சிறுகதை - நட்பு!

Short story - Natpu!
Short story - Natpu!ஓவியம்; செல்லம்

-பா. ராகவன்

வாசலில் பிரேக் பிடித்து டாக்ஸி நின்றது. உறக்கம் கலைந்த தெருநாய் வள்ளென்று விலகி ஓடியது. பக்கத்து வீட்டு ஜன்னல்களுக்கு முகம் முளைத்தது. எதிர்போர்ஷன் பத்மநாப ஐயங்கார், காதில் டிரான்ஸிஸ்டருடன் 'டென்டுல்கர் கிளீன் போல்டு' என்ற மகத்தான செய்தியை யாரிடமோ சொல்ல அவசரமாக வெளியே வந்தவர், சட்டென்று மூக்குக் கண்ணாடியை இடுப்பில் தேடி, மாட்டி நின்றார். வாசலில், பாதி கலைந்த கோலத்தில் சிவப்புக் குளமாய் ஆரத்தி. கண்டிப்பாய்க் காசு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் மீட்டர் அருகில் காக்கி மனிதன், காதில் செருகிய பீடியை எடுக்கலாமா, வேண்டாமா என்கிற யோசிப்பில்.

"நூறு ரூபாய்க்குச் சில்லறை இருக்காப்பா?"

''அனந்தராமா, வந்தாச்சா?" - காதில் டிரான்சிஸ்டரின் பெவிகால் இணைப்புடன் குறுக்கிடும் எதிர் போர்ஷன் பத்மநாப ஐயங்கார்.

தலையாட்டலில் பெருமிதம்.

"ஸ்கோர் என்ன சுவாமி?''

"இவன்களை சகாராவுக்குத்தான் அனுப்பணும். நைன்ட்டி ஃபைவ் ஃபார் சிக்ஸ்."

''அவன் - அந்த சின்னப் பையன்?"

"டக்குங்காணும்! வயத்தெரிச்சல்!"

அவசரமாய் மாமி வெளியே வந்தால், "இங்க என்ன பண்றேள்? ஆல் இண்டியா ரேடியோவோட அரட்டையா?”

''வந்துட்டேன்."

வீடு புதிது. முகங்கள் புதிது. சூழ்நிலை புதிது. மிரண்ட பூனைக் குட்டியாய் மைதிலி விழித்தாள். உட்காரலாமா, வேண்டாமா என்கிற யோசனையில் கால் மாற்றி நின்றாள். அவளை யாரும் உட்காரச் சொல்லவில்லை. நேரே உள்ளே போகலாமா? சமையலறையில், உறவு வட்டங்கள் கட்டுசாதத்தைப் பிரித்ததில் புளியோதரையின் ‘குப்’.

உடை மாற்றி வரப் போன சுந்தர்ராஜன் அங்கேயே படுத்துவிட்டான். அவன் தம்பிகள் இரண்டு பேர், சத்திரத்திலிருந்தே ஆபீஸ் போய்விட்டார்கள். புதிய மன்னியைக் காட்டுவதற்காக, தோழியரை அழைத்து வரப்போன அகிலா இன்னும் திரும்பவில்லை. தனித்தீவில் இறக்கி விடப்பட்ட ஜந்துவாக, மைதிலி, ஹாலில் விழித்தாள்.

நழுவும் டிராயரை இழுத்து விட்டுக்கொண்டு, ஹாலுக்குள் ஓடிவந்த ஐக்கு சட்டென்று நின்றான். மைதிலி, அவனைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்குச் சிரிக்கலாமா, கூடாதா என்கிற குழப்பத்தில் அவன் டிராயரை இழுத்து விட்டுக்கொண்டு குனிந்து, நெளிந்தான். டிராயர் நின்றபாடில்லை.

''ஜக்குதானே உம்பேர்?”

“ஆமா.”

"முழுப்பேர்?"

'ஏ. ஜகன்னாதன்."

''எத்தனாங்கிளாஸ்?"

'நாலாவது. பி.எஸ். ஸ்கூல்ல."

''ஏவா, பியா?"

அவன், அவளை உற்றுப் பார்த்தான்.

''சி' செக்ஷன்.''

'இன்னிக்கு ஸ்கூல் இல்லே?"

"லீவ் போட்டுட்டேன்."

''எனக்காகவா?"

ஐக்குவுக்கு, என்ன சொல்வதென்று குழப்பமாக இருந்தது. அவன் லீவ் போட்டதற்குக் காரணம், இரண்டு நாளாய் ஹோம் ஓர்க் செய்யாதது. நேற்றைய கல்யாண கலாட்டாவில் பள்ளிக்கூடத்தைச் சுத்தமாக அவன் மறந்திருந்தான். இன்று இவள் கேட்டதும்தான் ஞாபகம் வருகிறது. 'கடவுளே, எப்போது செய்யப்போகிறேன்?"

"இல்லே... ரெண்டு நாள் ஜாலியா இருந்தது, ஹோம் ஓர்க் பண்ண மறந்துட்டேன். இன்னிக்குப் போனா அடிப்பா. அதான்..."

''நாளைக்குக் கேப்பாளே!"

"இன்னிக்குள்ள முடிச்சுடுவேன்.''

"எதுல ஹோம் ஓர்க்?"

“கணக்கு.”

"இப்ப போடலாம், வரியா?”

"நீங்க சொல்லித் தருவீங்களா?''

"ஓ.”

"கணக்குத் தெரியுமா?"

அவள் சிரித்தாள். "தெரியும், கொண்டுவா.”

டிராயரை இழுத்து விட்டபடி ஜக்கு ஓடினான். ஒரு மூட்டையுடன் திரும்பினான்.

"டிராயர் ஏன் இவ்ளோ லூசா இருக்கு?"

"வளர்ற பையன், பெரிசாத் தைக்கணும்னு அப்பாதான் டெய்லர்கிட்ட சொல்லுவார், ஒவ்வொரு வாட்டியும். இதுக்குள்ள ரெண்டு ஜக்கு பூந்துக்கலாமில்லே?"

மைதிலி சிரித்தாள்.

"இனிமே நானே உனக்குத் தெச்சித்தரேன், கரெக்டா."

''உங்களுக்குத் தெரியுமா?"

"ஓ."

''மிஷின்?''

 "இருக்கு. எங்காத்துல இருக்கு. கொண்டு வந்துடறேன்.''

"வேற என்ன தெரியும், உங்களுக்கு?"

"அட! இன்டர்வியூவா?"

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையைக் குனிந்துகொண்டான்.

ஜக்குவுக்கு, தன்னால் இத்தனை தூரம் ஒரு முன்பின் தெரியாத பெண்ணிடம் பேசமுடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. அவனளவில் அறிந்த பெண்கள் அம்மாவும், அகிலாவுமாகவே இருந்தார்கள். அம்மாவைப் 'பெண்' என்றெல்லாம் அவனால் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அம்மா, அம்மாதான்! பெண்ணாவது, ஒண்ணாவது!

அகிலா, அவனைப் பெரிதும் வம்புக்கு இழுக்கும் ஜந்து. தேர்வுகளில் ரேங்க் குறைவதை அடிக்கடி சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் அற்ப ஜீவன். அவளுக்கென்ன தெரியும், நாலாங்கிளாஸ் சிரமம்?  டீச்சரைக் குழையடித்து மூணாம் கிளாஸிலிருந்து டபுள் பிரமோஷனில் ஐந்தாவதுக்குப் போய்விட்டவள். அம்மா சொல்லியிருக்கிறாள்.

அண்ணன்களுடனான அவனது உறவும் கூட சொல்லிக் கொள்ளும்படியாக எப்போதும் இருந்ததில்லை. அந்த வீட்டில், ஐக்கு என்றொரு ஜீவனும் வாழ்கிறது என்கிற நினைவு அவர்களுக்கு இருக்குமானால், அதுவே அதிகம். போனவாரம் கூட, அனந்தராமன் இதுகுறித்துத் தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தது, எதேச்சையாக மாடிக்கு வந்த ஜக்குவின் காதில் விழுந்தது.

"இது தப்போன்னு உறுத்தலாவே இருக்கு. கல்யாண வயசுல ஒரு பையனும், கத்தரிக்காய் சைஸுல ஒரு பையனும்.... என்னமோ குற்ற உணர்ச்சியாவே இருக்கு. "

"அதுக்கென்ன பண்றது? நமக்கு பகவான் விதிச்சது அதுதான்!"

வாழ்க்கையின் பெரும்பொழுதை, சோப்புக் கரைசலில் ஸ்ட்ரா நுழைத்து, வாயால் ஊதி, கண்ணாடி பலூனாய் முட்டை விடுவதிலேயே கழித்து வந்த ஜக்குவுக்கு, திடீரென்று ஏற்பட்ட இந்த மன்னி உறவு வியப்பாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. தன்னையும் மதித்து அவள் சகஜுமாகப் பேசுவது சற்று ஆறுதலாகக் கூட இருந்தது.

இன்னொரு முக்கிய விஷயம், பெண் பார்க்கப் போனபோதே அவளை அவனுக்குப் பிடித்துவிட்டது. வெள்ளை என்று சொல்ல முடியாவிட்டாலும் லட்சணமாக இருந்தாள். ட்யூப்லைட் ஒளியில், அவள் மூக்குத்தியின் சுடர், உதட்டில் பட்டுத் தெறித்தது அழகாக இருந்தது. அடிக்கடி படபடக்கும் இமைகளும், நிரந்தரமாய் உதடுகளில் இழையோடும் ட்ரேட் மார்க் புன்னகையும் அன்றே அவனுக்குப் பிடித்துவிட்டது.

மேற்கொண்டு பேச்சைத் தொடர, தன் தினசரி அனுபவங்களைக் கருப்பொருளாக்கிக் கொண்டான். கடா மீசைக் கணக்கு வாத்தியார். அவனுக்கு, அவரைப் பிடிக்காது. அவர் சொல்லித் தரும் முறை,  ஒரு நான்காம் வகுப்புப் பையன் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும், மாணவர்கள் மீதான அவரது விரோத பாவம். கையைத் திருப்பி மடக்கச் சொல்லி விரல் முட்டுக்களில் அவர் பிரம்பால் அடிப்பது. அதனால் மட்டுமேதான் வகுப்பு மாற விரும்புவது.

வனுக்கு மைதிலியிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அத்தனையையும் ஒரே மூச்சில் கொட்டிவிட விரும்பினான். அம்மா மட்டும் சாப்பிடக் கூப்பிடாமலிருந்தால் முடித்திருப்பான்.

ஆனால், எதற்கும் கைவசம் ஸ்டாக் வைத்திருப்பது நல்லதுதான். எல்லாவற்றையும் இன்றே சொல்லிவிட்டால், நாளை? நாளை மறுநாள்? ஆகவே சாப்பிடச் சென்றான்.

மத்தியானம் உணவு முடிந்ததும் அப்பா, எதிர்வீட்டு பத்மநாப ஐயங்காருடன் அரட்டைக்குச் சென்றுவிட்டார். அம்மாவும், அகிலாவும் உண்ட மயக்கத்தில் இருந்தார்கள். அண்ணாவின் நண்பர்கள் வந்திருந்தார்கள். மைதிலி ஏன் அநாவசியமாக அவர்களிடம் போய் சிரித்துப் பேச வேண்டும்? அதுவும் அந்த மாங்காய்த் தலையனை ஜக்குவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனும், அவனது சோடா புட்டியும்!

ஜக்கு, தன் நண்பன் கதிர்வேலுவைப் பார்க்கக் கிளம்பினான். இது ஒன் அண்ட் டூ வேளை. கதிர்வேலு வீட்டிற்கு வந்திருப்பான்.

தனக்குக் கிடைத்திருக்கும் ஓர் அற்புதமான ஸ்நேகம் பற்றிய மகத்தான முன்னுரையுடன் ஜக்குவின் பேச்சு இருக்கும்.

"டேய் கதிர்! சாயங்காலம் எங்க வீட்டுக்கு வரியா?"

"எதுக்குடா?"

"எங்க மன்னி வந்திருக்காடா. பயங்கரமான நல்லவங்கடா. வந்தவுடனே ஃபிரெண்டாயிட்டாங்க. தெரியுமா? ஹோம் ஓர்க் எல்லாம் சொல்லிக் குடுத்தாங்க."

''நான் எதுக்கு வரணும்?''

"இன்ட்ரொட்யூஸ் பண்ணி விடறேன்டா. நீ வாயேன். பார்த்ததும் அசந்துடுவே. அவ்ளோ அழகு!"

ஜக்குவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது நாள் வரை அவன் சந்தித்திராத தேவதையாக, மைதிலி அவனுக்குத் தெரிந்தாள். இனி அவன் வீட்டிலேயே இருக்கப் போகிறவள். ஹோம் ஓர்க் உள்ளிட்ட அவனுடையதான அத்தனை பிரச்னைகளுக்கும் இனி அவளிடம்தான் ஆலோகேட்கப் போகிறான். இனி, அவன் அகிலாவுடனான அனாவசிய சண்டைகளில் பங்கெடுக்கப் போவதில்லை. சோப்பு முட்டை விளையாட்டுக்கு இனி சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
இந்த 5 விஷயங்கள் உங்களைப் பற்றி அதிகம் தெரியப்படுத்தும்!
Short story - Natpu!

அடடா! அவன் எத்தனை மடத்தனம் பண்ணி விட்டான்? வீட்டில் மைதிலி கொட்டு கொட்டென்று தனியாகவல்லவா உட்கார்ந்திருக்கிறாள்? அண்ணாவின் நண்பர்களான தடியர்கள் எப்போதோ போயிருப்பார்கள். நழுவும் டிராயருடன், ஒரு கார்ட்டூன் மாதிரி அவன் அவசர அவசரமாக வீட்டுக்குப் போனான்.

வீடு நிசப்தமாக இருந்தது. மைதிலி எங்கே?

அண்ணாவின் அறையில் பேச்சுச் சப்தம் கேட்டது.

"...கார்த்தால ஒரே கஷ்டமாப் போயிடுத்து தெரியுமா? நீங்களானா, ரூமுக்குப் போய்ப் படுத்துட்டேள். உள்ள ஒரே உங்க ஜன கும்பல். உங்கம்மாவுக்கு, அவாளை பேக் பண்ணி அனுப்பற வேலை. உங்க தங்கையானா வெளில போயிட்டா. நடுக் கூடத்துல பேய் மாதிரி தனியா நின்னேன். நல்ல வேளை உங்க ஜக்கு வந்தான்.. சரி, கொஞ்ச நேரம் பேசிட்டிருக்லாம்னா, சரியான போர்! நல்லாவே அறுத்துட்டான்!"

ஸ்கூலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கதிர்வேலு, வாசலில் ஜக்கு நிற்பதைப் பார்த்து,''என்னடா, இப்பத்தானே போன! அதுக்குள்ள வந்துட்டே?"

''ஒண்ணுமில்லை. சாயங்காலம் நீ எங்க வீட்டுக்கு வர வேணாம்!'"

''ஏண்டா?"

"நான் எங்க மன்னியோட காய் விட்டுட்டேன்!"

பின்குறிப்பு:-

கல்கி 06  டிசம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com