
-வஸந்தா கிருஷ்ணன்
"குட்மார்னிங் மம்" என்றவாறே, மாடியிலிருந்து இறங்கி வந்த என் பெண் ஸ்மிதாவைப் பார்த்தேன். நல்ல உயரம், அழகு, கலர் எல்லாம் அமையப் பெற்றிருந்தாள். சென்ற வருடம் நடந்த தேசிய அளவிலான அழகுப் போட்டியில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். இப்பொழுது மிகப் பிரபலமான ஒரு மாடல். பரபரப்பான வாழ்க்கை.
“மம், நான் கிளப்பிற்கு ஸ்விம்மிங் போய்விட்டு, அப்படியே விஷ்ஷுடன் லஞ்ச் சாப்பிட்டு விட்டு, பூனா போகிறேன். இரவு வர வெகு நேரமாகும்; டாடியிடம் சொல்லி விடு!” என்று சொல்லிவிட்டு, அவளுடைய இருபதாவது பிறந்த நாளுக்கு, நாங்கள் பரிசாகக் கொடுத்திருந்த மாருதி எஸ்டீமில் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
விஷ் என்னும் விஸ்வனாதன் பெரிய விளம்பரக் கம்பெனியின் சொந்தக்காரன். தொழில் நிமித்தமாக, இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள்.
அப்பப்பா, நான் வளர்ந்ததற்கும், என் மகள் வளர்வதற்கும், எத்தனை வித்தியாசம். மன்னார்குடியில் கோவில் அர்ச்சகர் அப்பா. நாங்கள் நான்கு சகோதரிகள். மூத்தவளான கங்காவை, சொந்தத்தில் மாமாவிற்குக் கல்யாணம் செய்து கொடுத்ததில், சிரமமில்லாமல் சுலபமாகப் போய்விட்டது. எனக்காக வரன் தேடிக்கொண்டேயிருந்தார் அப்பா. இரண்டாமவளான யமுனாவான நான், பார்ப்பதற்கு மிகவும் நன்றாகவே இருப்பேன். என்னைப் பெண் பார்க்க வருபவர்களுக்கு, என்னைப் பிடித்திருந்தாலும், அவர்கள் கேட்கும் அளவுக்குத் தன்னால் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்வது பிடிக்காததால், என் கல்யாணம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. நானும், பக்கத்து வீட்டில் டீ.வி. பார்த்துக் கொண்டும், புத்தகங்கள் படித்துக்கொண்டும், மனத்தில் ஆயிரமாயிரம் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு, வரப்போகும் ராஜகுமாரனுக்காக காத்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால், நர்மதாவும் காவேரியும் கியூவிலிருந்தார்கள்.
கோவிலுக்குப் பெரிய அபிஷேகம் செய்ய வருபவர்களை, வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைத்து வருவார் அப்பா. அவர்கள் போகும்போது, நைவேத்ய பிரஸாதங்களை, பாக் செய்து கொடுப்போம். அம்மாவிற்கு ரொம்பவும் உடம்பு முடியாததால், ஸ்கூல் பைனல் முடித்ததிலிருந்து இவையெல்லாம் என் வேலைகளாயிற்று.
அப்படி ஒருநாள், காரில் வந்தவர்தான் ராஜாராமன். பம்பாயில் மிகப் பெரிய தொழிலதிபர். வயது நாற்பத்தைந்து இருக்கும். எங்கள் ஊர்தான் அவருக்கும் பூர்வீகமாம்.
எல்லோரையும் வழக்கமாக உபசரிப்பது போல்தான், அவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தேன். அப்பொழுதுதான், எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் கல்யாணத் தரகரும் வந்திருந்ததைக் கவனித்தேன்.
அவர்களை வாசல் வரை சென்று அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த அப்பா, தயக்கத்துடன் என்னிடம், "யமுனா, இப்பொழுது வந்திருந்தாரே, அவர் மிகவும் பணக்காரராம், பெரிய தொழிற்சாலை இருக்கிறதாம். அவருடைய முதல் மனைவியும், ரொம்பவும் பணக்காரியாம். ஆனால் ஏனோ இருவருக்கும் ஒத்துக்கொள்ளாததால் டைவர்ஸ் ஆகிவிட்டதாம். குழந்தைகள் ஒன்றும் இல்லையாம். ஆகையால், சாதாரணமாக, அந்தஸ்தில் குறைவான, ஒரு ஏழைமையான குடும்பப் பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாராம். ரொம்பப் படிப்பெல்லாம் தேவையில்லையாம். தன்னையும் வீட்டையும் கவனித்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறாராம். தரகர் மூலம் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, இன்று இங்கு உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார். அவருக்குச் சம்மதமாம். அவர் சம்மதம் தெரிந்தபின்பே உன்னுடன் பேச நினைத்திருந்தேன்!'' என்றார் அப்பா.
ஓகோ, இவர் வந்ததெல்லாம் முன்னேற்பாட்டுடன்தான் போலிருக்கிறது என்று தெரிந்தவுடன் ஆத்திரமாக வந்தது. எனக்குக் கோபம், அழுகை, ஆத்திரம், சுயபச்சாதாபம் என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வந்தன. ஏழையாகப் பிறந்துவிட்டால் அவர்களுக்கு மனதே கிடையாதா என்ன?
"ஏன் அப்பா, என்னைவிட இருபத்தைந்து வயது பெரியவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்ல, உங்களுக்கு எப்படி மனது வந்தது?'' என்று கதறினேன். என் கற்பனை ராஜகுமாரன் மெல்ல மெல்ல மறைந்து போனான்.
அப்பாவோ, "நான் இருக்கும் நிலையில் உங்கள் மூவரையும் கரை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை போய்விட்டது. உன்னைக் கல்யாணம் செய்துகொண்டால், உன் இரு தங்கைகளையும் அவரே நல்ல இடத்தில் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொன்னார். அப்புறம் உன் இஷ்டம். உன்னை நான் வற்புறுத்தவில்லை. பிறகு அம்பாள் விட்ட வழி!" என்றார்.
அம்மாவும், "உனக்கு நாங்கள் கெடுதல் செய்வோமா என்ன? வயதில் என்ன வந்தது? நல்ல வாழ்க்கைதான் முக்கியம். அவரைப் பார்த்தாலும் வயதானவராகத் தோன்றவில்லை” என்று போதனை செய்தாள், தன்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாததால்.
இரண்டு, மூன்று தினங்கள் தீர்க்கமாக யோசனை செய்ததில், நம் ஒருத்தியால், இவ்வளவு பேருக்கு நன்மை நடக்கும் என்றால், அது போதும் என்ற தியாக மனப்பான்மையுடன் சம்மதித்தேன்.
ஒரு நல்ல நாளில் மிஸஸ். ராஜாராமன் ஆனேன். அதன்பின் என்னை இவர் அருமையாக, அன்பாக நடத்தியதும், ஸ்மிதா பிறந்ததும், என் தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் ஆனதும் பழங்கதைகள்.
நான் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கற்பனையில் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவ்வளவு அருமையாக ஸ்மிதாவை வளர்த்தேன். இவரும் ஸ்மிதாவை ரொம்பவும். நேசித்தார். இவருக்குத் தொழிற்சாலையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்ததால் ஸ்மிதாவின் முழுப் பொறுப்பும் என்னுடையது ஆனது. நான் ஒருபோதும் அவளுடைய சுதந்தரத்தில் குறுக்கிட்டது இல்லை.
ஸ்மிதாவிற்கு படிப்பில் அதிக நாட்டமில்லாததாலும், சிறு வயதிலிருந்தே உடைகள் அலங்காரங்களில், உள்ள விருப்பத்தாலும் படிப்பை நிறுத்திவிட்டு, அவள் இஷ்டப்படி மாடல் ஆகிவிட்டாள். இன்று அவள் மிகப் பிரபலமான மாடல்.
இரவு ரவு வெகு நேரம் சென்று வந்த ஸ்மிதா எங்கள் அறைக்கு வந்து, "குட்நைட் மம் குட்நைட் டாட்!" என்று சொல்லிவிட்டு "காலையில் ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லப் போகிறேன்" என்று கூறி மாடியிலுள்ள தன் அறைக்குச் சென்றுவிட்டாள்
இரவு முழுவதும் என்னவோ, ஏதோ என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன். அவர் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.
காலையில் காபி குடித்துக்கொண்டே ஸ்மிதா, "மம்மீ... நானும் விஷ்ஷும் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறோம்!" என்றாள்.
நான் திடுக்கிட்டவாறு, “ஏன் ஸ்மிதா, அவர் உன்னைவிட இருபத்தைந்து வயது பெரியவனாயிற்றே?" என்றேன்.
"ஸோ, வாட்? மம், வயதில் என்ன இருக்கிறது. நல்ல வாழ்க்கைதான் முக்கியம். விஷ் என்னை விரும்புகிறான், நான் அவனை விரும்புகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே மாடி ஏறிப் போய்க் கொண்டிருந்த என் மகளைப் பார்த்து வாயடைத்து நின்றேன்.
பின்குறிப்பு:-
கல்கி 21 ஏப்ரல் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்