

-சி.என்.ராஜராஜன்
மெயின் ரோட்டிலிருந்து விலகி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற மண் சாலையில் காலடி வைத்தாள் மைதிலி.
அந்த மண் சாலைக்கு இணையாக தெற்கும் வடக்குமாக நீண்டு சென்ற தண்டவாளத்தையும், சற்று தூரத்தில் மரங்களின் மறைவில் தெரிந்த ஸ்டேஷன் கட்டடத்தையும் பார்த்தவுடன் அவள் உடம்பிலும், மனத்திலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டாற் போலிருந்தது.
இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் அவசரமாக வந்திருக்கிறாள் அவள்
"இப்ப ஏன் உங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு துடிக்கிறே? நான் மூணு நாள்ல பெங்களூர்லேருந்து திரும்பிடுவேன். அதுவரை தனியா இருக்க பயமா?" என்று அவள் கணவன் ரவி கேட்டபோது மைதிலி பிடிவாதமாகச் சொன்னாள்.
"சேச்சே... அதெல்லாம் இல்லை. எனக்கு எங்க ஊருக்குப் போனாப் போதும்னு இருக்கு!''
"ஏன் மெட்ராஸ் உனக்குப் பிடிக்கலையா?"
பிடிக்கவில்லை என்று அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று விழித்தாள் அவள்.
அவள் பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் கிராமத்தில். அதுவும் தஞ்சாவூர் மாவட்டக் கிராமம். காவிரி பாய்கிற ஊர். அங்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற மண் சாலையில் ரயில்வே லைனைப் பார்த்தபடி ஒரு தோட்டத்திற்கு மத்தியில் அவள் வீடு இருக்கும்.
மண்சாலைக்கும், வீட்டுக்கும் நடுவே ஒரு வாய்க்கால். அதில் ஒரு மூங்கில் பாலம்.
வீட்டின் முன்பக்கம் கனகாம்பரமும், நந்தியாவட்டையும் பூத்திருக்கும். இன்னொருபுறம் கத்தரியும், வெண்டையும் பூத்தோ, காய்த்தோ கிடக்கும்.