சிறுகதை - “ஆபீசில் குண்டு வைச்சிருக்காங்க!”

ஓவியம்; உமாபதி
ஓவியம்; உமாபதி

-அகிலா கார்த்திகேயன்

பிற்பகல் இரண்டரை மணி இருக்கும். உண்ட மயக்கத்தோடு உட்கார்ந்திருந்தேன். எதிரே பம்பாயின் பல மாடி கட்டடங்களாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. அத்தனையையும் ஒரு நெல்லிக்காய் சைஸ் பாம் போட்டுத் தகர்த்துவிட்டால் சுகமாயிருக்கும். வாயைப் பிளந்துகொண்டு வந்த 'ஹா...ஹக்'  என்ற கடூரமான கொட்டாவி சப்தத்திற்கு, எசப்பாட்டு கணக்காகக் கைவிரலால் சொடுக்கு சப்தம் கொடுத்தேன். எதிரே ஒரு 'களுக்'  சப்தம் கேட்டது. டைப்பிஸ்ட் ராதா சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

இண்டர்காம் அழைத்தது. வேறு யார்... அந்த எமகாதகன்தான்!

"ஹலோ... மூர்த்தி... ஐ ஒன்ஸ் அகெய்ண் ரிமைண்ட் யூ... அந்த எஸ்டிமேட் பைல் நாலு மணிக்குள்ள என் டேபிளுக்கு வந்தாகணும்."

ஆத்திரமாக, 'பட்'டென்று ரிஸீவரை வைத்தேன். பாவி இத்தனை கெடுபிடி செய்கிறானே.. ஏதோ அரசாங்கத்தையே இவன்தான் தாங்குவதாக ஒரு எண்ணம் போலும்... இவனை இங்கிருந்து எப்போது தூக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த எஸ்டிமேட் சம்பந்தப்பட்ட பைல் என் டேபிளுக்கு வந்து பத்து நாட்கள்கூட ஆகவில்லை... அதற்குள் என்ன தலைபோகிற அவசரமோ! நாலு மணிக்குள் அனுப்ப வேண்டுமாம்... அவனவனுக்கு வேறு வேலையே இல்லையா சொல்லுங்கள்... மூணே காலுக்கு அடையார்வரை போய் வர வேண்டும். இந்த மாதம் ஏலத்தில் சீட்டை எடுத்தே ஆக வேண்டும். வரும்போது 'கேஸ்'காரனிடம் சொல்லி விட்டு வர வேண்டும்... அவன் போன் கிடைக்கவே மாட்டேன் என்கிறது... ஹவுஸ் பில்டிங் லோன் விஷயமாக சுந்தரமூர்த்தி நாலு மணிக்கு வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறான்... பார்த்தாக வேண்டும். இந்த அழகில் இந்த ஆள் வேறு பிராணனை வாங்குகிறான். இவன் தலையில் குண்டு விழ!

பித்துக் கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது. திடீரென்று அலுவலகத்தில் ஒரு பரபரப்பு, சலசலப்பு, கிடுகிடுப்பு என்று ஒட்டுமொத்தமாக அப்பிக் கொண்டாற்போல் இருந்தது. எல்லோரும் தங்கள் டேபிளில் இருந்த விரித்த கோப்புகளையும் திறந்த பேனாக்களையும் அப்படியே விட்டுவிட்டு எழுந்து ஹாலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருப்பது என் கண்ணாடி அறையிலிருந்து தெரிந்தது. எனக்கும் லேசாக பயம் கண்டது. 'என்னவாய் இருக்கும்? யாராவது மண்டையைப் போட்டு விட்டார்களோ...? கட்டடத்தில் தீ பற்றிக்கொண்டதா...' ராதாவைக் கேட்கலாமென்று நிமிர்ந்தால் அவளையும் காணவில்லை.

"சார்! என்ன சார் குந்திகினுகீறே...? ஆபீஸிலே குண்டு வைச்சுகீறாங்களாம்... அல்லாரும் ஓடறாங்களே தெரீலே?"  ப்யூன் செல்வராஜ்தான் எச்சரித்தபடி விரைந்தான்.

புரியாமல் என் அறையை விட்டுப் படபடப்போடு வெளியே வந்தேன். ஹாலில் ஈ காக்கை இல்லை. 'ஏன் எனக்கு யாரும் தகவல் தரவில்லை... இந்த பார்த்தசாரதியாகட்டும் ஒரு வார்த்தை எச்சரித்து விட்டுச் சென்றிருக்கலாம் ... டி. ஏ. பில்லில் கையெழுத்து வாங்க மட்டும் உள்ளே வந்தான்... அதற்குப் பிசாத்து இருபது ரூபாய் கேட்டேன் என்ற கோபமா...? இந்த நடராஜனுக்கும்தான் நன்றி இல்லை... இருக்கட்டும் அவன் மெடிகல் பில்லில் கை வைத்தால்தான் புரியும்.’

யங்கலந்த சிந்தனைகளோடு ஓட்டமும் நடையுமாகக் கட்டடத்தை விட்டு வெளியேறி வந்தபோது உடம்பு தொப்பமாக வியர்வையில் குளித்திருந்தது. அலுவலகச் சிப்பந்திகள் அங்கங்கே கூடி நிற்க, ஒரு போலீஸ் வேன் வந்து நின்றது. நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஒரு நாய் முன்னே செல்ல கட்டடத்திற்குள் போலீஸ் நுழைந்தது.

எனக்கு மூச்சிறைப்பு நின்று சற்று நிதானம் பிறந்தது. சுற்றிலும் நின்றவர்களை முறைத்தேன்... 'எல்லோரும் இப்படி என்னை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டீங்களேடா, பாவிங்களா!'

யாரும் என்னைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

"பாம் ஸ்கேர் இத்தனை சாதாரணமாப் போச்சு!"

"அதுக்குன்னு அசால்டா இருந்துட முடியுமா சொல்லுங்க."

"நம்ப ஆபீஸ் என்ன சார் அத்தனை இம்பார்டண்ட்டா?"

வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். எது எக்கேடு கெட்டால் என்ன, நான் மூணே காலுக்குச் சீட்டு கம்பெனிக்குப் போயாக வேண்டும். நினைத்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ எலிசபெத் வந்தாள். அவள் அரை நாள் லீவ் கேட்டு அதை நான் மறுத்திருந்தேன். திமிர் பிடித்தவள். சிவில் சப்ளைஸ் புருஷனிடம் என் பெண்ணுக்கு ரேஷன் கார்ட் வாங்க ஒரு சிபாரிசு செய்யவில்லை!

ஓவியம்; உமாபதி
ஓவியம்; உமாபதி

"என்ன சார், இப்ப திருப்தியா...? அரை நாள் லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க... ஆண்டவனா பார்த்து இப்படி வெடிகுண்டு புரளி எழுப்பியிருக்கார்னு பார்த்தா,  இப்ப யாரையும் வெளியே விட மாட்டாங்களாம்" - ஆத்திரமாகக் கத்தினாள்.

அடடா... நாமும் வெளியே போக முடியாதோ...? குழப்பிக் கொண்டிருந்தபோது குப்புசாமி எதிர்ப்பட்டார்.

"ஏன் சார், இப்படிப் பழிவாங்கிட்டீங்களே...! நானும் நாலு நாளா என் ஜி.பி.எப் லோனுக்காக அலையறேன். இன்னிக்குக் கையெழுத்து போடறேன்னு சொன்னீங்க... இப்ப இப்படி ஆயிடுச்சு.... இனிமே 'பே'பில் அது இதுன்னு வந்துடும்... லோன் பணத்தை நம்பி கிரஹப்பிரவேசம் வைச்சுட்டேன்." குப்புசாமியின் அங்கலாய்ப்பு எனக்கு ஆத்திரமூட்டியது.

இங்கே நின்றுகொண்டிருந்தால் மனுஷன் அழுதே அறுத்துவிடுவான் என்று நகர்ந்தேன்.

"நல்லவேளை பர்மிஷன் போடலாம்னு நினைச்சேன். எவனோ புரளி கிளப்பி விட்டுட்டான்... இப்படியே கம்பி நீட்டிட வேண்டியதுதான்" மாசிலாமணி ரங்கநாதனிடம் குஷியாகப் பேசிக்கொண்டிருந்தான்.

'மர நிழலில் ஜானகிராமன் தனியாக நின்றுகொண்டிருந்தார். உலக விஷயம் அதிகம் தெரிந்தவர். ஏதாவது உருப்படியாகப் பேசுவார் என்று அருகே சென்றேன்.

"என்ன ஜானகிராமன்... நம்ப ஆபீஸிலே போய் இப்படி...?" என்று இழுத்தேன்.

"அது கெடக்கு விடுங்க... நாளை டெண்டருக்கு ரேட்டையெல்லாம் குறிச்சி டேபிள் டிராயரிலேயே வைச்சிட்டு வந்துட்டேன். சரியா நாலு மணிக்கு முதலியார் வரேன்னு சொல்லியிருக்கார். ரேட்டைக் கையிலே கொடுத்தாதான் ஐம்பதோ நூறோ அவர்கிட்டே தேறும்... இப்ப எல்லாம் போச்சு!''

ஜானகிராமனின் வார்த்தைகள் என்னைச் சங்கடப்படுத்தின. அப்போதுதான் கவனித்தேன். மரத்தடியில் டெஸ்பாட்ச் கிளார்க் சீனிவாசன் உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். ரிடையர்மெண்டுக்கு இன்னும் அவருக்கு ஒரு வருடம்தான் இருந்தது. சரி ஏதோ பர்சனல் கடிதம் எழுதுகிறார் என்று முதலில் நினைத்தேன். பிறகுதான் அவர் கையிலிருந்த கத்தையான காக்கி கவர்களைக் கவனித்தேன். தன் சட்டைப் பையிலிருந்து சர்வீஸ் ஸ்டாம்ப்களை எடுத்துக் கவர்களில் ஒட்டிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துவிட்டு எழுந்துகொண்டார்.

''ஹி... ஹி... நல்லவேளை இன்னிக்கு டெஸ்ட்பாட்ச் ஆக வேண்டிய தபாலை எல்லாம் கவர்ல போட்டு வைச்சிருந்தேன். ஓடி வரும்போது எடுத்துட்டு வந்துட்டேன். இப்ப பக்கத்து ஆபீஸிலே சொல்லி சர்வீஸ் ஸ்டாம்ப் கடன் வாங்கி எல்லாத்துக்கும் ஒட்டிட்டேன். நாலு மணிக்குக் கட்டு எடுக்கறத்துக்குள்ளே போஸ்ட் பண்ணிடலாம்." அழுக்கு கைக்குட்டையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக்கொண்டு பேசிய அந்த முதியவரை எதிர்நோக்க எனக்குக் கூசியது.

இந்தக் கிழவருக்கு மட்டும் ஜி.பி.எப். - லோன், சர்வீஸ் ரிஜிஸ்டர், ஓசி பர்மிஷன் என்று எந்த சொந்த பிரச்னையும் கிடையாதோ... இந்தத் தள்ளாத வயதில் ஆபீஸின் இந்த நிலையில் இவர் டெஸ்ட்பாட்ச்சைப் பற்றி யார் கவலைப்பட்டு என்ன கேட்டு விடப்போகிறார்கள்... ?' சீனிவாசன் யோசிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
ஓவியம்; உமாபதி

சோதனை முடிந்து, வெறும் புரளி  என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டு எல்லோரையும் திரும்பவும் உள்ளே வரச் சொன்னார்கள். அறையுள் வந்து அமர்ந்தவுடன் இண்டர்காம் அழைத்தது.

''ஃபைல் என்ன ஆச்சு?"

"சார் இந்த 'பாம் ஸ்கேர்'னால கொஞ்சம் டிலே ஆயிடுச்சு... இதோ அனுப்பிச்சிடறேன்."

"தனியா பாம்னு ஒண்ணு வைக்கணுமாய்யா... உங்களைப்போல நாலு பேர் இருந்தா பத்தாதா... நாடே வெடிச்சு செதற...!"

எதிர்முனையிலிருந்து கோபமாக ஒரு 'ஸ்கட்' விடப்பட்டது. எனக்கு எரிச்சல் ஏற்படவில்லை. சீனிவாசன்தான் என்னுள் எதையோ வெடி வைத்துத் தகர்த்திருந்தாரே!

பின்குறிப்பு:-

கல்கி 24  ஏப்ரல்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com