

-ரிஷபன்
சாருலதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. முன்னைவிட இன்னமும்"வெளுப்பாய், அழகாய்த் தெரிந்தாள்.
ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தவளை முதலில் 'யாரோ' என்று நினைத்தான்.
"யாருங்க அது..." என்றாள். அவனுடன் ஒட்டிக்கொண்டு படியிறங்கிய உமாவும்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
''ஹாய்...''
இயல்பான புன்னகை. அவனுக்குத்தான் வினாடி நேர படபடப்பு. சமாளித்துக்கொண்டு சிரித்தான்.
உமாவுக்கும் புரிந்துவிட்டது ஓ...இவளா... அந்த நிமிடம் நிச்சயமாய் அவள் மனதில் நிறைய கேள்விகள் எழுந்திருக்கும்.
சாருலதாவிடம் சொல்லிக்கொண்டு போவதா, வேண்டாமா என்ற குழப்பமே இல்லை அவளைப் போலவே தானும் சுதந்திர புருஷன்.
''வா...உமா...." என்றான்.
வெளியே போனதும் உமா விசாரித்தாள்.
"இவதானே உங்க ஃபர்ஸ்ட் வொய்ப்... ''
தலையசைத்தான். இவளுடன் திருமணம் நிச்சயமான மறுதினமே பர்சனலாய் சந்தித்துப் பேசி விட்டான்.
'எனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. நான் இப்போது விவாகரத்தானவன். வேறு உபத்திரவங்கள் இல்லை. இந்த விவரங்கள் உங்கள் குடும்பத்துக்கு முன்பே தெரியும். இருந்தாலும் நீ நேரடியாய் என்னை எதுவும் கேட்க விரும்பலாம். அதனால்தான் இந்த சந்திப்பு...'
உமா எதுவும் கேட்கவில்லை. அதாவது முதல் திருமணம் பற்றி. நிறைய முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவனுடைய மற்ற செயல்கள் பற்றிக் கேட்டாள். விடைபெறும்போது மட்டும் சாருலதா பற்றி ஒரு கேள்வி.
'அவங்க ஆர்ட்டிஸ்ட்டாமே... பெயிண்டிங்ல ஆர்வம்னு.... கேள்விப்பட்டேன்.'
'ஆமா.. எக்சிபிஷன்லாம் நடத்தியிருக்கா...'
"ஓ...நம்ம வீட்டுல ஏதாவது அவங்க வரைஞ்சது இருக்கா?"
யோசித்துத் தலையாட்டினான் மறுப்பாக.
''ஸெபரேஷன்போது எடுத்துக்கிட்டுப் போயிட்டா.'
''ஸீ... யூ...''
தான் நினைத்ததைவிட உமா முற்போக்கானவள் என்று புரிந்தது. இந்தத் திருமணமாவது தான் தேடிய ஆதர்ச வாழ்க்கை தரக்கூடும் என்று எதிர்பார்த்தது அப்போதுதான்.
எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சாருலதா இருந்தாள். இந்தமுறை வேறு வழியில்லை, நின்று ஓரிரு வார்த்தைகளாவது பேசாமல் போனால் 'பயந்து ஓடுகிறான்' என்ற பெயர் வரக் கூடும்.
‘எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை' என்கிற தோரணையில் கால் மீது கால் வைத்து நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்தான்.
உமா, சாருலதாவின் அருகிலேயே அமர்ந்து விட்டாள்.
அப்பாவின் முகத்தில்கூட புன்னகைக் கீற்று. புது மருமகளும், பழைய மருமகளும் நல்ல ஒப்புமை.
''இன்னிக்கு நாங்க வெளியே சாப்பாடு... வந்து.... உங்களுக்கு ஏதாவது...." என்றாள் உமா லேசாய் திக்கிய குரலில்.
"ஆச்சு...'' என்றாள் சாரு முறுவலுடன்.
அப்பா பேசினார்.
''நானும் இன்னிக்கு என்னோட விரதத்தை மாத்திக்கிட்டேன். ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்... சாப்பிட்டேன்... அவ டோஸ்ட் பண்ணின்டா..."
''ஃப்ரிட்ஜ்ல பால் இருந்துதே...''
''ம்... ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு தம்ளர்... சூடான பால்...." - இது சாருலதா.
ஏதோ வெளியுறவு மந்திரியுடனான பேச்சு வார்த்தை போல தடம் பிறழாத வார்த்தைகள்.
"இப்ப எதுவும் எக்சிபிஷன் வைக்கப் போறீங்களா..." என்றாள் உமா.
"என்னை 'நீ'ன்னே கூப்பிடலாம்... உமா..."
சாரு இன்னமும் மாறவில்லை.
என்ன கேட்டே... எக்சிபிஷனா...ப்ச்... வைக்கணும். ஆனா... எனக்கே இன்னும் ஒரு திருப்தி வரலே... என்னோட கலெக்ஷன்ல..."
"இங்கே நீங்க... ஸ்ஸ்... நீ வரைஞ்சது ஏதாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்... எதுவும் இல்லே..." என்றாள் உமா.
"அப்பா...ஹால்ல ஒண்ணு இருந்ததே.... அதோ... அந்தக் கார்னர்ல...."
சாருலதா.... ‘அப்பா' என்றுதான் முன்பும் அழைப்பாள். பிரிவின்போதும் பிரியாத பந்தம் என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
சீண்டியிருந்தான் முன்பே.
"ஆஃப்டர் ஆல்... நீ என்னோடு வாழ வந்தவ... இப்ப அது முறிஞ்சு போச்சு.... அது என்ன... என்னோட அப்பா... உனக்கும் அப்பா... ''
'நல்ல சிநேகிதம் எப்பவும் பட்டுப் போகாது...' என்றாள் பளிச்சென்று.
உறவுமுறைகளைவிட நட்பு போலப் பழகுவதில்தான் அவளுக்கு அதிக ஈடுபாடு. அதில்தான் தனி மனித சுதந்திரமும் இருக்கும். விட்டுக் கொடுத்தலும் இயல்பாய் வரும் என்பாள்.
"என் ரூம்ல இப்ப இருக்கு" என்றார் அப்பா, விட்டுப் போன பேச்சின் தொடர்ச்சியாக
''நான் பார்க்கணும்..." என்றாள் உமா.
அவளுக்கு 'மாமா' என்றும் வரவில்லை. 'அப்பா' என்றும் கூப்பிட மனசில்லை. மையமாய் பேச்சுக்கள்.
"லேட்டாயிருச்சே... இங்கேயே தங்கிடலாம்" என்றாள் உமா.
இவனைச் சுத்தமாய் உதாசீனப்படுத்திய சம்பாஷணை... அல்லது இவனால்தான் இயல்பாக ஒட்ட முடியவில்லையா... மனசுக்குள் நமைச்சல்.
"இல்லை... போகணும்... ரூம் போட்டிருக்கேன் போயிரலாம்... ஆட்டோதான் இருக்கே..."
அப்பா குறுக்கிடவில்லை. வற்புறுத்தி இருந்தால் தங்கி விடுவாளோ என்னவோ, அப்பாவும் அவளும் நன்றாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
'எனக்கு மட்டும் ஏன் சாத்தியமின்றிப் போனது...' என்று நினைத்தான்.
உமா அவன் தோளில் தட்டினாள்.
"கொஞ்சம் உள்ளே வாங்க..."
சமையலறைக்குள் போனதும் கேட்டாள்.
"ஆமா... நீங்க ஏன் பிரிஞ்சீங்க..."
இதுவரை கேட்டிராத கேள்வி. உமாவை வெறித்தான். 'இருவரும் மனசொப்பி விவாகரத்து கேட்பதால்...' சுலபமாய் எந்தவித நிபந்தனைகளுமின்றிப் பிரிதல்.
வெளியே வந்துவிட்டான். சாருலதா தான் கையோடு கொண்டு வந்திருந்த பிரீப்கேஸிலிருந்து எதையோ வெளியே எடுத்தாள்.
''உமா... இங்கே வாயேன்...''
சுருட்டிய கெட்டியான காகிதம், பட்டு நூல் முடிச்சு.
"ஸ்மால் ப்ரசெண்ட் ஃபார் யூ...' என்றாள் சாருலதா.
உமா ஆர்வமாய்ப் பிரித்தாள். பார்டர் எதுவுமற்று வரையப்பட்ட படம்.
ஒரு பெண்ணின் படம் என்று யூகிக்க முடிந்தது. முகம் ஒழுங்கற்று... கண்கள், மூக்கு உதடு எல்லாம் விட்டேத்தியாய்... ஆனால் படத்தில் பெண்ணின் மார்பகங்கள் மட்டும் துல்லியமாய்... மிகப் பெரிதாய்.... அவ்வளவுதான், முகமும் மார்பும்தான்.
''புரியலை...'' என்றாள் உமா உடனே.
"யோசி... புரியும்..."
அப்பா எட்டிப் பார்த்து லேசாய் அதிர்ந்த மாதிரித் தெரிந்தார்.
''ஏம்மா... இவ்வளவு கோபமா... உனக்குள்..." என்றார்.
அவருக்குப் புரிந்துவிட்டது போலும். சாருலதா 'குட்நைட்' சொல்லி வெளியே போனாள். அப்பாவும்.
அவனும் ஓவியத்தை வாங்கிப் பார்த்தான்.
'ஒரு பொண்ணுகிட்ட வேற என்ன எதிர் பார்க்கப்போறேன்...' எப்போதோ சாருலதாவிடம் சொன்ன வாசகம் நினைவில் வந்து பளீரென்று அறைந்தது.
பின்குறிப்பு:-
கல்கி 08.09.96 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்