அந்தப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பலருக்கு மத்தியில், பெரியவர் ஒருவர் டிப்டாப்பாக கோட் சூட்டுடன் அமர்ந்திருந்தார். கண்டக்டர் டிக்கெட் எடுக்க அருகே வந்தபோது பாக்கெட்டில் தடவிப் பார்க்கிறார். பர்சைக் காணவில்லை. எவனோ ஒருவன் ஆட்டைய போட்டுவிட்டான்! பெரியவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
கண்டக்டரின் காதருகே ரகசியமாய் சொன்னார்: ''சார் நான் இதே வண்டியிலேதான் பல வருஷமா வர்றேன். நாளைக்குக் கொடுத்து விடுகிறேன்.’
''நானும் இதே வண்டியிலேதான், பல வருஷமா வர்றேன். சொல்லுங்க... என்ன விஷயம்?'' இது கண்டக்டர்
''பர்சைக் காணோம் சார்.’’
''யார்கிட்ட காதுல பூ சுத்துறீங்க? இப்படி எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீங்க'' கண்டக்டர் காட்டுத்தனமா சத்தம் போட்டார். பர்ஸ் போனதுகூட பரவாயில்லை. மானமும் மரியாதையும் போனதே என்று மனம் கலங்கிக் கொண்டிருந்தபோது, கண்டக்டர் ''கீழே இறங்குய்யா'' என்று அதட்டினார்.
வண்டியே வேடிக்கை பார்க்க, பெருத்த அவமானத்தோடு அவர் இறங்க எத்தனித்தபோது, அந்த வண்டியிலே இருந்த ‘டிப்-டாப்’ ஆளு ஒருத்தன் பரிதாபப்பட்டு, ''ச்சே காலம் கெட்டுப் போச்சு. ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு கூட மனிதாபிமானம் இல்லாமப் போச்சே'' என்று கூறி, டிக்கெட் எடுத்து அந்தப் பெரியவர் கையில் கொடுத்து அவரை அமரவைத்தான்.
இரண்டு பேரும் இறங்க வேண்டிய இடம் வந்தது. பேருந்தைவிட்டு இறங்கி செல்லும்போது அந்தப் பெரியவர் கையெடுத்துக் கும்பிட்டு, ''தம்பி, நீ நல்லா இருக்கணும். அறிமுகமே இல்லாத நீ ஒரு அவசர நேரத்தில் செய்த உதவியை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமாட்டேன். கண்டிப்பாக அந்த 20 ரூபாயை ஜி-பேயில் உனக்கு அனுப்பி வைக்கிறேன். உன் நம்பர சொல்லு'' என்றார்.
''சே, சே’ இந்தச் சின்ன அமவுண்ட எல்லாம் திரும்பத் தரவேண்டாம் சார். ஆண்டவன் எப்பவும் உங்க பர்ஸ் நிறைய பணத்த இனிமேயாவது வைக்கட்டும், சார்’ என்று மரியாதையோடு அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
''இவன் பர்சில் இருந்த 3000 ரூபாயில் 20 ரூபாய் போனா மீதம் 2980 ரூபாய்தான் நமக்கு இன்றைய முதல் வரும்படி'' என்று வானத்தைப் பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே திரும்பி நடந்தான் உற்சாகமாக.
எதிரே திருப்பத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று அந்த நொடிப் பொழுதில் அவன் மீது வேகமாக மோதிச் சென்றது. சம்பவ இடத்திலேயே அவன் இறந்துவிட, விபத்து குறித்த தகவல் தெரிந்து போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. இறந்தவனின் அடையாளத்தைக் காண அவன் பாக்கெட்டையெல்லாம் துழவியது. அவன் பாக்கட்டில் ஒரே ஒரு டிரைவிங் லைசன்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு விபத்தில் இறந்தவனின் அடையாளத்தை கண்டுபிடித்தது போலீஸ்.
பக்கத்து கடை ஒன்றில் பிரபல தொலைக்காட்சி ஒன்று விபத்து குறித்த நிகழ்ச்சியை, ‘சற்று முன்’ தலைப்பின் கீழ் அலற விட்டுக்கொண்டிருந்தது. செலவே பண்ணாம டிவியில வந்து பிரபலமாகிவிட்டான் அந்த ‘டிப்-டாப் ஆசாமி. ஆனால், அவனால்தான் பார்க்க முடியவில்லை.
ஓரிடத்தில் தங்காத செல்வத்திற்கு வந்த வழியே போகவும் தெரியும்தானே?