
“இந்த க்வெஸ்டின் நீ நெனக்கற மாதிரி அவ்ளோ கஷ்டமானது இல்ல விக்கி” என்று சொல்லிவிட்டு கடகடவென்று அந்த ஃபிஸிக்ஸ் கேள்விக்கு விடை எழுதிய கார்த்திக்கை பிரமிப்புடன் பார்த்தான் விக்கி என்ற விக்ரம்.
இருவரும் பல வருடங்களாக ஒரே ஸ்கூல், ஒரே செக்க்ஷன். விக்ரம் படிப்பில் கெட்டி என்றால் கார்த்திக் அடுத்த லெவல்.
இப்போது இருவரும் நீட் பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
“ஹாய் கய்ஸ்” விக்கியின் அம்மா திவ்யா நுழைந்தாள். அவள் கவர்ன்மென்ட் செக்ரட்ரி. விக்கியின் அப்பா விஜய் ஒரு பாங்க் ஜெனரல் மேனேஜர். வசதியுள்ள குடும்பம்.
“எப்படி இருக்கு ப்ரிப்பரேஷன்ஸ் எல்லாம்? என்ன கார்த்திக், ஒன் ஃப்ரெண்ட் நீட் மெரிட்டல பாஸ் பண்ணிடுவானா? இல்ல மேனேஜ்மெண்ட் கோட்டா தானா?”
கார்த்திக் புன்னகையுடன் சொன்னான். “ரெண்டு பேரும் மெரிட்லயே மெடிக்கல் காலேஜ் சேர்ந்துருவோம். மேனேஜ்மெண்ட் கோட்டா தேவையில்ல.”
“நீ எப்படியும் மெரில வந்துருவ கார்த்திக்” அவள் சொன்னாள். “விக்கிதான் சந்தேகம்.”
“கரெக்ட்மா” விக்கி மறுக்கவில்லை “லெட்டஸ் ஸீ.”
“எம். பி. பி. எஸ். முடிச்சுட்டு என்ன ஸ்பெஷலைஸ் பண்ணப்போற கார்த்திக்?”
“எம். டி. ஆண்ட்டி” கார்த்திக் கண்களில் இருந்த பிரகாசத்தை மற்ற இருவரும் கவனிக்கத் தவறவில்லை. அவன் தொடர்ந்தான் “ நிறைய ஜனங்களுக்கு ஃப்ரீல ட்ரீட்மெண்ட் பண்ணுவேன். கூடவே நிறைய ரிசர்ச் பண்ணுவேன். நாட் மச் இன்ட்ரெஸ்டெட் இன் மணி.”
அவள் ஆச்சரியப்பட்டாள். ஏனென்றால் அவன் குடும்பத்தில் வசதி அவ்வளவு கிடையாது.
“ஓகே பாய்ஸ், ஐ வில் லீவ்.”
விக்கியும் அவன் பெற்றோர்களும் காலை உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
நீட் முடிவுகள் வந்திருந்தன.
“விக்கி, எந்தக் காலேஜ் சேரப் போற?” விஜய் கேட்டார். “மேனேஜ்மெண்ட் கோட்டா, ஸோ மொத்த கோர்ஸ் 50 லாக்ஸ் – 1.5 க்ரோர்ஸ் ஆகும். நோ ப்ராப்ளம்.”
“அப்பா, ஒரு ரிக்வெஸ்ட்..”
“சொல்லுடா.”
“எனக்கு பதிலா நீங்க கார்த்திக்கை ஃபைனான்ஸ் பண்ண முடியுமா? அவனுக்கு ரெண்டு மார்க்ல மெரிட் கட்-ஆஃப் போயிடுச்சு. அவனுக்கு மேனேஜ்மெண்ட் கோட்டாலதான் எடம் கிடைக்கும். ஆனா அவங்க அப்பா கிட்ட அவ்வளவு பணம் இல்ல.”
“ஸோ ஸாட்...” திவ்யா குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.
“ஆமாம்மா. டாக்டராகறதுதான் அவனோட ஒரே லட்சியம். நா வேற புரஃபஷன் போனாலும் சந்தோஷமா வாழ முடியும். ஆனா கார்த்திக்? கண்டிப்பா நோ. அப்பா, பிளீஸ் ஹெல்ப் கார்த்திக்!”
“விக்கி, ஒன்னோட பெருந்தன்மையை பாத்து நானும் அம்மாவும் பெருமைப் படறோம். ஆனா, ஒனக்கு பதிலா கார்த்திக்குக்கு நான் ஃபைனான்ஸ் பண்ண முடியாது. நாளைக்கு நீயே ஒருவேளை ஐய்யோ, நம்ம டாக்டர் ஆகலியேன்னு வருத்தப்பட்டா?”
“அப்பா, பிளீஸ்”
“சாரி விக்கி.”
“ஓகேப்பா” அவன் குரலில் கோபம் இருந்தது. “அப்போ எனக்கும் மெடிக்கல் காலேஜ் வேணாம்ப்பா.“
அவர் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். “ஒரு நாள் டைம் எடுத்து யோசி. நாளைக்கு உன் முடிவ சொல்லு.”
அவன் சென்றபின், விஜய் திவ்யாவிடம் சொன்னார். “இன்னும் கொழந்தயாவே இருக்கான் பாரு. அதுக்குதான் ஒரு நாள் டைம் குடுத்தேன். நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ணாதே. நாளைக்கு முடிவ மாத்திப்பான் பாரு.”
அவர் சொன்னது தவறாகவில்லை. விக்கி எம்.பி.பி.எஸ். பண்ண ஒப்புக்கொண்டான்.
அடுத்த ஐந்தரை ஆண்டுகள் சில சமயம் மெதுவாக சில சமயம் ஜெட் வேகத்தில், சில சமயம் அற்புதமாக, சில சமயம் அழுது வடிந்து கொண்டு கழிந்தது.
ஒரு சனிக்கிழமை இரவு அவர்கள் மூவரும் அந்த உயர்தர உணவகத்தில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள் – விக்கி தன் எம். பி. பி. எஸ். பட்டத்தை வாங்கியதர்கான கொண்டாட்ட விருந்துதான் அது.
“விக்கி, அடுத்தது என்ன?” விஜய் கேட்டார், “எம்.எஸ்.தானே?”
“இல்லப்பா, எம்.டி”
“எம்.எஸ்.ல ஜாஸ்தி வருமானம் உண்டே விக்கி, ஆல்ஸோ மோர் ப்ரெஸ்டிஜ்.”
“அப்பா, அம்மா,” அவன் சிந்தனை மிகுந்த குரலில் சொன்னான்.. “என்னோட வருங்காலத்துக்கு முன்னாடி, என்னோட ஃப்ரெண்ட் கார்த்திக் பத்தி கொஞ்சம் அப்டேட் பண்றேன்..”
“ஓ, ஒன்னோட ஸ்கூல் மேட் இல்லியா? ஐ ரிமெம்பர். சொல்லு. என்ன பண்றான் இப்போ?”
“அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பண்ணினான். ஸ்டேட் ரேங்க் - 3. இப்போ ஜப்பான்ல ஒரு ப்ராஜக்ட்ல இருக்கான்.”
“வாவ்” திவ்யா வியந்தாள் “அவன் சோடை போக மாட்டான்னு எனக்குத் தெரியும்.”
“போன வாரம்தான் அவனப் பாத்தேன் – லீவுக்கு வந்திருந்தான்.”
“ஏன் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரல?” இருவரும் கேட்டார்கள்.
அவன் காதில் விழாத மாதிரித் தொடர்ந்தான்... “வேலை இண்ட்ரெஸ்ட்டிங்கா இருக்குன்னு சொன்னான். ஃபேமிலி வசதியா இருக்குன்னு சொன்னான்.”
“க்ரேட்” என்றார் விஜய்.
“சந்தோஷமா இருக்கியாடான்னு கேட்டேன். அவன் தலையைக் குனிந்தபடி சொன்னான்.. 'டேய் விக்கி, நான் வெறுமைல வாழறேன். கொஞ்ச வருஷத்துல இது மாறலாம், இல்லேன்னா இப்படியே இருந்தாலும் இருக்கலாம், ஐ டோன்ட் நோன்னு'.”
அவர்கள் இருவரும் பேசவில்லை.
“அப்பதான் அவனோட கண்ணைப் பாத்தேன் – நிறைய சோகம் இருந்தது.” சில நொடிகள் மௌனமாக இருந்தான் விக்கி. பெருமூச்சு விட்டான். “ஓகே, அது அவனோட தலவிதி.”
“கரெக்ட் விக்கி,“அப்பா சொன்னார். “எல்லாம் நமக்கு மேல இருக்கறவன் செயல்.”
“இப்போ, லெட் மீ டாக் அபௌட் மை ஃப்யூச்சர். “
அவர்கள் ஆவலுடன் பார்த்தார்கள்.
“நா எம்.டி. பண்ணிட்டு ஜெனரல் மெடிசின் பிராக்டிஸ் பண்ணுவேன். வசதி இல்லாதவங்களுக்கு ஃப்ரீயா இல்லன்னா கொரஞ்ச ஃபீஸ் வாங்கிக்கிட்டு ட்ரீட்மெண்ட் பண்ணுவேன். வசதி உள்ளவங்க முழு ஃபீஸ் கட்டலாம்.”
“விக்கி!” திவ்யா அதிர்ந்த குரலில் சொன்னாள், “ஒரு டாக்டரா நீ நிறைய பணங்காசு, பேர், தொழில் முன்னேற்றம் எல்லாம் பாக்கணும், அதுதான் எங்க ஆசை. யாருமே அதுக்குதான் டாக்டர் ஆவாங்க.”
“இருக்கலாம். ஆனா கார்த்திக்கோட குறிக்கோள் வேற. அவன் டாக்டர் ஆக முடியல, அதுனால நிறைய பேஷன்ட்ஸ் – வசதி கொறஞ்ச பேஷண்ட்ஸ் - நஷ்டப் பட சான்ஸ் இருக்கு. அதுக்கு நஷ்ட ஈடு பண்ணதான் நா இந்த முடிவு எடுத்துருக்கேன்.”
“பட் விக்கி...”
“மேல இருக்கறவன் எனக்கு இதத்தான் எழுதியிருக்கான். ஒரு விஷயம், ஷூவரா சொல்ல முடியும் – கார்த்திக் ஆயிருக்கக் கூடிய ரிசர்ச்சர் மாதிரி நா நிச்சயமா ஆக முடியாது!”