shyam image
shyam image

சிறுகதை – ஏக்கம்!

- தி. சிவசுப்பிரமணியன்

டியேறுகிறபோதே கண்ணனுக்கு சோர்வாக இருந்தது. மற்ற பையன்கள் மாதிரி வீட்டுக்கு வருகிற அவசரமோ, உற்சாகமோ எப்போதும் அவனைத் தொற்றுவதில்லை.

காரணம், வீட்டில் யார் இருக்கிறார்கள். அவனிடம் பேச? விளையாட? டிபன் எடுத்துக் கொடுக்க? மாற்றுடை அணிய வைக்க? எல்லாம் அவன்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு எரிச்சலாகத்தானிருந்தது. அம்மாவிடம் சொன்னதற்கு நன்றாகத் திட்டிவிட்டாள்.

"தேர்ட் ஸ்டாண்டர்டு வந்தாச்சு. இன்னும் அம்மா கோண்டாவாவே இருக்கிறே. நாளைக்கு படிச்சு, பெரியாளாகி, வேலைக்குப் போனா, கூடவே நானும் வர முடியுமா?"

"அம்மா வேலைக்குப் போறதாலதானே உன்னைக் கவனிக்க முடியலை? நான் எதுக்குச் சம்பாதிக்கிறேன் உனக்கு எல்லா வசதியும் பண்ணித் தர்றதுக்குதானே!" என்று சமாதானப் படுத்தினாள்.

'எனக்கு எந்த வசதியும் வேணாம். நீ வீட்ல இருந்தாப் போதும்' என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

வழக்கம்போல், 'எதிர் வீட்டில் சாவி இருக்கும்' என்று நினைத்துப் போனவனுக்கு திறந்திருந்த வீடு ஆச்சரியம் கொடுத்தது. யார் வந்திருப்பார்கள் அதற்குள்ளாக? அம்மாவா,அப்பாவா?

தற்குள் அம்மா வந்துவிட்டது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. எப்போதும் வீட்டுக்குவர எட்டுமணி, எட்டரை ஆகிவிடும் அம்மாவுக்கு. இன்று ஏன் சீக்கிரமே வந்து விட்டாள்? அப்பாவேறு வந்து விட்டார்?

''கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பாத்தியா நீ? என்னையாச்சும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமில்லை? பொசுக்குனு வேலையை விட்டுட்டேன்னு சொல்றியே!"

"என்னங்க நீங்களும் புரியாமப் பேசிக்கிட்டு படிச்சிப் படிச்சி சொன்னனில்ல, ஆபீசுல என்ன நடந்ததுன்னு. அதுக்கப்புறமும் அங்க நான் வேலை பார்த்தா என்னை சூடு சொரணையற்ற ஜென்மம்னு மத்தவங்க நினைச்சிக்கிட மாட்டாங்களா?"

"கேட்கிறவங்க, மாசம் பொறந்தா சம்பளம் தருவாங்களாக?"

அம்மாவும் அப்பாவும் அதன் பின் ரொம்ப நேரம் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்ததில் கவனம் செலுத்தாது தன்னறைக்குள் நுழைந்து வீட்டுப்பாடம் செய்ய நோட்டை எடுத்தபோது, அவனுக்குள் ஒரு ரகசிய சந்தோஷம் அரும்பியிருந்தது. அப்பாடா! இனிமேல் அம்மா வேலைக்குப் போக மாட்டாள்!

'எப்போது மணி நாலாகும்? வீட்டுக்கு எப்போது கிளம்பலாம்!' என்று துடித்தபடியிருந்தது கண்ணனின் மனம். மணி அடித்ததும் அவசர அவசரமாக ஓடின அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள் நண்பர்கள்.

வீட்டு முன் மோதி விடுகிற மாதிரி அவன் வந்து நின்ற போது, வீடு பூட்டியிருந்தது. பொடிப் பொடியாய் உதிர்ந்து போனது அந்தக் குழந்தை மனசு.

இதையும் படியுங்கள்:
கை, கால் நகப்பராமரிப்பு டிப்ஸ்!
shyam image

"இவங்கதான் நம்ம லேடீஸ் கிளப்புல சேர்றதுக்காக புதுசா வந்திருக்கிற மெம்பர். பக்கத்துலதான் வீடு இருக்கு. சத்யா அபார்ட்மென்ட்ஸ்." உயரமான கொண்டை போட்ட ஒரு பெண்மணி,  கண்ணனின் அம்மாவை யாருக்கோ அறிமுகம் செய்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

பின்குறிப்பு:-

கல்கி 10  டிசம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com