
சிறுகதை- ம.வே.சிவகுமார்
விளையாட்டுபோல் கம்பெனியை இழுத்துமூடி ஐந்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. ஃபோர்மேன் சீதாராமய்யர் என்ற அடையாளம் மறந்து, இப்போதெல்லாம் மிருதங்க வாத்தியார் என்றால்தான் அவரைத் தெரிகிறது. நெடுஞ்சாலையில் வாகனங்களின்கூடவே ஓடும் பேக்டரி காம்பவுண்ட் சுவரின் எழுத்துக்களில் தார் ஒழுகியது. அறிவிப்பின்றி மூடியகதவுகளைப் பார்த்து கொஞ்சம் நாள் எல்லோரும் கும்பலாய் செயலற்று நின்றார்கள். பந்தலில் சில காலம் தொடர் உண்ணாவிரதம் நடந்தது. கோட்டைக்கு முன்பாக ஊர்வலம் தடுக்கப்பட்டு பிரதிநிதிகள் இருவரிடம் முதல்வர் சிரித்துக்கொண்டே மனுவைப் பெற்றுக்கொண்டார். வெவ்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டேயிருந்தன. கம்பத்தில் சிவப்புக்கொடி மக்கிப்போனது. பொதுவில் அன்றாடம் கஷ்டம் என்றாலும் வருடங்கள் என்னவோ ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.
கொஞ்சகாலம் சீதாராமன் தினமும் காலையில் பச்சை நிற ரெக்ஸின் பையை எடுத்துக்கொள்வார். அவ்வப்போது வைதீக காரியங்களுக்கு அவருக்கு அழைப்பு வந்தது. மந்திரமெல்லாம் ஒன்றும் தெரியாது. ஆள்விட்டு கனபாடிகள் சொல்லியனுப்புவார். கூட்டமாய் அமர்ந்து 'ததாஸ்து' சொல்லவேண்டும். ஹோமப்புகையில் கண் எரியும். தட்சிணையும் வேட்டியும் கிடைக்கும். அகாலமாய் இரண்டுவேளைகளுக்கிடையே சாப்பாடு போடுவார்கள். அன்றைய ஒருநாள் கழியும். ஆனால் இதெல்லாம் எப்போதோ ஒரு சமயம்தான். கனபாடிகளின் வழக்கமான ஜமாவில் ஆள் குறைகிறபோது அவருக்கு அழைப்பு வரும். நல்லவேளையாய் குழந்தைகள் இல்லை. வீட்டில் சீதாராமனுக்கு மனைவி மட்டும்தான். அவள் சொல்லித்தான் தெரிந்த மிருதங்க வித்தையை சாயங்காலங்களில் நாலு வீடுகளில் காசாக்க ஆரம்பித்தது. இத்தனை வயதுக்குமேல் பக்கவாத்தியம் வாசிக்க முயற்சிப்பதில் அர்த்தம் இல்லை. தவிரவும் ஒரு கனபாடிகள்போல வித்வான்கள் யாரையும் அவருக்குத் தெரியாது. இது கம்ப்யூட்டர் காலம். பையன்களுக்கு லலித கலைகளெல்லாம் படிக்க வைக்கிற அளவுக்கு நேரம் இருப்பதில்லை. ஆசையில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தாலும் தண்ணீரை குதிரையே குடித்தால்தான் உண்டு. வெறுமனே டைப்ரைட்டர் அடிக்கிறமாதிரி கற்றுக்கொள்கிறார்களேயொழிய ஒரு ஆர்வம் கிடையாது. கச்சேரியென்றால் என்னவென்றே தெரியாது. ஒரு டீவி கச்சேரியில் உட்கார்ந்திருக்கிற மிருதங்கக்காரர் என்ன செய்கிறார் என்றுகூட நின்று பார்க்காத பையன்களே அவருக்கு சிஷ்யர்களாய் வாய்த்தனர்.
வாரத்துக்கு ரெண்டு கிளாஸ். சீதாராமன் வெறும் காலுடன் பெருங்களத்தூரிலிருந்து புறப்பட்டுவிடுவார். இத்தனை வருட அனுபவங்களில் அவருக்குத் தன்னைப்பற்றிய விசேஷ கவனம் குறைந்துவிட்டது. துவைத்த வேட்டி, பளிச்சென்று ஒரு சட்டை, நெற்றியில் சிறிய விபூதிக்கீற்று. ஒரு வீட்டுக்கு நூறு ரூபாய். நான்கு வீட்டிற்கும் மொத்தம் நாநூறு ரூபாய். கட்டுப்படியாகாத பஸ் கட்டணம். பொதுவில் எங்கும் நடைதான். சைக்கிள் ஒன்று இருந்தது. அதை இப்போது மார்வாடியே ஓட்டிக்கொண்டிருக்கிறான். பழகிய பாதையில் மேய்ச்சல் மாடுபோல் சேலையூர் வந்தது.
"வாங்கோ."
வரவேற்பறை பாயில் அமரச்செய்து, வீட்டு மாமி வெளியே போகிறாள். "டேய் தீபக்... சார் வந்திருக்கார்''
"போல்ட்!"
வெளியே கிரிக்கெட் நடுவே பையன் குரல் தனியே ஒலிக்கிறது. அடுத்த அழைப்பில் பையன் வருகிறான். மொணமொணவென்று வாக்குவாதம் நடக்கிற சப்தம். பேட்டில்பட்ட பந்துபோல் வீட்டு மாமி சலிப்புடன் உள்ளே வருகிறாள்.
"ஸாரி சார். இன்னிக்கு கிளாஸ் வேணாம். தீபக் வரமாட்டேங்கறான். அவனுக்கு இன்னிக்கு மூடு இல்லையாம்."
சீதாராமனுக்கு ஒருகணம் வேகமாய் தெருவுக்குப்போய் அந்தப் பையன் முதுகில் நான்குசாத்து சாத்தி தரதரவென்று உள்ளே அழைத்து வரத் தோன்றியது.
"பாவம், நீங்க அவ்வளவு தூரம் வந்திருக்கேள்."
"அதனாலென்ன?"
மிருதங்கம் முடிச்சு அவிழாமல் மூலைக்குத் திரும்பியது.
"ஒரு வாய் காப்பி சாப்பிட்டுப் போங்கோ.''
"இல்லே... வேணாம்."
அவசரமாய் மறுத்துவிட்டு சீதாராமன் வெளியே வந்தார். கதவோரம் சங்கடமாய் வீட்டு மாமி நின்றாள். சட்டென்று ஒரு மணி நேரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆறு மணிக்கு சானடோரியத்தில் அடுத்த கிளாஸ். அங்கே போனவாரமே ஊருக்குப் போயிருந்தார்கள். வந்து விட்டார்களா என்பது தெரியவில்லை. ஏகலைவன் மாதிரி அவருடைய சிஷ்யர்கள் அவரைப் பார்க்காமலிருக்கக் கற்றுக்கொண்டு விட்டார்கள். ஒவ்வொரு சமயம் சம்பளம் வாங்கும்போதும் சீதாராமனுக்குக் கூசியது. வெறும்காலில் தார் ரோட்டில் சானடோரியம் புறப்பட்டார். பையன்களின் கிரிக்கெட் சப்தம் ரொம்ப தூரத்துக்கு கேட்டுக்கொண்டிருந்தது.
"போதும். நீங்க வாத்தியம் சொல்லிவைச்சது. நான் சொல்றதைக் கேளுங்கோ"
குடும்பத்தின் பொருளாதாரத் தேக்கநிலையில் அதிருப்தி தெரிவித்து சீதாராமன் மனைவி நடப்பு ஆண்டுக்கான புதிய திட்டத்தை வெளியிட்டாள். தெரிந்த இடத்தில் ஒரு விலாசம் கிடைத்தது. வருடம்பூராவும் அங்கே வேலைக்கு ஆட்கள் எடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பங்களாக்களில் காவல் நிற்கிற செச்யூரிட்டி வேலை. மாதம் முழுசாய் ஆயிரம் ரூபாய் வரும். ஒரு காக்கிச் சீருடை தயார் செய்துகொள்ள வேண்டும். ஷிப்ட் முறையில் ஒரு நாளைக்கு எட்டே மணி நேர வேலை. பங்களாக்களில் வேலையென்பதால் அநேகம் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அப்புறம் நம் சமர்த்து. எல்லாம் வாய்வார்த்தையிலும், நடந்துகொள்கிறதிலும் இருக்கிறது. உலக வாழ்க்கையின் சாராம்சத்தை உட்கார்ந்த இடத்திலேயே உணர்ந்தவள்போல சீதாராமனின் மனைவி அடுக்கலானாள். சீருடை வாங்குவதற்கான முன்னூறு ரூபாயை யாரிடம் கேட்பது என்று சீதாராமன் தீவிரமாய் யோசிக்கலானார்.
சேலையூர் வீட்டு மாமி, கேட்டதுமே பீரோ திறந்து ரூபாயைக் கொடுத்தாள். தீபக் சோபாவில் கையில் காமிக் வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். பெருங்களத்தூர் டெய்லர் நாலுமுழ வேட்டியில் நிற்கிற சீதாராமனுக்கு பேண்ட், சட்டை தைக்க அளவெடுத்தான். வீட்டின் ரசம் பெயர்ந்த கண்ணாடிமுன் புதிய காக்கி உடையில் சீதாராமன் அழகுபார்த்தார். விரல் பதிந்த பழைய ஹவாய் சப்பலில் கால் நுழைந்தது. கவாத்து நடையில் செக்யூரிட்டி சீதாராமன் புறப்பட்டபோது பின்னணியில் ராணுவ இசை பலமாய் ஒலித்தது.
தாம்பரம் பஸ் ஸ்டாண்ட். சீதாராமன் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துகொண்டார். வாயில் தெம்பாய் ஒரு பன்னீர் புகையிலை அதக்கிக்கொண்டால் சொர்க்கம் தெரியும். முதல் சம்பளம் வரட்டும். இதுபோல் ஒரு பஸ்ஸில் ஏறி எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன? கிராப்தலையின் சுண்டுவிரல் நீள சிறிய குடுமியை விரல்களில் சுற்றிக்கொண்டே சீதாராமன் யோசிக்கிறார். அவரையறியாமல் வாயில் புறப்பட்ட கர்நாடக இசைக்கு பஸ்ஸில் ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள்.
நந்தனம் சிக்னலில் சீதாராமன் இறங்கிக்கொண்டார். அடையார் போட்கிளப் பங்களாவில் வாட்ச்மேன் வேலை. பளீரென்ற பளிங்குப் படிக்கட்டில் கால் வைக்கவே கூச்சமாய் இருந்தது. கண்மறைவில் அல்சேஷன் கத்தியது. ரொம்ப நேரத்துக்கு யாரும் வெளியே வரவில்லை. அப்புறம் எதேச்சையாய் செக்ரட்டரி வெளியே வந்தார். முதலாளியின் அனைத்து சொந்தவேலைகளையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். சீதாராமன் நீட்டிய கடிதத்தைப் படித்ததும் செக்ரட்டரி அவரை ஏற இறங்கப் பார்த்தார்.
"இதுக்கு முன்னாடி எங்கேயாவது வேலை பண்ணியிருக்கீங்களா?"
''பண்ணியிருக்கேன் சார்."
"எங்கே?"
"ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்லே."
"ஓ."
அநேகம் விஷயங்கள் புரிந்ததுபோல் செக்ரட்டரி ஒரு தரம் தலையை ஆட்டிக்கொண்டார்.
"கரெக்டா இருக்கணும்.!''
''சரி சார்."
"அநாவசியமா வெளிய வம்பு,கிம்பு பேசக்கூடாது."
"சரி சார்"
"சிபாரிசு, டொனேஷன்னு ஆயிரம் பேர் வருவாங்க. விசாரிக்காம யாரையும் உள்ளே விடக்கூடாது."
"சரி சார்."
முடிந்தஅளவு விரைப்பாய் ஒரு சல்யூட் வைத்து சீதாராமன் திரும்பினார். டிரைவர்கள். தோட்டக்காரர்கள் என்று பங்களாவில் நிறைய வேலையாட்கள் இருந்தார்கள். அழகிய பெரிய தோட்டம். வெளியே கதவருகே ஸ்டூல் இருந்தது. பச்சை மரங்கள் அடர்ந்த போட்கிளப் சாலையில் ஒருபோதும் நிழலுக்குப் பஞ்சமில்லை. சில்லென்று காற்று வீசியது. மனதிற்கு ரம்மியமான சூழ்நிலை. ஸ்டூலில் சீதாராமன் தவளைபோல் பின்னுக்கு நகர்ந்துகொண்டார். கிடைத்த கையகல இடத்தில் பழகிய கைகள் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கின. கண்களை மூடிக்கொண்டு பாயும் விரல்களில் தனியே ஒரு ஆவர்த்தனம். காது சப்தத்தை மட்டுமே உணர்கிற தியானத்தில், நேரம் போனதே தெரியவில்லை.
"கீய்ங், கீய்ங்"
எரிச்சலில் வாசிப்பு நின்றது. முதலாளியின் கார் பூனைபோல் புறப்பட்டு வந்து காத்துநின்றது. சீதாராமன் பதறிப்போய் கதவுக்கு ஓடினார். அவசரத்தில் விரல் நசுங்கி கதவைத் திறந்துவிட்டார். கண்ணாடி ஏற்றிய முதலாளியின் கார் அவரைக் கடந்துபோனது. காலையில் செக்ரட்டரி அவரைக் கூப்பிட்டு அனுப்பினார். சீதாராமன் ஓட்டமாய் ஓடிவந்து சல்யூட் வைத்து நின்றார். வந்த வேகத்தில் விசாரணை தொடங்கியது.
"பூட்ஸ் இல்லையாய்யா?"
"சார்?"
கம்பெனியிலே யூனிபார்மோட பூட்ஸ் தரல்லியா?"
"இல்லே சார்."
அட்வான்ஸ் நூறுரூபா தர்ரேன். கேன்வாஸ்லே பூட்ஸ் வாங்கிக்கங்க. முதலாளி எங்கிட்ட கத்தறார். இனிமே ஹவாய் செருப்போடெல்லாம் டூட்டிக்கு வரக்கூடாது"
சீதாராமன் எச்சிலை விழுங்கினார். தீட்டப்பட்ட ஒற்றை நோட்டை வாங்கிக்கொண்டார். வவுச்சரில் கோணலாய் கையெழுத்து முளைத்தது. கால்களை சேர்த்துவைத்து பணிவாய் மீண்டும் ஒருமுறை செக்ரட்டரிக்கு சலாம் வைத்தார்.
"இதெல்லாம் வேணாம்யா. டூட்டியிலே மிருதங்கம் வாசிக்காம ஒழுங்கா வேலையைப் பாரு. அதுபோதும்."
ஸ்டூலில் சப்தநாடியும் ஒடுங்கி சீதாராமன் உட்கார்ந்துகொண்டார். பதினைந்து நாட்களாக அப்படித்தான். வாழ்வில் பாதுகாப்பு வேண்டுமென்றால் ஒரு அடிப்படை ஒழுங்கு அவசியம். கிடைத்த வேலை நிலைக்கவேண்டும். சீதாராமன் ப்ரவுன் நிறத்தில் கேன்வாஸ் பூட்ஸ் வாங்கிக்கொண்டார். வேலை செய்கிற இடத்தில் வாய் மூடிஇருத்தல் அவசியம். இப்போதெல்லாம் வேலை நேரத்தில் அவர் மிருதங்கம் வாசிக்கிறதில்லை. மாறாக கிராப் தலையின் சுண்டுவிரல் நீளக்குடுமியில் விரல் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தார். சதா சர்வநேரமும் கண்ணாடி ஏற்றிய முதலாளியின் காருக்கு கதவு திறந்துவிடத் தயார் நிலையில் இருந்தார். செக்ரட்டரி சொற்படியே தெருவின் மற்ற வாட்ச்மேன்களுடன் அவர் வம்பு பேசுவதில்லை. தவிரவும் அவசியமில்லாதவர்கள் யாரும் அவரைமீறி பங்களாவில் நுழைந்துவிட முடியாது. 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே. கொண்ட காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே', தேவைப்பட்டால் நாய் வேடம் ஏற்கத் தயங்காதே. ஆனால் மறக்காமல் குரைத்துவிடு. சீதாராமன் மனைவி இப்போதெல்லாம் எப்போதும் உபதேசிக்கிற வரிகள் அவர் மனதில் ஒருமுறை ஓடியது. அப்புறம் கடவுள்விட்ட வழி. எல்லாம் நல்லபடியாய் நடக்கவேண்டும்.
செகரட்டரி அறையில் டெலிபோன் அடித்தது. கேட்டில் செல்லுலர்போனில் முதலாளி பேசுகிறார். தெருமுனையில் கார் ரிப்பேராகிவிட்டது. அவர் இறங்கி வீட்டுக்கு வந்திருக்கிறார். மொத்தம் நான்கு விளக்குக்கம்பங்கள் தூரம். இத்தனை தொலைவு சமீபகாலத்தில் அவர் நடந்த வரேயில்லை. புஸுபுஸு என்று மூச்சுவிட்டு வேர்க்க, விறுவிறுக்க கையில் மிகவும் கனக்கிற சூட்கேஸுடன் வந்துகொண்டிருந்த அவரைக் கதவில் அந்த முட்டாள் வாட்ச்மேன் தடுத்து நிறுத்தியிருக்கிறான். விசிட்டிங் கார்ட், செக்ரட்டரி கையெழுத்துப் போட்ட சீட்டு இரண்டில் ஏதாவது ஒன்றைக் கேட்டிருக்கிறான். முதலாளி கொங்கணி பேசுகிறவர். அந்த மடையனுக்கு ஆங்கிலம் புரியவில்லை.
"அறிவு இருக்காய்யா உனக்கு?"
கதவருகே சீதாராமன் வெலவெலத்து நின்றார். செக்ரட்டரி ஓட்டமாய் ஓடிப்போய் கதவு திறக்கிறார். சிவந்த முகத்தில் உறுமிக்கொண்டு இத்தனை நேரம் அவர் ரொம்பவும் சாமார்த்தியமாய் தடுத்து நிறுத்தியிருந்த அந்த கடுகடுத்த மனிதன் கோபமாய் ஒருதடவை முறைத்து உள்ளே போகிறார். அதுவே சீதாராமனை அவர் அங்கே பார்க்கிற கடைசிதடவையாய் இருக்கவேண்டும்.
"அறிவு இருக்காய்யா உனக்கு?"
சந்தேகத்தில் செக்ரட்டரி மீண்டும் கேட்டார். கொஞ்சநேரம் சீதாராமன் அசையாமல் நின்றார். எச்சில் விழுங்கி தொண்டை எலும்பு ஏறிஇறங்கியது. உடைந்தகுரலில் செக்யூரிட்டி சீதாராமன் மிகவும் தாழ்மையுடன் விண்ணப்பித்தார்.
"இந்த ஒருதரம் மன்னிச்சுடுங்க சார். தெரியாமப் பண்ணிட்டேன். முதலாளியோட கார் எப்பவும் கண்ணாடி ஏத்தி வருது. போகுது உத்தேசமா கும்பிடு வைப்பேன். ஆனா முதலாளியை ஒருதடவைகூட பார்த்ததில்லே இனிமே தப்பு வராது. தயவுசெஞ்சு இந்த ஒருதரம் மன்னிச்சுடுங்க."
பின்குறிப்பு:-
கல்கி 16.02.1997இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்