
இரண்டு நாட்களாக சந்தியாவும் பாலாவும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. திருமணமாகி 6 வருடங்களுக்குப்பின் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தி சொல்லொணாத மகிழ்ச்சி அளித்தது…. ஆனால் அதே மனைவி பிறந்தகம் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதும், அதுவும், பாலாவின் தங்கை கீதா பிரசவத்துக்கு வந்து மாத கணக்கில் தங்கி இருந்தாள் என்று சுட்டிக் காட்டி, தனக்கு அந்த உரிமை இல்லையா என்று கேட்பதும், அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை. நூறு சதவிகிதம் நியாயமே என்றாலும், பாலாவின் மனம் ஏனோ ஒப்பவில்லை.
அன்றும் பூசல் தொடர்ந்தது. காலை ஆபிஸ் கிளம்பிய போது, “வரேன்“, என்று ஒற்றை வார்த்தையில் அவனும், பதிலுக்கு “டிபன்”, என்று அவளும் ஒற்றை வார்த்தையோடு லஞ்ச்-பாக்ஐ நீட்டியதும், அவனுக்கு சிறிது வேடிக்கையாக இருந்தாலும், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு காரைக் கிளப்பினான்.
அவள் சொன்ன விதம் சற்று நெருடலாக இருந்தாலும், அவளது ஆசை நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றுதான். நாளை ஃப்ளைட் டிக்கெட் புக் செய்துடலாம் கோயமுத்தூருக்கு. அத்துடன் ஒரு பரிசும் கொடுக்கலாம், என்று எண்ணியவன், மாலை வீடு திரும்புகையில் ஷங்கர் லால் நகைக்கடையில் பார்க் செய்து உள்ளே சென்றான்.
ஒரு ஜோடி தோடு என்று ஆரம்பித்து, உற்சாக மிகுதியில், ஒரு சிறிய செயின் வித் மாட்சிங் பென்டன்ட் என்று ஒரு செட் நகை வாங்கி விட்டான். பில் பே பண்ணியதும், ஷங்கர் லால் ஜுவல்லரியின் டிரேட் மார்க்கான பிரசித்தி பெற்ற சிறிய ரெட் & வொயிட் ஸ்டிரைப்டு வெல்வெட் பாக்ஸில் நகைகளை அடுக்கி பாக்ஸை ஒரு அலங்கார பையில் போட்டு, “இந்தக் காதணி எங்கள் நியூ இன்ட்ரொடக்ஷன். அதற்கு மேட்சாக நீங்கள் தேர்ந்தெடுத்த செயின் அண்டு பென்டன்ட் சூபர்ப்! பெஸ்ட் விஷஸ் சார்”, என்று பவ்யமாக கடைக்காரர் கொடுத்த பையை வாங்கி கொண்டான்.
பிறந்தகம் போகப் பரிசோடு பெர்மிஷன்…. மனைவியின் ரியாக்ஷனை கற்பனை செய்து கொண்டு ஒரு கையில் பரிசு, மறு கையில் ஆள் காட்டி விரலில் கார் சாவியை சுற்றி கொண்டு ஸ்டைலாகப் படி இறங்கிய பாலாவை நோட்டம் விட்டன ஒரு ஜோடிக் கண்கள். அதை உணராமல், “ஐ ஆம் ஸோ லக்கி, தேங்க் யூ காட்” என்று முணுமுணுத்துக் கொண்டு, அருகிலுள்ள மிகப்பெரிய ‘டைமண்ட் மாலில்’ சந்தியாவுக்கு பிடித்த சாக்லேட் வாங்க ‘மால்’ஐ நோக்கி நடந்தான்.
ஒரு ஜோடிக் கால்கள் பின் தொடர்ந்தன..
நந்தா என்ற நந்தகுமார் அன்று பிக் பாக்கெட் அடிப்பது என்று முடிவு செய்து விட்டான். சூழ்நிலை அப்படி. “வேண்டாம்” என்று சகாக்கள் தடுத்தும் கேளாமல், 'ரேஸர் ராஜா'விடம் கடன் வாங்கினான் நந்தா. பெட்டிக் கடை வைத்துக் கையை சுட்டுக் கொண்டதுதான் மிச்சம். சில பல எச்சரிக்கைகளுக்குப்பின், நேற்றிரவு, “தோபாரு, இன்னியோட சரி… நாளை காசு வரலைன்னா, கீஸுடுவேன்!”, என்று கூறிச் சென்று விட்டான் 'ரேஸர்'.
நண்பர்கள் அவ்வளவு தடுத்தும் கேளாமல் இந்த ரௌடியிடம் டீல் பண்ணியதற்கு தன்னை நொந்து கொண்டு, இந்தக் கடனைத் தீர்த்து விட்டு எங்காவது கண் காணமல் சென்றுவிட முடிவெடுத்தான் நந்தா. கடனைத் தீர்க்க வழி? இருக்கவே இருக்கிறது பழைய தொழில். தன் லக்கி 5 ஸ்டார் டீ-ஷர்ட்டை அணிந்து கொண்டு, டார்கெட்டைத் தேடி அலைந்த அவன் கண்கள் பாலாவைக் குறிவைத்தன.
இலேசான துள்ளல் நடையுடன் கடையில் ஒரு முறை கார் சாவியை நழுவவிட்ட பாலா, அதை எடுக்க குனிந்தபோது, அந்த சிறிய ரெட் & வொயிட் வெல்வெட் பெட்டி நழுவி விழுந்ததை கவனிக்கவில்லை; நந்தா பார்த்து விட்டான்.
ஆஹா! நகைப் பெட்டி! தன் 5 ஸ்டார் டீ-ஷர்ட் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! சபாஷ், என்றெண்ணி, நொடியில் குனிந்து எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வாயிலை நோக்கி நடந்தான் நந்தா.
'இதோ, ஆச்சு! இன்னும் 5 செகன்ட்ஸ்ல நான் கடையை விட்டு வெளியே வந்துவிடுவேன்.... என் கண்டத்திலிருந்தும்தான்'... நந்தா தன் கட்டுக்கடங்காத டென்ஷனை வெளிக்காட்டாமல் இயல்பாக நடந்து வாயிலை நெருங்கிவிட்டான். "எஸ்! எஸ்! ஹூ இஸ் லைக் மீ ! எங்காவது நார்த் இந்தியாவைப் பார்க்கப் போக வேண்டியதுதான்... மும்பையில் தனது பால்ய சிநேகிதன் சுரேஷ் இருக்கிறான். நம்மைவிடக் கில்லாடி... அவனுடன் கூட்டுச் சேர்ந்து ஏதாவது வங்கியில் கை வைக்கலாம்.... பெரிதாக ஏதாவது சுருட்டிக் கொண்டு மலேசியா, சிங்கப்பூர் என்று ஓடி விடலாம்... இதோ, ஜஸ்ட் எ ஃப்யூ மோர் ஸ்டெப்ஸ்”...
அதே சமயம் பின்னாலிருந்து ஒரு சிறுவன், “5 ஸ்டார் அங்கிள்“ என்று பெருங்கூச்சலுடன் அவனை நோக்கி ஓடி வந்தான். ”இந்தாங்க உங்க சாக்லேட்“, என்றபடி ஒரு 5 ஸ்டார் பாரை நீட்டினான். செயற்கரிய செய்து விட்ட பெருமையுடன். அவனது கூச்சல் அங்கு பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
சற்றும் எதிர்பாராத இந்த குறுக்கீட்டினால், முழுவதுமாகத் தடுமாறிப்போன நந்தா, "நோ! இது என்னுதில்லை“ என்று கத்தரித்தாற் போல மறுத்து அவசர அவசரமாக வெளியேற நினைக்கையில், கூடவே வந்த அந்தச் சிறுவனின் அம்மா, “நீங்க கீழே குனிந்து ஏதோ சாமானை எடுத்துக் கொண்டிருந்தீர்கள்... அப்போ உங்கள் அருகே கீழே கிடந்த 5 ஸ்டார் சாக்லேட்டை உங்க பாக்கெட்ல இருந்து தவறி விழுந்ததாக நினைச்சுகிட்டான். சாரி ஃபார் தி டிரபிள்” என்றாள். எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது.
சிறுவனின் ஆர்வம் ததும்பிய முகம் வாடும்படி வெறுப்பும் கோபமுமாக ரியாக்ட் செய்த நந்தா, எது நடக்க கூடாது என்று பயந்தானோ, அது நடந்து விட்டது... சுற்றியுள்ளோர் கவனம், முக்கியமாக எக்ஸிட் வாயிலில் இருந்த செக்யூரிட்டியின் கவனம் இவன் பேரில் விழுந்தது.
நகை காணாமற் போய்விட்டதை அப்போது கவனித்த பாலா, கடை மேனேஜரிடம் புகார் செய்து, உடனே அதைத் தேட ஏற்பாடு செய்யக் கோரினான். நுழைவாயிலில் ஏற்பட்ட திடீர்க் கலவரத்தை கண்டு இருவரும் அங்கு விரைந்தனர்.
திருதிருவென விழித்துக் கொண்டிருந்த நந்தாவைச் சுற்றி அங்கு சிறிய கூட்டம். நடந்ததை கேட்ட ஃப்ளோர் மானேஜர், செக்யூரிடி ஸ்டாஃபை நோக்கி, “ஓகே! வேலையைப் பாருப்பா”, என்றார். ஆனால், அவரது கவனம் நந்தாவின் மேல் விழுந்தது.
“ஐ திங்க் யூ கான் கோ நெள”, என்றவாறு அவனை மேலும் கீழும் பார்த்தார். அவரது கூரிய பார்வை நந்தாவின் பான்ட் பாக்கெட்டில் லேசாகத் துருத்திக் கொண்டிருந்த ரெட் & வொயிட் ஜுவெல் பாக்ஸின் மேல் விழுந்தது. நந்தாவின் கலவரம் நிறைந்த முகமே அவனைக் காட்டிக் கொடுத்தது.
ஜுவெல் பாக்ஸை ஈஸியாக உருவி பாலாவிடம் ஒப்படைத்த ஃப்ளோர் மானேஜர், கையும் களவுமாக மாட்டிக் கொண்ட திருடனை ஒப்படைக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்தார்.
அகஸ்மாத்தாக ஹீரோவாகி விட்ட தன் பிள்ளையை அணைத்துக் கொண்டாள் அவன் அம்மா. அனைவரும் வியந்து ஆரவாரம் செய்ய, நகையைத் திரும்பிப் பெற்ற பாலா, “வெல் டன், குட்டிப் பையா, வெல் டன்“ என்று தோளில் தட்டிக் கொடுத்தான்!
“ஒரு டவுட் கோபி”, என்றாள் அவன் அம்மா. “ஏன் 5 ஸ்டார் அங்கிள்னு அந்த திருடனை கூப்பிட்டாய்?”
“கீழே விழுந்ததும் 5 ஸ்டார், அவன் டீ-ஷர்டிலும் 5 ஸ்டார்! எலிமென்டரி, மை டியர் வாட்சன்!“ என்றான் கோபி அம்மாவிடம் பெருமை பொங்க!