சிறுகதை – மனிதன்!

ஓவியம்: ஜமால்
ஓவியம்: ஜமால்

-மதுமிதா

நாதஸ்வரத்தை ஒருவன் உறையிலிட்டுக் கொண்டிருந்தான். மேளம் வாசித்தவன் தயக்கத்துடன் அப்பா அருகில் வந்தான். அப்பா ஜமுக்காளத்தில் சரிந்திருந்தார். அம்மா பக்கத்தில் உட்கார்ந்து மெல்ல விசும்பிக்கொண்டிருந்தாள். அண்ணாதான் மேளக்காரனை சற்று நகர்த்திக்கொண்டு போனான். தூரத்தில் இருக்கும்போதே அண்ணாவின் குரல் வேகமாய்க் கேட்டது. அண்ணாவுக்குக் கோபம். யார் மீதென்று தெரியவில்லை.

இந்து இது யாருக்கோ நிகழ்ந்ததுபோல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கே சற்று ஆச்சர்யமாய்த்தானிருந்தது. எப்படி தன்னால் இவ்வளவு விட்டேத்தியாக இருக்க முடிகிறது? ஆனால், அப்பா பாவம்தான். அவர்தான் இந்தக் கல்யாணத்திற்காக நிரம்பச் சிரமப்பட்டார். அண்ணா கொஞ்சம் குஷால் பேர்வழி. கல்யாணத்துக்குப் பின் வீட்டை முற்றிலுமாகப் புறக்கணித்தான். அப்பா இவளுக்கென்று நிறைய வரன்கள் கொண்டு வந்தார். ஒன்றும் சரியாக அமையவில்லை. எல்லாம் பணம்தான்.

அப்பா ஏழை குமாஸ்தா. இப்படி, அப்படி வாங்கத் தெரியாதவர். இந்த மாப்பிள்ளை முடிந்ததில் அப்பாவுக்கு நிரம்ப சந்தோஷம். இவளுக்கு ஒன்றும் பெரிதாகச் சந்தோஷமில்லை. இவளின் கனவுகள் எல்லாம் கருகி வெகுநாட்களாகி விட்டன. அப்பா இந்தக் கல்யாணத்திற்காகத் தகுதிக்கு மீறிக் கடன் வாங்கியிருந்தார். எல்லாம் வீண். இந்தக் கல்யாணம் நின்று போய்விட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு முன்பாகக்கூட இந்தக் கல்யாண மண்டபம் குழந்தைகளின் கூச்சலும், பெண்களின் அலைச்சலுமாய்த் தானிருந்தது. டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் தந்தை புன்னகை மாறி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தபோதுதான் எல்லாம் மாறிவிட்டது. மண்டபத்தில் கூச்சல் கிளம்பியது. அப்போதுதான் இந்துவுக்கு கண்மை எழுதிக் கொண்டிருந்தார்கள். அம்மாதான் முதலில் ஓடி வந்தாள்.

இதையும் படியுங்கள்:
தசைகள் பலவீனமாக உணர்கிறீர்களா? இந்த சத்து குறைபாடாக இருக்கலாம்.. ஜாக்கிரதை! 
ஓவியம்: ஜமால்

"போச்சுடி... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்... ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போறாங்க...!" அப்பாவும், அண்ணாவும் ஓடியிருந்தார்கள்.

சரியாக அரை மணி நேரம். இருவரும் வந்துவிட்டார்கள். "அப்போது அப்பா ஜமுக்காளத்தில் சரிந்தவர்தான். அண்ணாதான் சொன்னான். அவர் செத்துவிட்டார். அம்மா சுவரில் மோதிக்கொண்டு அழுதாள்.

''சனியனே... சனியனே...!" அண்ணா இவளைப் பார்த்துக் கத்தினான். இவளுக்குக் கோபம் வரவில்லை. அழுகையும் வரவில்லை. பயம்தான் வந்தது. அதுவும் அப்பாவை நினைத்துத்தான். அப்பாவுக்கு நிறைய இழப்பு. பணக் கஷ்டம் மட்டுமல்ல. மனக்கஷ்டமும். எழுந்து போய் அப்பாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. அப்பாவைச் சுற்றிலும் கூட்டம். ஆள் ஆளுக்குப் பேசினார்கள்.

இவள் மேல் அநியாயத்துக்கு இரக்கப்பட்டார்கள்.  சமையல் ஆள் வந்து அண்ணாவின் தோள் தொட்டான். "சாப்பாடு எல்லாம்...!" "கொண்டு போய்க் கொட்டு... இந்தக் கல்யாணம் நடக்காது...!" அண்ணா ஹிஸ்டரிக்கலாகக் கத்தினான்.  அண்ணி அவனருகில் போய் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். ஓர் ஆறுதலுக்காம்.

இந்துவுக்குச் சிரிப்பு வந்தது. எல்லாம் நேரம். கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் கலைய ஆரம்பித்தது. நெருங்கியவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தார்கள். மாமாதான் அப்பாவைக் கொஞ்சம் காப்பி சாப்பிடச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பா எழுந்து உட்கார்ந்தார். அங்கிருந்தே இவளைப் பார்த்தார். தலையிலடித்துக் கொண்டார்.

"போச்சும்மா... எல்லாம் போச்சு...!''

“அப்பா... அழாதீங்க...!”

மனசுக்குள் அப்பாவை சாந்தப்படுத்தினாள்.

“அப்பா... ஆழாதீங்க...!”

கல்யாணம் நின்றுவிட்டது. ஆம். இதில் நம் பங்கு எதுவுமில்லை. பணம் நஷ்டம்தான். விடு. இன்னொருமுறை இந்த அவஸ்தை வேண்டாம். அண்ணா விடவில்லை.

"என்ன பண்ணப் போறீங்க இப்ப?"

அண்ணா வேகமாய்க் கேட்டான்.

“தெரியலைடா...!”

அப்பாவின் குரல் கம்மியிருந்தது.

"இப்ப சொல்லு... இது தரித்திரம்.. இவ்வளவு செலவு பண்ணாதேன்னு சொன்னேன்... கேட்டீங்களா? இனிமே அவ்வளவுதான்... தாலி கட்டறதுக்கு முன்னாலே அப்பன் போய்ட்டான்...!

அண்ணா குரூரமாய்ப் பேசினான்.

“டேய்... டேய்.... அது பாவம்டா...!” புலம்பினார்.

அண்ணா மேல் கோபம் வந்தது. ராஸ்கல்!

பெண் சுகத்துக்காகப் பெற்றவர்களை உதறித் தள்ளிய நாய் அதட்டுகிறது. அடக்கிக்கொண்டாள். மெல்ல எழுந்தாள். அப்பாவை நோக்கி நடந்தாள். அப்போதுதான் அவன் உள்ளே நுழைந்தான். சூர்யா. சூர்யகுமார். மாப்பிள்ளை.

இதையும் படியுங்கள்:
அடக்கடவுளே!.. உடலில் மக்னீசியம் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? 
ஓவியம்: ஜமால்

அப்பா சடாரென எழுந்தார். பாய்ந்து போய் அவன் விரல்களைப் பற்றிக்கொண்டார். மெல்லக் குலுங்கினார். இந்து ஆச்சர்யத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூர்யா மெல்ல அப்பாவைத் தட்டிக்கொடுத்தான்.

"நடக்கக் கூடாதது நடந்திடுச்சு... தப்பு யார் மீதும் இல்லே... நான் இப்ப போகணும்... வேற வழியில்லே... கல்யாணத்தை நிறுத்தித்தான் ஆகணும்... ஆனா... நீங்க கலங்கக்கூடாது... இந்துதான் என் மனைவி... இந்துவுக்கு ஆறுதல் சொல்லுங்க... இன்னொரு நாள் இந்தக் கல்யாணம் நடக்கும்...!”

மெல்ல அப்பா விரல்களைப் பிரித்து, விலகி, தலைகுனிந்தவாறு வாசல் நோக்கி நடந்தான்.

பின்குறிப்பு:-

கல்கி 03  ஜனவரி 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com