சிறுகதை - மூன்றாம் பிறை!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ

-அனுராதா ரமணன்

"திங்கட்கிழமை அமாவாசை... செவ்வா ரெண்டு... புதன் மூணு.... இன்னிக்குத்தான் மூணாம் பிறை... இருங்க பார்த்துட்டு வந்துடறேன்.. ஏதோ அந்தப் புண்ணியமாவது...."

மேற்கொண்டு சொல்ல வந்த மீனாட்சி அறைக்குள் நாகு நுழைவதைக் கண்டு 'கப்'பென வாயை மூடிக்கொண்டு நகர்ந்தாள்.

"உலக்கையை முழுங்கிட்டு உப்பில்லாப் பத்தியம் இருக்காப்பல... செஞ்ச பாவமெல்லாம் ஒரு மூணாம் பிறையப் பார்க்கறதுனால போயிடுமோ... இதோ... ஒரே பிள்ளை. பெண்டாட்டி, குடும்பம், குழந்தையின்னு வளர்பிறையா வளர வேண்டியவன்... தன் சந்தோஷத்தையெல்லாம் பறி கொடுத்துட்டு நித்திய அமாவாசையா நிற்கிறான். அத்தனைக்கும் காரணம் இவதான். மூணாம்பிறை பார்க்கப் போறாளாம்...'

கண்மூடிப் படுத்திருந்த கிழவர் - நாகராஜனின் தந்தை மனசுக்குள் கசந்துகொள்ள...

மீனாட்சி தலை குனிந்து அறையைவிட்டு நகர்ந்து, வீட்டு வாசலுக்கு வந்தாள்.

நிஜம்தான். ஒரே மகன் என்று மார்பிலும், தோளிலும் போட்டு சீராட்டி வளர்த்தவள்தான் மீனாட்சி. அவன் தனது இருபத்தியைந்து வயதில் தன்னுடன் கல்லூரியில் படித்த மலர்விழியை பெற்றோருக்குத் தெரியாமல் மணந்து வந்து நின்றபோது... தகப்பனை விடவும் தாயான மீனாட்சிதான் எகிறிக் குதித்தாள்.

"இவளுக்கு இடமில்லாத வீட்டுல எனக்கும் இடமில்லே..."

மகனின் பிடிவாதம்தான் அவளைக் கட்டுப்படுத்தியதே தவிர - அவள் நாக்கு பம்பரத்தின் சாட்டைபோலச் சுழன்று...

எத்தனை ஏசியிருக்கிறாள் மருமகளை... கீழ்சாதிப் பெண் என்று, மகன் அருகே இல்லாதபோதெல்லாம் கொஞ்சமாகவா படுத்தினாள்.

மணமான ஒரே வருடத்தில் வயிற்றுப் பிள்ளையோடு அந்தப் பெண் உடம்பில் மண்ணெண்ணையை விட்டுக் கொளுத்திக்கொண்டது.

மரண வாக்குமூலத்தில் கூட நடந்த கொடுமையை வெளியே சொல்லிக் கொள்ளவில்லையே...

‘எங்க அத்தை எனக்கு அம்மா மாதிரி... இந்த நெருப்பு என்... என்... கவனப் பிசகாலே...’

மூன்றாம் பிறைக்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சியின் விழிகளைக் கண்ணீர் மறைத்தது

மலர்விழி போனது முதல் நாகராஜனின் முகத்தில் சிரிப்பே அஸ்தமித்து விட்டது. யந்திரம் போல ஆபீஸ் போவதும் வருவதும்...

மீனாட்சியின் கணவர் படுத்த படுக்கை... சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டாலும், பழக்க தோஷம் இப்படி... பிறை தேடி, பரக்க விழித்தபடி தெருவில் நிற்கிறது...

"குவா...குவா... "

மீனாட்சி கலவரத்துடன் குரல் வந்த திசையில் பார்த்தாள். வீட்டு வாசலில் இருந்த குப்பைத் தொட்டியிலிருந்து... பிஞ்சு மழலையின் வீறிடல்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் ஒரு "மினி தாய்லாந்து"!
ஓவியம்; கரோ

"அய்யோ... குழந்தைபோல இருக்கே..."

''பொண் குழந்தை அதுக்குத்தான் தொட்டில் இருக்கே. இத குப்பைத் தொட்டியிலதானா போடணும்...''

மீனாட்சி ஓடிப் போய் மெள்ள குழந்தையை கையில் எடுக்கிறாள். ஜாதி வித்தியாசம் பார்க்கத் தெரியாத பச்சிளம் சிசு மீனாட்சியின் அணைப்பில், மார்பில் முகம் புதைத்து தாயைத் தேடுகிறது. 'குப்'பெனக் கண்கள் நிறைகிறது மீனாட்சிக்கு.

திரும்பிப் பார்க்கிறாள். முதுக்குப் பின்னால் நாகு. தாயின் அணைப்பில் இருந்த சிசுவைப் பார்த்துச் சிரித்த சிரிப்பில். மீனாட்சி தேடிய மூன்றாம் பிறைச்சந்திரன்!

 பின்குறிப்பு:-

கல்கி 30  அக்டோபர் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com