சிறுகதை - அமைச்சர் போட்ட உத்தரவு!

ஓவியம்; அரஸ்
ஓவியம்; அரஸ்

-    கிருஷ்ணா

மணா காப்பி கிளப். அந்த ஊரின் பிரதான சாலையாரத்திலேயே இருந்தது. பழைய கட்டடம்தான். வியாபாரமும் சுமார்தான். ஆனால் அதைப்பற்றி அதன் முதலாளி ரமணய்யர் கவலைப்படவில்லை.

''வரும் வருமானமே போதும். கிராமத்துல மூணு வேலி நிலம் இருக்கு. சாப்பாட்டுக்குக் கவலையில்லை. மேல் செலவுக்கு இந்த ஹோட்டல் வருமானம் யதேஷ்டம்" என்பார்.

ஆனால் இந்த காப்பி கிளப்புக்கென்றே பல வாடிக்கையாளர்களும் உண்டு. காப்பியாகட்டும், டிபன் ஆகட்டும் தரமாய் இருக்கும். ரமணா காப்பி கிளப்பின் இன்னொரு ஸ்பெஷாலிடி ரமணய்யரின் உபசரிப்பு. ஒவ்வொருவரையும் தனித்தனியாய் விசாரிப்பார். பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் குடும்ப விஷயம் பொதுவாகிவிடும். அவ்வளவு அன்னியோன்னியம் அவர் பேச்சில்.

இப்போதுகூட அப்படித்தான்.

"வாங்கோ சார். என்ன சாப்பிடறேள். ஏதோ பெரிய யோசனை போலிருக்கு..." என்று வரவேற்றார்.

"ப்ச, போங்க ஐயரே..."

"என்ன இப்படி அலுப்பு? எனக்குப் புரிஞ்சுபோச்சு. வயிற்றைத் திருப்திப்படுத்திட்டாலே பாதி விரக்தி ஓடிடும். டேய் அம்பி, சாருக்கு ஸ்பெஷல் ரவா போடுடா" என்று குரல் கொடுத்தார்.

"பையன் பிரச்னைதானே? கவலையை விடுங்கோ. அவன் மூல நட்சத்திரம்தான். இப்ப லக்னத்துல சனி. அதான் படுத்தறான். ஆண் மூலம் அரசாளும். கவலையேபடாதீங்கோ" என்று ஆறுதல் படுத்தினார்.

ரமணய்யரின் ஸ்பெஷாலிடியே அதுதான்.

வாயில் எப்போதும் நல்ல வார்த்தைதான் வரும். அவரிடம் பகிர்ந்துகொண்டால் அவரது பேச்சின் மூலம் ஒரு தைரியம் கிடைக்கும்.

''எப்படி ஐயரே உங்களாலே இப்படி சிரிச்ச முகமா இருக்க முடியறது?"

"நாம மத்தவாளுக்கு நல்லது நினைச்சா நமக்கும் பகவான் அதையே கொடுத்துட்டுப் போறான். வாய் எதுக்கு இருக்கு? நாலு நல்ல வார்த்தைகளைப் பேசத்தானே?" என்றார்.

அப்போது கட்சிக் கரை வேட்டி, சட்டையுடன் இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர்.

''அடேடே, வாங்கோ. என்ன சாப்பிடறேள்?"

"நாங்க சாப்பிட வரலே ஐயரே. உங்களோட பேச வந்திருக்கோம்."

''பேஷாய் பேசலாம்! அதுக்கு முன்னாடி ஒரு வாய்க் காப்பியாவது குடிங்கோ. முதல் டிகாக்ஷன். ஏ கிளாஸ் காப்பி" என்று கடைப் பையனுக்குக் கண் காண்பித்தார்.

அவர்கள் காப்பி குடிக்கும் வரை காத்திருந்தார்.

"ரெண்டு ரூபாய்தான் பில்" என்று நீட்டினார்.

"ஐயரே..."

"சொல்லுங்கோ...''

"நாங்க தலைவர் மாரிசாமியோட நண்பர்கள்."

"ஓஹோ. சந்தோஷம்."

"தலைவரைப் பற்றி..."

"தெரியாம என்ன? ஊர் நகராட்சித் தலைவர். ஆளும் கட்சி ஆள். ஆள்பலம், பணபலம் உள்ளவர். அவரைப் பற்றி குழந்தைக்குக் கூடத் தெரியுமே"

"அப்ப நாங்க வந்த வேலை சுளுவா முடிஞ்சுடும்."

"என்ன வேலை?"

"ஐயரே, நம்ம தலைவர் பக்கத்துக் கட்டடம் இரண்டையும் வாங்கிட்டார்." ''அவர் வாங்கறதுக்குக் கேட்கணுமா?"

"உங்க கடையையும் கொடுத்திட்டீங்கன்னா எல்லாத்தையும் இடிச்சுட்டு ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டலாம்னு அவர் திட்டம்."

இதையும் படியுங்கள்:
பார்த்தவுடன் வருவதும்... புரிதலில் வருவதும்...
ஓவியம்; அரஸ்

"நாராயணா!"

"என்ன ஐயரே?"

''இதைக் கொடுத்துட்டு நான் என்ன பண்றது?"

"நீங்க எதிர்பார்க்கறதுக்கு மேலேயே காசு தரோம் ஐயரே. அதை வைச்சு வேற இடத்துல இந்தக் கடையை நடத்துங்களேன்" என்றவர்களைப் பார்த்தார்.

"இது காசு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை."

"என்ன சொல்றீங்க ஐயரே?"

"எங்க பரம்பரைச் சொத்து இது. எங்கப்பாவுக்கு இதே கல்லாவிலே உட்கார்ந்திருக்கும்போதுதான் உயிர் போச்சு. பணத்துக்கும் மேலே ஒரு பிடிப்பு இந்த இடத்து மேலே எனக்கு."

"என்ன பத்தாம்பசலித்தனமாய்ப் பேசறீங்க?"

"உண்மைதான். இந்த இடம் எனக்கு வாழ்க்கையிலே ஓர் உற்சாகத்தைத் தருது. எங்க அப்பா, தாத்தாவெல்லாம் இங்கேயே அரூபமாய் இருந்துண்டு என்னோட வாழற மாதிரி ஒரு பிரமை. அது மட்டுமில்லே, என் ஹோட்டல் டிபனை விட என்னோட பேசணும்னு விரும்பி வர வாடிக்கையாளர் வேற இருக்கா. இதையெல்லாம், இந்த சுகத்தையெல்லாம் வார்த்தையிலே கொண்டு வர முடியாது. அனுபவிச்சாத்தான் புரியும்."

"முடிவா என்ன சொல்ற ஐயரே?"

"நான் விற்கறதா இல்லை."

"நாங்க யாருன்னு தெரியுமில்லே? "

"நன்னாத் தெரியும். உங்களோட மோதற அளவுக்குப் பலசாலி இல்லை நான். சாதாரண நடுத்தர வர்க்கம். இருந்தாலும் பகவான் இருக்கார். அவர் நினைக்கிறபடிதானே நடக்கும் எல்லாம்" என்றார் அமைதியாய்.

"ஒரே வாரத்துல உன் கடை காணாமப் போயிடப் போகுது பாரு" என்று மிரட்டிவிட்டு வெளியேறினர் இருவரும்.

"என்ன இப்படி மிரட்டிட்டுப் போறாங்க?" என்றார் தணிகாசலம் இத்தனை நேரம் வேடிக்கை பார்த்தவராய்.

"நான் யாருக்கும் கெடுதல் நினைக்கறதுல்லே. காலி பண்ணணும்னு அவன் நினைச்சா காலி பண்ணித்தானே ஆகணும். கவலைப்பட்டு என்னாகப் போறது? சரி, நீங்க காப்பி சாப்பிட்டேளா?" என்று வழக்கமான உபசரிப்புக்குத் திரும்பினார்.

ன்று ஊரே போஸ்டர் திருவிழாவாய் கலகலத்தது.

அந்தத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மாதம் முன் அமைச்சரான எம்.எல்.ஏ. முதன்முதலாய் இந்த ஊருக்கு வருகிறார்.

அலங்கார வளைவுகளும், பந்தல்களுமாய் அமர்க்களப்பட்டன.

மாரிசாமிதான் முன்நின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டவர். அமைச்சருக்குப் பரம சந்தோஷம் இந்த ஏற்பாடுகளால் என்பது முகத்திலிருந்து தெரிந்தது.

''மாரிசாமி, அசத்திட்டீங்க. உங்களைப் பற்றி மேலிடத்துல கட்டாயம் சொல்றேன்" என்றார் அமைச்சர் மீசையைத் தடவியபடி.

''ஐயா, ஒரு விண்ணப்பம்."

"சொல்லுங்க."

"இந்த ஊர் மெயின் ரோடு மேலே ஒரு காலி இடம் இருக்கு..."

"புரியுது. உத்தரவு போட்டுடறேன். என்ன செய்யப் போறீங்க?'

''ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டலாம்னு திட்டம். பக்கத்துக் கட்டடங்களைக்கூட வாங்கிட்டேன். அதுக்குப் பின்னாடிதான் இந்த காலி இடம் இருக்கு. திறப்பு விழாவுக்குக் கூட நீங்கதான் வரணும்.

"தாராளமாய்."

''ஆனால் ஒரு சின்னப் பிரச்னை..."

''என்ன?"

''ஒரு சின்ன ஹோட்டல் நடுவுல வந்து மாட்டிக்கிச்சு. சொந்தக்காரன் இடத்தைத் தர மாட்டேங்கறான்."

''பணத்தை அதிகமாய் விட்டெறிய வேண்டியதுதானே!"

''மசிய மாட்டேங்கறான். சென்டிமெண்ட்ஸ் பிரச்னை. நானும் எல்லாவித முயற்சியும் பண்ணிட்டேன்.''

அமைச்சர் யோசித்தார்.

"ஒண்ணு பண்ணலாமே!"

"என்னங்க?"

"அந்த இடம் முழுவதையும் அரசாங்கமே எடுத்துக்கிற மாதிரி ஒரு ரூல்ஸ் போட்டுடலாம்."

"அப்ப என் இடமும்தானே..."

"அவசரப்படாதீங்க. நல்ல விலை கொடுத்து நஷ்டமில்லாம உங்களிடமிருந்து வாங்கி, மறுபடியும் உங்களுக்காக லீசுக்குக் கொடுத்துட்டாப் போச்சு. அப்ப அந்த ஹோட்டல்காரன் இடமும் அரசாங்கத்தோட இடம் ஆயிடுமே. ஏதாவது புது திட்டம் அறிவிச்சு, அதை இந்த இடத்துலதான் செயல்படுத்தப் போறதாச் சொல்லிட்டாப் போச்சு."

அகமும், முகமும் மலர அமைச்சரைப் பார்த்தார் மாரிசாமி.

"நாங்க, உங்களிடமிருந்து நிறையக் கத்துக்கணும் ஐயா" என்று புகழ்ந்தார்.

“சரி, நான் ஒரு இடத்துக்குப் போகணும் இப்ப. அதுக்கு முன்னாடி நீங்க சொன்ன இடத்தைப் பார்த்துடலாம்.''

கார்கள் பின்தொடர அமைச்சர் புறப்பட்டார். அவர் காரின் முன்சீட்டில் மாரிசாமி .

"ஐயா, இந்த இடம்தாங்க. இந்த ஹோட்டல்தான் நான் சொன்ன தகராறு பிடிச்ச இடம்" என்று காண்பித்தார்.

''இதுவா...'' என்று யோசனையுடன் காரை விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் நுழைந்தார் அமைச்சர்.

''வரணும், வரணும். பெரிய மனுஷாளே என்னைத் தேடி வந்திருக்கேள்" என்று வரவேற்றார் ரமணய்யர்.

"இதே ஆள்தான்" என்று முணுமுணுத்தது அமைச்சரின் வாய்.

தாம் அமைச்சரான நாளை நினைத்துப் பார்த்தார்.

அன்று இந்த ஊருக்கு வந்திருந்தார் எம்.எல்.ஏவாய். ஆனால் அதிக பந்தா இல்லை. ஒரு துக்க சமாசாரம் சொந்தக்காரர் வீட்டில். துக்கம் விசாரித்து விட்டுத் திரும்பும்போது, லேசாகத் தலை வலித்தது.

"இந்த ஹோட்டல் காப்பி நல்லா இருக்கும்" என்று யாரோ தொண்டர் சொல்ல, சட்டென ஹோட்டலுக்குள் நுழைந்தார். அன்றும் இதே வரவேற்பு இவருக்கு.

''ஐயரே, நியூஸ் டைம் ஆச்சா? ரேடியோ போடுங்க" என்றார்.

"இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு ரவா தோசை சாப்பிடுங்கோ" என்று ரமணய்யர் சொல்லி கடைப் பையனைப் பார்த்தார்.

இதையும் படியுங்கள்:
துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு!
ஓவியம்; அரஸ்

"சார் யாரு?"

''இந்தத் தொகுதி எம்.எல்.ஏ."

"எம்.எல்.ஏவா? பெரிய மனுஷாள்லாம் இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கேள். கொடுத்து வைச்சவன் நான்” என்றார் பவ்யமாய்.

''அண்ணே, அமைச்சரவையிலே மாற்றம் இருக்கும்னு சொல்றாங்களே," என்று ஒரு எடுபிடி பேச்சைத் திருப்பினான். உடனே இவர் குறுக்கே பாய்ந்தார்.

'உங்களுக்குச் சீக்கிரமே அமைச்சர் பதவி கிடைச்சுடும் பாருங்கோ. இந்த ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுப் போனா அப்படி ஒரு ராசி" என்றார் ரமணய்யர் தம் வழக்கமான பாணியில்.

எம்.எல்.ஏ. பெரிதாய்ச் சிரித்தார்.

''ஐயரே, நானாவது, அமைச்சராகறதாவது. யார் சிபாரிசும் இல்லை எனக்கு. பெரிய பெரிய திமிங்கலங்களே மோதிக்கிட்டு இருக்கு. சரி, ரேடியோவைப் போடுங்க" என்றார்.

ரேடியோவில் முதல் செய்தி அமைச்சரவை மாற்றம். புது அமைச்சர்களின் பட்டியலில் இவர் பெயர்.

தலைகால் புரியாத மகிழ்ச்சியும், வியப்பும் அவருக்கு.

அமைச்சரின் மனசுக்குள் பசுமையாய் நினைவில் இருந்தது அந்த நாள். இந்த ஹோட்டலை இடிப்பதா? மாரிசாமியின் பக்கம் திரும்பினார்.

"இந்த ஹோட்டலுக்கோ, இவருக்கோ எந்தப் பிரச்னையும் இல்லாம பாருங்க. இவர், எனக்கு வேண்டிய ஆள்" என்றார் உத்தரவாய்.

அமைச்சரின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் புரியாமல் விழித்தார் மாரிசாமி.

பின்குறிப்பு:-

கல்கி 08 ஆகஸ்ட் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com