சிறுகதை – நிறுத்தம்!

ஓவியம்; ஜி.கே. மூர்த்தி
ஓவியம்; ஜி.கே. மூர்த்தி
Published on

-திருவாரூர் பாபு

கிளை மேலாளர் தர்ம சங்கடமாய் அவர்களைப் பார்த்தார்.

"அந்த பஸ்ஸுக்கு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு பஸ்ஸே கிடையாது ஸார்... ஸ்கூல் போற புள்ளைங்க... வேலைக்குப் போறவங்க எல்லாரும் அதுலதான் போயாகணும்... பஸ்ஸுல கூட்டமிருந்து நிப்பாட்டாமப் போனாக்கூட பரவாயில்லை... சமயத்துல யாருமே இல்லாம காலியாப் போவுது... உங்ககிட்ட சொல்றது இது நாலாவது தடவ... இதுக்கும் நீங்க தகுந்த நடவடிக்கை எடுக்கலேன்னா... எங்க ஊர் ஜனங்க உங்க ஆபீஸ் முன்னாடி உண்ணாவிரதம் இருக்கிறது தவிர வேற வழி இல்ல ஸார்..."

அந்த வார்த்தையைக் கேட்டதும் கிளை மேலாளருக்கு ரத்த அழுத்தம் ஏறி உடலெங்கும் வியர்வை படர்ந்தது

"சரி போங்க.. இனிமே அப்படி நடக்காது.. ஒன்பது மணி டிரிப் கண்டிப்பா உங்க ஸ்டாப்பிங்குல நிக்கும்..." என்றதும் அவர்கள் கோபமாய், வேகமாய் நகர்ந்தார்கள்.

இது நான்காவது தடவை. பல தடவை பெட்டிஷன்களை அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிவிட்டு, வேறு வழியில்லாமல் நேரே வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை பெட்டிஷன் பார்த்தபோதும் சுப்பையனைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பியிருக்கிறார். அது என்ன திமிர் என்று தெரியவில்லை. எந்த ரூட்டில் போனாலும் புகார். ஸ்டாப்பிங்கில் நிறுத்துவதில்லை. பத்து பேரை மட்டும் வைத்துக்கொண்டு டிரிப் போகிறார். டிரைவர் மீது அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டது அவருக்கு.

யூனியன் லீடர். அந்த அகங்காரம். என்ன செய்துவிட முடியும் என்கிற திமிர். ஏதாவது செய்தால் உடன் போராட்டம் என்பார்கள். காரணத்தை யோசிக்க மாட்டார்கள்.

ஜனங்கள் கஷ்டப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசாங்கத்திற்கு எத்தனை இழப்பு? டீசல் விற்கும் விலையில்... வேண்டுமென்றே காத்திருக்கும் பயணிகளை ஏற்றாமல் செல்வது தவறல்லவா...?

மணியடித்தார். எட்டிப் பார்த்த அட்டெண்டரிடம் “உடனே டிப்போவுக்குப் போயி.. யூனியன் ஆபீஸ்ல டிரைவர் சுப்பையன் இருந்தா அழைச்சிக்கிட்டு வா...” என்றார். அவன் வெளியே போனதும் டைப்பிஸ்டைக் கூப்பிட்டு வேகமாக டிக்டேட் செய்தார். அது சுப்பையனுக்கான சஸ்பென்ஷன் ஆர்டர்.

சுப்பையனுக்கு அது ஒரு மாதிரியான திருப்தி. ஸ்டாப்பிங்கில் கூட்டமாய் மக்கள் பேருந்துக்காக காத்துக்கொண்டு நிற்க, பேருந்தை மெதுவாக்கி நிறுத்துகிறமாதிரி சென்று... அவர்கள் ஆர்வமாய் பேருந்தை நோக்கி வரும்போது விருட்டென்று வேகம் கூட்டி இழுப்பது சந்தோஷமாய் இருக்கும்.

சிலர் பஸ்ஸை விரட்டிக்கொண்டே வருவதைக் கண்ணாடி வழியாய் ஆனந்தமாய்ப் பார்ப்பார்.

நிறுத்துகிறாற்போல் வேகம் குறைத்ததும் தூரத்தில் சாலையோரமாக நிற்கும் கூட்டம் மெல்ல நகர்வதும்... பஸ் நிறுத்தத்தின் உள்ளே உட்கார்ந்திருப்பவர்கள் அவசரமாய் எழுந்து வெளியே வந்து பேருந்தில் ஏற முயலும்போது விருட்டென்று பேருந்தை நகர்த்துவார்.

வேண்டுமென்றே ஸ்டாப்பிங் தாண்டி தூர நிறுத்துவார். இறங்க வேண்டியவர்கள் அவசரமாய் இறங்கியதும், ஏற நினைத்து ஓடி வருபவர்கள் ஏறுவதற்குள் பேருந்தை இழுப்பார்.

இவரின் இந்தப் போக்கு பிடிக்காமல் சண்டை வளர்க்கும் கண்டக்டர்கள் அதிகம். சிலர் பாதி வழியிலேயே இறங்கி எதிரே வரும் பேருந்தில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். சில கண்டக்டர்கள் பயந்துகொண்டு அமைதியாய் இருப்பார்கள்.

பேருந்தில் பத்து பேர்கள்தான் இருப்பார்கள். பேய் வேகத்தில் எங்கும் நிற்காமல் நாகப்பட்டிணம் நோக்கிச் செல்லும்.

பேட்டா இழப்பது ஒருபக்கம். அரசாங்கத்திற்கு நஷ்டம். காத்திருக்கும் மக்களை ஏற்றாமல் செல்வது தவறு என்பதெல்லாம் சுப்பையனுக்குப் புரியவில்லை.

தான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதையும் அவர் யோசித்துப் பார்த்ததில்லை. அடியக்கமங்கலத்தைப் பொறுத்தவரை 9 மணி டிரிப் என்பது முக்கியமான டிரிப். அந்த டிரிப்பை விட்டால் ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும் அல்லது ஆறு கிலோ மீட்டர் நடந்து அத்திப்புலியூரில் பஸ் ஏற வேண்டும். இதெல்லாம் சுப்பையனுக்குப் புரியவில்லை.

"சுப்பையன் வண்டியைப் பாரு.... ஜெட் மாதிரி போகுது... இருபத்தஞ்சி கிலோ மீட்டர் முப்பத்தைஞ்சி நிமிஷத்துல கடக்கிற ஒரே ஆளு நம்ம தலைவர்தான்யா..." யாராவது சொல்லும்போது பெருமையாய் இருக்கும். அந்தப் பெருமையே அகங்காரமாய் மாறி அடுத்த நாள் வண்டி ஒரு ஸ்டாப்பிலும் நிற்காது. முப்பது நிமிடத்தில் அடையும் நோக்கோடு பத்து பயணிகளோடு பயணம் செல்லும்.

யூனியன் லீடர். மேலே கையை வைத்தால் பிரச்னை. எந்தப் பேருந்தும் நிறுத்தாமல் போகலாம். அதனாலேயே சுப்பையனின் இந்தத் திமிர்த் தனத்தை வேறுவழி இல்லாமல் கிராம மக்கள் பொறுத்துக்கொண்டார்கள்.

சஸ்பெண்ட் செய்தது சுப்பையனுக்கு ஒரு விதத்தில் நல்லதாகவே போயிற்று.

மகள் செவ்வந்திக்கு ஏற்றமாதிரி பையன் ஒருவன் கோகூரில் இருப்பதாக அக்கா சென்றமுறை ஊருக்கு வந்தபோது சொல்லிக்கொண்டிருந்தது. "இப்ப சும்மாதான இருக்கீங்க.. போய்ப் பார்த்துட்டுத்தான் வாங்களேன்.. அவளுக்கும் பதினாறு முடிஞ்சிட்டுதில்ல.. சட்டுபுட்டுன்னு ஏதாச்சும் பண்ண வேண்டாமா..."

மனைவி சொல்ல, சுப்பையன் புறப்பட்டார்.

சுப்பையனுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சின்னப் பையனாக இருந்தான். இருபத்தி நான்கு வயது. சொந்தமாக சைக்கிள் கம்பெனியும் அது சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடையும் இருந்தது.

ஒரே பையன். இரண்டு ஏக்கர் நிலமும் சொந்த வீடும் இருந்தது.

"அப்ப ஜாதகம் மாத்திக்கலாமா...?" பையனின் அப்பா கேட்டார்"மாத்திக்கலாமே... " சுப்பையன் தயாராக வைத்திருந்த ஜாதகத்தின் நகலை எடுத்துக் கொடுத்தார். கிளம்பினார்.

"பையன் கடையை விட்டு வர முடியாது... ரெண்டு கிலோ மீட்டர் போகணும்... நான் வேணா வரட்டுமா...?”

"அதெல்லாம் வேணாம்.... நீங்க வேற ஏன் நடந்துக்கிட்டு... நான் மெல்லப் போயிடறேன்.."

சுப்பையன் கும்பிட்டுவிட்டு நடந்தார்.

மனசுக்குள் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட இந்த இடம் எல்லா விதத்திலும் செவ்வந்திக்குப் பொருந்தி வருகிறாற்போல்பட்டது. ஜாதகம் பொருந்தினால் உடன் நிச்சயம். தை மாதத்தில் கல்யாணம். உடன் சம்மந்தி. அடுத்த வருடம் தாத்தா.

ப்படி என்ன வயதாகிவிட்டது தனக்கு என்று யோசித்தார், சுப்பையன். நாற்பத்திரண்டுதானே...? சுப்பையனுக்கு அந்த நிமிடம் இன்னொரு கவலையும் கூடவே வந்தது. கல்யாணச் செலவுக்குப் பணம் வேண்டுமே... மீனாட்சியிடம் நகை இருந்தாலும் கல்யாணம் நான்தான் பண்ண வேண்டும். என்னதான் சிக்கனமாகப் பண்ணினாலும் இருபதாயிரமாவது வேண்டும்.

என்ன சேமித்து வைத்திருக்கிறேன்? ஒன்றும் இல்லை. காசு கிடக்கட்டும். இன்றைய நிலையில் வேலையில்கூட இல்லை.

சுப்பையனுக்கு முதன்முதலாய்த் தன் மீதே வெறுப்பு வந்தது. டிப்போவிலேயே குறைச்சலாய் கலெக்ஷன் பேட்டா வாங்குகிற ஆள் அவராகத்தான் இருப்பார். ஒரு நாளைக்கு பத்து அல்லது பனிரெண்டு கிடைக்கும். அதை அவர் பெரிதாய் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் எல்லா நிறுத்தங்களிலும் பேருந்து நின்றிருக்கும். பிரச்னை இல்லை. இப்போது இந்த சஸ்பென்ஷனும் இல்லை.

முத்துசாமி, பேட்டா வாங்கிய காசிலேயே நிலம் வாங்கி விட்டதாகச் சொன்னான். கோவிந்தன் டி.வி.எஸ்.50 வாங்கி இருப்பதாகச் சொன்னான்.

இதையும் படியுங்கள்:
அஷ்டலட்சுமிகளை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்!
ஓவியம்; ஜி.கே. மூர்த்தி

நடந்து வந்தது கால்களை வலிக்க, போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் அமர்ந்திருக்கையில் சுப்பையன் அந்தத் தீர்மானத்திற்கு வந்தார். நாளை, முதல் வேலையாக கிளை மேலாளரைச் சந்தித்து சஸ்பென்ஷனைத் திரும்ப வாங்க முடியுமா என்று கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து... நாளையிலிருந்து டியூட்டியில் சேர வேண்டும். முடிந்தால் கும்பகோணம் ரூட் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதில்தான் ஸ்டேஜ் அதிகம். எல்லா ஸ்டாப்பிங்கிலும் பேருந்தை நிறுத்த வேண்டும்.

சுப்பையன் மணி பார்த்தார்.

பஸ் வருகிற நேரம்தான். காத்திருந்தார். இருட்டுவதற்குள் வீடுபோய்ச் முக்கியமா, பனி பொழிய தொடங்குவதற்குள். பனியில் நனைந்தால் இரவு மூச்சுத் திணறல் வருகிறது.

தூரத்தில் சத்தமும் பிறகு பேருந்தின் முகப்பும் தெரிய, கீற்றுக் கொட்டகையை விட்டு வெளியே வந்தார். அவரைத் தவிர்த்து யாரும் இல்லை

கையை ஆட்டினார்.

தூரத்திலேயே பேருந்து வேகம் குறைந்தது தெரிந்தது. மெதுவாக வந்த பேருந்து - சுப்பையன் நகர்ந்து சென்று ஏறுவதற்குத் தயாராய் நிற்க, பஸ் நிறுத்தம் அருகே வந்ததும் பட் என்று கியர் மாற்றி விருட் என்று வேகம் எடுத்துச் சென்றது.

சுப்பையன் ஸ்தம்பித்து நின்றார்.

அடுத்தப் பேருந்துக்கு இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று சிக்க வலத்தில் பேருந்து ஏற வேண்டும்.

பின்குறிப்பு:-

கல்கி 06 மார்ச் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com