
-உமா கல்யாணி
போகிறபோது கொடுக்கரிவாள் கொண்டு திருகு கள்ளிக் கிளைகளில் ஐந்தாறை அரிந்துபோட்டான் மாயகிருஷ்ணன். சொளசொளவென்று கள்ளிப்பால் சுரந்து கட்டாந்தரை ஈரப்படலானது.
ஏதோ குதிரை ரேசில் கலந்துகொண்டவை போன்று ஆடுகள் வேகம் வேகமாய் ஓடிவந்தன.
மாயகிருஷ்ணனின் அரிவாள் இயங்கும் ஓசைக்கு எந்தக் கொந்திலே ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தாலும் சரி, நான்கு கால் பாய்ச்சலுடன் அவனிருக்கிற இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.
மொசு மொசுவென்று இலை தழைகளை ஆய்ந்து ஆய்ந்து தின்னும்.
மாயகிருஷ்ணனும் அவற்றின் இந்த அவசரமான மேய்ச்சலைச் சந்தோஷத்துடன் பார்த்தபடி நிற்பான்.
ஆனால் இப்போது...?
அரிவாளின் ஓசைக்குப் பாய்ந்தோடி வந்த ஆடுகள், வெட்கப்பட்டுக் கிடந்த திருகு கள்ளிக்கிளைகளை முகர்ந்து முகர்ந்து பார்த்தபடி தேக்கமாய் நின்றன.
இந்தக் கள்ளிப் பாலின் முடை நாற்றம் அவற்றிற்குப் பரிச்சயம்தான். எனினும்கூட எப்பவுமே அதையே சகித்துக்கொள்ள நேர்கிறபோது சலிப்பு வராதா?
இப்போதும் சலிப்புடன்தான் கள்ளிக்கிளைகளைச் சுற்றிச்சுற்றி வந்தன.
முறுக்குச் சாப்பிடுகிற மாதிரி, 'மொறுக், மொறுக்'கென்று கள்ளித்தோலை லாகவமுடன் உரித்து உரித்துத் தின்னுகிற ஆடுகள் இன்று முகர்ந்து முகர்ந்து பார்த்தபடியே நிற்பதென்றால்..?
மாயகிருஷ்ணனுக்கே அழுகை வரலானது.
"பாவம் அதுங்கதான் என்ன பண்ணும்? தினம் தினம் கள்ளிகளையே வெட்டிப் போட்டுத் தின்னச்சொன்னால் மூஞ்சியிலே அடிக்குமல்ல. பேதில போற மழை பெய்யாமக் கெடந்து ஆட்டங்காட்டுதே! காடெல்லாம் கரிஞ்சு தீஞ்சு கெடக்கு. எப்பவாச்சும் கள்ளிகளை வெட்டிப்போட்டால் அதுகளும் பிரியமாத் தின்னும்தான். என்னத்தப் பண்ணும்? அதான் மோந்துமோந்து பாத்துக்கிட்டே சுத்திச்சுத்தி வருகுது. காட்டுல பச்சை இல்லே. குளங்கள்லாம் காஞ்சுபோய்க் கெடக்கு. இதுக படுதபாடுல்ல பெரும்பாடாய் இருக்கு. மனுசன் எதையோ காய்ச்சிக் கீய்ச்சி வயித்த ரொப்பிக்கொள்கிறான். பாவம் இதுக... வாயத்த ஜீவனுக என்னதான் பண்ணும்..?"
தனக்குள் புலம்பிக்கொண்டே தனது ஆடுகளைப் பார்த்தான்.
எலும்புத்தோல் போர்த்த ஆடுகள் அவனது நெஞ்சத்தை விம்மப் பண்ணின. கண்கள் கோத்தன.
அழுக்குத் துண்டினால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
அவனால் தாகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால்... இதுகள்?
இப்படி மேய்ச்சலுக்கு வழியில்லாமல் அந்திவேளையில் அலுத்துச் சலித்துப்போய் வீட்டுக்குத் திரும்பினால், முற்றத்து ஆட்டுக்குடிலுக்குள் கிடக்கிற குட்டி ஆடுகள், தாய்ப்பாலுக்காக முட்டி மோதி வெளி வரத் துடிக்கிற காட்சி ஈரக்குலையை அறுக்கும்.
மேய்ச்சலுக்கே வழி இல்லாதபோது மடி எங்கே சுரக்கும்?
"என்ன பாவம் பண்ணுச்சோ இப்பாடு படதுக்கு?" என்று தன்னுள் புலம்பிக்கொண்டான்.
எப்படியோ கடுங்கோடையைத் தாக்காட்டியாக வேண்டுமே!
கள்ளியை முகர்ந்து முகர்ந்து பார்த்தபடி நிற்கும் தனது ஆடுகளைக் கழிவிரக்கத்துடன் பார்த்தபடியே மாயகிருஷ்ணன் நின்றிருந்தபோது, தலையில் சுள்ளிக்கட்டுகளுடன் ராமக்காளும், ருக்குவும் வந்தனர்.
''பாவம் வாயத்த சீவனுக.தெனம் தெனம் கள்ளியை வெட்டிப் போட்டா என்ன பண்ணும் அதுக? ஏம்பா மாய்கிருஷ்ணா, தேரிக்காட்டைத் தாண்டி இருக்கிற மொட்டச்சி மலைக்குப் போனா என்னமும். மேய்ச்சல் இருக்குமே. ஆட்டை ஓட்டிக்கிட்டு போய்ப் பாரேன்" என்றாள் ராமக்கா.
"மொட்டச்சி மலைக்கா? ஆத்தாடி, எம்புட்டுத்தூரம்!"
"இருக்கட்டுமே, போனா அரைவயிறு ரொம்பாதா? காஞ்ச கொம்புகளையும், காஞ்ச வேரையும் போட்டுக் கடிக்கதுக்கு, கொஞ்ச வழி நடந்தாலும் அரை வயிறு ரொம்பாதா?" என்றாள் ருக்கு.
"அங்கன மேய்ச்சல் இருக்கும்ன்னா சொல்திய?" என்று ஆவலுடன் கேட்டான்.
"வெறகு வெட்டப்போன திருவாழி அண்ணாச்சி வெற்குக் கட்டோட ஒரு கட்டுத்தழையும் கட்டிக்கிட்டு வந்தாரு. இந்த அருந்தல்ல ஏதண்ணாச்சி பசேல்ன்னு தழைங்கன்னு கேட்டேன். அப்பத்தான் மொட்டச்சி மலைலயிருந்துண்ணாரு. அதான் சொல்தேன்.''
"சரி ராமக்கா" என்ற மாயகிருஷ்ணன், கொம்பு சுழற்றி ஆடுகளைப் பத்தலானான். அவைகள் முன்னால் ஓட, இவன் பின்னால் விரையலானான்.
"மாயகிருஷ்ணன் அண்ணாச்சிக்கு ஆடுதான் உசிர். பாரேன், ஆட்டுக்குட்டிக்குத் தழை கெடைக்கும்ன்னதும் ஓடுதாரே ஓடனே..." என்ற ருக்கு, தனது மட்டைச் செருப்புகள் சப்தமிட தொங்கு தொங்கென்று ஓடலானாள்.
சுட்டெரிக்கும் தேரிமணலைத் தாண்டிக்கொண்டு மொட்டச்சி மலை மீது ஏறலானான் மாயகிருஷ்ணன். பாதிக்கு மேல் ஏறியதுமே கள்ளிக் காடுகளும், அதற்கும் மேலாக இலை தழைகளுடன் கூடிய குற்று மரங்களும் கண்ணில்பட, இவனுக்கே இரை கிட்டிவிட்டதுபோன்ற பூரிப்பில் துள்ளிக் குதித்தபோது, மட்டைச் செருப்பு வாய் பிளந்துவிட்டது. ஏற்பட்டிருந்த உற்சாகத்தில் அதைத் தூக்கி அந்தரத்தில் வீசினான்.
''நாளைக்குச் சின்னப்பனட்டச் சொல்லி மட்டை வெட்டிப்போடணும். அதுல செருப்புப் பண்ணிக்கிட்டாப் போச்சு" என்று கூறிக்கொண்டான்.
"ட்ரியோ...ட்ரியோ..." என்று ஆடுகளையும் மலை உச்சிக்கு ஏற்றினான்.
பச்சையைக் கண்டுவிட்ட உற்சாகம் அவைகளிடமும்கூட, 'ம்மே! ம்மே!' என்கிற கத்தல்களுடன் உற்சாகமாய்க் குதித்தன. குற்றுமரமாய் இருந்தாலும்கூட அவைகளுக்கு எட்டாத உயரத்தில்தான் இருந்தன. எம்பி எம்பி முயன்றன.
"அட மூதிகளா, அதுக்குள்ள அவசரம் பொறுக்கலியாக்கும்? அதான் இப்பம் வெட்டிப் போட்ருவனே" என்று சந்தோஷமுடன் கூறிக்கொண்டே கொடுக்கரிவாளை எடுத்துச் சரசரவென்று தழைகளை வெட்டிப் போடலானான்.
அவை சந்தோஷமுடன் ஆய்ந்து ஆய்ந்து தின்னலாயின. அரையும் குறையுமாய்க் குலைப் பட்டினி கிடந்த ஆடுகள், பெரிய விருந்தே கிடைத்துவிட்ட சந்தோஷமுடன் தின்னலாயின பரபரப்புடன்.
ஒரு மணி நேரத்திற்குள் அந்தக் குட்டிமரம் மொட்டை ஆனது. இன்னும் தழைகள் வேணும் என்பதுபோல் ஆடுகள் சுற்றிச் சுற்றிப் பார்த்தன.
மாயகிருஷ்ணனின் பார்வை இன்னும் மேலே தாவியது. செங்குத்தான ஒரு பாறைக்கு மேலே, பசேலென்ற கிளைகளுடன் நின்றுகொண்டிருந்தது. இன்னும் ஒரு குட்டி மரம். பாறையை போன்று கீழே கிடுகிடு பள்ளம். பள்ளத்தில் திருகுகள்ளிகள் நிறைந்து காணப்பட்டன.
அவன் ஆடுகளுடன் மேலே ஏறலானான். அந்த மரத்தையும் மொட்டை அடித்து வயிற்றை நிரப்ப எண்ணினான்.
மரத்திற்கு அருகில் போனபோதுதான் அந்த மரத்தில் ஏறித் தழை வெட்டுவது எவ்வளவு ஆபத்தான செயல் என்பது தெரியவந்தது. சற்றே குனிந்து பார்த்தபோது அதல பாதாளமும் அது நிறைய திருகு கள்ளிகளுமாய்த் தென்பட்டன.
ஆடுகளிடம் சந்தோஷம் நிலை கொள்ளவில்லை. பச்சை இலைகளைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் தாவித் துள்ளி ஏறி மேயத் துடித்தன.
"பொறுங்க மூதிகளா. இப்பதான் வெட்டி போட்ருவேனே”என்று செல்லமாக திட்டிக்கொண்டே குட்டி மரத்தின் மீது லாகவமுடன் ஏறி நின்றுகொண்டு தழைகளை வெட்டிப் போடலானான். அவைகளும் சந்தோஷத் துள்ளல்களுடன் இலைகளை ஆய்த்து ஆய்த்து தின்னலாயின.
கிட்டத்தட்ட அந்தக் குட்டி மொட்டையாகிவிட்ட நிலை. என்றபோதும் ஆடுகளின் பரபரப்பு ஓய்ந்து விடவில்லை. இன்னமும் தழைகள் கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்புத்தான்!
சரிவை நோக்கிப் போகின்ற அந்த ஒற்றைக் கிளையில் மட்டும் தழைகள் கொஞ்சமாய் இருந்தன. அதை வெட்டிப் போடுகின்ற முனைப்புடன் மிகவும் கவனமுடன் அந்தக் கிளையில் ஏறலானான். பாம்பு ஊர்வதுபோல் ஊர்ந்த வாக்கில் போனான். இவனது உடலின் கனத்தைத் தாங்க இயலாத கிளை, நன்றாக வளையலானது. முறிந்து விடுவதுபோல் தெரிந்தது. எனினும் மாயகிருஷ்ணன் விடுவதாக இல்லை.
கொடுக்கரிவாளை ஓங்கி வெட்டப் போனபோது, 'மளுக்'கென்று ஓர் ஒசை!
கிளை முறிந்துவிட, பிடிப்பு நழுவிய நிலையில் மாயகிருஷ்ணன் கீழ் நோக்கி விழலானான். பரந்த கள்ளிப் பொத்தையின் மீது போய் விழுந்தான். கை நழுவிய கொடுக்கரிவாள் வயிற்றில் இறங்க, குருதி பீரிடலானது.
"அம்மா!" என்கிற அவனது அலறல் மொட்டச் சிமலை முழுக்க எதிரொலிக்கலானது.
மரண வேதனை என்பது இதுதானோ?
அதிகப்படியான குருதிப்போக்கினால் மயக்கத்தில் ஆழ்ந்து போனான் மாயகிருஷ்ணன்.
எதிர்பாராத இந்த நிகழ்வு வாயற்ற ஜீவன்களையும் ஸ்தம்பிக்கப் பண்ணிவிட்டது.
தங்களின் போஷகன் கீழே விழுந்துவிட்டதை உணர்ந்த ஆடுகள், பள்ளத்தை எட்டிப் பார்த்தபடி, 'ம்மே..ம்மே!' என்று அத்தனையும் கதறலாயின.
தங்கள் முன்னால் கிடக்கும் தழைகளைக் கூடப் பொருட்படுத்தாம்ல் தங்கள் மேய்ப்பவனையே ஏக்கமுடன் தேடின.
கிடுகிடு பள்ளத்திற்குப் போய் அவனை ஸ்பரிசிக்கத் துடித்தன.
எப்படிப் போவது?
அவனிடம் இறங்கிப் போக வேண்டுமென்கிற உந்துதலுடன் அங்குமிங்கும் பார்வையை ஓடவிட்டன. இறங்கிப் போகும் வழியைத் தேடின.
சிறிது நேரத்திணறலுக்குப் பின், எல்லா ஆடுகளும் ஒன்றுகூடி, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டவை போன்று கீழே இறங்கலாயின. சுற்றி வளைத்து இறங்கிவந்து, மாயகிருஷ்ணன் மல்லாக்க விழுந்து மயங்கிக் கிடக்கும் கள்ளிப் பொத்தைமீது ஏறி நின்றன.
அவனை உசுப்பி விடுகிற உந்துதலோடு அவனையே முகர்ந்து முகர்ந்து பார்த்து, ''ம்மே...ம்மே!' என்று அலறின.
அவனால் எப்படி எழமுடியும்?
அரிவாள் பட்ட இடத்தில் குருதிப்பீச்சில் உறைந்து, கசிவாக இரத்தம் ஒழுகலாயிற்று. ஓர் ஆடு அந்த இடத்தையே முகர்ந்து பார்த்தது. ஏனைய ஆடுகள் அவனது உடலையே சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து பார்த்தன.
இப்படியே பொழுது ஓடி, பொழுதுக் கால் மேல் திசையில் இறங்கலானது.. இருட்டு ஆரம்பித்துவிட்டது.
ஆனால் ஓர் ஆடாவது அங்கிருந்து அசையவே இல்லை. மயங்கிக் கிடக்கும் அவனைக் காவல் புரிவதுபோல் சுற்றியே நின்றிருந்தன.
"ஏம் பார்வதி, நான் இப்படி பத்து நாளா தன் நினைவு இல்லாம இந்த ஆஸ்பத்திரிலயேவா கெடந்தம்ன்னு சொல்லுத?" என்று கேட்டான் மாயகிருஷ்ணன்.
"பின்னே பொய்யா சொல்லுதேன்? எனக்கும் இருப்பு இங்கதான! இந்தாங்க! ஆர்லிக்ஸைக் குடிங்க" என்றபடி ஹார்லிக்ஸ் நிரம்பிய குவளையை நீட்ட, அவனும் வாங்கிப் பருகலானான்.
"இப்ப இந்த நாலஞ்சு நாளாகத்தான் வாய் வழியாய் என்னமும் தர்றது. இதுக்கு முன்னாடி ஊசிங்க, மாத்திரைங்க ட்யூப்பு வச்சு குளுகோஸுன்னு டாக்டரும், நர்சுகளுமில்லா பாத்துக்கிட்டாக. எந்துரை நீங்க பொழச்சதே மறுபொழைப்புல்லா!''
பார்வதி கூறுவதை நம்பமுடியாதவன் போன்று கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆடு மேய்க்கப் போனவன் காணாமல் தவித்ததையும் கள்ளியின்மீது மயங்கிக் கிடந்தவனை ஊர் ஜனங்கள் கூடி இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததையும் விபரமாகச் சொன்னாள்.
''ஆமாம் பார்வதி, நீயும் என்கூடவே ஆஸ்பத்திரியிலேயே இருந்தம்னு சொல்லுதியே, அப்படின்னா நம்ப ஆடுக...? அதுகளையெல்லாம் ஆரு பாத்துக்கிடுதாக?" என்று கேட்டான்.
பார்வதி பேசாமல் இருந்தாள். பராக்குப் பார்க்கிறதுபோல் அவன் சொன்னது கேட்கவில்லை என்கிறதுபோல் இருந்தாள்.
அவன் மறுபடியும் அதையே கேட்டான்.
"ஏன் பார்வதி, நம்ம ஆடுகளையெல்லாம் ஆரு மேய்க்காக?"
இதற்கும் அவளிடமிருந்து பதில் வராமல் போகவே மாயகிருஷ்ணனிடம் கோபம் பொங்கியது.
"கேக்கமில்ல, காதவிஞ்சு போச்சா? பதில் சொன்னா என்ன?" என்று கத்தினான்.
அவள் மெதுவே திரும்பி, அவனை நிதானமுடன் ஏறிட்டாள். பொறுமை இழந்து நிற்கும் அவனிடம் எப்படியாவது கூறித்தான் ஆக வேண்டும். தாங்கிக்கொள்கிற மனோபலம் இப்போது அவனிடம் இருக்காது. எனினும் கூறாமல் முடியாது. விடமாட்டான்.
மிகவும் தயக்கமாக அவனை ஏறிட்டவள், "உங்க ஆஸ்பத்ரி செலவையெல்லாம் ஈடுகட்ட...'' என்றவள், மேலே கூறாது நிறுத்தவே, எரிச்சலான அவன்,
"ஈடு..கட்ட...? என்ன செய்தே?" என்று கேட்டான்.
"அதா... ஆடுகள் பூராத்தியும் வித்துப்போட்டேன்.''
பின்குறிப்பு:-
கல்கி 09.03.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்