சிறுகதை – கருணை!

ஓவியம் : ராமு
ஓவியம் : ராமு

-என். பாஸ்கர்

காலை பூஜை முடிந்து தன் தனி அறையில் வந்து அமர்ந்தார், தொழிலதிபர் சக்கரவர்த்தி. நெற்றியில் விபூதிக்கீற்று. லேசான முன் வழுக்கை. எதிராளியின் மனோபாவத்தை எடை போடும் கூர்மையான கண்கள். சுமாரான உயரம். மாநிறம். ஆனால் முகத்தின் கம்பீரம் பார்ப்பவரை வசீகரிக்கும்.

அவரின் உதவியாளன் குமார் பவ்யமாய் உள்ளே வந்தான்.

''குட்மார்னிங் சார்."

"எஸ் குமார்."

"உங்களைப் பார்க்க ஓர் இளைஞர் வந்திருக்கார். உங்களுக்குச் சொந்தம்னு சொல்றார்!"

''ஓகோ. சரி வரச் சொல்லு."

குமார் வெளியே சென்று அந்த இளைஞனை அழைத்துக்கொண்டு வந்தான்.

"மோகன் நீயா! எப்போ வந்தே? அப்பா எப்படி இருக்கார்?" என்று அன்பொழுக விசாரித்த சக்கரவர்த்தி, "நீ என்ன பண்றே?" என்றார்.

இதையும் படியுங்கள்:
ஓ மணப்பெண்ணே! இதையெல்லாம் கவனி 6 மாதங்களுக்கு முன்னே!
ஓவியம் : ராமு

''படித்து முடித்து ரெண்டு வருஷம் ஆச்சு சார். வேலை கிடைக்கலே. நீங்க சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் உடனே கிடைச்சுடும்!" என்றான்.

"இந்த ரெண்டு வருஷமா என்ன செஞ்சே?”

"சும்மாதான் சார் இருந்தேன். பேப்பரில் பார்த்து வேலைக்கு விண்ணப்பிச்சுக்கிட்டு இருந்தேன்.

குமாருக்கு அந்த இளைஞனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. முதலாளி நிச்சயம் உதவுவார் என எதிர்பார்த்தான்.

"இதோ பாரு மோகன், இன்னும் முயற்சி பண்ணு வேலை கிடைச்சுடும். என் சிபாரிசுக் கடிதத்துக்கெல்லாம் இப்ப மதிப்பு இல்லேப்பா" என்று தட்டிக் கழித்தவரை வியப்புடன் பார்த்தான்.

இளைஞனின் நிலை இரக்கப்படும்படி இருந்தது. ஆனால், முதலாளி மனம் இளகவில்லையே!

டுத்த நாள் இன்னொரு இளைஞன் உள்ளே வந்தான். பிரகாஷ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

''சொல்லு பிரகாஷ்."

"சார், பன்னிரண்டு வகுப்புக்கு மேலே படிக்க முடியலே. வீட்டுப் பொருளாதாரம் அப்படி. ஆட்டோமொபைல் கடையிலே வேலை பார்க்கறேன். அவங்க கொடுக்கற சம்பளம் போதலே. ஆனால், இந்த மூணு வருஷத்துல தொழிலைக் கத்துக்கிட்டேன். இப்ப சொந்தமாச் சின்ன அளவுல நானே கடை நடத்தலாம்னு பிரியப்படறேன்."

“ஓகோ!"

"ஆனால், என்னை நம்பிக் கடன் கொடுக்கவோ, பணம் கொடுக்கவோ ஆளில்லை. நீங்க பார்த்துக் கொஞ்சம் உதவினால் "நான் முன்னுக்கு வந்துடுவேன்.

அவனிடம் இரண்டு, மூன்று கேள்விகள் கேட்டார் சக்கரவர்த்தி.

"எவ்வளவு பணம் ஆகும்னு நினைக்கறே கடை ஆரம்பிக்க?"

"முப்பதாயிரம் ஆகும் சார்."

''என்னிடமிருந்து எவ்வளவு எதிர்பார்க்கறே?"

''பத்தாயிரம் ரூபாய்."

"அப்போ மீதி?''

'எனக்காக நீங்க ஜாமீன் கையெழுத்துப் போட்டால் வங்கியிலே இருபதாயிரம் கடன் கொடுக்கிறதாச் சொன்னாங்க. என் உழைப்பு மூலமா அதை மாசாமாசம் அடைச்சுக்கிட்டு வருவேன்."

இதையும் படியுங்கள்:
முதுமை கோடுகளை நீக்கி, இளமையை தக்கவைக்கும் எண்ணெய்!
ஓவியம் : ராமு

"குட்” என்றார் சக்கரவர்த்தி திருப்தியாய்.

நன்றி சொல்லிவிட்டு, பிரகாஷ் வெளியே சென்றான் முகமலர்ச்சியுடன்.

"என்ன குமார், ஏதோ கேட்க ஆசைப் படறே போலிருக்கே?" என்றவரைத் திகைப்புடன் பார்த்தான்.

தன் மனத்தைப் படித்து விட்டாரே என்ற ஆச்சர்யம் அவனுக்கு.

"ஆமாம் சார். ஒரு சந்தேகம்..."

"சந்தேகமா? அதை ஆரம்பத்துலேயே தெளிவு பண்ணிக்கறதுதான் நல்லது."

''நீங்க பிரகாஷுக்கு உதவினது சரிதான். ஆனால், அதுக்கு முன்னாடி, வேலைக்குச் சிபாரிசுக் கடிதம் கேட்டு வந்தாரே உங்கள் சொந்தக்கார இளைஞர் ஒருவர். அவருக்கு ஏன் உதவ மறுத்திட்டீங்க?  பிரகாஷுக்கு ஜாமீன் கையெழுத்தும் போட்டு, பத்தாயிரம் பணமும் தரணும். ஆனால், அவருக்கு வெறும் கடிதம்தானே தரணும்” என்றவனைப் புன்னகையுடன் பார்த்தார் சக்கரவர்த்தி.

''பிரகாஷுக்கும், மோகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப்பா."

என்ன சார்?"

"ரெண்டு வருஷமா வேலை கிடைக்கலேன்னு, மோகன் சொன்னான் இல்லையா?"

சார்.”

"ஆனால் இந்த ரெண்டு வருஷமா என்ன செஞ்சேன்னு கேட்டதுக்கு அவன் என்ன பதில் சொன்னான்?"

"வேலை தேடிக்கிட்டு இருந்ததாச் சொன்னார்."

"கரெக்ட். அவன் விரும்பறது உழைப்பை இல்லை. சட்டைக் காலரில் கறை படாத வேலை. நல்ல சம்பளம். சோம்பேறித்தனமான வாழ்க்கை. இந்த ரெண்டு வருஷமா வீட்டுல உட்கார்ந்து சாப்பிட்டதுக்கு நடுவுலே, அவன் வேற ஏதாவது தொழிலைக் கத்துக்கிட்டு இருக்கலாமே! உழைக்கத் தயங்கற வறட்டுக் கெளரவம். அதுதான் நம்ம நாட்டு இளைஞர்களோட பெரிய பலவீனம். புரியுதா?" தலையாட்டினான் குமார்.

''ஆனால், பிரகாஷோட பேச்சில் முன்னேறத்துடிக்கும் ஆவல் இருக்கு. உழைக்கணுங்கற வெறி இருக்கு. அவன் முப்பதாயிரத்தையும் உதவியாய்க் கேட்காம, பத்தாயிரம் மட்டும் கேட்டதிலிருந்து தெரியுது அவனோட நம்பிக்கையும், உழைப்பில் இருக்கிற ஆர்வமும். அதனாலதான் பிரகாஷுக்கு உதவினேன். அவனுக்கு மறுத்தேன். நாம செய்யற உதவி யாரையும் சோம்பேறியாக்கிடக் கூடாது பாரு, அதனாலதான்!" என்றவரை ஆமோதிப்புடனும், மதிப்புடனும் பார்த்தான் குமார்.

பின்குறிப்பு:-

கல்கி 12  ஜூலை  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com