சிறுகதை - புதிய உறவுகள்!

ஓவியம்; ஜமால்
ஓவியம்; ஜமால்

-கமலா கந்தசாமி

“ஏங்க...” மெல்ல தயக்கத்துடன் ஆரம்பித்தாள் மீனா.

“என்ன?...” குரலிலும் பார்வையிலும் கோபத்தைத் தீயாய்க் கக்கியபடி திரும்பினான் ரமேஷ்.

“இல்லே... வந்து...” அவசரமாய் போஸ்ட் ஆபீஸ் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கணவனின் கோபத்தில், சொல்ல வந்ததைக் கூற முடியாமல் தவித்தாள் மீனா.

'' என்னடி... வந்து... போயி... சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லித் தொலையேன்..."

'அம்மா கையால் நெத்திலிக் கருவாடும் மாங்காய் வத்தலும் போட்டுக் காரமாய்க் குழம்பு வைத்துச் சாப்பிட வேண்டும்' என்று மனத்தில் எழுந்த ஆசையை அடக்க முடியாத மீனா, "இல்லே... அம்மா வீட்டுக்குப் போகலாம்னு...'' என்று மெல்ல மீண்டும் ஆரம்பித்தாள்.

"மீன் குழம்பு ஆசை வந்துவிட்டதாக்கும். மீனா... அம்மா வீடு... ஆத்தா வீடுன்னு போகிற ஆசையை விட்டுவிடு. என் மானமே போகுது. கருவாட்டுக் கடைக்காரி பொண்ணுதானே நீயும்.... அதுதான் உனக்கும் புத்தி இப்படிப் போகுது!"

ரமேஷின் வெறுப்பில், தன் ஆசைகள் நொறுங்கிப்போவதை உணர்ந்தாள் மீனா.

பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "சரிங்க..." என்றாள் மீனா. மறுத்தால் அடிப்பான். 'இப்போது இருக்கும் உடல்நிலையில் அடிவாங்கக்கூட உடலில் தெம்பில்லையே...' என்று மனசைத் தேற்றிக்கொண்டாள். இருந்தாலும் ஒரே ஊரில் இருந்தும் ‘அப்பா... அம்மாவைப் பார்க்கக் கூடாது' என்று தடை விதிக்கும் கணவன் மீது கோபம் வந்தது.

"மீன் கடைக்காரி பொண்ணு என்று தெரிந்துதானே கட்டிக்கொண்டார். மீன் விற்ற காசில் போட்ட பத்துப் பவுன் நகை குடிக்க... சீட்டாட வேண்டியிருக்கு... மீன்கார மாமனார் - மாமியார் கசக்குதாக்கும்..." வெளியிட முடியாத கோபத்தை மனசிற்குள் பேசித் தீர்த்துக்கொண்டாள் மீனா. அவளால் அது மட்டும்தானே முடிகிறது.

மீனாவின் தாய் தாயம்மா... திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் ஓரத்தில் ஒரு மீன் கடை வைத்திருந்தாள். அவள் கணவன் வீரையன் இரவே சைக்கிளில் நாகூர் வேளாங்கண்ணி வரை போய் மீன் வாங்கி வருவான். ஒரே மகளுக்கு 'மீனா' என்றுதான் தாயம்மாள் பெயரிட்டு வளர்த்தாள். கான்வென்டில் ப்ளஸ்டூ வரை படிக்க வைத்தாள்.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது. வியர்வை சிந்த அறுபது கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து... நாற்றத்துடன் போராடிச் சம்பாதித்த பணத்தில் மீனாவிற்கு என சங்கிலி, நெக்லஸ் என்று பத்துப் பவுனுக்கு மேல் போட்டு...'கவர்மெண்டு உத்யோக மாப்பிள்ளை' என்று பார்த்துத்தான் ரமேஷூக்குக் கட்டி வைத்தாள்.

'முழுக்கை சட்டை... முழுக்கால் சட்டை' என்று ஸ்டைலாய் வரும் மாப்பிள்ளையைப் பார்த்து மனதிற்குள் மகிழ்ந்தாள் தாயம்மா. மாறாக மனதில் வெறுப்பையே சுமந்தான் ரமேஷ்.

"திருடினாத்தாங்க கேவலம். பொய் சொல்றதுதாங்க தப்பு. உழைச்சி எந்தத் தொழில் செய்தாத்தான் என்னங்க..." மீனா நல்ல நேரத்தில் நயந்து சொல்லிப் பார்த்துவிட்டாள்.

"போடி... ப்ரண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு கேவலமாப் பேசறானுக தெரியுமா?" என்பான் ரமேஷ்.

"உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் குடிக்கிறவனுக... கிளப்ல காசு வச்சிச் சீட்டு ஆடறவனுக... பொண்டாட்டி வயத்துல அடிச்சி... அவ நகையை அடகு வச்சி வாழறவனுக... அவனுங்க சொல்றாங்கன்னு இப்படிப் பேசலாமா?" ஒருமுறை பொறுக்கமுடியாமல் கேட்டு விட்டாள் மீனா.

பலன்... அடிவாங்கியதுதான். எனவே இப்போதெல்லாம் அப்பா அம்மாவைப் பற்றி அவன் எவ்வளவு கேவலமாய்ப் பேசினாலும் மீனா வாயே திறப்பதில்லை.

ஆனாலும்... இந்த முறை ஏமாற்றம் அதிகமாய் இருந்தது. இது ஐந்தாவது மாதம். சதா வாயில் எச்சில் ஊறிய மசக்கை வேறு. வெறும் சாம்பார் சாதம் சாப்பிட்டு நாக்கே செத்துவிட்டதுபோல் உணர்ந்தாள்.

அம்மா வைக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பின் வாசனைக்கு நாக்கு ஏங்கியது..

பக்கத்து வீட்டுப் பார்வதியக்காவிடம் சொல்லி அனுப்பினால், அம்மா செய்து கொடுத்து அனுப்புவாள். ஆனால், கணவனுக்குத் தெரியாமல் அதுபோல் செய்திட மனமில்லை.

தரையில் பாயை விரித்துப் படுத்தாள். வேலை செய்ய முடியவில்லை. சமைக்க வேண்டும். பாத்திரம் எல்லாம் துலக்காமல் கிடந்தன.

ரமேஷுக்கு பக்கத்து போஸ்ட் ஆபீஸில்தான் வேலை. டாண் என்று ஒரு மணிக்குச் சாப்பிட வந்துடுவான். படுக்க மனமில்லாது எழுந்து ஓயர் கூடையை எடுத்துக்கொண்டு நடந்தாள். ஆஸ்பத்திரி தெருவில் கத்தரிக்காய்... முருங்கைக்காய் கிடைக்கும்...கால் கிலோ கத்தரியும், ஒரு முருங்கைக் காயும் வாங்கி வந்து சமைத்தாள். ஒரு சொட்டுக் குழம்பை வாயில் வைத்துப் பார்த்தாள். ருசி இல்லை. வயிற்றைக் குமட்டியது. கருவாட்டுக் குழம்பிற்கு நாக்கு துடித்தது.

ணி பகல் ஒன்று முப்பது ஆகிவிட்டது. ஆபீஸில் இருந்து ரமேஷ் வரவில்லை. கணவன் வரட்டும் என்று காத்திருந்தாள். காலையில் வேறு சாப்பிடவில்லை. வாசலில் எட்டிப் பார்த்தாள். கணவன் வரவில்லை. படுத்துக் கொஞ்ச நேரம் கண் மூடிவிட்டாள். முப்பது நிமிடம் கூட இருக்காது. திடுக்கிட்டு விழித்து வாசலில் எட்டிப் பார்த்தாள்.

ரமேஷ் இன்னும் வரவில்லை. 'ஏன்?' குழப்பத்துடன் யோசித்தாள். 'டாண் என்று ஒரு மணிக்கு எல்லாம் ஓடி வந்து விடுவாரே... பசி பொறுக்க மாட்டாரே...' என்ற உணர்வில் கணவனுக்காக ஏங்கினாள் மீனா.

அவசர அவசரமாய் ஒரு டப்பாவில் குழம்புச் சாதமும்... இன்னொரு டப்பாவில் மோர் சாதமும் பிசைந்து எடுத்துக்கொண்டு நடந்தாள்.

நல்ல வெயில். காலில் செருப்புக்கூட இல்லை. ரோட்டில் தார் எல்லாம் உருகி இருந்தது. நெருப்பில் கால் வைப்பது போன்ற வெப்பம்.

அண்ணா சிலைக்கு அருகில்தான் போஸ்ட் ஆபீஸ். பக்கத்து டீக்கடையில் நிற்கிறானா என்று தேடிப் பார்த்தாள். இல்லை. மனதில் ஒரு இனம்புரியாத பயம் கவ்வியது. அவசரமாய் ஆபீஸ் படியேறினாள்.

உள்ளே சோகமாய் உட்கார்ந்திருந்த ரமேஷ் மீனாவைப் பார்த்ததும் அவசரமாய் வெளியில் ஓடி வந்தான்.

இதையும் படியுங்கள்:
ஸ்டைலாக சுலபமாக புடவைக் கட்டுவது எப்படி?
ஓவியம்; ஜமால்

"ஏன்... உன்னை யாரு வரச் சொன்னது...?" என்றான். அவன் குரலில் கோபத்திற்குப் பதில் ஒரு பதற்றம் இருந்தது.

கணவனின் முகத்தை ஏறிட்டாள் மீனா... அவன் தலை கலைந்திருந்தது. முகத்தில் ஒரு சோகம். கண்கள்கூட கலங்கியிருப்பது தெரிந்தது. கணவனை இந்த ஆறு மாதத்தில் அப்படிப் பார்த்து அறியாத மீனா பதறிப் போனாள்.

"ஏங்க... என்ன ஆச்சுங்க.... ஏன் இப்படிச் சோகமா இருக்கீங்க...?"

மனைவியின் முகத்தை ஏறிட்டான் ரமேஷ். அவள் விழிகள் கலங்கியிருப்பது அறிந்து, மனதில் முதல் முறையாக மீனா மீது பாசம் எழுந்தது.

'காலையில் எத்தனை கோபமாய்த் திட்டினோம். அப்படியிருந்தும் ஒருவேளை சாப்பிட வராததற்குக் கூட தாங்காது சாப்பாடு எடுத்து ஓடி வந்திருக்கிறாள். அதுவும் காலுக்கு ஒரு ஜோடி செருப்புக்கூட நாம வாங்கித் தரலையே...'

 "என்னங்க... சொல்லுங்க..." பதறினாள் மீனா.

'எப்படிச் சொல்வது?' என்று குழம்பினான் ரமேஷ். 'சொன்னால் என்ன நினைப்பாள். நம்மை மதிப்பாளா?' என்ற பயமும் கூடவே எழுந்தது. 'எப்படியும் தெரியத்தானே போகிறது?' என்று சமாதானம் செய்துகொண்டு... "மீனா... என்னை மன்னிச்சிடும்மா..." என்றான் ரமேஷ்.

"என்னங்க மன்னிப்பு.... முதலில் விஷயத்தை என்னன்னு சொல்லுங்க..." மீனா பதறினாள்.

''கொஞ்சம் ஆபீஸ் பணத்தை எடுத்துச் சீட்டு விளையாடிட்டேன். ஜெயிச்சி வச்சிடலாம்னுதான் எடுத்துட்டுப் போனேன் ... நிறைய தோத்துட்டேன்... இப்போ திடீர்னு அதிகாரிங்க கண்டுபிடிச்சிட்டாங்க..."

மீனா எதிர்பார்த்த ஒன்றுதான். திருமணம் ஆகி ஆறு ஏழு மாதத்திற்குள் வரிசையாய் மோதிரம் - கடிகாரம்- சைக்கிள் என்று தினம் தினம் ஒன்று காணாமல் போகும். கடைசியில் மீனாவின் செயின்... அப்புறம் நெக்லஸ்... வளையல்... எல்லாம் போனபின்பு இன்று ஆபீஸ் பணம்...

''சரி... விடுங்க... அதுக்கு என்ன செய்யணும், சொல்லுங்க..." மீனாவின் குரலில் இருந்த உறுதியும் திடமும் ரமேஷுக்கு ஆறுதல் தந்தது.

"மூவாயிரம்தான் மீனா. நானும் பல இடத்தில கேட்டுப் பார்த்துட்டேன். எல்லோரும் கைவிரிச்சிட்டாங்க. மாலை ஐந்து மணிக்குள் கட்டிட்டா இந்தத் தடவை மன்னிச்சிடறேன்னு சொல்றாங்க..."

"சரி. கவலையை விடுங்க... முதலில் சாப்பிடுங்க..." என்ற மீனாவின் குரல் கட்டளைபோல் ஒலித்தது.

"இன்னும் ஒரு மணி நேரத்துல பணத்தோட வர்றேன்..."

ரமேஷின் பதிலுக்குக் கூட காத்திராமல் குறுக்கு வழியாய் ஓட்டமும் நடையுமாய் அம்மா கடைக்குச் சென்றாள் மீனா.

மகளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத தாயம்மா பதறிப்போய். "என்ன மீனா... ஏன் இப்படி ஓடி வர்றே...?" என்றாள். "அம்மா... எனக்கு அவசரமாய் மூவாயிரம் பணம் வேண்டும். சீக்கிரம்... உன் செயினை செட்டியார்கிட்டே அடகு வச்சிட்டு வாங்கி வா...''

''ஏன் மீனா... உன் புருஷன் சீட்டாடித் தோற்கவா?"

"இல்லேம்மா... ஆபீஸ்ல அவருக்கு புரமோஷன் கிடைக்கும்போல இருக்கு. இன்றைக்குள் மூவாயிரம் டெபாசிட் கட்டணும்...." அந்த நிமிடத்தில் தோன்றிய பொய்யை மீனா கூறினாள்.

மாப்பிள்ளைக்கு புரமோஷன் என்றதும் தாயம்மா, “சரி மீனா... ஒரு நிமிஷம் இரு..." என்றபடி கழுத்தில் கிடந்த செயினைக் கழற்றித் தாளில் மடித்துக் கொண்டே நடந்தவள், அடுத்த பத்தாவது நிமிடம் பணத்துடன் ஓடி வந்தாள். "அம்மா... இது கடன்தான்... சீக்கிரம் தீர்த்திடறேன்."

மகள் மீனாவின் பதிலில் மனம் நெகிழ்ந்து போன தாயம்மா, "உன்னை விட்டா எனக்கு வேறு யாரு இருக்கா மீனா. உனக்குச் செய்றதுதானே என் கடமை" என்று தாயம்மாவும் மனம் நெகிழ்ந்தாள்.

‘எங்கே அழுகை வந்து விடுமோ' என்ற பயத்தில் 'வர்றேன்' என்று சொல்லிக் கொள்ளக்கூட முடியாது அவசரமாய்த் திரும்பினாள் மீனா.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான 7 டை வகைகள்!
ஓவியம்; ஜமால்

"இந்தாங்க... முதலில் போய் ஆபீஸ் பணத்தைக் கட்டிட்டு வாங்க..." என்றபடி மீனா பணத்தை நீட்ட, நடுங்கும் கைகளுடன் அதை வாங்கினான் ரமேஷ். 'எங்கே பணம் வாங்கியிருப்பாள்' என்பது கூறாமலே அவனுக்குப் புரிந்தது.

'மீன் விற்ற காசுதான் தன் மானத்தைக் காக்கப் போகிறது...' என்று மனதில் ஒரு நொடியில் உதித்த எண்ணத்தின் பிரதிபலிப்பாய் நன்றியுடன் மீனாவைப் பார்த்தான்.

" போங்க... சீக்கிரம் பணத்தைக் கட்டிட்டு வாங்க" மீனா மறுபடியும் கெஞ்சுவதுபோல் கேட்க, பணத்துடன் புறப்பட்டான் ரமேஷ்.

றுநாள் காலை.

''மீனா... சீக்கிரம் கிளம்பு மீனா..." ரமேஷின் குரலில் என்றுமில்லாத மகிழ்ச்சி கலந்திருந்தது.

"எங்கே... சினிமாவிற்கா?" புரியாது மீனா குழப்பத்துடன் கேட்டாள்.

"இல்லே... போய் மாமா... மாமியை பார்த்துட்டு வந்துடலாம்" என்றான் ரமேஷ்.

முதன் முதலாய்த் தன் அம்மா...அப்பாவை 'மாமா', 'மாமி' என்று கணவன் வாய் நிறைய அழைத்ததில் மனம் குளிர்ந்தாள் மீனா. அம்மா கையால் சாப்பிடப்போகும் கருவாட்டுக் குழம்பிற்கு இப்போதே நாக்கில் எச்சில் ஊறியது.

பின்குறிப்பு:-

கல்கி 06 செப்டெம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com