சிறுகதை - நடன விநாயகர்!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா
Published on

-ஆர். சூடாமணி

"உன் பேர் என்ன தெரியுமா?"

சிறுமி சிரித்தாள்.

"ஐயே! எம்பேர் எனக்குத் தெரியாதோ?"

"சொல்லேன் பார்க்கலாம்."

"ஒனக்குத்தான் முந்தியே சொல்லியிருக்கேனே!"

"இன்னொரு தடவை சொல்லேன்!"

"மீஈஈனலோரர்சனீஈஈஈ!"

பெயரோடு தானும் நீண்டு ஐந்து வயதுப் பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்றாள்.

"இல்ல."

"உன் பேர் மீனலோசனி இல்ல."

"மீனலோசனிதான்."

"இல்ல."

"பின்ன என்னவாம்?"

"சுதந்திரா."

மந்திரம் சொல்வதுபோல் மிருதுவான குரலில் மூச்சோடு மூச்சாக அந்தப் பெயரை உச்சரித்தாள் நந்து. "உன் பேர் சுதந்திரா.''

குழந்தையின் முகம் கோணியது. "இல்ல, எம்பேர் மீனலோசனிதான். நீ சொன்ன பேர் எனக்கு புடிக்கலே. ஒன்னையும் புடிக்கலே."

அழுகை ததும்பியது குரலில். தன் பெயர் மறுக்கப்பட்டபோது, தன் இருப்பே மறுக்கப்பட்ட அதிர்ச்சி. 'நான் யார்' என்ற குழப்பம் குழந்தைமைக்கு ஒவ்வாத பெரிய பாரம்.

திரும்பிக் கொண்டு போக முனைந்த குழந்தையின் கையைப் பற்றித் தடுத்தாள் நந்து.

"கோச்சுக்காதே. நீ மீனலோசனிதான். மத்த எல்லாருக்கும். உனக்கும்கூட. ஆனா, எனக்கு நீ சுதந்திரா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமானதால செல்லப் பேர் வச்சிருக்கேன். இப்ப உனக்கு ரெண்டு பேர். மீனலோசனி, சுதந்திரா."

போனஸ் பெற்ற மகிழ்ச்சியைத் திடீரென்று உணர்ந்து சுதந்திரா சிரித்தாள்.

ழுக்குத் துணி மூட்டைகள் அடுக்கிய கைவண்டியைத் தெருவில் ஒரு முதியவர் இழுத்துக்கொண்டு நடக்க, உச்சி மூட்டைக்கு மேல் ஒரு ராணி போல் அலட்சியமாய் உட்கார்ந்திருந்த சிறுமியைக் கண்டதுமே அவள் காலடியில் 'சுதந்திரா' என்று பெயர் எழுதி ஒட்டியிருந்தது போல் நந்து உணர்ந்தாள். பாப்பாவைக் கைகளில் தூக்கிக்கொண்டு, அவனுக்கும் வெளிக்காற்று கொடுத்த மாதிரி இருக்கும், அம்மாவுக்கும் உதவியாய் இருக்கும் என்று நினைத்துத் தாணாத் தெருவுக்கு நடந்து போய்க் காய்கறிகள் வாங்கிய பை ஒரு கையில் தொங்கத் திரும்பி வந்து கொண்டிருந்தபோதுதான் சுதந்திராவை அப்படி ஒரு தரிசனம் கண்டாள். கீழிறங்கும் சூரியக் கதிர்களின் ஒரு தற்செயலான கோணம் அந்தக் குழந்தைக்கு ஒரு பொன்னிற விசிறலைப் பின்னணியிலியிருந்தது. அது ஒளிவட்டம். தெய்வங்கள் இருப்பது போல், உலகக் கவலைகள் தீரும் உயரத்தில் அமர்ந்திருக்கும் சுதந்திரத் தெய்வம் அந்தக் குழந்தை.

குழந்தை, சுதந்திரம், ஒரே பொருளில் இரண்டு சொற்கள்.

நாலு நாள் சென்று அந்தப் பெரியவர், பேத்தி பின்தொடர

இவர்கள் வீட்டுக்கே சலவைத் துணிகளைக் கொடுத்துவிட்டு, அழுக்குத் துணிகள் எடுத்து போக வந்தபோது,  நந்துவின் வியப்பு மகிழ்ச்சியில் கரைந்தது. உள்ளே தாத்தா துணிகளைப் பிரித்துக் கொண்டிருந்தபோது குழந்தை வாசல் வராந்தாப் படியில் உட்கார்ந்து, தனக்குள்ளாக ஏதோ பாடிக் கொண்டிருந்தாள். கறுப்பு உடம்பில் குட்டை மஞ்சள் கவுன் பளிச்சென்று இருந்தது. சுருட்டை முடியைச் சீவிப் பின்னி, பின்னல் உச்சியில் ஒரு ஊதா நிற க்ளிப் குத்தி அலங்கரித்திருந்தாள். வீட்டில் ஓர் ஆசைமிக்க அம்மா அல்லது அப்பா. நந்து கைகளில் பாப்பாவுடன் மெல்ல அவளை அணுகி அமர்ந்தாள். நட்புக்கு அச்சாரமாய் ஒரு புன்னகையை வைத்தாள்.

"உன் பேர் என்னம்மா?"

குழந்தை ஏற இறங்க அவளைப் பார்த்துவிட்டு மிடுக்காக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"பதில் சொல்லேன்."

சொல்லவில்லை.

"என் பேர் என்ன தெரியுமா? நந்தினி.''

நந்துவின் தந்திரம் பலித்தது. குழந்தை தலையைத் திருப்பி "எம்பேர் மீனலோசனி" என்றாள் பெயர்ப் போட்டியில் பின்தங்கி விடாமல். பிறகு புருவங்களை உயர்த்தினாள். “நீ யாரு? ஒன்ன இதுக்கு முந்தி நா பார்த்ததில்லியே"

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ஜவ்வரிசி கேரட் இட்லி வித் பூசணி புளி பச்சடி செய்யலாம் வாங்க!
ஓவியம்; வேதா

"இந்த வீட்டு அம்மாவையும் அய்யாவையும் உனக்குத் தெரியுமா?"

"ம். "

"நான் அவங்க மக."

"சின்னம்மாதான் அவங்க மக."

"நான் அவங்க பெரிய மக. பெங்களூர்லேந்து வந்திருக்கேன். இவன் என் பையன்."

மீனலோசனியின் பார்வை பையன் மேல் இறங்கியது. "உம் பேர் என்ன?"

''அவன் சொல்ல மாட்டான்."

''பேசத் தெரியாதா? இத்தினி பெரீவனா யிருக்கானே! அப்ப நீ சொல்லு அவம் பேரு."

"பாப்பா."

"ஐயே, பாப்பான்னுதான் தெரியிதே! பேர் என்னான்னு கேக்கறேன்."

"பேரும் பாப்பாதான்."

'மதனகோபாலா' என்று வாய் நிறைய அழைத்து "என்னம்மா?" என்று இவன் சிரித்தபடி ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் காலம் வருமா?

பாப்பா அவள் பக்கத்தில், அவள் உட்கார வைத்த நிலையிலேயே உட்கார்ந்திருந்தான். விழுந்து விடாமல் அவள் ஒரு கையால் அணைத்துப் பிடித்திருந்தாள். இரண்டு வயதுக் கான உடல் வளர்ச்சி இருந்தது. ஆனால் நிலை குத்தி நோக்கும் கண்களில் ஜீவன் இல்லை. லேசாய்த் திறந்த வாயிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த எச்சிலை அவள் டவலால் துடைத்தாள்.

உள்ளேயிருந்து குரல்கள் வந்து கொண்டிருந்தன .

''வேஷ்டி?'

"ரெண்டு."

"ஜாக்கெட்?"

"நாலு."

"அந்தப் புது சில்க் ஜாக்கெட் இருக்கா? நீலத்துல கட்டம் போட்டுது?"

"இதோ இருக்கும்மா."

"சரி. சூடிதார்?"

''நாம சிநேகிதங்களாய் இருக்கலாமா?" என்றாள் நந்து.

நல்ல சிநேகிதர்களான பிறகுதான் அந்த ரகசியத்தை அவளுக்குச் சொன்னாள் : "உன் பேர் சுதந்திரா."

"இந்த நாளில் எந்த சலவைக்காரன் வீட்டுக்கு வந்து துணி எடுக்கறான்? ஏதோ, பழங்கால மனுஷராய் இந்த வயசாளி கிடைச்சிருக்காரு. அதுவும் இங்க புரசவாக்கத்திலேயே. என் அதிர்ஷ்டம்தான்" என்றாள் அம்மா குக்கரை அடுப்பில் ஏற்றிவிட்டு முன் அறைக்கு வந்து அமர்ந்தபடி.

டீ.வி. பெட்டியின் மேல் வைத்திருந்த சந்தன நிற எனாமல் வர்ணப் பூச்சு பளபளக்கும் மாக்கல் நடன விநாயகர் குட்டிச் சிலை வடிவைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் நந்து. விநாயகரின் மகுடமோ நான்கு கரங்களோ தரையில் ஊன்றியிருக்கும் இடது பாதமோ பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. வலது முழங்கால் பக்கவாட்டில் மடங்கி, வலது பாதத்தில் குதிகால் உயர்ந்து, விரல் நுனிகள் மட்டும் தரையைத் தீண்டியிருந்தன. ஒரு நடன அசைவில் அவரைச் சிறைப்படுத்தியிருந்தான் கலைஞன். அடுத்தகணம் அந்தப் பாதம் கீழே பதிய, இடது பாதம் எழும்பி தரையில் விரல் நுனிகளின் மேல் நிற்கப் போகிறது. இரு பாதங்களும் மாற்றி மாற்றி, தக்கித் தரிகிட. தரையில் பாவாத விரல் நுனிகளில் நடனத்தின் இன்பம் முழுவதும், ஆடுகிற சுதந்திரம் முழுவதும் சங்க மித்திருக்கிறது.

"இல்லேன்னா வேலக்காரி வராத நாள்களில் துணிகளைத் தூக்கிக்கிட்டு நான் ஓடணும் லாண்டரிக்கு."

நந்து தாயைத் திரும்பிப் பார்த்து, ''ஏன்? கலாவோ அப்பாவோ போகக் கூடாதா?" என்றாள்.

"கலாதானே? உன் தங்கைக்குத்தான் காதல் பண்ணவே நேரம் போதலையே! உங்கப்பாவைச் சொல்லு. நல்லா போவாரே லாண்டரிக்கு! 'நான் தூக்கிக்கிட்டுப் போகணுமா துணி மூட்டையை வண்ணானாட்டம்?" அப்படின்னு குடி முழுகிட்ட மாதிரி சத்தம் போடுவார். வீட்டு வேலைன்னா அப்படி உனக்குத் தெரியாதா உங்கப்பா குணம்?"

தன் அப்பா குணம் மட்டுமா? பாப்பாவின் அப்பா குணமும் அவளுக்குத் தெரியும். காய்ச்சல் அடித்து வடிந்த களைப்போடு ஒரு காலைப் பொழுதில், "முத்து, டயர்டா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன். பாலை மட்டும் கொஞ்சம் காய்ச்சி எறக்கிறாங்களா? நான் வந்து காப்பி கலக்கறேன்" என்றாள்.

"அதெல்லாம் நம்மால் முடியாது. வீட்டு வேலைங்க உன்னுது."

"வீடு உங்களுதும்தானே?"

"பெண்ணியம் பேசறியா?"

"மனுஷத்தனம் வேணும்னு கேட்டா பெண்ணியமா?"

"அப்போ நான் மிருகங்கறியா?"

அது பதச் சோறு. ஐந்தாண்டுத் திருமண வாழ்வில் அவனுக்குள் பல அவலட்சணங்களைக் காண நேர்ந்தபோது, அதிர்ச்சி இருந்தது. நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட பந்தம். வாழ்க்கை முழுவதும் ஒரு நல்ல நட்பு உடன்வரும் என்று கண்ட கனவு. எல்லாம் 'இவனையா மணந்தேன்?' என்ற கேள்வியாய் முடிந்து போயிற்று.

கடைசியில் முத்தாய்ப்பாக அந்தப் பேச்சு.

“நந்து, நாளை சாயங்காலம் ஒரு பெரிய மனுஷரையும் அவர் சம்சாரத்தையும் நம்ப வீட்ல டிபனுக்குக் கூப்டிருக்கேன். வேலை ரீதியில் பழக்கமானவர். ஊர்ல பெரிய பிஸினெஸ்மேன். அவர் நம்ம வீட்டுக்கு வரதே பெரிசு. நல்ல டிஃபனாய் பண்ணு. அவங்க மிஸஸும் வரதால நீயும் எங்க கூட கலந்துக்கணும். சுப்ரதிவ்யமாய் ஒண்ணு பெத்து வச்சிருக்கியே, அதை வழக்கம்போல கையில் தூக்கிக்கிட்டு வந்து நிக்காதே. அவங்க வந்துட்டுப் போற வரைக்கும் அதும் மூஞ்சி வெளிய தெரியக்கூடாது.''

இதையும் படியுங்கள்:
கோபத்தைத் தணித்து மனதை சாந்தப்படுத்தும் உலர் திராட்சை!
ஓவியம்; வேதா

ஈரமற்ற இயல்பின் சிகரம் பெயர்ந்து தலையில் விழுந்தது போல் இருந்தது.

இனியும் இவனுடன் வாழ வேண்டுமா?

குழந்தையுடன் பிறந்தகம் வந்த நாளிலிருந்து இதே சிந்தனைதான்.

அம்மா பயந்துவிட்டாள்.

“என்னடி வெடிகுண்டு தூக்கிப் போடறே"

“அங்கே நடந்ததெல்லாம் உனக்குத் தெரியாதும்மா. சொல்லவே மனசு நடுங்குது. ஒரு நாளா ரெண்டு நாளா? அஞ்சு வருஷம்! அவர் பேச்சும் குணமும்...போதும்மா!" கையெடுத்துக் கும்பிட்டாள்.

"உளறாதே. எப்படிப்பட்டவனானாலும்  பெண்டாட்டி பிள்ளையை வச்சுக் காப்பாத்தறாரில்ல."

"என்னால் என்னையும் எம் பிள்ளையையும் காப்பாத்திக்க முடியும். நானும் எம்.ஏ படிச்சவதான்."

"ஆனா ஒரு குழந்தைக்குத் தகப்பனோட பாதுகாப்பு எத்தனை முக்கியம்! அத யோசிச்சியா? அதுவும்... இந்தக் குழந்தைக்கு!"

"நீ வச்ச பேர் எனக்குப் புடிக்கலே. என் மீனலோசனின்ற பேர்தான் புடிச்சிருக்கு'' என்றாள் மீனலோசனி.

“அப்படிச் சொல்லாதே சுதந்திரா! நான் வச்ச பேர் ரொம்ப அழகான பேர். எத்தனை அழகான பேர்னு நீ பெரியவளானப்புறம் தெரிஞ்சுப்பே.”

இருவரும் வாசல் வராந்தாவில் அமர்ந்திருந்தார்கள். நட்பு வேர்விட்ட பிறகு பாட்டன் சலவைத் துணிகளுடன் வராத நாட்களில் கூட சுதந்திரா சில சமயம் அவளைப் பார்க்க வந்தாள். பாப்பாவை ஒரு பொம்மை போல் சிறிது நேரம் மடியில் வைத்துக்கொண்டு உற்றுப் பார்ப்பாள்.

"இவன் ஏன் இப்படி இருக்கான்? ஒண்ணும் பேசாம, ஒரே எடத்த பாத்துக்கிட்டு, பச்சைப் பாப்பா வாட்டம் எப்பப்பாரு சொள்ளு விட்டுக்கிட்டு.''

''பச்சைப் பாப்பா சொள்ளு விடும்னு உனக்குத் தெரியுமா?"

"தெரியுமே! எங்க வூட்லயே பாப்பா இருக்கு. ஆனா அது எப்பவும் சொள்ளு விட்டுக் கிட்டிருக்காது. கண்ணை நல்லாத் திருப்பி நாலு பக்கமும் பாக்கும். சிரிக்கும். தவுந்து வரும். இப்பவே என்ன 'க்கா'ன்னு கூப்பிடுது!''

நடைபெற்று வரும் மருத்துவ சிகிச்சையால் ஒருநாள் பாப்பாவும் அப்படி ஆகமாட்டானா?

அந்த சிகிச்சை தொடர்ந்து நடப்பதற்கே கூட முத்துவின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி மேலாளர் பதவி தருகிற பொருளாதார தைரியம் தேவைப்படுகிறதா?

சிலுசிலுவென்று காற்று எங்கிருந்தோ கிளம்பியது. காம்பவுண்டிலிருந்த மாமரத்தின் இலைகளிடையே புகுந்து புகுந்து காற்று விளையாடியது. மா இலைகளுக்குத் திடீரென்று மகிழ்ச்சி வெறி. துள்ளிக் குதித்து ஆட ஆரம்பித்தன. மழைத் துளிகள் வானத்தைத் துளைத்துக்கொண்டு விழுந்த கணத்தில் பூமிக்குள்ளிருந்து புதையல்போல் ஒரு குளிர்ச்சி வெடித்துக் கொண்டு வெளிப்பட்டது.

மீனலோசனி பாப்பாவைப்  பொத்தென்று தரையில் வைத்துவிட்டு சந்தோஷக் கூவலுடன் படியிறங்கி, மரத்தின் அருகில் ஓடிப் போய்க் கைகளை ஆட்டிக்கொண்டு சுழன்று சுழன்று நடனமாடினாள். கிழிசல் தைத்த பச்சை சட்டை போட்டிருந்தாள். அவள் வேகச் சுழற்சியில் பச்சைக்குள் பூமியின் பசுமை அரைத்து வெண்ணெயாய்த் திரண்டு புகுந்துவிட்டது.

பாப்பாவைக் கரங்களுள் பதுங்கிக்கொண்டு நந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சுதந்திரர் ஆடுகிறாள். சுதந்திராதான் ஆட முடியும். கால்களில விலங்கு இல்லை. அல்லது நடன விநாயகர் ஆட முடியும். பூமியில் மின்னலிடும் அந்தக் கால் விரல் நுனிகளில் சுதந்திரம் ஆனந்த நடனமாடுகிறது.

'அடுத்த மாசம் நான் பி.ஏ. எழுதி முடிச்சதுமே எங்க கல்யாணம் நடந்தடணும்னு அப்பாவும் அம்மாவும் விரும்பறாங்க என்றாள் கலா. இரவு சாப்பாட்டுக்குப் பின் சகோதரியோடு டீ.வி.யில் ஆங்கிலச் செய்திகள் பார்த்து முடித்ததும் அதை அணைத்துவிட்டு அவள் அருகில் வந்து உட்கார்ந்திருந்தாள்.

"இல்லேன்னா வரம்பு மீறிடுவோமோன்னு அவங்களுக்குப் பயம்!" என்று சிரித்தாள்.

“பையன் வீட்ல என்ன சொல்றாங்க?"

''ரவியோட அப்பா ஓகே சொல்லிவிட்டார். அம்மாவுக்குத்தான் அவ்வளவா இஷ்டமில்லேன்னு தோணுது. அவங்க அண்ணன் மகள் மருமகளாகணும்னு ஆசை. ஆனா பிள்ளையோட விருப்பத்துக்காகக் கடைசில விட்டுக் கொடுத்துடுவாங்கன்னு நினைக்கறேன்."

"அதுவரைக்கும் நிம்மதி. எப்படியோ கல்யாணம் பிரச்னையில்லாம நடந்துடுமில்ல."

"அதான்க்கா.... பிரச்னை இருக்கக் கூடாது இல்லையா? ஏதாவது சாக்கு கிடைச்சா அந்தம்மா இந்தக் கல்யாணம் வேணாம்னுடு வாங்களோன்னு பயமாயிருக்கு."

"சாக்குன்னா?"

கலா அவளை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.  "இல்லையா ஏதானும்? சும்மா... பொண்னு சரியா விழுந்து கும்பிடலே, இல்லாட்டி பொண்ணோட அம்மா வாசலுக்கு வந்து வரவேற்கலே, இல்லாட்டி பொண்ணோட அக்கா... பொண்ணோட அக்கா வாழாவெட்டியா வந்துட்டா... இல்லையா? இப்படி ஏதானும் அசட்டுச் சாக்கு..."

இதையும் படியுங்கள்:
பிரச்னை ஏற்படும்போது, அவற்றைத் தீர்க்க நீங்கள் இறங்கிச் செல்லுங்கள்!
ஓவியம்; வேதா

கலா சிரிக்க முயன்று தோற்று, ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌனமானாள்.

நந்து எழுந்துகொண்டாள்.

"நான் போய் பாப்பா தூக்கத்துல துணியை நனைச்சுக்கிட்டானான்னு பார்க்கறேன் கலா அப்படியே படுத்துக்கறேன். தூக்கம் வருது. குட்நைட்."

நந்து உள்ளே போக இரண்டடி எடுத்து வத்தாள்.

"அக்கா!"

நடந்தவள் நின்றாள்.

"நான் ரவியை... ரொம்ப விரும்பறேன்."

ரவில் விளக்கு வெளிச்சத்தில் பின்னாலுள்ள சுவரில் விழும் பதுமையின் நிழலில் நடன நிலை இன்னும் துல்லியமாய்த் தெரிகிறது. கால் விரல் நுனிகளில் குதூகலம் குதி போடுகிறது.

"அம்மா, இந்த பொம்மய எனக்குத் தரியா?"

தாராளமா எடுத்துட்டுப் போயேன் விநாயகர் உன் வீட்ல நுழையற வேளை ஒரு புது ஆரம்பமாய் உன் வாழ்க்கை நல்லா இருக்கட்டும்.''

அம்மாவின் குரல் பாசத்தில் கனிந்தது. நந்து கணநேரம் நெகிழ்ந்தாள். மறுகணம் விரக்தி மூடியது. எந்த உறவுதான் அழகாயில்லை? எதுதான் அன்பில் ஆரம்பிக்கவில்லை? கணவன் என்ற உறவு. குழந்தை என்ற உறவு. உடன்பிறப்பு என்ற உறவு. ஒவ்வொன்றுமே இனிமையாய்த் திகழ வேண்டிய பந்தம். வாழ்வை வளமாக்க வேண்டிய செல்வம். ஆனால் இன்று? அவள் நிம்மதியை நோக்கிப் பறக்க முடியாமல் தடுக்கும் விலங்குகள் அவை. கணவன் என்ற விலங்கு உடன்பிறப்பு

பிறப்பு என்ற உறவு. ஒவ்வொன்றுமே இனிமையாய்த் திகழ வேண்டிய பந்தம். வாழ்வை வளமாக்க வேண்டிய செல்வம். ஆனால் இன்று அவள் நிம்மதியை நோக்கிப் பறக்க முடியாமல் தடுக்கும் விலங்குகள் அவை. கணவன் என்ற விலங்கு, குழந்தை என்ற விலங்கு, உடன்பிறப்பு என்ற விலங்கு.

"தாங்ஸ்ம்மா."

பதுமையைத் தோள் பையில் போட்டுக்கொண்டாள். ஊருக்குக் கிளம்பும் தினமும் ஒரு தோளை அணைத்தாற்போல் குழந்தை, இன்னொரு தோளில் தொங்கும் பை.

சாமான்களை டாக்ஸியில் ஏற்றியாகி விட்டது. அப்பா அவசரப்படுத்தினார்.

''சீக்கிரம் வாம்மா நந்து. பிருந்தாவன் நமக்காகக் காத்திருக்காது. டாக்ஸி வந்து நின்னபோதே கடியாரத்தில் மணி அடிச்சுது. நல்ல சகுனம்."

புதுமணப் பெண்ணை முதல் முறை கணவன் வீட்டுக்கு அனுப்புவது போல்தான் அப்பாவும் அம்மாவும் நடந்துகொண்டார்கள். திடீரென்று கிளம்பி வந்துவிட்டாள் என்று மாப்பிள்ளை கோபித்துக்கொள்ளாமல், அவரை சமாதானப்படுத்தும் வகையில், தாமே நேரில் போய் மகளை ஒப்படைத்துவிட்டு வருவதற்காக, அப்பா வேலைக்கு லீவ் போட்டு விட்டுக் கிளம்புகிறார்.

"ஒரு நிமிஷம் இருங்கப்பா! நான் அவளை வரச் சொல்லியிருந்தேன்... இதோ வந்துட்டாளே!"

சுருட்டை முடி குலுங்க, கால்கள் இருப்பதே தெரியாத வேகத்தில் பறந்தோடி வந்துபழுப்பு நிறக் கவுன் மேல் மூச்சிரைப்புத் தெரிய நின்றாள் சுதந்திரா.

"சுதந்திரா!"

நந்து கீழே மண்டியிட்டு, பாப்பாவை அணைத்த நிலையிலேயே அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

"கஷ்டம் கஷ்டம்..." வராந்தாப் படியில் நின்றிருந்த அம்மா முணுமுணுப்பது கேட்டது.

"ஊருக்குப் போய் வரட்டுமா சுதந்திரா? ஸாரி, மீனலோசனி. நான் வச்ச பேர் பிடிக்கலே, இல்லே?"

"இப்ப புடிச்சிருக்கு.'' இரண்டு மாதப் பழக்கத்தில் அவளிடம் ஒட்டிக் கொண்டு விட்ட சிறுமியின் கண்கள் கலங்கியிருந்தன.

"திருப்பியும் எப்ப வருவே?"

"என் தங்கச்சி கல்யாணம் நடக்கறப்ப வருவேன்."

"அப்போ இவன் பேசுவானா?''

நந்து தோள் பையிலிருந்து காட்பரீஸ் ஜெம்ஸ் பாக்கெட் எடுத்துக் கொடுத்தாள்.

''ஹை, ஜெம்ஸ் பாண்ட்!"

"உனக்குத்தான். சாப்பிடு. இதுவும் உனக்கு." மாக்கல் விநாயகரை எடுத்துக் கொடுத்தாள்.

''புள்ளையார் சாமி!"

"டான்ஸ் ஆடற புள்ளையார் சாமி."

"எனக்கே எனக்கா!"

"ஆமா. நீ பெரியவளாகிக் கல்யாணம் கட்டறப்ப இதை யாரானும் இப்ப நீ இருக்க மாதிரி ஒரு சின்னப் பெண்ணுக்குக் கொடுத்துடு. நான் போய் வரட்டுமா?" பாப்பாவுடன் டாக்ஸியில் ஏறிக்கொண்டாள்.

"நீ டான்ஸ் பண்ணு சுதந்திரா! அன்னிக்கு ஒருநாள் மழையில பண்ணினியே, அந்த மாதிரி டான்ஸ். நான் பார்த்துக்கிட்டே போறேன்."

சுதந்திரா கண்ணீர் தளும்பக் கரங்களை வீசி உடலைச் சுழற்றி நடனமாடத் தொடங்கினாள்.

பின்குறிப்பு:-

கல்கி 26  மே  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com