சிறுகதை - கோடை மழை!

ஓவியம்: ஜெயராஜ்...
ஓவியம்: ஜெயராஜ்...

-மேலாண்மை பொன்னுசாமி

ப்படியாகும் என்று கனாகூடக் கண்டதில்லை, பரமசிவம். உள்ளுக்குள் இடிவிழுந்த பச்சை மரமாக திகைப்பில் அரண்டு போனான். 'மனுசன் புத்தி இம்புட்டுத் தாழ்ந்துபோகுமா? இன்றைக்கு நடந்தது நிஜம்தானா' இன்னும் அவனால் நம்பமுடியவில்லை. ஒரு மாயமான சந்தேகம்கூட அவனுள் மின்னி மறைந்தது.

அடக் கொடுமையே... இந்த வெட்கக்கேடான கேவலக்கூத்தை எப்படிப் போய் பெண்டாட்டியிடம் சொல்றது? கரிபூசிக்கொண்ட மூஞ்சியோடு எப்படிப்போய் நிக்கிறது? எம்புட்டு ஏளனமாய்ப் பார்ப்பாள்?

ரொம்ப முட்டிப்பாக இருந்தது, பரமசிவத்துக்கு.

திருமங்கலம் தேவர் சிலைக்கு வடக்கே வரிசையாகக் கடைகள். கடைகளின் முன்பு பஸ்ஸுக்குக் காத்திருக்கிற ஜனக்கூட்டம். கூட்டத்தில் ஒட்டாமல் அந்நியமாய்... இவன். வந்துபோகாத புதுஇடம். அந்நியமான சூழல், 'வெறுக், வெறுக்கென முழித்துக்கொண்டிருந்தான், கோலத்தில் ஒட்டாத ஒற்றைப் புள்ளியாக.

மனுச மக்கள் முகங்களை ஏறெடுத்துப் பார்க்கவே மனம் சகிக்கவில்லை. முகம் கொடுத்து யாரிடமும் பேச மனசில்லை. மனம் முழுக்க பரவிக் கிடந்த வெறுப்பு, வேப்பங் கசாயம் குடித்தவன்போல. மனுச வர்க்கத்தையே காறித் துப்பணும் போலிருந்தது.

கால், கை, முகறை லட்சணத்தோடு நிமிர்ந்து நடக்குவறனெல்லாம் மனுசனா? மனுசக் கொணம் அத்துப்போன நெழல்களையெல்லாம், மனுஷங்க என்று எப்படி நினைக்க? ஈரமத்த ஜெம்மங்க. ஒலர்ந்துபோன பிரேதங்க.

அவனுள் தாறுமாறான நினைவோட்டம். கொதிக்கிற மனசுக்குள் தளதளக்கிற சோற்றுப் பருக்கைகளாக... நினைவுகள். நினைவின் வாலைப் பிடித்துக்கொண்டு இழுபடும் பரமசிவம்.

மணி ஏழரையாகி விட்டது. அவ்வளவாகக் குளிரில்லை. ஆடிக் காற்று இப்பவே லேசுபாசாகத் தலைகாட்டி அசைத்துப் பார்க்கிறது. ரோடு முழுக்க கடை வரிசையின் நிழல். பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறுகிற வெள்ளை பஸ்கள், கலர்பஸ்கள். எதிர்வரிசையில் கடைகள். ரிக்ஷாக்களில் இழுத்து மூடித் தூங்குகிற மனிதர்கள். ஆளுயரச் சுவரில் வர்ணத்தில் பாரதி படம். பக்கத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டு விளம்பரம். அகல அகலமான வர்ண எழுத்துக்கள்.

கண்ணெல்லாம் பீழை அப்பியிருக்க பரிதாபக் கோலத்தில் ஒரு பிச்சைக்காரக் கிழவர்,  இவனைச் சுற்றியுள்ள ஜன அடர்த்திக்குள் தடுமாறி வந்தார். சொங்கு பற்றிய உடம்பு. கந்தலாகிப்போன எலும்புக் கோர்வை மரக் குச்சியின் பலத்தில் ஊர்ந்து வருகிற அவர், ஒவ்வொரு ஆளிடமும் கையேந்துகிறார். "அய்யா அய்யா நாதியத்த சீவன் ஏதாச்சும் குடுங்கய்யா தர்மம் பண்ணுங்கய்யா.”

மனசைப் பிசைய வைக்கிற நைந்த குரல்,  அந்தக் குரலின் அவலம், யாரையும் போய்த் 'தொட'வில்லை. வெள்ளையும் சொள்ளையுமான ஆட்கள், அருவருப்போடு ஒதுங்குகின்றனர். வெறுப்பின் வார்த்தைச் சிறல்கள்.

"ச்சே! இந்தத் தொல்லையே பெரிய இழவாப் போச்சு."

"கிழடெல்லாம் 'போய்ச்' சேர வேண்டியதுதானே? பூமியிலேயிருந்து ராஜ்யம் ஆளப் போகுதாக்கும்?"

உலர்ந்த மனசுகளின் சுவாசமாய் முணுமுணுப்புகள். ஈரமற்றுப்போன இருதயங்களைச் சுமந்து அலைகிற பிரேதங்களின் துர்நாற்றம்.

ஒரு வாலிபன் - ஒரு கணவன் - ஒரு தகப்பன் - ஒரு மாமன் -  ஒரு தாத்தா. எல்லாமாகவும் இருந்திருப்பார் இந்தக் கிழடு. எல்லாராலும், கைவிடப்பட்டவர். ஈரமற்றுப்போன மனித உறவுகளின் அடையாளமாய்.. இந்த நாதியத்த சீவன்.

பரமசிவத்துக்குப் பரிதாபமாக இருந்தது. தனது தாத்தாவே 'இப்படி' திரிவதாகப் பிரமை. இவன் பக்கத்தில் அவர் வந்தவுடன், பையைத் துழாவினான். ஒரு ரூபாய் நாணயத்தை அவரது உள்ளங்கை தொட்டு வைத்தான்.

சுற்றியிருந்த பிரேதங்கள்... இவனை ஏளனமாகப் பார்த்தன.

இவனுக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. மனசு கிடந்து எரிந்தது. வடக்காமல் அண்ணாந்து பார்த்தான், மதுரையிலிருந்து பஸ் வருகிறதா என்று.

இதையும் படியுங்கள்:
ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
ஓவியம்: ஜெயராஜ்...

ந்தது. கை நீட்டினான். பஸ்ஸில் உட்கார இடம் கிடைத்தது. நல்லவேளை என்று மனசு ஆசுவாசப்பட்டது. கண்டக்டர் பக்கத்தில் வந்தார். "எங்க போவணும்?"

"ராசபாளையம்."

ராசபாளையம் போய்ச்சேர மணி பத்தாகிவிடும். சரியாக பத்து பத்துக்கு கோவில்பட்டி பஸ் புறப்படும். அதைப் பிடித்துவிட்டால்.... கலிங்கப்பட்டியில் இறங்கி... பொடி நடையாக நடந்தால், ரெண்டு மைலில் ஊர்.

சாப்பிட நேரமிருக்குமா? வெறும் வயிற்றோடு நடந்தால், ஆளைச் சாய்த்துவிடும் பசிக்கிறுகிறுப்பு. ஏறு வெயில் வேறு,  ஆனை வறுத்தெடுத்துவிடும். அதை நினைத்தால். இப்போதே உள்ளுக்குள் தகிக்கிற வெயில்.

"பாரு போன காரியம் பழம்'னு வந்து நிப்பேன், தெரியுமா? எல்லாரையும் போல நெனைச்சிராதே எங்க சுப்ரமணியத்தை" என்று கித்தாப்பாக சவால் விட்டுவிட்டு நம்பிக்கையோடு புறப்பட்டவன்.

கித்தாப்பெல்லாம் கிழிந்து... நார்நாராகி. ச்சே! சுப்ரமணியம் இப்படி மாறிட்டானே... என்னைக் கேவலப்படுத்திட்டானே... இப்படியும் விசுவாசம், மனித உறவுகள். இதுகளுக்கெல்லாம் அர்த்தமில்லையா? அபத்த நினைப்புகள்தானா? ச்சே!

பஸ்ஸின் ஜன்னலில் கறுப்புக் கண்ணாடி, அதன் வழியே பார்த்தான். வட்டமடித்து ஓடுகிற பருத்திக் காடுகள். கல்லைக் கண்ட நாயாக, விருட் விருட்டென்று பின்நோக்கி ஓடுகிற வேப்பமரங்கள். கருவேல மரங்கள்.. மஞ்சணத்தி மரங்கள்.. ஆடுகளை மேய்க்கிற ஆட்டுக்காரர்கள்... வேப்ப மரங்களில் மஞ்சள் மஞ்சளாய் பழக் கொத்துக்கள்.

கூலி வேலைக்கு லாயக்கற்ற குச்சி உடம்பு, சுப்ரமணியத்துக்கு. முழுத்த இளவட்டமான பின்னும், அம்மாவின் கூலி உழைப்பில் வயிற்றை நனைத்துக்கொண்டே. தெருவில் சும்மாவே சுற்றித் திரிந்தான். ஊரில் யாரும் அவனை உப்புக் கல்லுக்குக்கூட மதிக்க மாட்டார்கள். வெறும் பயலாகத் திரிந்த அவன் மீது... பரமசிவத்தின் அய்யா சங்கையா பார்வை விழுந்தது.

சங்கையா கைமுறுக்கான ஆள். சமுத்திரமான சம்சாரித்தனம். ரெண்டு ஜோடி காளை மாடுகள், வண்டி வைத்து பெரிய விவசாயம். தொழுவம் நிறைந்த கால்நடைகள். மூன்று சொந்தக் கிணற்றுப் பாசனம். வேறுசில கிணறுகளிலும் பங்குப் புஞ்சை. பசையுள்ள சம்சாரி. நெஞ்சிலும் நிறைய ஈரம்.

"என்னலே, முழுத்த எளவட்டமாயிட்டே. சும்மாவே தெருக்காட்லே திரிஞ்சா... என்ன அர்த்தம்?"

"பெறகென்ன செய்ய மாமா? வேறு வழியில்லியே.."

"வழி ஏதாச்சும் வைச்சிருக்கீயா?"

"கையிலே துட்டு துக்காணி இருந்தா சைக்கிள்லே ஏதாச்சும் ஏவாரம் பண்ணலாம்."

''ஏவாரம் பண்ணிருவீயா?"

''ஆசையிருக்கு. ஆளாகி விட முடியும்னு தெம்பு இருக்கு."

"அப்பச் சரி... ஆடி மாசம் முடியட்டும். ஒரு வழி பாப்போம்."

அவரது வார்த்தைகளில் மனசின் ஈரம். சொன்னபடியே ஆவணி மாதத்தில் முந்நூறு ரூபாய் தந்தார். "தொழுவத்துலே ஒரு பழைய சைக்கிள் கெடக்கு. எடுத்துக்க" என்றார்.

வாழ்க்கையில் தான் யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டுமென்ற வெறி, சுப்ரமணியனுக்கு. உப்புக்கல்லுக்குக்கூட மதிக்காத ஊர்க்காரர்கள் கண்முன்னால், வைரக் கல்லாக ஜொலித்துக் காட்ட வேண்டுமென்ற ஒரு வேட்கை.

சில்லறைப் பருத்தி வியாபாரம் செய்தான். சண்டு வற்றல், வேப்பமுத்து, ஆமணக்கு, எள் என்று எல்லாப் பொருளையும் சம்சாரிகளிடம் வாங்கி காசாக்கினான். மறுவருஷமே பெரிய வியாபாரியாகி விட்டான்.

வண்டிப் பாரமாக பருத்தி மருகைகளும், மிளகாய் வற்றல் மருகைகளும் ராசபாளையம் கமிஷன் கடைக்குப் போயிற்று. சங்கையாவின் மன ஈரம், உலர்ந்துகிடந்த அவன் வாழ்க்கை முழுக்க படர்ந்து... பயிர் பச்சைகள் முளைத்தன.

சுப்ரமணியத்துக்கு சங்கையாதான் பெண் பார்த்துக் கல்யாணம் 'மூய்த்து’ வைத்தார். திருமங்கலத்தில் பெண். ரொம்ப வசதியான வீடு. ஒரே பெண். அடித்தது யோகம். ஆள்... பெரிய ஆளாகி விட்டான்.

திருமங்கலத்திலேயே கடை ஒன்று கிடைத்தது. பெரிய அளவில் பலசரக்குக் கடை வைக்கப் போவதாக வந்து சொன்னான். சங்கையா பெருமிதத்தோடு வாழ்த்தியனுப்பினார். கையில் நூற்றியொன்றைத் திணித்து, திருநீறு பூசி ஆசி வழங்கினார்.

அப்போது போனவன், சங்கையா சாவுக்குத்தான் ஊர் வந்தான்.

ங்கையா சாவுக்குப் பிறகு.. அந்தக் குடும்பம், கவிழ்த்த தான்யப் பெட்டி மாதிரி சட்டென்று சரிந்துவிட்டது. பண்ணையார் நினைப்பில் மத்தியதர சம்சாரி மிதந்தாலும்... அவர் குடும்பம் நொறுங்குவதற்கு ரெண்டு கல்யாணம், ரெண்டு இழவு வந்தால்... போதாதா? சங்கையா மூன்று பெண் மக்களுக்கும், பெரும் தடபுடலாய்க் கல்யாணம் செய்தார். பரமசிவத்துக்கும் கல்யாணம். ஏழு ஊர் ஜனமும் வந்து பந்துகளாக ஆக்கி அவித்து கொண்டாட்டமாக நடந்த கல்யாணங்கள். சுற்றுபட்டி பத்து ஊர்களிலும் இந்தக் கல்யாணங்களைப் பற்றித்தான் ஒரு மாதமாய்ப் பேச்சு.

சங்கையா மண்டையைப் போட்ட பிறகுதான்... அதன் குட்டு நட்டு உடைந்தது. எல்லாம் பெரிய பெரிய கடன்கள். பத்திரக் கடன்கள்.

கடைசியாக பரமசிவத்துக்கு மிஞ்சியது... ஒரு ஓடு போட்ட வீடும், ஒரு கிணற்றுப் புஞ்சையும் மட்டும்தான். வாழ்ந்து கெட்டகுடிக்குரிய பரிதாபத்திற்குள் பரமசிவம்.

'நல்லது, பொல்லது' (கல்யாணம் - இழவு)களுக்கு கிராமத்திற்கு காரில் வந்து போகிற சுப்ரமணியம், பரமசிவத்தை வந்து பார்த்து நாலு வார்த்தை பேசாமல் போக மாட்டான். கௌரவம் பார்க்காமல், நன்றி விசுவாசம் குன்றாமல் எல்லாரிடமும் சொல்வான்.

''எனக்குக் குலதெய்வம் சங்கையா மாமாதான். அவர்தான் என்னை மேடேத்திவிட்டவரு. அவர் இல்லேன்னா... நா இன்னைக்கும் உப்புக் கல்லுக்குப் பெறாத பயலாத்தானிருப்பேன்."

மனசில் உள்ள உண்மையை நேர்மையோடும் பெருமையோடும் சொல்லுவான்.

ச்சே! என்ன மனுசப் பிறவிக! மனுசத் தன்மையில்லாத மனுசஜென்மங்க...

இதையும் படியுங்கள்:
பெண்களைக் கவரும் ஆண்களின் 5 தரமான தகுதிகள்!
ஓவியம்: ஜெயராஜ்...

ரமசிவத்துக்கு வீட்டில் ஏக நச்சுப் பிடுங்கல்கள். சிறு சம்சாரிக்குரிய பணநெருக்கடிகள். அதிலும் இந்த வருஷம் சொஸைட்டிகாரர்கள் 'ஜப்திகெடுபிடி வசூல்' என்று மூர்க்கமாய்க் களத்தில் இறங்கி விட்டதில்... இவன்பாடு நரகப்பாடாகி விட்டது.

ஜப்தி என்கிற அவமானச் சாவிலிருந்து குடும்ப கெளரவத்தை மீட்டியாகணுமே என்ற பதற்றத்தில் கையிலிருந்த பணம், கம்மல் மூக்குத்தி அடகு வைத்த பணம் எல்லாவற்றையும் அரித்துப் பொறுக்கி ரசீது போட்டு விட்டான்.

கண்மாய் மண் அடிக்க... குப்பையடிக்க... மிளகாய் விதை வாங்க... உழுக...கிடைபோ... நாற்றங்கால் போட... இப்படி நிறைய்ய அவசரங்கள். கையில் துட்டில்லை. ஊரில் புரட்டவும் வழியில்லை. கழுத்தாம்பிடியாக இருந்தது. கண்ணு முழிபிதுங்கியது.

வழிதெரியாமல் குருட்டுப் பூனை போல தடுமாற... வீட்டுக்குள் ஒரே சண்டை சத்தம். அழுகை புலம்பல். கோபமும் சாபமுமாய் வீடே கோடைகால வெக்கையாயிற்று.

அப்பத்தான்... நன்றி விசுவாசம் குன்றாமல் நல்ல நிலையில் - இருக்கிற சுப்ரமணியம் ஞாபகம் வந்தது. ஆனால் போகத் தயக்கம். அவனிடம் போய்க் கையேந்துவதா? நம்மைப் பற்றி என்ன நினைப்பான்? நம் குடும்பகௌரவம் குறையாதா? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு தயக்கங்கள். சலனங்கள். ஆயினும் - கழுத்தாம்பிடியாக இருக்கிற துட்டுச் சிக்கல்.

பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்கள், பிள்ளைகளுக்கு வந்து சேரும் என்பார்கள். பாவத்தை அனுபவிக்கிறோம். புண்ணியத்தையும்தான் அனுபவித்துப் பார்ப்பமே என்ற நினைப்பு. அதில் சுய சமாதானம்.

ரெண்டாயிரம் என்றால் போதும். ஓசியா?  வெள்ளாமையில் முதல் கடனாக இதை அடைத்துவிடலாம் என்கிற மனச் சமாளிப்பு. புறப்பட்டு விட்டான்.

நேற்றுச் சாயங்காலம். இவனைப் பார்த்தவுடன் சுப்ரமணியம் எவ்வளவு சந்தோஷப்பட்டான். "வராத ஆளு வந்துட்டீக" என்று ஒரு குழந்தையைப் போல குதூகலம் பொங்கி வழியச் சிரித்தான். தடபுடலான உபசரிப்பு. கடையிலும் சரி... வீட்டிலும் சரி... இவனை ஆசை ஆசையாகக் கொண்டாடினான், சுப்ரமணியம். என்ன ஏது என்று அக்கறையாக விசாரித்தான். பரமசிவம் தனது பாடுகளையெல்லாம் சொல்லச் சொல்ல... ரொம்ப வருந்தினான்.

''உங்களுக்கா... இந்தக் கஷ்டம் வரணும்? ஊரே கையெடுத்துக் கும்புடுற மாதிரி கோபுர வாழ்க்கை வாழ்ந்தவீடு" என்று உளமாரக் கசிந்தான். அசலான கசிவு.

பங்களாவின் மொட்டை மாடியில் ராத்திரி படுக்கப் போகிறபோது, பரமசிவத்தின் மனசில் பரம நிம்மதி. வந்த காரியம் கை கூடிவிடும் என்ற நம்பிக்கை. சந்தோஷ நினைவுகள் மயிலிறகாக மனசை நீவ, நல்ல உறக்கம்.

விடிந்தவுடன் சகலமும் இருண்டு விட்டது. சுப்ரமணியம் விட்டேற்றியாக பேசினான். வித்தியாசமான முகத் தோற்றம். கண்ணுக்குள் அடைக்கோழியின் சிடுசிடுப்பு.

ஆயில் மில்லுக்கான செக், பருப்பு மூட்டைகளுக்கான செக், சீரக மூட்டைகளுக்கான செக்- எல்லாம் பேங்கில் வந்து கிடக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் பணம் புரட்டிக் கட்ட முடியாத சிரமங்கள் பற்றி பொய்ச் சோகமாகப் புலம்பினான். ஈரமற்ற புலம்பல். ராத்திரிக்குள் என்ன ஆயிற்று? என்ன மாய மந்திரம்? கொடுத்து உதவுவதில் என்ன சிரமம்? எச்சிற்பருக்கை சிதறினால்... எறும்புக்குப் பத்துநாள் உணவு.

'விசுவாசத்துக்காக உதவி செய்தால்... அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்க முடியாமல் போகலாம். தாட்சண்யம் பார்த்தால்... அடிக்கடி வந்து பணம் கேட்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடலாம். வீண் தொல்லையாகிவிடும்' என்றெல்லாம் யோசித்திருப்பானோ.

கடைசியில் கைவிரித்து விட்டான். டீ வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட்டான் பாவிப்பயல். ஈரக்கசிவேயில்லாமல் முகத்தை இறுக்கிக்கொண்டான்.

பரமசிவத்துக்கு ஒரே வெட்கக்கேடாகி விட்டது. 'ஏண்டா இங்க வந்தோம்' என்றாகிவிட்டது. அற்பப்பயலிடம் வந்து கையேத்திட்டோமே. ஈரமத்து உலர்ந்த சக்கைப் பயலிடம் கேனத்தனமாய் மனுசத் தன்மையை எதிர்பார்த்து விட்டோமே.

இப்படியும் சொல்ல ஒருத்தனுக்கு மனசு வருமா? எங்கய்யாவினால் மேடேறிப் போனவன். அந்த நன்றி விசுவாசம்கூட இல்லாமல், மனம் கூசாமல் வெறும் கையை வீசிட்டானே...

இப்படியும் உலகத்தில் மனுசத்தன்மை அற்றுப் போகுமா? காலம் கெட்டுப் போய்விட்டது என்பது வாஸ்தவம்தான். ஆனால் இவ்வளவு மோசமாகவா கெட்டுவிட்டது? மனிதர்களே உலர்ந்து போகிற அளவுக்கா பாழாகிவிட்டது? அடக் கொடுமையே...

இதையும் படியுங்கள்:
30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!
ஓவியம்: ஜெயராஜ்...

ராசபாளையம் பஸ்ஸ்டாண்டிற்குள் வண்டிபோய் மூச்சுவிடவும் ஆளுக்குமுந்தி இறங்கினான், பரமசிவம். கோவில்பட்டி பஸ் புறப்படத் தயாராகி உறுமிக்கொண்டிருந்தது.

ஒரு நிமிஷம் பிந்தியிருந்தால்கூட பஸ்ஸைப் பிடித்திருக்க முடியாது. 'நல்லவேளை' என்று மனசு ஆசுவாசப்பட, பஸ்ஸில் ஓட்டமாய் ஓடிப்போய் ஏறிக்கொண்டான்.

முதுகுடியைக் கடந்தது, பஸ். இவனுக்குள் பசிக்கிறுகிறுப்பு ஏறுவெயிலின் உக்ரம். சுள்ளென்று காந்துகிற வெயில் கலிங்கப்பட்டியில் இறங்கி... ரெண்டு மைல் நடக்கணும் என்ற நிஜம், ஒரு மலை மாதிரி குறுக்கே நின்றது. நடக்க முடியுமா என்கிற மலைப்பு. நிமிஷத்திற்கு நிமிஷம் மலைப் பிரம்மாண்டமாகியது.

கலிங்கப்பட்டியில் இறங்குகிறபோது...

மணி பதினொன்றேகால். ஒரு டீ குடிக்கலாமா என்று நினைத்தான். மனசெல்லாம் சுப்பிரமணியத்தின் கசப்பு, பச்சைத் தண்ணீர் கூட குடிக்க மனசில்லை.

“என்ன ஆச்சு? போன காரியம் பழமா?" என்று கேட்கப் போகிற மனைவியை நினைக்க நினைக்க... பிடுங்கித் தின்கிற அவமான உணர்வு. அந்தக் கணத்தைச் சந்திக்கிற பயங்கரம், மனசுக்குள் மிரட்சி.

வடக்காமல் நடந்தான். பஜாரில் நிற்கிற எந்த மனிதரையும் பார்க்க மனசில்லை. சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சி. ஆர்.வி.எஸ். ஒர்க் ஷாப்பைக் கடந்து... தார் ரோட்டிலிருந்து விலகி.. மண்ரோட்டில் நடந்தான்.

உயர்ந்த பனை மரத்தின் ஓலைகளுக்கிடையில் சூரியன் துண்டுதுண்டாக உடைந்து எரித்தது. அக்கினித் துண்டுகள், உடம்பு முழுக்க அயர்ச்சி. உயிரே கழன்று போய்க்கொண்டிருப்பதைப் போன்ற சோர்வு. கண்ணெல்லாம் காந்தல். வாய் முழுக்க உலர்ந்து போய், கீழு தட்டில் வெடிப்பின் வலி, நடக்க முடியாத பலவீனம். வயிற்றை கவ்விப்பிடிக்கிற மாதிரியோர் உபாதை. அப்படியே உட்கார்ந்து விடலாமா என்கிற அளவுக்கு மனத்தளர்ச்சி.

பின்புறத்தில்... ஓர் அரவம்.

ஒரு சைக்கிளில் வந்துகொண்டிருந்த முத்துமாரி,  பக்கத்து ஊர்க்காரன். இவனைக் கண்டதும் சைக்கிளிலிருந்து இறங்கினான்.

“அடடே... பரமசிவம் அண்ணாச்சியா? எங்கேயிருந்து வாரீக?"

"திருமங்கலம் போயிருந்தேன்."

"ஊருக்குப் போகணுமா?"

"ம்"

"சைக்கிள்லே ஏறிக்கோங்க. நா வீட்லே கொண்ணாந்து விட்டுருதேன்."

''நீ உன்னோட ஊருக்குப் போகணும்லே?"

"அதுக்கென்ன? உங்களை உங்க ஊர்லே விட்டுட்டு... அப்புறமா நா ஊருக்குப் போறேன்."

"எதுக்கு...ஒனக்கு வீணாச் சிரமம்?"

"இதெல்லாம்... ஒரு சிரமமா? இந்தச் சின்ன வேலையிலே நா தேய்ஞ்சா போறேன்? உங்க அய்யா செய்கைக்கும், உங்க கொணத்துக்கும் முன்னாலே...இதெல்லாம் ஒரு சிரமமா?  இன்னும் என்னென்னமோ செய்யலாமே... மொதல்லே, ஏறுங்க கேரியர்லே."

அந்த நேரத்திற்கு இந்த உதவி பெரிய உதவிதான். முத்துமாரியின் சொற்கள், அவனுக்குள் கோடை மழையாக இறங்கி பரவசப்படுத்தியது.

பரமசிவத்துக்குள் ஒரு நீர்ச்சுனையின் குளிர்முகம். மனிதர்கள் இன்னும் உலர்ந்து விடவில்லை என்கிற நினைவுச்சுனை.

பின்குறிப்பு:-

கல்கி 04  டிசம்பர்1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com