
-பா. ராகவன்
"புவனாவுடன் சண்டை போட்டியா?" என்றான் மணிவண்ணன்.
"ஆமாம்."
"அதான். காலையிலிருந்து தலைகீழாகக் காரியங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறாய். மானேஜர் இரண்டு முறை கூப்பிட்டு அனுப்பினார் போலிருக்கிறது?"
''ம். கூட்டல் குளறுபடி."
'ஒரு டிபிகல் மிடில்கிளாஸ் ஆபீஸ் கோயரின் சாதாரண பிரச்னைகள்தான் உனக்கும் இருக்கிறது. உன் எதிர்பார்ப்புகளின் எல்லைகள்தான் உன் சந்தோஷத்தை நிர்ணயிக்கிற விஷயங்கள். இதை முதலில் புரிந்துகொள்!" என்றான் மணிவண்ணன் அலுவலகத்தில் அவன் ஒருத்தனிடம் மட்டும்தான் மனசு விட்டுப் பேசமுடிகிறது.
"கவனி. வாழ்க்கையை நின்று, உற்றுப்பார்க்காதே. அது ஒரு பூதம். பல்லைக்காட்டி பயமுறுத்தும். கடந்து போய்க்கொண்டே இரு. பிரச்னை வராது. அது தன்னால் முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. கொஞ்சம் மென்மை. கொஞ்சம் வருடல். இங்கே சீண்டல். அங்கே சிணுங்கல். கொஞ்சம் தென்றல். கொஞ்சம் தெய்வீகம். துளி பனிப் புன்னகை. தூரத்தில் வயலின் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். பிருந்தாவன லாரங்கா. அதில் நிஷாதத்தை அழுத்தக்கூடாது. ஒற்றி எடுக்க வேண்டும். கடற்கரை மணலில் கால் புதைப்பதுபோல ஒரு சுகம் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
''நீ சினிமா பார்த்துக் கெட்டுவிட்டாய்" என்றான் மணிவண்ணன்.
"இருக்கலாம். ஆனால் அது தப்பில்லையே? வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் மயிரிழை வித்தியாசம்தான். அந்த மயிரிழையை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறபோது கிடைக்கிற சுகம் இந்தக் கூட்டல், கழித்தல் வாழ்க்கையில் கிடைப்பதில்லையே?"
''பார்! உனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இரு, முதலில். கனவுகளுக்கு எல்லை இல்லை. ஆனால் யதார்த்தத்துக்கு வரம்பு உண்டு. உன் பிரச்னைதான் என்ன?" என்று மணிவண்ணன் கேட்டான்.
என்ன என்று சொல்வது? காலையில் பரபரப்பாக அலுவலகம் கிளம்பும்போதே சண்டை வந்துவிட்டது. இஸ்திரி போடக் கொடுத்திருந்த சட்டை இன்னும் வந்திருக்கவில்லை. குக்கரில் கூடுதல் தண்ணீர் காரணமாக, சாதம் குழைந்துவிட்டது. எட்டு மணி ஆகியும் பால் வரவில்லை. வயிற்றுக்குக் காப்பி ஊற்றாததன் எதிரொலி தலையில் கேட்டது. கூடுதலாக ஊரிலிருந்து அம்மா கடிதம் எழுதியிருந்தாள். இரண்டு வரியில் நலம் விசாரித்து விட்டு, கார்டு முழுக்கக் காசு கேட்டு. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டும். தங்கைக்கு இந்த வரன் அமைந்து விடும்போல் இருக்கிறது.
எல்லாமே எதிர்கொள்ளக்கூடிய சின்னச்சின்ன விஷயங்கள்தாம். அத்தனையும் ஒரு சேரத் தாக்கும்போதுதான் தோல்வி பயம் வந்துவிடுகிறது. விளைவாக குக்கர் சாதம் குழைந்ததற்காக புவனா மீது பாய வேண்டியதாகிவிட்டது. அவளும் வேலைக்குப் போகிறவள். அசடுவழிகிற மேலதிகாரியை வைத்துக்கொண்டு அல்லல்படுகிறவள். தெரியாததில்லை. ஆனாலும் எதிர்ப்பையோ, இயலாமையையோ, கோபத்தையோ, சந்தோஷத்தையோ வெளிக்காட்டிவிட அவர்கள் இருவருக்கும் வேறு வழி இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர். நேருக்கு நேர். சொற்களின் துல்லியமான மோதல், உரசலில் தெறிக்கிற தீப்பொறி. அதன் தகிப்பில் குளிர்காய்கிற மனத்தின் குதூகலம். குத்திக் கிளறிப் பார்த்து சந்தோஷப்படுகிற குரூரம்.
புவனாவும் சளைக்கவில்லை. வார்த்தைக்கு, வார்த்தை வசைக்கு வசை, ஆணாதிக்க உலகின் பிரத்யட்சப் பிரதிநிதியாக அவனை நிற்கவைத்து சொற்களால் சுட்டுத் தீர்த்துவிட்டாள். எல்லாமே தவிர்த்திருக்கக் கூடியவைதான். ஆனால் தருணங்கள், உணர்வை உரசிப் பார்க்கிறபோது சுனன்று எழும் தீயை அணைக்க முடிகிறதில்லை.
அவன் ஸீட்டுக்குப் போய் உட்கார்ந்ததும், ஹல்லோ, யூ லுக் ஸோ ஸ்மார்ட் டுடே!" என்றாள் அனுபமா.
ஏதாவது பேச வேண்டும். கசங்கிய சட்டையும் ஷேவ் கூடப் பண்ணாத இன்றைய முகத்தையும் பார்த்து ஸ்மார்ட் என்று கூசாமல் சொல்வதற்கு எத்தனை பொய் பழகியிருக்க வேண்டும்?
உலகில் பிரச்னைகளே இல்லாதவர்கள் டைப்பிஸ்ட் ஜாதிக்காரர்கள்தான் என்று அவனுக்குத் தோன்றியது. வாரப் பத்திரிகைத் தொடர்களுக்கு நடுவே அவ்வப்போது வேலை பார்த்துக்கொண்டு. கனமான மேக்-அப்புடன் ஆண்களை வசீகரித்துக்கொண்டு, வாங்குகிற சம்பளத்தைப் புடைவைகளில் பாவு நூலாக்கி, நுனிநாக்கு ஓட்டை இங்கிலீஷில் உலகைப் புரட்டிப் போடுகிறவர்கள்.
"ரொம்ப நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னை உங்கள் வீட்டுக்குக் கூப்பிட மாட்டீர்களா? உங்கள் மனைவி உங்களைப் போலவே வெகு அழகா? அல்லது."
இவள் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அனுபமாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. புருஷன் ஏதோ எக்ஸ்போர்ட் பிஸினஸ் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். வீட்டில் போரடிக்கிறது என்பதற்காக வேலைக்கு வருகிறாள்.
"தெரியுமா? இந்தச் சம்பளம் என் ஒப்பனை திரவியங்களுக்குக்கூடக் காணுவதில்லை. என்ன செய்வது? வேலையை விட்டுவிட்டால் உங்களையெல்லாம் எப்படிப் பார்த்துக்கொண்டிருப்பது?"
"எதற்கு எங்களைப் பார்க்க வேண்டும்?"
"ஜஸ்ட், ஒரு ப்ளெஷருக்காக. அனுமதியுடன் ஸைட் அடிக்கிற சௌகர்யத்துக்காக."
அவனுக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. இப்படி ஒரு பெண் - அதுவும் திருமணமானவள் என்னுடன் பணிபுரிகிறாள் என்று புவனாவிடம் சொன்னால் அவள் என்ன சொல்லுவாள்? கொழுப்பெடுத்தவள் என்று தொடங்கி நீளமாக ஒரு பிரசங்கம் நடத்துவாள்.
'உன் ஆபீஸில் ஒரு மானேஜர். என் ஆபீஸில் ஒரு டைப்பிஸ்ட்' என்று சீண்டலாம். மேற்கொண்டு உரையாடல் திசைமாறி, அபாயகரமான எல்லைகளுக்குப் போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆண்களின் மனக்கட்டுப்பாடு பற்றி புவனா வைத்திருக்கிற மதிப்பீடு மிக மோசமானது. அவள் பார்வையில் புருஷனும் கோடானுகோடி ஸோ கால்ட் ஆண் வர்க்கத்தில் ஒரு புள்ளிதான்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த புவனா, அனுபமா எல்லாருமே ஒரே கனியின் விதைகள்தான் என்று தோன்றியது. விளைச்சல் வேறுவேறாயினும் விரும்பத்தகாத சுவை தருவதில் ஒரே ரகம்.
"ஹல்லோ, இன்று ரிலீஸாகி இருக்கும் படத்துக்கு ஈவினிங் ஷோவுக்கு இரண்டு டிக்கெட்டுகள் இருக்கின்றன. வருகிறீர்களா?"
அனுபமாதான் கேட்டாள். உள்ளர்த்தம் ஏதுமில்லையாம். நட்பு ரீதியில்தான் அழைக்கிறாளாம். ஒரு ஆணும் பெண்ணும் சினிமா போவதில் என்ன தவறு?
"ஏன், உங்கள் ஹஸ்பெண்ட் இருக்கிறார். இல்லையா?"
"அவர் இருக்கிறார். நான் உங்களைத்தான் கூப்பிட்டேன்."
"ஸாரி. வருவதற்கில்லை."
"ஏன், உங்கள் மனைவி கோபித்துக்கொள்வாளோ?"
அவன் அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. பிறகு ஒழுக்க விதிகள் பற்றி அவள் லெக்சர் அடிக்கத் தொடங்கிவிட்டால் சகிக்காது. மனிதர்களால் ஆன உலகில் மனிதர்களால்தான் சிக்கலும் உண்டாகிறது. சிக்கலால் சினம். சினத்தால் புத்தி நாசம். ஹே, அர்ஜுனா என்று கூப்பிட்டு, எந்தப் பரமாத்மாவும் இப்போது நல்லுபதேசத்துக்கு வரப் போவதில்லை.
அவனுக்குத் தலை பிளந்து விடும்போல வலித்தது. வீட்டிலும் வெளியிலும் மனத்திலும் சொல்லிலும் செயலிலும் அமைதியற்று உலவுகிற நிலையின் அழுத்தம் தன்னை மிக அதிகமாகவே தாக்குவதுபோல உணர்ந்தான்.
மாலை வீடு திரும்பும்போது,வழியில் ஒரு விபத்தைப் பார்த்தான். லாரியில் அடிபட்ட ஸ்கூட்டர். தார்ச்சாலையில் சிதறிய கண்ணாடி மொட்டுக்கள். சாலையோரத்தில் மொத்தமாக ஒரு பொருளை வெள்ளைத் துணி போர்த்தி வைத்திருந்தார்கள். ஒரு போலீஸ்காரரும் நாலைந்து பார்வையாளர்களும் அருகே நின்றுகொண்டிருக்க, அவனுக்கு இறந்தவனைப் பற்றிக் கொஞ்சம் நினைக்கத் தோன்றியது. எத்தனை பிரச்னைகள் இருந்தனவோ? கடன் இருக்கலாம். வேலை இல்லாதவனாக இருக்கலாம். தன்னைப்போல் எல்லாம் சரியாக இருந்தும் எதையோ இழந்ததுபோலப் பரிதவிப்பவனாக இருக்கலாம். எதுவானால் என்ன? இனி அவனுக்குக் கவலை இல்லை
- இப்படி நினைத்ததுமே அவனுக்கு இறந்தவன்மேல் கொஞ்சம் பொறாமை உண்டானது.
வீட்டுக்குப் போனபோது இருட்டிவிட்டது. தெரு முழுக்க டீவியில் ஆழ்ந்திருக்க, புவனா மட்டும் தனியாக வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். 'இன்று வழக்கத்தைவிடக் கொஞ்சம் லேட்' என்று நினைத்துக்கொண்டான்.
அதையே அவளும் கேள்வியாகக் கேட்டபோது வேலை அதிகம் என்று பதில் சொன்னான். முகம் கழுவி சாப்பிட உட்கார்ந்து, சாப்பிட்டு, எழுந்து போய் படுக்கையில் விழும்வரை அவளுடன் ஏதும் பேசவில்லை. காலை கோபத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் வரவழைத்துக்கொள்ள வேண்டுமா என்று நினைத்தான். அலுப்பாக இருந்தது. கோபப்படவோ, குறைந்தபட்சம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளவோ கூடத் தெம்பில்லாததுபோல உணர்ந்தான்.
ஆனால் அவள் என்னமாதிரியான மனநிலையில் இருக்கிறாள்? வழக்கமாக இதுமாதிரி ஊடல்கள் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். சகிக்கமுடியாத மௌனத்தில் வீடே இருண்டுகிடக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும்.
அவன் படுத்தவாக்கிலேயே திரும்பிப் பார்த்தான். ஹாலில் புவனா உட்கார்ந்து ஏதோ ஃபைல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனுக்கு எழுந்துபோய் ஓங்கி அறைந்துவிட்டு உட்கார்ந்து ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. அடக்கிக்கொண்டு, திரும்பிப்படுத்தான்.
பதினொரு மணிக்கு புவனா விளக்கணைத்து விட்டு எழுந்து வந்தாள். அவன் தூங்குவதுபோலக் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டிருந்தான். அவள் ஏதாவது பேச விரும்பி, புரண்டு புரண்டு படுப்பது போலிருந்தது. அவளுக்கும் அவஸ்தைதான். படட்டும், பட்டு அவளே உடைத்துககொண்டு வெளிவரட்டும் என்று பேசாமல் இருந்தான்.
ஆனால் கல் மாதிரி அவள் தூங்கிவிட்டால்? ஏதாவது பேசி எதையாவது இறக்கி வைத்துவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு. யார் ஆரம்பிப்பது?
வேண்டுமென்றே திரும்பி, அவளை இடிப்பதுபோலப் படுத்தான்.
"இன்னும் தூங்கலியா?"
நல்லவேளை. உடைத்துவிட்டாள்.
''உம்."
"தூக்கம் வரலியா?"
''உம்.''
''இன்னும் கோபம் போலிருக்கு."
அவன், அதுவரை இறுக்கி மூடியிருந்த கண்களைத் திறந்தான். புன்னகைக்கலாம். ஆனால் அது தோல்வியைக் காட்டிக் கொடுத்ததாகி விடுமோ? நீயே செய்யேன். நீயே பேசேன். விட்டுக் கொடுப்பது சுகம்தான். நீயே அந்த சுகத்தை எடுத்துக்கொள்ளேன். உப்பு பெறாத ஈகோதான். ஆனால் ஏன் உடைய மாட்டேனென்கிறது?
அவனுக்குத் தன் மீதே வெறுப்பாக இருந்தது. உருத்தெரியாமல் குத்தி, அழித்துக்கொண்டு விடலாம்போல இருந்தது. அழுத்தம் நெஞ்சை நெரிக்க, இமைச்சிமிழோரம் சட்டென்று திரண்ட முத்தை அவள் கவனித்துவிட்டாள்.
"ஐயோ, ஏன் அழறது?"
தான் நிஜமாகவே அழுகிறோமா என்ன? அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. வெட்கமாகவும் அதேசமயம் ஆறுதலாகக்கூட இருந்தது. மரத்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த உணர்வுகளில் இன்னும் ஈரம் இருப்பதே ஆச்சர்யம்தான்.
''புவனா, காலைல நான் அப்படி நடந்துண்டிருக்கக் கூடாது.''
''ஐயோ, அதொண்ணும் வேண்டாம்."
வெப்பம் கொப்பளிக்க அவள் மேலே படர்ந்தபோது எதற்கோ அர்த்தம் புரிவதுபோலிருந்தது அவனுக்கு.
பின்குறிப்பு:-
கல்கி 22 டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்