‘ஃபங்கஸ்’ எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்க வல்லது தேங்காய் எண்ணெய். இது கூந்தல் பராமரிப்புக்கு மட்டுமல்ல, சரும பராமரிப்புக்கும் குறிப்பாக முகத்திற்கு நிறைய நன்மைகள் தரக்கூடியது.
இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப் களைவதற்கு பயன்படுத்தினால் சருமம் அதிக பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும். இதனை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து ஸ்க்ரப்பராக முகத்திற்கு தடவி மசாஜ் செய்ய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள், சின்ன சின்ன முடிகள் நீங்கி முகம் பளிச்சிடும்.
தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை ஃபேஸ் வாஷ் போல மசாஜ் செய்து முகம் கழுவி வர, முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமாகும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமம் பட்டுப்போல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும்.
வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. இதனை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க சிறந்த மாய்ஸ்சரைசராக வேலை செய்வதோடு, சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைந்தால் இளம் வயதிலேயே சருமம் முதிர்ச்சி அடையத் தொடங்கும். கொலாஜன் பற்றாக்குறையினால் சருமத்தில் சுருக்கம், தொய்வு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளவும், இறுக்கத் தன்மையுடன் பராமரிக்கவும் தேங்காய் எண்ணெயை இரவு தூங்கச் செல்வதற்கு முன் முகத்தில் சிறிதளவு தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இ ஆகியவை முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும். இதனால் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். முகத்தில் ஏற்படும் தழும்புகள், கீறல்கள், சுருக்கங்கள், முதுமைக் கோடுகளை தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் போக்கலாம். சரும எரிச்சல், அரிப்பு, புண்களுக்கும் சுத்தமான தேங்காய் எண்ணெயை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு உதடுகள் அடிக்கடி உலர்ந்து போய் தோல் உரியும். இதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர உதடு ஈரப்பதமாக மாறுவதுடன் பளபளப்பாகவும் இருக்கும். இரவு படுக்கச் செல்லும் சமயம் புருவங்கள் மற்றும் கண் இமைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி வர, அடர்த்தியான புருவம் மற்றும் கண் இமைகள் அழகைக் கூட்டும்.
எலுமிச்சை பழச்சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட, சருமத்திற்கு சிறந்த டானிக்காகும்.