

-லைபான்
பதினையாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளித்துள்ள அந்தப் பெரிய தொழிற்சாலையிலிருந்து வேலைக்கான நியமன ஆணை நேற்றே வருமென்று காத்திருந்தான், நாவரசு. இன்றைக்குத்தான் வந்தது. பெயர். பிறந்த நாள், படிப்பு, சாதி மதம் என்று பதினைந்து கேள்விகள் கேட்டு. அதைப் பூர்த்தி செய்து வட்டாட்சியர் ஒப்பத்துடன் வியாழக்கிழமைக்கு முன்னதாக வந்து சேர வேண்டும் என்று கண்டிருந்தது.
காலண்டரைப் பார்த்தான். அடுக்கடுக்காய 'சிவப்புத் தேதிகள்...'
கோபத்தின் உச்சம்.
வந்திருக்கிற பேப்பரில் தாசில்தார் கையெழுத்து வாங்கி வர்ற வியாழக்கிழமைக்குள் தொழிற்சாலைக்குப் போய்ச் சேரணும்."
"சேர்த்துட வேண்டியதுதானே?" என்று கேட்டார் அப்பா.
"சாத்தியமில்லை.
"ஏன்?"
"நாளைக்கு சனி - ஞாயிறு விடுமுறை. திங்கள் உள்ளூர் தர்கா கந்தூரிக்கு லோக்கல் விடுமுறை. தொடர்ந்து மூணு நாள் பொங்கலுக்கு... இனி தாசில்தார் தரிசனம் வெள்ளிக்கிழமைதான்."
"அப்ப ஃபேக்டரியும் லீவாத்தானே இருக்கும்?"
"ஊஹும்! ஞாயிறு விட்டால் பொங்கல் விடுமுறை ரெண்டு நாள்தான் அவுங்களுக்கு." வேதனைப் பெருமூச்சு வெளிப்பட்டது.
"இப்ப என்னங்க பண்றது?"
- அம்மாவின் குரலும் ஜீவனற்றுப் போனது. ஆற்றாமை, அவசர கதியில் சிந்திக்க வைத்தது...
'இந்தப் பேப்பரில் தாசில்தார் கையெழுத்து வாங்கிட்டா தம்பிக்கு வேலை நிச்சயம்தானேம்மா?" என்றான், அண்ணன் பூவரசு.
'ஆமா' என்கிற மாதிரி தலையை அசைத்து, "ஆனா இன்னும் ஆறு நாளைக்கு ஆபீஸ் திறக்காதாமே..." என்றாள் வேதம்.
"அதை நான் பார்த்துக்கறேன்" என்று அவசரமாக ஆர்டரைப் பிடுங்கிக்கொண்டு வெளியே ஓடினான் பூவரசு.