

-சாருகேசி
செல்லப்பாவுக்கு அந்தப் பெட்டியைத் திறந்து காட்டியதும் வெலவெலத்துப் போய்விட்டது. விழி பிதுங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
"ஒங்களுக்கு இல்லே இது. இதக் கொண்டு போய் நீங்க மிஸ்ராட்டக் குடுத்துட்டாப் போதும். குடுத்துட்டு திரும்பிப் பாக்காம வந்துடுங்கோ!'' என்றார் பட்டுசாமி.
மைத்துனன் கிருபாசங்கர் மீதுதான் செல்லப்பாவுக்குக் கோபமும் ஆத்திரமும் பொத்துக் கொண்டு வந்தன. தில்லிக்கு வந்து சேர்ந்து, இந்த இருபத்து நாலு வருடங்களாக அவன் போடுகிற சாப்பாட்டுக்கும் செலவுக்கு என்று தருகிற ஐந்நூறு ரூபாய்க்கும் கட்டுப்பட்டுத்தான் இந்த மாதிரி துஷ்கிருத்யங்களில் இறங்க வேண்டியிருக்கிறது.
''உம்மோட கதர் ஷர்ட்டும் கதர் வேஷ்டியும் உம்மை ஒரு பார்ட்டி ஆளாகத்தான் காண்பிக்கிறது. யாரும் சந்தேகப் பட மாட்டா!" என்றான் கிருபா.
"அதுனால தைரியமா எடுத்துண்டு போய் மிஸ்ராட்ட குடுத்துடும். மீதி எது ஒண்ணைப் பத்தியும் நீர் கவலையேபட வேணாம்!"
‘கதர் டிரஸ் ஒண்ணுதான் கட்சிக்காரன் வேஷம் கலைந்து போன பரட்டைத்தலை. ஒடுங்கிய கன்னம், ஃபிடில் குச்சி போல உடம்பு எல்லாம் நிச்சயமா கட்சிக்காரனோட சேர்த்தி இல்லே' என்று நினைத்துக் கொண்டான் செல்லப்பா.