-மதுமிதா
ஹேமா வசீகரமாய்ச் சிரித்தாள். அருகில் வந்தாள். படுக்கை நுனியில் உட்கார்ந்தாள். தன் மடியில் மிருதுவாய் என் தலையைத் தாங்கிக் கொண்டாள். விரல்கள் என் தலையைக் கோதின. இதுதான். இது ஒன்றுதான் சொர்க்கம். கண்மூடி அந்த விரல்களின் கோதலில் லயித்தேன். சட்டென விரல்கள் விலகின. தலை தடக்கெனப் படுக்கையில் புரண்டது. கனவு கலைந்து விட்டது.
சட்... எரிச்சலுடன் கண் திறந்தேன்.
எதிரில் ஹேமா. இடுப்பில் கை வைத்துக்கொண்டு அதே வசீகரப் புன்னகையுடன். முன் நெற்றியில் கொத்தாக நரை மயிர் விழுந்தது.
கனவில் வந்தது இருபது வயது ஹேமா. எதிரில் நிற்பது அறுபது வயது. முதுமையும் அழகுதான். சலசலத்து ஓடும் ஓடைபோல அடக்கமான அழகுதான்.
"சாருக்கு... இன்னும் தூக்கம் கலையலையா?" குரல் தேனாய் இனித்தது.
அவளுக்காய் கை நீட்டினேன். கை பற்றித் தூக்கினாள்.
"நல்ல கனவை கலைச்சுட்டம்மா...!”
"கனவுல யார் வந்தது?"
"யாரு... நீதான்... இந்தக் கிழவி இல்லே... முதமுதல்ல பாத்த குட்டிப் பெண் ஹேமாவாக்கும்...!"
''அது கிடக்கட்டும்... சீக்கிரம் எழுந்து வாங்க... ஸ்ரீமுகி வந்திருக்கா...!"
புரியவில்லை.
"ஸ்ரீ முகியா... என்ன திடீர்னு? லெட்டர்கூட போடலை...!"
படுக்கையில் இருந்து எழுந்தேன்.
"நீங்களே வந்து கேளுங்க...!”
"என்னம்மா... புதிர் போடறே...?"
பதில் சொல்லாமல் நடந்தாள்.
ஸ்ரீமுகி யோசனையில் இருந்தாள். மெல்ல அவள் தோளைத் தொட்டேன். திரும்பினாள். அவள் கண்கள் பொங்கின. விசும்பினாள்.
"அப்பா... அப்பா!" உதடு கோணியது.
என் உடம்பு ஒரு உதறு உதறியது. "என்னடா... என்ன ஆச்சு...?"
விழிநீர் துடைத்தேன். மார்பில் சாய்ந்தாள்.
அவள் இன்னும் குழந்தைதான். நர்ஸிங்ஹோமில் ஹேமாவை ஈஷிக்கொண்டு படுத்திருந்த அதே ஒருநாள் குழந்தைதான்.
''அழாம சொல்லுடா...!"
விம்மினாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
ஹேமா அருகில் வந்தாள்.
"என்ன ஹேமு... என்னாச்சு?''
ஸ்ரீமுகியின் கூந்தல் தடவினாள். கன்னம் வழித்தாள். மெல்ல என்னிடமிருந்து விலக்கினாள்.
''ஸ்ரீ... வெந்நீர் வச்சிருக்கேன்... போய் குளிச்சுட்டு வா... டிரெயின்ல வந்தது டயர்டா இருக்கும்...!"
ஸ்ரீ என் முகத்தைப் பார்த்தாள். பின் அம்மா முகத்தைப் பார்த்தாள். மெல்ல நகர்ந்தாள்.
"என்ன… என்ன...?"
என் குரல் பதறியது. ஹேமா சிரித்தாள்.
"இத்தனை வயசாகியும் இன்னும் அந்த பதற்றம் போகலைப்பா உங்ககிட்டேர்ந்து...!"
"என்ன விஷயம்... ஏன் அழறா... மாப்பிள்ளை எதாவது சொல்லிட்டாரா... அவ அழுதா தாங்க முடியலைம்மா...!''
"அதெல்லாம் ஒண்ணுமில்லே... அவ என்ன இன்னும் சின்னக் குழந்தையா என்ன? வர்ற ஏப்ரல் இருபது வந்தா நாற்பது வயசு ஆகப் போறது...!"
"ப்ச்... சொல்லுமா...!"
"மத்யமாவதிதான்...!"
''மத்யாவுக்கு என்ன?"
"அவ யாரோ ஒரு பையனை லவ் பண்றாளாம்...!"
"அட... நம்ப குட்டியா... பேஷ்... பேஷ்... பையன் யாராம்?"
"ஓஹோ... அவ்வளவு சந்தோஷமா...? ஸ்ரீ இதக் கேட்டா ரொம்ப நொந்துடுவா...?"
"ஏன்...?"
"அவளுக்குத் தன் பொண்ணு காதல் பண்றது பிடிக்கலையாம்...!"
"அட அடசே... நம்ப காதலின் நினைவுச் சின்னம் இந்த மாதிரி நினைக்கலாமா...?"
''ரொம்ப வழியாதீங்க...!''
"சரி... துடைச்சுட்டேன்... பையன் யாரு?"
"அவளோட பேங்க்ல ஓர்க் பண்றானாம்."
''பேரு என்ன?''
"கோபிகிருஷ்ணன்."
"அதான் ஸ்ரீக்கு கோபம் போலிருக்கு...!"
"இப்ப எதுக்குத் தெரியுமா இவ வந்துருக்கா. நம்ப ரெண்டு பேரும்தான் மத்யமாவுக்குப் புத்தி சொல்லித் திருத்தணுமாம்...!"
"போச்சுடா... அந்தக் கால காதலர்கள் மூலமா இந்தக் கால காதலர்களைப் பிரிக்கச் சதி பண்றாளா உம் பொண்ணு...?"
"என்னது... அந்தக் கால காதலா... அப்ப இப்போ ஒண்ணும் இல்லையா...?"
அவள் முகம் சுருங்கியது.
“தப்பு... தப்பு...!" கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
"நம்ப குட்டிப் பொண்ணோட ஆசையைத் தடுக்கறத்துக்கு நம்மால முடியுமா...?"
"முடியாதுதான்... ஸ்ரீ அழறாளே... போவோம். விஷயம் என்னன்னு பேசிப் பார்ப்போம்...!"
"மாப்பிள்ளை என்ன சொல்றார்...?"
''அவரப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? சரியான ஆள் பிடிச்சீங்கப்பா... எல்லாத்துக்கும் சிரிப்புத்தான்... இதுக்கும் சிரிக்கிறாராம்... அதான் இவளுக்கு ரொம்பக் கோபம்...!''
"அப்ப...!"
"கிளம்ப வேண்டியதுதான்... நமக்கும் இங்க தனியா இருக்க போரடிக்குது...!"
"சரி... பாஸ் சொல்லிட்டா உடனே கிளம்பிட வேண்டியதுதான்...!"
"இந்தக் கிண்டல்தானே வேண்டாம்னு சொல்றேன்...!"
ஹேமாவின் சிரிப்பே அலாதியானது.
டீக் கோப்பையில் மத்யமாவின் விரல்கள் தாளமிட்டுக் கொண்டிருந்தன.
"சொல்லுங்க பாட்டி... அம்மா வந்து அழுதாங்களா... என்னை நீங்க கூண்டிலேற்றி விசாரிக்கப் போறீங்களா...?"
ஹேமா சிரித்தாள்.
''பரவால்லையே... குழந்தைன்னு நினைச்சுட்டு இருந்தேன் ... நல்லாப் பேசறியே...!"
"லவ் பண்றது தப்புன்னு நீங்களும் சொல்லப் போறீங்களா...?”
''காதல் தப்புன்னு சொல்லலை கண்ணம்மா... ஆனா தப்பான ஆளைக் காதலிச்சுடக் கூடாதில்லை...!"
''பிரிஜுடிஸ்... கிருஷ்ணாவைப் பத்தி ஒண்ணுமே தெரியாம... இது மாதிரி எப்படிச் சொல்லலாம்...!"
"பாட்டி சொல்றது உனக்குப் புரியலை மத்யமா... அவரத் தப்பான ஆள்னு சொல்லலை. உனக்கு பிற்காலத்துல தப்பா பட்டுடக் கூடாது.. அதான் சொல்றா...!"
"தாத்தா... நீங்க சொல்றது புரியலை...!"
"நாஞ் சொல்றேன்... நான் உங்க காதலை எதிர்க்கலை...!"
"அம்மாவுக்குப் பிடிக்கலையே...!"
"காதல்னா அம்மாவும், அப்பாவும் எதிர்க்கணும்கிறது மரபு...!"
"அப்பா ஒத்துக்குவார்... அம்மாதான்...!"
''அத விடு... இது உன் வாழ்க்கை... உன்னோட தீர்மானம், நம்பிக்கைதான் முக்கியம். இந்த விஷயத்துல உன்னைவிட சிறந்த ஜட்ஜ் வேறு யாரும் இருக்க முடியாது...!'
''கிருஷ்ணாகிட்ட நீங்க ரெண்டு பேரும் பேசிப் பாக்குறீங்களா...?"
அவன் பெயர் சொல்லும் போதெல்லாம் அவள் கண்கள் பளபளத்தன.
இதுதான் காதல்.
எத்தனை வருடங்கள் மாறினாலும் காதலின் அடையாளங்கள் மட்டும் மாறுவதேயில்லை.
"வேண்டாம்... நான் அவனை இண்டர்வியூ பண்ணி உங்க காதலைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை..."
''தாங்க்யூ பாட்டி...!''
"ஆனா... உன் அம்மா... அவ ஒரு பையனைத் தேர்ந்தெடுத்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறாளே...!"
''எனக்கு இந்த சிஸ்டத்துல கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லே...!"
"எந்த சிஸ்டத்துல...?"
"இந்த அரேன்ஜ்டு மேரேஜ் சிஸ்டத்துல... கும்பல் கும்பலா வந்து என்னைப் பாத்து அசட்டுக் கேள்வி கேட்டு... வியாபாரம் பேசி... நல்ல விலைக்குப் பேசி... எவ்வளவு ஆபாசமா இருக்கு... மனசைத் தெரிஞ்சுக்காம முதல்ல உடம்பைத் தெரிஞ்சுக்கற வக்ரம்...எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை...!"
மத்யமா நீளமாகப் பேசினாள்.
"ஓஹோ... நான் என்னமோ நினைச்சேன். அந்தப் பையன் மேலே பிரியம் வச்சுத்தான் இப்படி ஆனதுன்னு நினைச்சேன். ஆனா இப்பத்தான் புரியுது. இந்த அரேன்ஜ்டு மேரேஜ் சிஸ்டத்துல உள்ள குரூரத்திலிருந்து தப்பிக்கத்தான் இந்த காதல் என்கிற மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்தியா...!"
கடுமையாகவே கேட்டேன்.
மத்யமா நகர்ந்து வந்தாள். என் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
"ப்ளீஸ்... ப்ளீஸ்... அப்படிச் சொல்லாதீங்க... ஐ லவ் ஹிம் ஸோ மச்...!"
அவள் கண்களில் நீர் துளிர்த்தது.
"ச்சீ... என்ன பேச்சு இது... குழந்தையை மிரட்டாதீங்க... உங்க புத்திசாலித்தனத்தைக் காட்டற நேரம் இது இல்லே...!"
ஹேமா பரிந்து பேசினாள்.
"ஒரு நிமிஷம்...!" மத்யமா விலகிப் போனாள்.
வரும்போது அவள் கையில் ஏதோ வைத்திருந்தாள்.
இள மஞ்சள் நிற அட்டை பச்சை மசியில் எழுத்துக்கள்.
கண்மணி!
எதார்த்தத்தில்
காதல் கூட
ரோஜாப் பூதான்,
முட்கள் சூழ்ந்திருப்பதால்.
நம்பு.
நம்மால் முடியும்!
ரத்தக் கீறலின்றிக்
காதல் பூ பறிக்கலாம்.
காதலிக்கிறேன்னு சொல்லலை. காதலிக்கிறயான்னு கேக்கலை. நாம் ஜெயிப்போம்னு சொன்ன தன்னம்பிக்கையில்தான் தாத்தா கிருஷ்ணாகிட்ட நான் மயங்கினேன்...!"
ஹேமாவைப் பார்த்தேன்.
தலையசைத்தாள்.
"வாழ்த்துகள் மத்யமா... உங்க கல்யாணம் என் பொறுப்பு...!”
மத்யமா துள்ளினாள்.
பின்குறிப்பு:-
கல்கி 13 பிப்ரவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்