
-கார்த்திகா ராஜ்குமார்
அண்ணா காலை ரயிலில் வருகிற ஒவ்வொரு நாளிலும் இப்படித்தான் ஒரு பரபரப்பும், தவிப்பும் அம்மாவைத் தொற்றிக்கொள்கிறது. கவலைப்படவென்றே இருக்கும் 'அம்மா'க்கள். அண்ணாவிற்கு ஆப்பம் பிடிக்கும் என்பதற்காக ஆப்பத்திலிருந்து அவனுக்குப் பிடித்த அனைத்தும் தயார் செய்தாயிற்று. அப்பாவை அரை மணி நேரத்திற்கு முன்பாக ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டாள். இதற்கும் அண்ணா ஒரு நிறுவனத்தில் எஞ்ஜினீயராகப் போன வருடம்தான் சேர்ந்திருந்தான். நேரமாக ஆக அவள் முகத்தில் தெரிகிற பதற்றம் அவள் மேல் ஒரு பரிதாபத்தையே ஏற்படுத்தியது.
'டிரெயின் லேட் ம்மா'' என்றபடி அப்பாவுடன் வந்தான் அண்ணா. "என்ன... அதுக்குள்ள நீ பயந்துட்டயாக்கும். உன்னைத் திருத்தவே முடியாது போ" என்று சிரித்தபடி உள்ளே போனார் அப்பா. அண்ணாவையே பார்த்துக்கொண்டு நின்றாள் அம்மா.
"இளைச்சுட்ட கண்ணா நீ" என்றாள் குரல் கம்ம.
"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்தப்பவும் இதையேதானம்மா நீ சொன்னே. நான் நல்லாருக்கேன். இவளைப் பாரேன். குண்டாயிட்டாளே. ஏய் பிந்து, காப்பி கொண்டா" என்றபடி சோபாவில் சரிந்துகொண்டான். எங்கள் காலேஜ் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தவன், அம்மா எதுவுமே பேசாமல் நின்றிருந்ததை மாற்ற நினைத்தவனைப்போல,
"என்னைப் பத்திக் கவலையை வுடும்மா. வேற என்ன விசேஷம்மா" என்றான்.