சிறுகதை – மழலை!

ஓவியம்: பிரபுராம்
ஓவியம்: பிரபுராம்

-வி.எஸ். நடராஜன்

குழந்தை "ங்க், ம்" "ங்க், ம்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தன் சின்னஞ்சிறு கை கால்களை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

"என் செல்..ல்..ல்..லம், பேசப்போறியா? - எங்கே 'அம்மா' சொல்லு. -  அம்மா, அ... ம்...மா! - சொல்லு சொல்லு..அம்மா" குழந்தையை கொஞ்சினாள் நீலா.

"டேய் முரளி குழந்தை 'அம்மா' சொல்லப் போராண்டா! இதோ பார் 'அம்மா' சொல்றான்.

"'அம்மா' சொல்லு, சொல்லு 'அம்மா'....!''

அருகிலிருந்த கணவன் முரளியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அவன் ஒண்ணும் அம்மா சொல்லமாட்டான். அப்பான்னுதான் சொல்லப் போறான், நீ வேணும்னா பார்" என்று அவளை வம்புக்கிழுத்தான் முரளி.

"போடா, 'அம்மா'தான் சொல்லுவான். எந்தக் குழந்தையாவது முதல்லே 'அப்பா' சொல்லுமா? 'அம்மான்னு'தான் சொல்லப் போறான். இதோ பார் 'ம் ம் ம்' சொல்றான் பார்!" கணவனை அதட்டினாள்.

"அதெல்லாம் இல்லை, அவன் அப்பாதான் சொல்லப் போறான். இதோ அவன் 'அப்... அப்'னு சொல்றான் பார்! 'அப்பா'தான் முதல்லே வரும்."

"அதெல்லாம் இல்லை அம்மாதான் சொல்லப்போறான்."

"இல்லை அப்பாதான் சொல்லப்போறான்."

"போடா, அம்மாதான் சொல்லுவான்."

"இல்லே அப்பாதான்.”

"இல்லே அம்மாதான்."

"அப்பாதான்."

“அம்மாதான்."

இரண்டு பேரும் சண்டைப் போட்டுக்கொண்டார்கள். இவர்கள் இருவரின் சண்டையைக் காண பிடிக்க வில்லையோ என்னவோ குழந்தை ஒரு கொட்டாவியை விட்டு விட்டு பின் தூங்கிப்போய் விட்டது.

"ஊஸ்... குழந்தை தூங்கிவிட்டான்... உன் குரலைக் காட்டாதே! முழிச்சக்கப் போறான். வா ஹாலுக்குப் போகலாம்" என்று குழந்தையை தொட்டிலில் விட்டுவிட்டு கணவன் முரளியை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் நீலா.

“ஏய், நீலா நீ பண்றது ஒண்ணும் நல்லாவேயில்லை,” குழந்தையை பார்க்க வேண்டுமென்று ஊரிலிருந்து வந்திருந்த நீலாவின் தாயார் அவளைக் கடிந்துக்கொண்டாள்."

"நான் என்ன பண்ணினேன். என்னை ஏன் கோவிக்கறே?"

"பின்னே என்னடி, மாப்பிளய வாடா, போடா, நீ, வா, போன்னு மரியாதையில்லாமே பேசறே. என்னடி இது அநியாயமா இருக்கு.! வீட்டுக்காரர்கிட்டே இப்படியா மரியாதை இல்லாம நடந்துப்பே?!"

"அதானால என்ன?! என் புருஷனைத்தானே நான் கூப்பிடறேன். இதெல்லாம் இப்பொ டிரெண்ட். உனக்கு புரியாது. இதையெல்லாம் பெரிசு பண்ணாதே! அது வந்து, அது எங்களுக்குள்ளே இருக்கிற ...ஒரு ...ஒரு... இண்டிமெசியைக் காட்டறது."

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் சமத்தாக சாப்பிட 10 எளிய டிப்ஸ்!
ஓவியம்: பிரபுராம்

"போடி, இண்டிமெசியாவது வண்டிமசியாவது,? அதுக்காக நீ, வா, போ வாடா, போடான்னா கூப்பிடுவே? ஆமா, மாப்பிள்ளை உன்னை வாடி போடின்னு கூப்பிடுவாரா?"

"எங்கே, கூப்பிட்டுடுவானா? கூப்பிடட்டுமே பார்க்கலாம்! ஆமா, அவனுக்குத் தெரியாதுன்னு சொல்லிக் கொடுக்கப் போறியா?"

"நான் ஏண்டி சொல்லிக்கொடுக்கப் போறேன். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது! எப்படியாவது போ, காலம் கெட்டுக்கிடக்கு, அந்தக்காலத்திலே கல்யாணம் பண்ணின புதுசுலே உங்கப்பா முகத்தை நிமிர்ந்துகூட பார்த்ததில்லை நான். நீ என்னடான்னா மாப்பிள்ளையே வாடா போடான்னு கூப்பிடறே."

"என்னது!? என்னது!? அப்பா முகத்தை நிமிர்ந்து பார்ததில்லையா?! அப்படீன்ன எப்படி மா என்னை பெத்தே?"

"போடி, நான் என்னமோ சொல்ல வந்தா நீ என்னமோ கேக்கறே?"

"ப்ளீஸ், ப்ளீஸ், சொல்லுமா!"

"போடி, அம்மாகிட்டே பேசற பேச்சா இது, போடி." அம்மாவின் முகத்தில் இப்பொழுது வெட்கம் சூழ்ந்துகொண்டது.

"டேய், முரளி இங்கே வா, உன் மாமியார் உன்கிட்டே ஏதோ சொல்லணுமா" அம்மாவை கேலி செய்வதற்கு கணவனையும் கூட அழைத்தாள் நீலா.

"உன்கிட்டே வந்து பேச்சு கொடுத்தேன் பார் தப்பா போச்சு. மாப்பிள்ளைய ஏண்டி கூப்பிடறே இப்போ? போடி, நான் உள்ளே போறேன்" என்று வெட்கத்துடன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள் நீலாவின் தாயார்.

அந்தச் சமயம் குழந்தையின் அறையிலிருந்து மழலைக்குரல் ஒன்று கேட்டது.

"ஞே, முள்றி" என்று குழந்தை தன் மழலையில் அழைப்பதுபோல் இருந்தது.

“ஐயோ, என் குழந்தை பேசறான்... அதுவும் என்னை மாதிரியே பேசறான்!" மகிழ்ச்சியில் குழந்தையின் அறையை நோக்கி ஓடினாள் நீலா!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com