

-ந. ஜெயபாலன்
இரண்டு நாட்கள் கழித்து ஆர்.சி. போட இருந்த அந்த இடத்தில் பலகைகளை எடுத்து அடுக்கி, ஆணிவைத்து அறைந்துகொண்டிருந்தான் பதினேழு வயது பெருமாள்.
ஆணியின் கொண்டையில் சுத்தியலை ஓங்கி அடித்த அதே நேரம், நச்சென்று ஒரு குட்டு அவன் தலையில் விழுந்தது.
"ஏண்டா நாயி. இந்த சந்தில போய் இத்தனூண்டு பலகையை வைச்சா எப்படிடா? சோறுதானே திங்கிறே? பன்னி! அறிவுகெட்ட முண்டம்! முக்காலுக்கு நாலு சைஸ்ல ஒரு துண்டுப் பலகையை எடுத்து இங்கே ஜாயிண்டு குடுத்திட்டு, அந்தப் பக்கம் ஆறடிப் பலகையை எடுத்து வைடா மூதேவி. ஏழு வருஷமா வேலை பழகற..." என்று இரைந்தபடி அந்த முக்காலுக்கு நாலு சைஸ் பலகையை எடுத்து அவனைச் சாத்துவதுபோல் நீட்டினான் கான்ட்ராக்டர் முருகன்.
கான்கிரீட் போட்ட மறுநாள், பெருமாளும் கான்ட்ராக்டர் முருகனும் பக்கவாட்டுப் பலகையை மட்டும் பிரித்துக்கொண்டிருந்தனர்.
பெருமாளுக்கு மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு, எப்படியாவது அதைக் கேட்டுவிட வேண்டும் என்று. இன்று கேட்போமா, நாளை கேட்போமா என்று குழம்பிய பெருமாள், பயந்து பயந்து வாயைத் திறந்தான்.
"அண்ணே, நீங்க இந்த வருஷம் ஐயப்பனுக்கு மாலை போடணும்னீங்களே.. போடலியா?"
சுர்ரென்று பாய்ந்தான் முருகன்.
"ஏ விளக்கெண்ணெய்! உன் வேலையைப் பாரு விளக்கெண்ணெய்! நான் போறேன்; சும்மாகூட இருக்கேன்; உனக்கென்னடா அதப்பத்தி...? முண்டம்!"