சிறுகதை; ஜனனம்!

Short Story
ஓவியம்; ஜெ...
Published on

-தமயந்தி

ஸ் இன்னும் வரவில்லை. சரஸ்வதிக்கு இடுப்பு நொந்தது. பக்கத்தில் நின்றவர்கள் இவளையும் இவள் வயிற்றையும் மாறி மாறிப் பார்த்தார்கள். பூ விற்கும் கிழவிகூட நாள்தோறும் கேட்கிறாள். "நிற மாச வயிறும் வாயுமா எத்தனை நாள் வேலைக்கு வருவே?"

வேறுவழியில்லை என்று அவளுக்குத் தெரியாது. விஸ்வமே வேலைக்குப் போவது நல்லது என்று சமாதானமாகிவிட்டான்.

லீவ் போட்டு என்ன செய்ய முடியும் வீட்டில்? பக்பக் என்று நெஞ்சடிக்க, வயிற்று அசைவோடு விஸ்வம் வருவதற்குக் காத்திருக்க வேண்டும். இரண்டு அறை ஒட்டுக்குடித்தனம். சுவருக்கு அந்தப் பக்கம் தாள் கிழிப்பது கூட இங்கு கேட்கும். அமைதியாய் சமைத்து, நிச்சலனமாய் பாத்திரம் பூசி, கிசுகிசுப்பாய்க் காதலித்து...

காதலித்தது தப்போ என்றுகூட இப்போதெல்லாம் தோன்றுகிறது. இப்போது என்றால் வயிற்றில் சுமை ஏறின பிறகு. ஆதரவாய் கைகொடுக்க யாருமில்லாது போன பிறகு. யாருமில்லையா? விஸ்வம் இல்லையா? தாய்க்குத் தாய், தந்தைக்குத் தந்தையாய், கணவனுக்கு கணவனாய்... ஆனாலும் ஏனோ மனசுக்குள் ஒரு வெறுமை. வயிற்றில் கனம் ஏற ஏற, ஏறி உட்கார்ந்தது.

ப்ரக்னன்டா இருக்குறப்போ எள்ளு சாப்பிடலாமா?

சாப்பிட வேண்டும் போல் தோன்றியது. யாரிடம் கேட்பது, சாப்பிடலாமா, கூடாதா என்று?

"எள்ளு, பப்பாளி எதுவும் கூடாதும்மா. பலாப்பழம் சாப்பிட்டுறாதே."

செக்-அப்புக்குப் போனபோது டாக்டர் சொன்னார்.

"நார்மலா பிறந்துடுமா டாக்டர்?"

"ம். தொன்னுத்தொன்பது சதவீதம் நார்மல் டெலிவரிதான். சந்தோஷம்தானே?'' டாக்டர் சிரித்தார்.

சந்தோஷம்தான். சின்னக் குழந்தைகளின் படம் பார்க்கும்போது மனசு துள்ளுகிறதென்னவோ நிஜம்தான். கடையில் தொங்கும் குட்டி உடுப்புகள், ஸாக்ஸ்.. பிறகு விஸ்வத்தின் ஆசைகள்...

“பொண் குழந்தை பிறந்தா நல்லாருக்கும் சரஸ்."

"ம்.ம்"

ஏன் சுரத்தில்ல... உனக்கு ஆசையில்ல?"

'இல்ல. பயமாருக்கு."

“ஏன்?”

சரஸ்வதி நிமிர்ந்து மோட்டுவளையைப் பார்த்தாள். கண்ணில் நீர் கோத்து நின்றது.

"அழறியா?"

"இல்லையே."

"என்ன பயம் சரசு?" விஸ்வம் தோளைப் பற்ற, அழுகை வெடித்தது.

“சரசு...ஏய்?"

வேகமாய் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சன்னமாய் தொண்டைக்குள் கனம் இறங்கிற்று.

"யாருமில்லை விஸ்வம் நமக்கு."

"ஏன் இல்லை? உன் குழந்தை இல்லையா உனக்கு நானில்லையா?"

விஸ்வம் கைகளை அழுத்திக்கொண்டான். ''நம்பிக்கை வேணும் சரசு.''

இதையும் படியுங்கள்:
"மேகராகமே மேளதாளமே தாரா - ராதா"... பாடலில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம் என்ன?
Short Story

"மனசுல ஒரு பயம் பட்பட்னு இருக்கு. இது சுகமா பிறக்குமானு தோணுது. ஆபீஸ்ல நுழையறப்ப லேசா குறுக்கு வலிக்கிறாப்பல இருக்கு. இப்பவே பிறந்துருமோனை பயாமாருக்கு. மனசு பதைபதைக்க ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டியிருக்கு."

விஸ்வம் கையிலிருந்த பாக்கெட்டைத் திறந்தான். சின்ன உடுப்புகள், ஜான்சன் சோப், பவுடர்...

"எல்லாம் வாங்கியாச்சா?"

"ரொம்ப எதிர்பார்க்கிறேன் சரசு. மனசெல்லாம் இதுதான்."

"எனக்கு பயமாருக்கு விஸ்வம்."

விஸ்வம் கைகோத்துக்கொண்டான். சரஸ்வதியை முதலில் சந்தித்தபோது தெரிந்த கண்களை நினைத்துக்கொண்டான். பிரசவ காலக் குழப்பங்கள். இதெல்லாம் யாருமில்லாததால் கூடுகிறது. ஆசையாய் நாலுவிதமாய் சமைத்துப்போட ஆள் இல்லாததினால், பிரசவம் இப்படி இருக்கும் என்று வக்கணையாய் பேச யாருமில்லாததால். ஆனால் அடுத்து என்னசெய்ய வேண்டும் என்று பார்.

"உங்கம்மாப்பாவுக்கு எழுதிப் போடட்டா?"

"வேணாம். வேணாம் விஸ்வம். நீயிருக்கியே.”

"உனக்குப் போறலையே சரசு."

சரஸ்வதி அவனை இறுக கட்டிக்கொண்டாள். மனசெல்லாம் கங்கை ஆறாய் பொங்கிற்று. “போறும் விஸ்வம் போறும்.'.

ஸ் வந்து ஏறியதும் உட்கார்ந்திருந்த யாரோ இடம் கொடுத்தார்கள்.

"உட்காரு தாயி."

விண்ணென்று கண்ணுக்குள் தண்ணீர் கட்டிற்று. இப்படித்தான் விஸ்வம் யாருமில்லாது, தாலி கட்டியதும் அழுகை வந்தது. ஆனாலும் என்ன... வீம்பு. அம்மா இப்போது எலி வளையில் குடித்தனம் செய்வதைப் பார்த்தால் தலையிலடித்துக் கொள்வாள். வசதி என்று பெரிசாய் எதுமில்லாவிட்டாலும் ஏழைமை இல்லாத குடும்பம். இப்போது அப்படியில்லை. சில சமயம் திணறுகிறது. குழந்தை பிறந்தால் இன்னும் செலவிழுக்கும்.

வீட்டில் விஸ்வம் வந்திருக்கவில்லை. உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டாள். கதவிடுக்கில் நீலநிற இன்லாண்டு கசங்கி சொருகப்பட்டிருந்தது. அடுப்பை ஏற்றி விட்டு அதை எடுத்தாள். கேஸ் கிடைத்தால் நலம். மண்ணெண்ணெய் புகை குமட்டுகிறது. கடித உறையைக் கிழித்தாள்.

"அன்புள்ள சரஸ்வதிக்கு, அம்மா எழுதுவது. நீ உண்டாயிருப்பதாக மாப்பிள்ளை எழுதியிருந்தார். சந்தோஷம். ஆனாலும் தம்பி சங்கரன் படிப்புக்காக அவனை விட்டு விட்டு என்னால் வர முடியாது. குழந்தை பிறந்ததும் எழுது. வருகிறேன்" யாரோ யாருக்கோ எழுதுகிற த்வனியில் கடிதம். யார் வரச் சொன்னார்கள்? விஸ்வம் ஏன் எழுதினான்? என் புலம்பலாலா? மறுபடியும் அழுகை வந்தது.

இதையும் படியுங்கள்:
அப்பாடா! இம்புட்டு நீளமா? இத்தனை தடங்களா?
Short Story

பால் பொங்கி அடுப்பில் வழிந்து நுரைத்து நின்றது. சரஸ்வதி எழும்பினாள். டீத்தூளைப் போட்டதும் வாசல் பக்கம் போனாள். எதிர் வீட்டில் கணேசன் நின்றிருந்தான்.

"தம்பி இங்க வா."

"என்னக்கா?"

"ஒரு உதவி செய்ய முடியுமா?"

அவன் என்னது என்பதுபோல் பார்த்தான். சரஸ்வதி உள்ளே போய் பர்ஸிலிருந்து ரூபாயை எடுத்தாள்.

"இந்த முக்கு கடைல சூடா பஜ்ஜி வாங்கிட்டு வா"

"எத்தனைக்கா?"

பாழ்வயிறு பேயாய் பசிக்கிறது. காரத்துக்கும் உப்புக்கும் ஆலாய்ப் பறக்கிறது. "பத்து வாங்கிட்டு வா."

டீயில் சீனியைப் போட்டு கலக்கினாள். இடுப்பில் லேசாய் சுருக்கென்றது. டீயை இறுத்து வாசலில் வந்து உட்கார்ந்தாள். விஸ்வம் சைக்கிளில் வருவது தெரிந்தது.

"என்ன சரஸ்... எப்ப வந்தே?"

"இப்பத்தான். டீ குடிக்கறீங்களா?"

எழுந்தாள். மறுபடியும் நடு இடுப்பில் வலித்தது. சூடாயிருக்கும் டீயை ஊற்றி வாசலில் வந்து உட்கார்ந்தாள். விஸ்வத்துக்கு இப்படி பேசினபடி டீ குடிப்பது பிடிக்கும்.

மறுபடியும் உறிஞ்சும்போது வலித்தது.

"வலிக்கிறாப்பல இருக்கு விஸ்வம்."

விஸ்வம் பதறினான். நொடியில் பெட்டியில் சகலமும் அடுக்கினான். சரஸ்வதிக்கு துணிகள், குழந்தைக்கு சட்டை, சோப்...

''ரூவா இருக்கா விஸ்வம்?"

"இருக்கு. பாத்துக்கலாம். கவலைப்படாதே சரஸ்." பக்கத்தில் வந்து முத்தமிட்டான்.

''அம்மாவுக்கு எழுதிப் போட்டியா?"

"லெட்டர் வந்திருக்கா?''

''ம். இப்ப வர முடியாதாம்."

''நல்லாருக்காங்களா?"

''விஸ்வம். ஏன் இப்படி செஞ்சே? ஏன் எழுதினே?

"உனக்காக சரஸ்... உனக்காக."

இடுப்பில் இழுத்தது. டாக்ஸி கூட்டி வந்தான்.

ஸ்பத்திரிக்குப் போனதுமே லேபர் வார்டுக்கு கொண்டு போனார்கள். டிரிப் ஏற்றி வலியை அதிகப்படுத்தினார்கள். டாக்டர் கொஞ்ச நேரத்தில் வந்தார்.

"என்ன சரஸ்வதி... தைரியமா இருக்கியா?"

"ம்ம்..." பயத்தில் வார்த்தை வர மறுத்தது.

"தைரியமா இருக்கணும் சரஸ்வதி. ஏதாவது குடிச்சுக்கோ. பயப்படாதே."

"ம்ம்..."

"இன்னும் நாலு மணி நேரத்துல எப்படியும் பிறந்திடும். அமைதியா இரு."

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் - 'மக்களாலும் வெல்லப்பட வேண்டிய ஒரு போர்’; வெல்வோம்!
Short Story

மனசுக்குள் விஸ்வத்தை காதலித்ததிலிருந்து படம் ஓடியது. இந்த அளவுக்கு வீஸ்வத்துக்கு என் மேல் காதலா? அப்பா துக்கியெறிந்து பேசியதை மறந்து லெட்டர் போட்ட அளவுக்கு... உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வரும் அளவுக்கு... டாக்டர் சீதாலெக்ஷ்மிக்கு இந்த அளவுக்கு என் மேல் கரிசனமா... கடவுளே! நான் தனியில்லை. எனக்கு பலம் கொடு. சுகப்பிரசவம் கொடு. மனசுக்குள் கண்மூடி வேண்டினாள்.

பதினொரு மணிக்கு குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். ஆண் குழந்தை. டாக்டர் குழந்தையைக் காட்டினார்.

"யூ ஆர் லக்கி சரஸ்வதி, எ ஃப்யூட்டிபுல் கிட்"

சரஸ்வதி கையெடுத்துக் கும்பிட்டாள். "தாங்க்யூ... தாங்க்யூ டாக்டர்."

குழந்தையை பக்கத்தில் கிடத்தினார்கள். பஞ்சாய் ஒரு பொதி, மார்பில் சட்டென்று ஒரு பிரவாகம். சரஸ்வதி குழந்தையைப் பார்த்தாள். விஸ்வம் ஜாடை. சரஸ்வதி அதன் கைகளை  நிமிர்த்தி விரல்களைப் பற்றிக் கொண்டாள். முகம் சுழித்து, ''எனக்கு நீதான்" என்கிற தினுசில் அது –

அவளுக்குள் உறங்கிப் போனது.

பின்குறிப்பு:-

கல்கி 24 நவம்பர்  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com