சிறுகதை: பெண் அருவி

Short Story In Tamil
ஓவியம்; ஸ்யாம்
Published on

-சத்தியப்ரியன்   

வெயில் ஏறிய ஒரு முன்பகல் வேளையில்தான் யாமின் அந்த யோசனையைச் சொன்னாள். சமையல்காரன் கொண்டு வைத்த ஆறிப்போன உப்புமாவும், சாம்பார் என்ற பெயரில் ஒரு காவி நிற திரவமும் முற்றிலும் எனது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை சுகத்தை அவித்து விட்டிருந்தது.

"ஹொகேனகலா?" என்றாள் ஹெப்ஸிபா.

''இன்னிக்கா?'' என்றாள் காயத்ரி.

''நாளைக்கு" என்றாள் யாமினி.

"லீவ் போட்டுட்டா?" என்றாள் ஹெப்ஸிபா

"கத்தாதே ஹெப்ஸி. வார்டன் காதில் விழுந்தா மொத்தமா வெளில அனுப்பிடுவா."

"தப்பில்லையா?" என்றாள் காயத்ரி தாழ்ந்த குரலில்.

"தப்புதான். ஆனா இந்த ஹாஸ்டலோட பார்த்து சலித்துப் போன கம்பிகள், சுவர்கள், அழுக்குப் படிந்த தலையணை, எட்டு மணிக்கு ணங் என்று பூட்டப்படும் பித்தளை பூட்டு இவை எல்லாவற்றையும் என்றாவது ஒருநாள் மீற வேண்டும் போல வருகிறது. சின்னச் சின்ன பொய்களில் பார்க்கும் சினிமாக்கள் எனக்கு அலுத்துவிட்டது."

எனக்கு யாமினி மேல் பரிதாபமாக இருந்தது. அவள்தான் முதன்முதலாக எனது அறையைப் பங்குபோட வந்தவள். ஒரு ஹோல்டால், வயர்கூடை இவற்றுடன் கத்தரிப்பூ சுடிதாரில் காதில் பூனை மயிர் மின்ன "என் பேர் யாமினி. தனியார் துறை வங்கியில் எனக்கு க்ளரிகள் போஸ்டிங்" என அறிமுகம் ஆனவள். எந்த போர்வைக்கும் அடங்காதவள் என மூன்றாவது நாளே தெரிந்துவிட்டது. எட்டு மணிக்கு உள்ளே இருக்க இது என்ன ஜெயிலா?" என்றாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; திக்குத் தெரியாத காட்டில்...
Short Story In Tamil

பாத்ரும் நெரிசல், இரைச்சல், சமையல் எல்லாவற்றிற்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்தாள். அவள் வந்த பிறகுதான் எனக்கு என் அறையின் ஜன்னல் இன்னும் பெரிதாக இருந்தால் நன்றாயிருக்கும் எனத் தோன்றியது. ஹாஸ்டலின் பின்பகுதியில் மகளிர் சங்கம் நடத்தும் தையல் வகுப்புகளை வேறு எங்காவது பிடுங்கி வைக்கத் தோன்றியது. பெண்களை அவமானப்படுத்தும் முதல் எதிரி தையல் மெஷின் என்பாள் யாமினி. ஏழே முக்கால் வரையில் வெளிய சுற்றிவிட்டு எட்டு மணிக்குத்தான் உள்ளே நுழைவாள். தனி வீடாக பார்த்துப் போய்விட்டால் இந்த விடுதியிலிருந்து விடுதலையாகி விடலாம் என்ற அவளது ஆசை இன்னும் நிறைவேறவில்லை. தனியாக வீடு கிடைக்கவில்லை.

மேலும் கல்யாணம் ஆகும் வரையிலா மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் என்ன மோசமான சாப்பாட்டை சாப்பிட நேரிடினும் சமையலறையில் உழல வேண்டாம் என்ற நினைப்புதான் இவ்வளவு பெண்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பாள்.

மொத்தம் நாலு பேர் தேறினோம். நான், யாமினி, ஹெய் ஸிபா, சாந்தி, காயத்ரி வரவில்லை என்று விட்டாள். மறந்தும் வார்டனிடம் போட்டுக் கொடுத்து விடக்கூடாது என யாமினி காயத்ரியிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டாள். சஷ்டிகவசம் சொல்லும் வாயால் பொய் சொல்ல வரலை என்பதுதான் காயத்ரி சொன்ன காரணம். ஒரு புனிதமான பெண்ணாகத் தன்னை பாவித்து அவள் சொன்ன நாடகபாணி பாவனையை, யாமினி வழியில் சொல்லி நடித்துக்காட்டினாள். டெலிஃபோன் ஆபரேட்டராக இருக்கும் புவனாவிடம் எங்கள் அலுவலக தொலைபேசி எண்களைக் கொடுத்துவிட்டு எட்டரை மணிக்கு பஸ் பிடிக்கப் போனோம்.

துவரை இப்படி ஊர் சுற்றிப் பார்த்ததில்லை. ஒரு மே மாத வெயிலில் ஏற்காட்டில் மண்டை காய்ந்துவிட்டு வந்தோம். வெண்ணெய்க் காப்பு என்று நாமக்கல்லில் ஆஞ்சநேயரைப் பார்க்கப் போயிருந்தோம். மற்றபடி ஷாப்பிங், சினிமா, எக்ஸிபிஷன் இவைகளோடு சரி.

யாமினி ஒருமுறை, ஊரிலிருந்து மாதம் ஒரு முறை பார்க்க வந்த அப்பாவையும், அண்ணனையும் திட்டி அனுப்பினாள்.

''வாரா வாரம் யாராவது ஒரு ஆண். லீலாவோட அப்பா, சுமதியோட மாமா, ஹெப்சிபாவோட அண்ணன்னு வந்து நிக்கறதைப் பார்த்தா எனக்கு அவமானமா இருக்கு. ஏன்? ஏன் பெண்களை கற்புரீதியாகவே சிந்திக்கறீங்க? ரொம்ப அபத்தமாப் படவில்லையா? இதே ஊரில் இதே பாங்கில் என் சகஊழியன் ஒருத்தன் மேன்ஷன் ஒண்ணில் இருக்கான். சொந்த ஊர் திருநெல்வேலி. மாசா மாசம் போயிட்டு வர்றான். தனியா. இந்தா இருக்கற திருச்சியிலிருந்து வாரம் ஒரு ட்ரிப் நான் பத்திரமா இருக்கேனான்னு பார்க்க வர்றியேப்பா, நியாயமா இருக்கா?"

அவள் கேள்வியினால் அதிகப்படியான மாற்றங்கள் நிகழவில்லை. காயத்ரியைப் பார்க்க மட்டும் ஒருநாள் விடுத்து ஒருநாள் என சித்தப்பா, பெரியப்பா பையன், மாமா, தம்பி என வந்துகொண்டே இருப்பார்கள். காயத்ரிக்கு பின்னால் அது ஒரு பெருமையாகவே போனது.

இதையும் படியுங்கள்:
Interview: "ஏன், ஜென்டில்வுமன் இருக்க கூடாதா?" - சீறும் லிஜோ மோல் ஜோஸ்!
Short Story In Tamil

ற்றுப்படுகை போன்றதொரு மணல் வெளியில் பஸ் நின்றது. வழிபாதைக் கடைகள், ஜனநெரிசல் இவைகளைத் தாண்டி தூரத்தில் மரங்களின் வேர்களைத் தழுவியபடி காவிரி ஓடிக்கொண்டிருந்தது.

"முதல்ல குளிக்கலாமா?" என ஹெப்சிபா கேட்டாள்.

யாருமே இதுவரையில் ஹொகேனகல் வந்ததில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் காதில் வாங்கி வந்த தகவல் போதுமானதாகத் தெரியவில்லை. முதலில் என்ன செய்யலாம்? யாருமே தொந்தரவு செய்யாத வரையில் பாறையில் உட்கார்ந்து நதியைக் காலோடு நழுவி ஓடச்செய்வது கூட இனிமையாகத்தான் இருக்கும்.

எங்கள் சந்தேகத்தைப் போக்கும்விதமாக ஒரு பரிசல்காரனே "வெயில் ஏறினாக்கூட அருவியில் குளிக்க முடியும். பரிசலில் போக முடியாது. முதலில் பரிசலில் போகலாம் வாங்க" என்றான்.

பரிசல்காரன் பெரிய தொப்பி போல பரிசலை தலையில் சுமந்து வந்தான். பரிசல் சுழல, சுழல தள்ளாடி விழாமல் தொப் தொப் என்று உட்கார்ந்ததை இன்னும் மறக்க முடியவில்லை. சீறும் ஆற்றின் வேகம், கூர்மூக்கால் முட்டும் மீன்களின் ஸ்பரிசம், மேல் தெறிக்கும் ஆற்றின் குளுமை, தூரத்தில் மிக உக்கிரமாய் கொட்டிக்கொண்டிருந்த அருவி எங்களை இருப்பு மறக்கச் செய்தது.

பரிசல்காரன் இறக்கிவிட்ட இடத்திலிருந்து அருவியை அடைய அரைமணி நேரமானது.

சிமெண்ட் நடைபாதை காவிரியைப் பிரித்து குறுக்கே போனது. முடிவில் ஒரு மண்டபம். வழிநெடுக எண்ணெய் மசாஜ் செய்பவர்களின் அழைப்பு. நல்லெண்ணெய் மணம் அதிகமாகி காற்றின் ஈரத்தில் கலந்திருந்தது. ஜட்டி அல்லது அண்டர்வேர் மட்டும் அணிந்தபடி படிக்கட்டுகளில் மிகுதியாக ஆண்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இந்த உடல் மீறிய சுதந்திரத்தில் திமிர் தெரிந்தது. குடும்ப சகிதம் வராமல் கல்லூரி மூலமும் அலுவலகம் மூலமும் சுற்றுலாவாக வந்திருந்த ஆண்கள், அவர்களது மட்டற்ற சுதந்திரத்தை மிகக் கீழ்த்தரமாக பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவில்லை. மட்டமான பாடல்களைப் பாடினார்கள். ஹோ என்று கத்தினார்கள். கேவலமான சைகைகளைக் காட்டினார்கள். பாதி பேர் மது அருந்தி இருந்தது துல்லியமாகத் தெரிந்தது. புளித்த வாடை வேறு கொன்றது.

பெண்கள் குளிக்கும் இடம் என போர்டு காட்டிய இடத்துக்குள் புகுந்தோம். அதிர்ந்தோம்.

நீளமாக ஒரு தொட்டி, உயரத்தில் இருந்தது. செயற்கை முறையில் குழாய்கள் மூலம் நீர் விழுந்துகொண்டிருந்தது. குடிநீர் குழாயின் அளவைவிட கொஞ்சம் கூடுதலாக, தோட்டத்து பம்ப் செட்டைவிட மிகக் குறைவாக.

யாமினி பேசாமல் வெளியில் வந்து விட்டாள்.

நாங்களும் அவளைத் தொடர்ந்தோம். யாமினி ஆண்கள் இறங்கிக் கொண்டிருந்த அருவித் துறையில் இறங்கினாள். பின் தொடர்ந்த எங்களை ஆண்கள் மறக்காமல் உரசினார்கள், இடித்தார்கள். எனக்கு மலத்தை மிதித்தது போலிருந்தது.

ஆண்கள் துறையில் காவிரி பொங்கிப் பெருகி கொட்டிக்கொண்டிருந்தாள். நீளமாக கம்பிகள் போட்டிருந்தார்கள். அவள் அடங்காமல் வெளியில் தாவிக்கொண்டிருந்தாள்.

ஆண்கள் கீழே அமர்ந்தும். படுத்தும்,  நின்றும், அருவியை எதிர்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள். மருந்துக்குக் கூட ஒரு பெண் அந்த அருவியில் குளித்துக் கொண்டிருக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
நாங்கள் 60ஸ் கிட்ஸ்... அந்த நாட்களே வேறு; மாலை பொழுது ரொம்ப ஜோரு!
Short Story In Tamil

"போகலாம்" என்றாள் யாமினி.

வெறுத்துப் போய் ஹாஸ்டல் திரும்பிய எங்களை காயத்ரி மறக்காமல் கேட்டாள்.

"அருவியில் குளிச்சீங்களா?"

"எதில்?"

"பெரிய அருவியில்"

"இல்லை."

"நான் குளிச்சிருக்கேன்!"

'"நிஜமாவா?"

"எப்படி?"

"இந்தப் பக்கம் அண்ணா. இந்தப் பக்கம் தம்பி. பின்னாடி அப்பா. இவ்ளோ பேர் நடுவில்" என்றாள்.

"சமத்து" என சாந்தி அவள் கன்னத்தைத் தட்டினாள்.

பின்குறிப்பு:-

கல்கி 26  மே  2013 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com