

-படுதலம் சுகுமாரன்
"உன்னோட ஃபிரண்டு சத்யசீலன் வெவகாரம் தெரியுமா?"
அப்பா கேட்டார். கேட்டவிதத்தில்... ஏதோ விபரீதம் தொனித்தது. பின்னணியில் வலுவான சம்பவம், சமாசாரம் ஒளிந்திருந்து, அதை வெளிப்படுத்துவதற்கான பீடிகையாய் அந்த வரியை அவர் ஆரம்பித்திருந்தார்.
ஊரிலிருந்து அவர் கொண்டு வந்திருந்த பலகார டின்களை எடுத்து ஷெல்ஃபில் பத்திரப்படுத்திக்கொண்டிருந்த நான்... நிதானித்து... திரும்பி அவரைப் பார்த்தேன்.
"என்னப்பா..."
"அவன்...ஒண்ணும் தெரியாத பயல்னு நாமெல்லாம் நினைச்சிக்கிட்டிருந்தோம். பொல்லாத வேலையெல்லாம் பண்ணிப்புட்டானே.. தோளில் கிடந்த துண்டால், கழுத்து வியர்வையைத் துடைத்தபடியிருந்தார் அவர்.
'பொல்லாத வேலை...' என்ற வார்த்தை. என்னுள் மின்சாரம் பாய்ச்சியது. அவனுக்கும் கோமதிக்குமான விவகாரம் வெளியில் கசிந்துவிட்டதா என்ன? அவசர நொடிகளில் அதைச் சொல்லிவிடுகிறேன்..
சத்யசீலன் என் பால்ய சினேகிதன்.
எதிரெதிர் வீடு.
ஒண்ணாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டு வரை... இருவரும் இணைபிரியாத தோழர்கள். அமைதியானவன். கொஞ்சம் அழகும்கூட, இன்வர்டட். எதையும் 'பளிச்'சென்று வெளியில் சொல்லாமல் புதைத்து வைத்துக்கொண்டு மருகும் டைப். அவனுக்கு ஓரளவாவது 'க்ளோஸ்' என்று சொன்னால், அது நான் மட்டும்தான்.
மலையடி வாரத்தில் உலாவப் போக, நைட் ஷோ கொட்டகைக்கு போக, பள்ளிக்கூடம் போக, கிணற்றில் கோட்டை கட்டி குளிக்கப் போக... என்று எங்கும் என்னோடு அவனைப் பார்க்க முடியும்.
சக ஊர்ப் பையன்கள் ஒன்பதாம் வகுப்பு தொடுகையிலேயே பீடி குடிக்கவும், தோப்போரம் ஒதுங்கி சீட்டு ஆடவும் செய்துகொண்டிருந்த நாளில் இவன் ஒருவன்தான்... என்னைப்போல நெற்றி விபூதியும், கையில் பாடப் புத்தகமும், வாயில் கந்த சஷ்டிக் கவசமுமாய் வளைய வந்தவன்.
அதன் காரணமாகவே... கறாரான அப்பா... அவனுடனான என் சினேகிதத்தை அனுமதித்திருந்தார். இப்படி பசுவாக இருந்த அவன் சுபாவம்... எப்படியோ கோமதியைக் கவர்ந்து போயிருந்தது. இவனுக்கும் அவளை வைஸ்வர்ஷா.
என்னிடம்தான் உள்ளக்கிடக்கையை வெளியிட்டான்.
'காதல்' என்றால் அது பலான விவகாரத்தின் மறுபெயர் என்ற அபிப்ராயத்தில் இருந்தவன் நான். அவன் அப்படிச் சொல்லவும் 'சீச்சி... அசிங்கம், அசிங்கம்' என்று திட்டினேன். ஒரு வார காலத்தில்... அந்த ஏக்கத்திலேயே அவனுக்கு ஜுரம் வந்துவிட்டது.
அவன் பட்டபாட்டைப் பார்த்து, இரக்கம் சுரந்துவிட்டது எனக்கு. போனால் போகிறதென்று அவன் காதலை அங்கீகரித்து விட்டேன். அவனுக்கும் உடம்பு சரியாகிவிட்டது.
கோமதிக்கு தன் எண்ணத்தைத் தெரியப்படுத்தும் விதமாக அவன் ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தை என்னையே கொண்டுபோய் கோமதியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டான்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நான் அந்தக் காரியம் செய்தேன். காரணம்.. சத்யசீலன் ரெட்டியார். கோமதி கோமுட்டி செட்டி வர்க்கம். இது வேலைக்காகாது என்பது ஒரு பக்கம், வெளியில் தெரிந்தால் விபரீதம் ஆகும் என்பது ஒரு பக்கம். பொதுவாகச் சண்டை போடுகிறவர்களைவிட... சமாதானத்துக்காக இடையில் நுழைகிறவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும்... செய்தேன்.