தூய தமிழ் போயே போச்சு! எங்கும் எதிலும் 'தமிங்கிலம்' வந்தாச்சு!

Tamil
Tamil
Published on

தமிழில் அதிகமான சமஸ்கிருதச் சொற்கள் சேர்ந்த போது, அதனை மணிப்பிரவாள நடை என்றனர். தற்போது தமிழ் மொழியில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்து ‘தமிங்கிலம்’ எனும் புதிய நடையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது, தமிழ் மொழியின் பேச்சிலோ, எழுத்திலோ ஆங்கிலச் சொற்களின் பயன்பாடும், ஆங்கில இலக்கணக் கட்டமைப்பும் அதிகமாக இருக்கும் பேச்சையோ, எழுத்தையோ தமிங்கிலம் என்கின்றனர். சிலர் இதனை தமிங்கிலிஷ், தங்கிலிஷ் என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம் என்பது வட்டார மொழி வழக்கு அல்ல. தமிங்கிலம் என்பது தமிழ் மொழியின் திரிபு என்று சொல்லலாம். 

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்த தமிங்கிலம் அதிக அளவில் பயன்பாட்டிலிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியில் இந்தியா மற்றும் இலங்கையில் கல்வி, நிர்வாகம், சட்டம் உள்ளிட்ட துறைகளின் அரசுப் பயன்பாட்டு மொழியாக ஆங்கில மொழி இருந்ததால், பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மொழியின் பல சொற்கள், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகப் பயன்பாட்டிலிருந்த தமிழ் மொழியுடன் கலந்து விட்டன என்று சொல்கின்றனர். 

இதே போன்று, தமிழ் மொழியோடு, தனக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்திப் பேசினால், தம்மை படித்தவராக, அல்லது உயர் வர்க்கத்தவராக அடையாளப்படுத்தலாம் என்கிற எண்ணத்தில், தமிழ் மொழியுடன் பல ஆங்கிலச் சொற்களைக் கலந்து பயன்படுத்துகின்றனர். இதற்கு, காலனித்துவக் காலத்தில் ஆங்கிலம் படித்தோர் மட்டும் உயர் கல்வியை அல்லது உயர் பதவிகளைப் பெற்றதன் தொடர்ச்சியான மனப்பாங்கு என்று கூறலாம். 

இதையும் படியுங்கள்:
முருகப்பெருமானுக்கு தமிழ் மேல் உள்ள பிரியம் பற்றித் தெரியுமா?
Tamil

தமிழ்நாட்டில் ஆங்கிலம் படிப்பது ஒன்றுதான் சிறந்த கல்வி என்கிற எண்ணத்தில், ஆங்கில வழிக் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வியளிக்கும் பள்ளிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இதற்கு, தமிழ் மொழியில் எளிதாக உயர் கல்வி பெறும் வசதி இல்லை என்பது ஒரு காரணம் என்று சொல்லலாம். அதிக வருவாய் தரும் கல்விகளான மருத்துவம், பொறியியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பல துறைகளில் தமிழ் மொழியில் கல்வி கற்பது இயலாததாகவே இருக்கிறது. கால வேகத்திற்கு ஏற்ற வகையிலும், உலகமயமாதல் எனும் வகையிலும் அறிவியலின் வளர்ச்சிக்கேற்றபடி, தமிழ் மொழி வளர்ச்சியடையாமல் பின் தங்கியிருப்பதால் தமிங்கிலம் தவிர்க்க முடியாததாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இதன் நீட்சியாக, ஊடகங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் தெரியாத அல்லது சரியான தமிழ் உச்சரிப்புத் தெரியாத தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதேப் போன்று, தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில் தமிங்கிலத்தில் எழுதுவோர் அதிக அளவில் உள்ளனர். இதைப் பின்பற்றிப் பலரும் தமிங்கிலம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இந்த இழிவான நிலையிருக்கிறது என்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம் பெயர்ந்து வாழும் பிற நாடுகளில் இத்தகைய இழிநிலை இல்லை என்றும் சொல்லும் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இந்நிலையைப் போக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:
ஜெர்மன் விமானத்தில் தமிழ்!
Tamil

இவ்வேளையில், தூயதமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும், தூயதமிழில் பேசுபவர்களைக் கண்டறிந்து மாவட்டத்திற்கு ஒருவருக்கு ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கப்படுகிறது. தூயதமிழில் எழுதப்பெற்ற மரபுக்கவிதை நூல் ஒன்று, புதுக்கவிதை நூல் ஒன்று தேர்வு செய்யப்பெற்று, அந்நூலாசிரியர்களுக்கு நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படுகிறது. இதே போன்று, தூயதமிழை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அச்சிதழ்களில் ஒன்று, தொலைக்காட்சி / வலைத்தளம் ஒன்று என இரு ஊடகங்கள் தேர்வு செய்யப்பெற்று, தூயதமிழ் ஊடக விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com