகிறது. அதோடு நாம் எடுத்துக் கொள்கிற கார்போஹைட்ரேட் எனர்ஜியாக மாற்றவும் இது தேவைப்படுகிறது.
வாழை, அவகோடா, பாதாம், முந்திரி, பயறு வகைகள், முழு தானியங்கள், பால் ஆகியவற்றில் மக்னீசியம் உள்ளது. மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வு, வலுவின்மை உண்டாகிறது. வைட்டமின் சி ஒரு வகை ஆன்டி ஆக்ஸிடென்ட். இது வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.
இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இந்த சத்துக்கள் உடலில் சேமித்து வைக்காமல் தினசரி தேவைப்படுவது போக மீதம் சிறுநீரில் வெளியாகி விடும்.
வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, கீரை வகைகள், ப்ரக்கோலி, திராட்சை, பப்பாளி, ஸ்ட்ராபெரி அன்னாசிப்பழம், ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
வைட்டமின் சி குறைந்தால் மன அழுத்தம் ஏற்படும். அதோடு ஹார்மோன்களின் சமமின்மை காரணமாக தூக்கமின்மை, உடல் அசதி, குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும்.
க்ரீன் டீயில் ப்ளவனாய்டு, கேட்டபின் முதலான பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகளாக செயல்பட்டு உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இவையும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது," என்றார்.