சிறுகதை; மேரேஜ் டே!

Short Story in tamil
ஓவியம்; ராமு
Published on

-கிருஷ்ணா 

"நாளைக்கு நீங்க லீவு போடறீங்க."

சாம்பாரை தட்டில் ஊற்றியபடியே உத்தரவிட்டாள்.

''என்ன? ஓ லீவா? எதுக்கு? யாராவது விஐ.பி வராங்களா?

"ஆமாம். நாம இணையறதுக்குக் காரணமாய் இருந்த வி.ஐ.பி."

"யாரு, தரகரா?"

என் கேலிக்கு, முறைத்தாள்.

"நாளைக்கு நம்ம கல்யாண நாள். பத்தாவது ஆனிவர்சரி. நிறைய திட்டம் போட்டிருக்கேன். முதல்ல கோயில், அப்புறம் ஹோட்டல் டின்னர். சினிமான்னு ப்ரோக்ராம் வைச்சிருக்கேன்."

"முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே."

கண் சிமிட்டல் புரிந்து வெட்கப்பட்டாள்.

"நாளைக்கு லீவு நீங்க. ஓகே?'

"உத்தரவு! காலையிலே போன் பண்ணி ஆபீஸ்லே சொல்லிடலாம்.

இப்ப ஏதும் அட்வான்ஸாய் உண்டா?

"வழியாம போய் கை கழுவுங்க."

காலையில் போன் வந்தது ஹெட் ஆபிசிலிருந்து.

ஃபாரின் டெலிகேட்ஸ் விசிட். எங்கள் எம்.டியும் வருகிறார். திடீர் ப்ரோக்ராம் மாறுதல். இன்றும், நாளையும் மூச்சு விட முடியாது.

ஏமாற்றத்தில் முகம் தொங்கிப்போன நீலாவின் புலம்பலையும் மீறி, என் காதில் விமானத்தின் சத்தம். ஓடினேன் ஏர்போர்ட்டுக்கு. பாவம் நீலா.

ஆறே கால் அடி உயரத்தில் 'ஹஷ், புஷ்' ஆங்கிலத்தில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் முன் எங்கள் எம்.டி. மிகவும் குள்ளமாகத் தெரிந்தார்.

மதியம் பன்னிரண்டு மணிக்குள் ஆபீசை தலைகீழாக மாற்றி, புத்தம் புது பொலிவைக் கொண்டு வந்தேன்.

புது ப்ராடக்ட் கொலாபரேஷன். கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங். எம்.டி. ராஜ மரியாதை கொடுத்தார் அவர்களுக்கு.

பாலி எதிலின், ஃபைபர் என்று சிறிய ப்ரொஜக்டர் மூலம் அந்த வெள்ளைக்காரன் தங்கள் ப்ராடக்டை விளக்கிக்கொண்டிருந்தான்.

அல்வாவை வாய்க்குள் போட்டு மெல்வதைப்போல ஆங்கிலத்தை மென்று கொண்டிருந்தான் வெள்ளைக்காரன்.

எனக்குள் அடிக்கடி நீலாவின் முகம் தோன்றி மறைந்தது.

பாவம் அவள்! எவ்வளவு ஆசையாய் திருமண நாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தாள்?

என்ன செய்வது?

பிரைவேட் கம்பெனி. அதிலும் ப்ராஞ்ச் மானேஜர் நான். சம்பளம் கொடுக்குமளவுக்கு உழைப்பையும் கொடுத்தாக வேண்டுமே.

"இட் இஸ் வெரி யூஸ்ஃபுல் இன் கெமிக்கல் இன்டஸ்ட்ரிஸ். அவர் ப்ராடக்ட் ப்ளேஸ் எ வைடல் ரோல் இன்... "

அல்வாவை இன்னும் வேகமாய் மென்றுகொண்டிருந்தான்.

சடக்கென கான்பரன்ஸ் ஹால் லைட் எரிந்தது. முடித்து விட்டான் டெமான்ஸ்ட்ரேஷனை

"ஹௌ ஈஸ் இட்?"

எம்.டி. என்னைப் பார்த்தார்.

"ஓகே!"

ஒப்பந்தம் கையெழுத்தானது. எம்.டி.யும் வெள்ளைக்காரர்களும் கை குலுக்கிக்கொண்டனர்.

நாளை மதியம் இரண்டு மணிக்கு ஃப்ளைட்.. அதற்குள் ரிப்போர்ட் தயாரித்தாக வேண்டும். ரிப்போர்ட் எழுத வேண்டுமென்றால், அந்த ப்ராடக்ட் பற்றியும், சாதக, பாதகம் பற்றியும் உள்வாங்கி யோசிக்க வேண்டும்.

பி.ஏ.வை அழைத்தேன். பம்பரமானது ஆபீஸ் முழுவதும்.

ரவு ஒன்பது மணியாகிவிட்டது அன்றைய கச்சேரி முடிய. முத்துக்கள் ரெடி. நாளை காலை வந்ததும் கோத்துவிட்டால் போதும். கொத்துக் கொத்தாய் இருந்த விவரங்களைச் சேர்த்தால் ரிப்போர்ட் ரெடி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 5 ஸ்டார் அங்கிள்!
Short Story in tamil

நல்ல ப்ராடக்ட் என்றுதான் தோன்றியது. நிச்சயம் கம்பெனியின் மதிப்பு உயரப் போகிறது ஷேர் மார்க்கெட்டில்.

"முரளி, புரிஞ்சதா எல்லாம்? நாளைக்கு வந்ததும் நீங்களும், அனுபமாவும் இந்த ரிப்போர்ட்டை லேசர் பிரிண்டில் அழகாய் புக்லெட் மாதிரி தரணும். காலையில் பதினோரு மணிக்கு என் டேபிளில் இது இருக்கணும்..."

நிம்மதியாய் மூச்சு விட்டேன். மூளைக்கு ஓய்வு கிடைத்ததும், மனசு விழித்துக்கொண்டது.

நீலா சாப்பிட்டாளா, இல்லையா? லிவில் வீட்டிற்கு போன் செய்து கேட்டிருக்கலாமே! இந்த டென்ஷனில் அது மறந்துவிட்டதே. வீட்டுக்குப் போகும்போது ஏதாவது வாங்கிப் போகலாமா?

முரளி தயங்கி நிற்பது கண்டேன்.

"என்ன? எதும் சந்தேகமா?"

"இல்லை...அது... ஒரு மணி நேரமாவது பர்மிஷன் வேணும் நாளைக்கு!"

"வாட்? கோ டு ஹெல் மேன்! மொத்தமாகவே நின்னுக்கறியா? டெர்மினேஷன்தான், ஜாக்கிரதை."

என் டென்ஷன் வெடித்துவிட்டது. முரளி சுருங்கிப் போன முகத்துடன் மன்னிப்புக் கேட்டான்.

அடுத்த பத்து நிமிஷத்தில் ஆபீசை விட்டு வெளியே வந்தேன்.

காரை எடுக்கும்போதுதான் கவனித்தேன். ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டிருந்தான் அவன்.

"முரளி!”

அழைத்தேன். பாவம், மிகவும் கடித்துவிட்டேன். சின்சியர் ஆள் இவன்.

"என்ன சார்?"

ஸ்கூட்டரை தள்ளியபடி அருகில் வந்தான்.

'சாரி! ரொம்பவும்...."

''ஓகே, பரவாயில்லை சார்."

"எதுக்கு பர்மிஷன் வேணும்?"

''நாளைக்கு என் மேரேஜ் டே. காலையிலே கோவிலுக்குப் போகணும்னு மனைவி ஆசைப்பட்டாள். முழுநாள் லீவு கேட்டால் தப்புன்னு தெரியும். ஆபீசே தீப்பத்திக்கிட்ட மாதிரி பரபரன்னு இருக்கே. அதனாலேதான் ஒன் அவர் பர்மிஷன்....."

நீலாவின், ஏமாற்றத்தில் தொங்கிப் போன முகம் நினைவில் எழுந்தது.

முகம் தெரியாத இவன் மனைவி மேல் பரிதாபம் மூண்டது.

"ஓகே! என்ஜாய் யுவர் மேரேஜ்டே. ஒரு மணி நேரம் பர்மிஷன் எடுத்துக்க."

வாழ்த்தியபடி கை கொடுத்தேன்.

பின்குறிப்பு:-

கல்கி 14  ஜூலை 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com