
-திருமை விஜி
என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலாயிற்று; மாம்பலம் ஏரியாவில் வீடு பார்த்துக்கொண்டால் டெலிபோன் கனெக்ஷன் உடனே கிடைக்கிறது என்று கேள்விப்பட்டோம்; அதனால், அந்த ஏரியாவிலேயே அலைந்து திரிந்து ஒரு ஃப்ளாட்டைப் பார்த்து குடியேறினோம். பால்கார்டு, கேஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு என்று ஒவ்வொரு முக்கியமான வேலையையும் முடித்து ஒருவழியாக குடும்பத்தோடு செட்டில் ஆனோம்.
அடுத்த வாரமே, டெலிபோன் கனெக்ஷனுக்கு அப்ளை செய்து வரப் போனேன்.
"ஏம்பா, மாம்பலத்தில் இந்த ஏரியாவுக்கு, ரெஜிஸ்டர் பண்ணா அடுத்த மாசமே டெலிபோன் கனெக்ஷன் குடுத்துடறீங்களாமே?"
"மொதல்ல நீங்க எந்தத் தெருவுல இருக்கீங்க... அதைச் சொல்லுங்க..."
நான் குடியிருக்கும் விலாசத்தைச் சொல்லி முடிப்பதற்குள்,
"நெனைச்சேன் மேடம்! உங்க தெருவும், அதுக்கு அடுத்த தெருவும் மவுண்ட்ரோடு எக்சேஞ்சுல வருது... இப்ப புக் பண்ணீங்கன்னா, அடுத்த வருசம்தான் கனீக்ஸன் கெடைக்கும்.. அவ்ளோ வைட்டிங்ல இருக்குது... உங்களுக்கு அர்ஜண்ட்டுன்னா எடத்த மாத்தி அடையாறு, மந்தவெளீன்னு பாத்து குடிபோயிருங்க!" - என்றான்!
எவ்வளவு முன்யோசனையுடன் நான் இங்கு குடியேறினேன் என்பதை எண்ணியவுடன் சிரிப்புத்தான் வந்தது! இருந்தாலும் என்ன செய்வது? வேறுவழியின்றி, பணத்தைக் கட்டி பெயரைப் பதிவுசெய்துவிட்டு வந்தேன்.
நான் திரும்ப வீட்டுக்குள் நுழையும்போதுதான் அந்த நல்ல சமாசாரம் நடந்தது.
பக்கத்துப் போர்ஷனில் குடியிருக்கும் மாமி எங்களை அன்புடன் அழைத்து, "நீங்க,எப்போ வேணாலும் இங்கே வந்து எங்க டெலிபோனை யூஸ் பண்ணிக்கலாம்; உங்களுக்கு வெளிலேர்ந்து போன்கால் வந்தாலும் நாங்க உடனே கூப்பிட்டுச் சொல்றோம்!" என்று சொன்னவுடன் நாங்கள் சந்தோஷத்தால் பூரித்து போனோம்.
"இத பாருங்கோ! அவா சொல்றாங்கதுக்காக, நாம பக்கி மாதிரி பல்லை இளித்துகொண்டு அடிக்கடி அங்கே போய் அந்த டெலிபோன்கிட்ட நிக்கப்படாது. அதேமாதிரி நமக்கும் வெளிலேர்ந்து அடிக்கடி போன்கால் வர மாதிரி நாம வெச்சுக்கக்கூடாது" என்று நாங்களும் எங்களுக்குள் கூடிப் பேசி தீர்மானம் செய்துகொண்டோம்.
முதலில் கொஞ்ச காலம் எங்களுக்கு எல்லா உறவும் ரொம்ப சுமுகமாகவே இருந்துவந்தது. அப்படியே இருந்திருந்தால் இந்தக் கதையும் வந்திருக்காது... எங்கள் கஷ்டங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் படிக்க உங்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைத்திருக்காது.
ஒருநாள் காலை ஆறு மணிவாக்கில் எனக்கு ஒரு போன்கால் வந்தது. நானும் உடனே அடுத்த போர்ஷனில் போய்ப் பேசிவிட்டு ரிஸீவரை வைத்தேன். நான் திரும்புவதற்குள் அந்த மாமி என்னிடம், "பொழுது விடியறச்சே போன் மணி அடிச்சாலே என்ன சேதியோ என்னவோன்னு பயந்துண்டே போனை எடுக்க வேண்டியிருக்கு, விமலா... ஆமா...யாரு அவ்ளோ அர்ஜெண்டா போன் பண்ணா?" - என்றாள்.
"ரொம்ப வேண்டியவா ஒத்தருக்கு உடம்புக்கு முடியாம நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணியிருக்கு... நான் உடனே போய்ப் பார்க்கணும்... அந்த விஷயத்தை சொல்லத்தான் போன் வந்தது..." என்று நான் சொல்வதை காதில் வாங்காமலே அந்த மாமி குறுக்கே புகுந்து, "அவ்வளவுதானே, நான் யாருக்கு என்னமோன்னு பயந்துட்டேன்... அதனால நீ இனிமே, யாரையும் காலங்கார்த்தாலே போன் கீனெல்லாம் பண்ணச் சொல்லாதே... என்ன?!" என்று கூறி நிறுத்தினாள்.
நான் பொங்கி வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கூச்சத்துடன், "சரி மாமி" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
எப்பேர்ப்பட்ட கஷ்டமும், அடுத்தவர்களுக்கு வந்தால் அதில் எந்த எமர்ஜென்ஸியும் இருக்கக்கூடாது போலும்!... இதுவே தன்னுடைய வீட்டுக்காரர் ஆபீஸ் வேலையாக ஒண்ணரை நாள் ஓங்கோல்வரை போனால்கூட, அவர் அங்கேயிருந்து போன் பண்ணி இந்த மாமியிடம், "பல் தேய்ச்சு காப்பி சாப்பிட்டாச்சா" என்று கேட்பதும், திரிசூலம் சினிமா சிவாஜி ஜோடி மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து டெலிபோனைக் கட்டிக்கொண்டு மணிக் கணக்கில் அழறதும் நமக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் என்ன செய்வது...? நமக்கென்று போன் கனெக்ஷன் வரும்வரையில் அங்கும் இங்கும் ஓடி இடிபட வேண்டியதுதான்!
இன்னொரு சமயம், மத்தியானம் இரண்டு மணி இருக்கும். போன் வந்திருப்பதாக மாமிதான் கூப்பிட்டாள். நானும் உடனே போய் சுருக்கமாகவே பேசிவிட்டு ரிஸீவரை வைத்தேன். ஆனால் மாமியோ படக்கென்று பிடித்துக்கொண்டாள்..."இதபாரு விமலா வீட்டுக்காரியமெல்லாம் முடிஞ்சதும், நான் மத்யான வேளைலதான் வழக்கமா கொஞ்சம் கண் அசருவேன். அந்தச்சமயத்துல ஒரு சின்ன சப்தம் வந்தாக்கூட தூக்கம் டக்குனு கலைஞ்சுடும்.
மேலேர்ந்து ஃபேன் சுத்தினாகூட கிர்ரக், கிர்ரக்னு சத்தம் வரதேன்னு, நான் ஃபேன் கூடப் போட்டுக்கறதில்லை; இப்போ திடீர்னு போன் மணி அலறித்தா? நடுமண்டையில இடி விழுந்தா மாதிரி பொசுக்குனு முழிப்பு வந்துடுத்து... ஏற்கெனவே கொஞ்சம் 'பிரஷர்' வேற இருக்கா... தலையை வேற சுத்த ஆரம்பிச்சுடுத்து... இனிமே பாரு... நான் நார்மலா நடமாட நாழிப்போது ஆயிடும்" - என்று முடித்தாள்.
எனக்கு இதைக் கேட்டதும் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. எனக்கே எப்போதாவது போன் கால் வருகிறது. அதிலும் இப்படி ஒரு கஷ்டமா என்று எண்ணிக்கொண்டேன். "ரொம்ப ஸாரி மாமி...! நான் வேணுமானால் உங்க தலையைக் கொஞ்சம் பிடிச்சு விடட்டுமா? என்று (மனசுக்குள் பல்லைக் கடித்தபடி) கேட்டேன். ஆனால், மாமியோ அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல்,
"அதனால் நான் என்ன சொல்றேன்னா, இனிமே மத்யான வேளைல் உனக்கு போன் வராம பாத்துக்கோ... வேணும்னா அவாளை சாயங்கால வேளைல பண்ணச் சொல்லு... ஏன்னா, ராத்திரி வேளைல கொஞ்சம் டீ.வி., கீ.வி.பாப்போம்... அப்போ கொஞ்சம் ஒனக்கும் பேச இடைஞ்சலா இருக்கும்... இல்லியா?!" என்று நறுக்காகச் சொல்லி நிறுத்திவிட்டாள்.
நான் அந்த மஹாவிஷ்ணு, நரஸிம்மாவதாரத்தின்போது பட்ட கஷ்டத்தை நினைத்து, பார்த்தேன்! இரண்யனைக் கொல்ல காலையும் இல்லாமல், நடுப்பகலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல் அந்தி நேரத்தைத் தேர்ந்தெடுத்தாரல்லவா? அவர் கடவுளானதால் அந்தக் கஷ்டத்தை எளிதாய் மேனேஜ் செய்துவிட்டார்! என் நிலைமை?
இப்படியாக ஒரு வருஷத்தைத் தள்ளிவிட்டோம்! நாங்கள் வந்த புதிதில் அவர்கள் செய்த உபசாரத்துக்கும், நிஜத்துக்கும் சம்மதமே இல்லாமல் போனது! என் கணவரும் நானும் கூடி ஒரு தீர்மானம் செய்துகொண்டோம்... "நமக்கு மட்டும் டெலிபோன் கனெக்ஷன் வந்தால், இவ்வளவு 'கஞ்சூஸாக' இருக்கவே கூடாது... முடிந்தவரை அடுத்தவர்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்று.
கடைசியில் அந்த நல்ல நாளும் வந்துவிட்டது... ஆமாம்! எங்களுக்கு இன்று டெலிபோன் கனெக்ஷன் வந்துவிட்டது. ஒரே குதூகலம்... கொண்டாட்டம்தான்!
பக்கத்துப் போர்ஷன் மாமியும் வந்து கை குலுக்கி வாழ்த்திவிட்டுத் திரும்பும்போது, என்னிடம், "என்ன விமலா, இப்பதான் டெலிபோன் வந்துடுத்தேன்னு எங்களை வந்து, எட்டிப் பாக்காம இருந்து விடாதே... அடிக்கடி வந்து போயிண்டு இரு... என்ன?" என்று சொல்லிவிட்டுப் போனது எனக்கு இன்னும் பற்றிக்கொண்டு வந்தது... என்னமோ தினம் தினம் இவர்கள் வீட்டு டெலிபோனிடமே பழி கிடந்தா மாதிரி சொல்லிவிட்டுப் போகிறா இந்த மாமி...என்ன வாய் ஜாலக்கு..!
என் கணவருக்கும் ஒரே சந்தோஷம் ''விமலா.. இனிமே நாமும் திரிசூலம் சினிமா சிவாஜி மாதிரி போன்லயே மணிக்கணக்காக பேசலாம்..." என்றார்.
இதற்குள்... டெலிபோன் மணி அடித்தது. அது எங்கள் காதில் தேனாகப் பாய்ந்தது. குழந்தைபோல் துள்ளி ஓடிப் போய் ரிஸீவரை எடுத்த என் கணவர், குன்று முட்டின குருவி போலத் திரும்ப வந்து, சட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, "அதுக்குள்ளே எப்படி இந்த போன் நம்பர் இவ்வளவு தூரம் போச்சுன்ன தெரியலையே" என்று இரைந்தவாறே தெருவில் இறங்கினார்.
"யாரு போன்ல?" என்றேன்.
"யாருன்னே தெரியலை... தெரு முக்குல இருக்கற மெக்கானிக் மணியைக் கொஞ்சம் கூப்பிடணுமாம்!"
பின்குறிப்பு:-
கல்கி 09.03.1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்